ஊர் செல்லுமுன் சென்னை சென்று அண்ணனைப் பார்த்தேன். அவரும் இந்த மாதத்தில் பி.டி. பட்டப் படிப்பின் தேர்வு எழுதிவிடுவார். அதன்பின்பு ஊர் வந்துவிட்டு அண்ணியைப் பார்க்க திருச்சி செல்வார்.
அவரிடம் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி பற்றி கூறினேன். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு அதில் ஓர் இடம் உள்ளது பற்றி கூறினேன். ராஜ்குமார் சொன்னது பற்றியும் தெரிவித்தேன்.
அந்த ஒரு இடத்துக்கு நானும் முயற்சி செய்யப் போவதாகக் கூறினேன். அவர் அப்படியே செய்து பார்க்கலாம் என்றார்.ஆனால் அதற்கு பேராயரின் ( பிஷப் ) பரிந்துரை முக்கியம் வேண்டும் என்றார். அவரைத் தெரியும் என்றார்.அவரிடம் அழைத்துச் செல்வதாகவும் கூறினார். நான் அது கேட்டு மிகவும் உற்சாகமடைந்தேன்.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் சுவீடன் தேசத்தவராம்.அவருடைய பெயர் பிஷப் டீல். திருச்சபையின் தலைமையகம் திருச்சியில் ” தரங்கைவாசம் ” எனும் வளாகத்தில் உள்ளது. அங்குதான் பேராயரின் இல்லமும் உள்ளது. அவர் மிகவும் உண்மையானவர் என்றும், அவரை நேரில் சென்று பார்த்து மருத்துவம் பயில ஆர்வம் கொண்டுள்ளதாகக் கூறி உதவி கேட்டால் நிச்சயம் உதவுவார் என்றும் அண்ணன் தெரிவித்தார். அது கேட்டு மனதில் நம்பிக்கை பிறந்தது.
புதுத் தெம்புடன் விடுதி திரும்பினேன். அன்று இரவு அத்தை வீட்டில் விருந்து. அத்தை மகள் நேசமணி ஓடியாடி உபசரித்தாள்.கோழிக்குழம்பு பரிமாறும்போது ஈரல் முழுவதையும் எனக்குத்தான் தந்தாள். அப்போதெல்லாம் கோழிக் குழம்பு என்றால் எல்லார் கண்ணும் அதன் ஈரல் மீதுதான் இருக்கும். அதன் ருசி அப்படி!
அன்று நள்ளிரவில் வழக்கம்போல் புகைவண்டி மூலம் சிதம்பரம் புறப்பட்டேன். நாட்கள்தான் எவ்வளவு துரிதமாக ஓடுகின்றன! இப்போதுதான் கல்லூரியில் சேர்ந்ததுபோல் உள்ளது. அதற்குள் ஓராண்டும் கழிந்துவிட்டது! இந்த ஒரு வருட கல்லூரி வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையாகக் கழிந்தது! தமிழ் ஆங்கில இலக்கிய வகுப்புகளில் நான் இலயித்துப்போனது, கல்லூரி அரையாண்டு மலர்களிலும். விடுதி மலரிலும் என்னுடைய சிறுகதைகள் வெளிவந்தது, தமிழக வரலாற்றில் இடம் பெறப்போகும் இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் நானும் பங்கு கொண்டது, ஓய்வு நாள் பள்ளிக்கு வெரோனிக்காவுடன் சென்று வந்த உல்லாசம், விடுதி நண்பர்களுடன் மாலைப் பொழுதுகள்,மெரினா கடற்கரையில் தனிமையான கணங்கள் ஆகியவை அனைத்துமே இனிமையான நினைவுகள்தான். அதோடு தாராளமாகச் செலவு செய்ய மாதந்தோறும் அப்பாவின் பணம் வேறு கைநிறைய! எத்தகைய சொகுசான வாழ்க்கை இது! அதனால்தான் மாணவப் பருவம் வாழக்கையின் இனிமையானப் பருவம் என்றும் அது மீண்டும் வாராது என்றும் சிலர் வர்ணித்து ஏங்குவதுண்டு!.
அனால் என்னுடைய மாணவப் பருவம் இப்போதுதானே தொடங்கியுள்ளது? மருத்துவமோ இலக்கியமோ தொடர்ந்து கல்லூரியில் பயிலத்தானே போகிறேன்? மீண்டும் ஐந்து வருடமாவது விடுதியில் தங்கத்தானே போகிறேன்? அந்த நாட்களையும் ஆவலுடன்தான் எதிர்நோக்கினேன்.
மருத்துவம் கிடைத்துவிட்டால் நல்லது. அப்பா என்னை அதற்காகத்தானே அனுப்பி வைத்துள்ளார்? அது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தானே குறைவில்லாமல் பணம் நிறைய அனுப்புகிறார். நான்கூட அந்த இலட்சியத்துடன்தானே வந்துள்ளேன். அது கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பது இங்கு வந்தபின்புதானே தெரிகிறது. இருந்தாலும் ராஜ்குமார் மூலம் கிடைத்த தகவலின்படி சிறு நம்பிக்கை துளிர் விட்டுள்ளது. அண்ணனுடன் திருச்சி சென்று பேராயரைப் பார்த்து உதவி கேட்போம்.அனால் பேராயர் பரிந்துரை செய்தால் மட்டும் போதாது. அதன் பின்பும் இன்னொரு பெரும் தடையைத் தாண்டியாக வேண்டும்.
வேலூர் மருத்துவக் கல்லூரிக்கு அகில இந்திய அளவில் சென்னை, பம்பாய் , டெல்லி, திருவந்தபுரம், கல்கத்தா, என்றும் வெளிநாட்டில் சிங்கப்பூரிலும் ஒரே நாளில் எழுத்துத் தேர்வு நடைபெறும். முதலில் அதில் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்றால்தான் பேராயரின் பரிந்துரையும் பரிசீலிக்கப்படும். அதில் தேரவில்லையெனில் அவ்வளவுதான். பேராயர் பரிந்துரையும் வீண்தான். அந்த மாணவனுக்கு வேலூரில் இடம் இல்லை! வேலூரில் இடம் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பது உண்மையுங்கூட!
ஊர் சென்றதும் வேலூர் மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வுக்கு நான் நன்றாக தயார் செய்யவேண்டும். முதலில் அந்தத் தேர்வில் மிகவும் சிறப்பாகத் தேரவேண்டும். காரணம் இது அகில இந்திய ரீதியில் நடத்தப்படும் தேர்வு.அதற்கு தயார் செய்ய நிறைய நாட்களும் இருந்தன. இந்த விடுமுறையில் எல்லா படங்களைப் ஒருமுறை மீண்டும் படித்து முடித்துவிடலாம். அதோடு வேதாகமத்தையும் படித்தாக வேண்டும். கிறிஸ்துவ மாணவர்களுக்கு வெதாகமத்திலிருந்தும் கெள்விகள் கேட்கப்படும். நான் கடந்த ஓராண்டாகத்தான் வேதாகமத்தை படித்து வருகிறேன். ஓய்வு நாள் பள்ளிக்கு வேரோனிகாவுடன் சென்றது ஒரு வகையில் நல்லதாகப்போனது. அவளை சைக்கிளில் ஏற்றிச் சென்ற அனுபவம் இனிமையானதாக இருந்தாலும், அதோடு வேதாகமத்தையாவது ஆர்வத்துடன் படிக்க முடிந்ததே.
வெரோனிக்காவையும் நினைத்துக்கொண்டேன். அவளைப் பிரிந்து செல்வது கவலையாகத்தான் இருந்தது. பாவம் அவள். அவளுடைய நினைவிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியவில்லை. அவளுடைய கள்ளங்கபடமில்லாத சாந்தமான முகம் நெஞ்சைவிட்டு அகலவில்லை.
அவளைச் சந்தித்தது முதல் விடை பெற்றது வரை பழகிய நினைவுகள் அனைத்துமே இனிமையானவைதான்.அப்போதெல்லாம் ஒரு நாள் இப்படி பிரிந்து செல்ல நேரிடும் என்று எண்ணியதில்லை.பிரிவின் துயர் இப்போதுதான் தெரிகிறது.
இந்தப் பெண்களுடன் நெருங்கிப் ப்ழகினாலே இந்த பிரச்னைதான்! உடன் இருக்கும்போது மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. பிரிந்து செல்லும்போது பெரும் தொல்லை!
முன்பு லதாவைப் பிரிந்தபோது மனதைப் பிழிந்தெடுக்கும் சோகம். இப்போது வெரோனிக்காவைப் பிரியும்போதும் ஓரளவு அந்த ரீதியான சோகம்தான். இதற்கு ஒரே வழி இனிமேல் எந்தப் பெண்ணிடமும் நெருங்கிப் பழகக் கூடாது. அவர்களிடம் எப்போதுமே பட்டும் படாமலும்தான் பழக வேண்டும்.
ஆனால் அது முடியுமா? காலையில் கிராமம் சென்றதும்தான் அங்கு கோகிலம் காத்திருப்பாளே! அவள் வாழப் பிடிக்கவில்லை. கணவனைப் பிடிக்கவில்லை என்று தவறாமல் கண் கலங்குவாள். என்னுடைய வரவுக்காக வழிமேல் விழிவைத்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததாக சங்க காலத்து தலைவி போன்று கூறுவாள். இது முன்பிறவி பந்தம் என்றும் சாதிப்பாள். ஊர் உலகத்தைப் பற்றியெல்லாம் தனக்கு கவலை இல்லை என்றும் வாதிடுவாள்.குளத்தங்கரைக்குப் போகாமல் இருக்கவும் முடியாது. தூண்டில் போட்டு பல நாட்களாகிவிட்டன. பால்பிள்ளை காலையிலும் மாலையிலும் கையில் தூண்டில்களுடன் வந்து விடுவான்.
இதுபோன்ற எண்ண ஓட்டங்களுடன் இரயில் ஓடிய வேகத்தில் நன்றாகத் தூங்கிவிட்டேன்.
விடிந்தபோது சிதம்பரம் வந்துவிட்டேன். மதியழகன் கூண்டு வண்டியுடன் வந்திருந்தார். பெட்டி படுக்கைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டார்.
போகும் வழி நெடுகிலும் வயல்வெளிகள் பனிமூட்டத்தில் நனைந்திருந்தன. முன்பு பச்சைப் பசேலென்று பசுமையுடன் காட்சி தந்த வயல் வெளிகள் இப்போது முற்றிய கதிர்கள் பணியில் நனைந்து பாரம் தாங்காமல் தலை சாய்ந்து நின்றன. கதிரொடு வயலில் சாய்ந்தும் கிடந்தன. பச்சை நிறம் மாறி பழுப்பு நிறமாகியிருந்தன. அறுவடைக்காக கிராமத்து மக்கள் கைகளில் கருக்கரிவாள் கொண்டு சென்றனர்.கிராமத்து தேநீர்க் கடைகளில் திரைப்படப் பாடல்கள் உரக்க ஒலித்தன. அந்த ஒலி வெட்ட வெளியில் பரவி வெகு தூரம் ஒலித்தன. அறுவடை துவங்கிவிட்டாலே கிராமத்து மக்களின் மனங்களில் குதூகலம்தான்!
ஊர் வந்தடைந்ததும் நான் நினைத்தது சரியாகத்தான் இருந்தது. பால்பிள்ளை வயலுக்குச் செல்லாமல் எனக்காக காத்திருந்தான். அம்மாவுக்கும் தங்கைகளுக்கும் என்னைக் கண்டத்தில் மகிழ்ச்சி. தங்கைகள் இருவருக்கும் புதுப் பாவாடைகளும் நிறைய ரிபன்களும் வாங்கி வந்திருந்தேன். கோகிலத்துக்கு கண் மண் தெரியவில்லை. அவ்வளவு ஆனந்தம் அவளுக்கு. அம்மாவுக்கு உதவுவதுபோல் அடிக்கடி வந்து சென்றாள். குளத்தில் தூண்டில் போடும்போது அங்கும் வந்துவிடுவாள். எனக்காக ஆவலுடன் காத்திருந்ததாகக் கூறுவாள். நான் தெரிந்தும் தெரியாததுபோல் எதற்கு என்பேன்.அவள் பதில் கூறத் தெரியாமல் தடுமாறுவாள்!
” என் அன்பை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. ” என்பாள்.
” என் மீது நீ அன்பு கொள்வது தவறு. ” என்பேன்.
இந்த குளத்தங்கரை சந்திப்பும், பட்டும் படாமலும் பேசுவதும் தினமும் தொடர்ந்தது. முன்பு அண்ணி வீட்டில் இருந்தபோது அவளைக் கண்டு முகம் சுளிப்பார். இப்போது அண்ணி இல்லை. ஆனால் இராஜக்கிளி கவனிப்பது தெரிந்தது. அம்மாவுக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஏழு, எட்டு மணிக்கு அற்புதநாதர் ஆலயத்தின் மணி ஒலிக்கும். ஒன்பது மணிக்கு மூன்றாவது மணி ஓசையுடன் ஆராதனை ( இறை வழிபாடு ) நடைபெறும். அந்த ஆலய மணியோசை சபை மக்களை ஆலயம் வருமாறு அழைப்பு விடுப்பது போன்றிருக்கும். அதன் ஒலி பக்கத்து கிராமங்களிலும் தூரத்தில் வயல்வெளிகளிலும் கூட கேட்கும். அது கிராமமாக இருந்தாலும் அனைத்து கிறிஸ்துவர்களும் ஆலயத்துக்கு வந்துவிடுகின்றனர். எனக்கும் அந்த ஆலய மணியோசைக் கேட்டதும் ஆராதனைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும்.
குடும்பத்துடன் அவர்கள் வருவதால் கோவில் நிரம்பிவிடுகிறது. தரையில் நீண்ட கோரைப் பாய்கள் விரிக்கப்படுகின்றன. சபையார் அனைவரும் தரையில்தான் அமர்கின்றனர். நானும் தவறாமல் ஆலயம் சென்றேன். ஞானப்பாட்டுகள் கீர்த்தனைகள் அனைத்தையும் சபையார் மனப்பாடமாகப் பாடுகிறார்கள்.
உபதேசியார் பெயர் இஸ்ரவேல். அவர் வேதப் பகுதியைப் படித்து அது குறித்து அருமையாக விளக்கி பிரசங்கம் செய்கிறார். பயபக்தியுடன் ஜெபம் செய்கிறார்.சிறு சபையாக இருந்தாலும் சபை மக்களிடத்தில் அருமையாக இயேசுவின் அன்பைப போதித்து அருமையாக வழி நடத்திச் செல்கிறார். விவசாயிகளாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வயல் வேலைக்குச் செல்லாமல் ஆலய வழிபாட்டுக்கு வந்துவிடுகிறார்கள். அன்று ஓய்வு நாள் என்பதைத் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
முதல் நாள் என்னைப் பார்த்ததுமே என்னிடம் அன்பாகப் பேசி எனக்காக ஜெபம் செய்தார். நான் அன்றாடம் வேதாகமத்தில் ஒரு அதிகாரம் படிப்பதாகக் கூறினேன். அவர் அது கேட்டு மகிழ்ந்தார். கர்த்தரின் ஜெபம், விசுவாசப் பிரமாணம், பத்து கட்டளைகள் ஆகியவற்றை மனப்பாடம் செய்யச் சொன்னார். அதன்பின்பு திடப்படுத்தல் எடுக்கவேண்டும் என்றார். அது எங்களுடைய பூர்வீக ஆலயம் என்பதால் அங்கேயே திடப்படுத்தல் எடுப்பது நல்லது என்றார். திடப்படுத்தல் என்பது ஒரு சபையின் முழு உறுப்பினர் ஆவது. முன்பு குழந்தையாக இருந்தபோது ஞானஸ்நானம் மூலம் கிறிஸ்துவராக தாய் தந்தையரால் ஆக்கப்படுகிறோம். இப்போது நம் சுய சம்மதத்துடன் திடப்படுத்தல் மூலமாக முழுக் கிறிஸ்துவர் ஆகிறோம். நான் பேராயரின் பரிந்துரை கேட்டு செல்லவிருப்பதால் இதையும் எடுத்துக்கொள்வது நல்லது என்றே தெரிந்தது.
நான் மருத்தவம் பயில வாஞ்சை கொண்டு வேலூரில் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு முயற்சி மேற்கொள்ளும்போது இப்படி என்னையுமறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவ வாழ்கையில் பிரவேசிப்பது தெரிந்தது. அதனால் என்னுடைய திராவிடக் கொள்கைகளுக்கோ பகுத்தறிவு எண்ணங்களுக்கோ குந்தகம் விளைவதாகத் தெரியவில்லை.திராவிட இயக்கத்தில் இருந்துகொண்டே கிறிஸ்துவனாகமும் வாழ முடியுமா என்பதையும்தான் பார்த்துவிடுவோமே!
நான் எதிர்பார்த்தது போலவே வேலூரிலிருந்து தபால் வந்தது. அதில் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பப் படிவம் இருந்தது. அண்ணனும் தேர்வுகள் முடிந்து ஊர் வந்து விட்டார். அவருடன் திருச்சி செல்ல தயாரானேன்.
இரண்டொரு நாட்களில் நாங்கள் இருவரும் திருச்சி புறப்பட்டோம்.
( தொடுவானம் தொடரும் )
- மிதிலாவிலாஸ்-3
- சுப்ரபாரதிமணியனின் ’மேகவெடிப்பு ’
- நடுவுல கொஞ்சம் “பட்ஜெட்டை”க்காணோம்.
- மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்
- விளக்கு விருது அழைப்பிதழ்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : கரும் பிண்டத்தின் ஊடே பரிதி மண்டலம் சுழல்வதால் பூமியில் நேரிடை உயிரினப் பாதிப்பு, மாறுதல் நேர்கிறது
- சீஅன் நகரம் -3 உலகின் எட்டாம் அதிசயம்
- செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை புதுக்கோட்டை செய்திக்குறிப்பு
- அதிர்வுப் பயணம்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் -3
- நினைவுகளைக் கூட்டுவது
- ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2015
- பிறவி மறதி
- பலி
- வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்
- சிறந்த சிறுகதைகள் – ஒரு பார்வை-1
- தொடுவானம் 56. மணியோசை
- இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி
- இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்பு
- விதைபோடும் மரங்கள்
- மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்
- மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்
- ரௌடி செய்த உதவி
- ஊர்வலம்
- மருத்துவக் கட்டுரை- ரூமேட்டாய்ட் எலும்பு அழற்சி நோய் ( Rheumatoid Arthritis )
- ஆத்ம கீதங்கள் –17 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! வாழ்வினி இல்லை எனக்கு