மிதிலாவிலாஸ்-5

This entry is part 1 of 22 in the series 8 மார்ச் 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
“மைதிலி ! என்ன ஆச்சு? உடம்பு சரியாக இல்லையா? முகம் வாடி இருக்கே?” அறைக்குள் வந்ததும் மைதிலியைக் கட்டில்மீது உட்கார வைத்து கேட்டான் அபிஜித்.
மைதிலி மௌனமாக இருந்துவிட்டாள். கூஜாவிலிருந்து தண்ணீரை டம்ளரில் ஊற்றி எடுத்து வந்தான். “ரொம்ப களைத்துப் போய்விட்டாய். தவறு என்னுடையதுதான் என்று தோன்றுகிறது.” அவள் தலைமீது கையை வைத்து டம்ளரை கொடுத்தான். “ஆனால் இன்று எல்லாமே கிராண்ட் சக்செஸ். எதிர்பாராத விதமாக புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். மைதிலி! எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கு, நம் வர்கர்ஸ் கோ ஆபரேடிவ் சொசைட்டி ஆண்டு அறிக்கையை நீ படிக்கும்போது இந்த சொசைட்டியில் இத்தனை மெம்பர்கள் சேர்ந்து இருக்கிறார்களா என்று. போன வருடத்தைவிட ஆறு மடங்கு அதிகம். பார்க்கப்போனால் இன்னும் கொஞ்ச நாட்களில் இதை தனி நிறுவனமாக மாற்ற வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. கங்கிராசுலேஷன்ஸ் டியர்! இன்றைக்கு எனக்கு ரொம்ப திருப்தியாக இருக்கு.”
அவன் சொல்லிக்கொண்டே போய் கோட்டைக் கழட்டி டையை தளர்த்திக் கொண்டான்.
மைதிலி கண்களை சாய்த்து அவன் கையில் கொடுத்த தண்ணீர் டம்ளரை பார்த்துக் கொண்டு இருந்தாள். டம்ளரில் இருந்த நீர் சற்று நேரம் அசைந்து விட்டு பிறகு ஸ்திரமாக இருந்தது. அங்கே இமயமலையில் இருக்கும் மானஸ சரோவரம் தென்பட்டுக் கொண்டிருந்தது. அதன்மீது சந்திரனின் பிம்பம் போல் சித்தார்த்தாவின் முகம்! மூக்குக்கண்ணாடி வழியாக அவன் கண்கள் அவளுடைய கண்களை நேராக, இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தன. மைதிலியால் பார்வையைத் திருப்பிக்கொள்ள முடியவிலலை. திரும்பவும் மின்சாரம் பாய்ந்தது போல் அதே உணர்வு. மனம் யோக நித்திரையிலிருந்து விடுபட்டு விழித்துக்கொண்டு லேசான அசைவுக்கு உள்ளாவது போலவும், இன்னொரு வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பது போலவும் ஏதோ புதிய உணர்வு.
“மைதிலி!” அபிஜித்தின் கை அவள் தோள்மீது படிந்தது. மைதிலி நேராக நிமிர்ந்தபடி உட்கார்ந்தாள். “என்ன யோசித்துக்கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டான்.
கண்களை உயர்த்தி கணவன் முகத்தை பார்த்தாள். தன்னுள் ஏற்பட்ட இந்த விசித்தரமான உணர்வை அவனிடம் சொல்ல வேண்டும் என்று அவள் மனம் அவசரப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அபிஜித் ஏற்கனவே அவள் அருகில் உடகார்ந்து கொண்டு அவளை தன் பக்கம் திருப்பிக் கொண்டான்.
”அபீ!” மைதிலியின் இதழ்கள் தளிர் இலையைப் போல் அசைந்தன.
அவன் அவள் இதழ்கள்மீது ஆள்காட்டி விரலை வைத்து நிறுத்திவிட்டான். மனதிற்கு இனியவளின் கைகளில் சிறைப்பட்டு விட்ட மனிதனைப் போல் கண்குளிர அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“மைதிலி!” அவள் கண்களுக்குள் எதையோ தேடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் நாளுக்கொரு அழகுடன் மிளிர்ந்து கொண்டிருந்தாள். இன்று என்றும் காணாத அழகுடன் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அவளிடம் அதைச் சொல்ல வேண்டும் என்ற உவகை ஏற்பட்டது. ஆனால், அவன் என்றுமே அவளுடைய அழகைப் பற்றிய வியாக்கியானம் செய்தது இல்லை. இன்றும் அப்படித்தான். கடவுள் தனக்கு வரமாக கொடுத்த மைதிலியிடம் புதிய அழகு தகதகவென்று மின்னிக் கொண்டு இருப்பது போல் அவன் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டான். இந்த பொக்கிஷத்தை உயிருக்கும் மேலாக பாதுகாக்க வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வு இருமடங்காகி விட்டது போல் தோன்றியது. பூமாலையை கையில் எடுத்துக் கொள்வது போல் அவளை மென்மையாக அருகில் இழுத்துக்கொண்டான். முழுவதுமாக மலர்ந்து கிடந்த இயற்கையைப் பார்த்ததுபோல் அவன் மனம் தன்மயக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தது. நிலவின் குளிர்ச்சியைப் போல் சந்தோஷம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. அதற்குள் ‘மைதிலிக்குக் குழந்தை பாக்கியம் வழங்க முடியாத நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி’ என்ற எண்ணம் கறுத்த மேகம் நிலவின் ஒளியை மங்கச் செய்து விட்டது போல் அவன் சந்தோஷத்தை பாதியாய் குறைத்து விட்டது.
மனைவியின் தலையுடன் தலையைச் சாய்த்தபடி கண்களை மூடிக் கொண்டான். வெளியே வர வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்த பெருமூச்சானது இதயத்தின் உள்ளேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது.
*****
“இதோ பார் முத்தம்மா! ஏற்கனவே நீ உன் பெயரில், உன் மகனுடைய பெயரில் இரண்டு அக்கவுண்டில் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய சம்பளம் ரொம்பக் குறைவு. நீ வாங்கிய கடனுக்குக் கூட உன் மகன்தான் தவணை கட்டி வருகிறான். இப்பொழுது உன் தங்கையின் பெயரில் மறுபடியும் கடன் கேட்கிறாய். கொடுப்பதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் எப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறாய்?” மைதிலி கூண்டில் நிற்க வைத்து கேட்பது போல் கேட்டாள்.
மைதிலிக்கு தினமும் நான்கைந்து மணி நேரம் இந்த தொழிலாளர்களின் கோ ஆபரேடிவ் சொசைட்டி விவகாரங்களை கவனித்துக் கொள்வதிலேயே கழிந்து கொண்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பு இல்லாதவர்கள். சிலர் ஓரளவுக்கு படித்து இருந்தாலும் பொது அறிவு இல்லாதவர்கள். திட்டமிடுதல் என்றால் என்னவென்று அறவே தெரியாது. கிடைத்த பணத்தை ஒரே நாளில் வாரி இறைத்துவிட்டு அடுத்த நாள் முதல் கடவுளை, தம் விதியை நொந்துகொண்டு இருப்பார்கள். கஷ்டங்களுடன் வாழ்வதைப் பழகிக் கொண்டு அப்படி வாழ்வதுதான் சுகம் என்று நம்புகிறவர்கள்.
வேடிக்கை என்னவென்றால் அந்த சூழ்நிலையிலிருந்து வெளியே வருவதற்கு, வீட்டை விட்டு வெளியே வந்திராத பெண்கள்தான் அதிகமாக முன்னுக்கு வந்து கொண்டிருந்தார்கள். சிலர் சைக்கிள் வாங்குகிறோம் என்றும், வீட்டை ரிப்பேர் செய்கிறோம் என்றும் பொய் சொல்லி வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தை ஒரே நாளில் திருமணத்திற்கு என்றும், விருந்துகளுக்கு என்றும் செலவு செய்து விடுவார்கள். அந்த ஒருநாள் வீடு உறவினர்களுடன் கலகலவென்று இருக்கும். பிறகு மாதம் முழுவதும் ஏறக்குறைய பட்டினி இருக்கவேண்டியது தான்.
முத்தம்மா இதைத்தான் செய்தாள். அவளுக்கு பேக்டரியில் பேக்கிங் பிரிவில் தினக்கூலி வேலை. அவளுடைய மகனுக்கு பர்மனென்ட் வேலை. ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக இருந்தாலும் இரண்டு குடும்பமாக கணக்கு வைத்துக் கொண்டு கடன் வாங்கி இருந்தார்கள். இந்த பணத்தை எல்லாம் விருந்துகளுக்கும், உறவினரை உபசரிப்பதற்கும் செலவழித்து விட்டார்கள். முதல் கடனை பெரிய நாத்தனாரின் மகளின் கல்யாணத்திற்கு சீர் வரிசை செய்வதற்கும், இரண்டாவதை ஒன்றுவிட்ட தம்பியின் மனைவியை பிரசவத்திற்கு அழைத்து வந்து மூன்று மாதங்கள் வைத்துக் கொண்டு பராமரித்து விட்டு அனுப்பி வைத்தாள்.
“முத்தம்மாவுக்கு ரொம்ப தாராள குணம். பரந்த மனசு” என்று எல்லோரும் புகழ் பாடுவது அவளுக்குப் போதை பழக்கம் போல் ஆகிவிட்டது. கணவன் குடிகாரன். மகனுக்கு தாய் என்றால் உயிர். எதிர்த்து பேசமாட்டான். கடன் வாங்கிய பணம் இரண்டே நாளில் தீர்ந்து விடும். மருமகளுக்கு, பேரக் குழந்தைகளுக்கு போதுமான உணவு தராமல், இறுதியில் தான் கூட வயிற்றுக்கு சாப்பிடாமல் சிக்கனம் பிடிப்பாள். குழந்தைகள் பசியால் துடி துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மருமகள் லக்ஷ்மி ,நிறை மாத பிள்ளைதாய்ச்சி மைதிலியிடம் வந்து முறையிட்டுக் கொண்டாள்.
மைதிலி முத்தம்மாவுக்கு எடுத்துச் சொல்ல முயன்றாள். “முத்தம்மா! நான் இந்த வங்கியைத் தொடங்கியதே ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு. நீங்கள் எல்லோரும் அனாவசிய செலவுகளை ஒழித்து விட்டு கொஞ்சமோ நஞ்சமா பணத்தை சேமித்து அதனைக் கொண்டு குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வரணும் என்றுதான். அவ்வளவுதானே தவிர மேலும் மேலும் கடனை வாங்கி சீரழிவதற்காக இல்லை.”
“இந்த ஒரு தடவை மட்டும் கொடுங்கள் அம்மா.”
“அது முடியாது. ஏற்கனவே மகன் உன் மீது கோபமாக இருக்கிறான். உனக்கு முன்னால் எதுவும் பேசமாட்டான். மனதில் வெய்து கொண்டுதான் இருப்பான்.”
“இந்த ஒரு முறை மட்டும்…”
“முடியாது.” மைதிலி கச்சிதமாக சொல்லிவிட்டாள். முந்தின தடவையே தான் நிர்தாட்சிண்யமாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மகனும் வந்து கெஞ்சி கேட்டுக் கொண்டதால் மறுக்க முடியாமல் போய் விட்டது.
“வேண்டுமானால் என் மகனை கூட்டிக் கொண்டு வரட்டுமா?”
“அவன் வந்தாலும் இதே பதில்தான்.”
“போகட்டும் அம்மா. எவ்வளவு சொன்னாலும் நீங்க கேட்க மாட்டேங்கிறீங்க. மகனைப் போய் அய்யாவிடம் கேட்கச் சொல்கிறேன்.” சிடுசிடுவென்று சொன்னவள் மைதிலியின் முகத்தைப் பார்த்ததும் பின் வாங்கினாள். “மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா. தெரியாமல் ஏதோ பேசிவிட்டேன்.” கன்னத்தில் போட்டுக் கொண்டு அங்கிருந்து போய் விட்டாள்.
அதற்குள் ஷிபாலி அங்கே வந்தாள்.
“வா… வா.. நீ போன் செய்து சொன்ன நேரம் நினைவு இருக்கிறது” என்றபடி மைதிலி அவளை வரவேற்றாள்.
“மைதிலி! சிநேகிதிகள் எல்லோரும் சேர்ந்து பியூட்டி பார்லர் ஒன்றை தொடங்குவதாக இருக்கிறோம். நீ அதில் மெம்பர் ஆக இருக்கணும். இது முழுவதும் நவீன முறையில் செயல் படும்.”
“இப்போ உனக்கு இருக்கும் பொழுது போக்குகள் போதவில்லையா?” சிரித்துக் கொண்டே கேட்டாள் மைதிலி.
“என்ன செய்வது? ஏதாவது ஒரு வேலை இல்லை என்றால் எனக்கு பொழுது போகாது. இதில் தவறு என்ன இருக்கு? ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் வினய்க்கு ஒரு நிமிடம் கூட ஒய்வு இருக்காது.”
“குழந்தைகளை போர்டிங் ஸ்கூலுக்கு ஏன் அனுப்பி வைத்தாய்?”
“குழந்தைகளா அவர்கள்? பிடாரிகள்! அவர்கள் வீட்டில் இருந்தால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். ஒரு நிமிடம் சும்மா இருக்க மாட்டார்கள். வீட்டை தலைகீழாக்கி ரணகளம் செய்து விடுவார்கள்.”
ஷிபாலி சொன்ன தோரணைக்கு மைதிலி பக்கென்று சிரித்து விட்டாள். “கணவர் ரொம்ப பிசி என்கிறாய். குழந்தைகளின் ரகளையைப் பொறுத்துக் கொள்ள மாட்டாய். பொழுது போகவில்லை என்று சொல்வது நீயாக செய்து கொண்ட வினைதானோ என்று எப்போதாவது யோசித்துப் பார்த்தாயா?”
“ஊஹூம். என் வாழ்க்கை எனக்கு சொந்தம். என் விருப்பம் போல் சந்தோஷமாக இருப்பேன்.”
“உனக்கு உன் குடும்பத்திடம் பொறுப்பு இல்லையா?”
“மாமனார், மாமியார் எல்லாவற்றையும் பார்த்து கொள்கிறார்கள். என்னை அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னை ஒரு வேலை செய்ய விட மாட்டார்கள்.”
“அவர்கள் வேண்டுமென்றே உன்னை சோம்பேறி ஆக்குகிறார்கள் ஷிபாலி.”
“ஆக்கட்டுமே. அவர்கள் செல்லம் கொடுப்பார்கள். நான் கொண்டாடுகிறேன். எனக்கு பொறுப்பு என்றால் பயம். அவர்கள் என்னை அந்த ஜொலிக்கு வரவிட மாட்டார்கள். எப்படியும் எனக்கு லாபம்தான்.”
மைதிலி நாற்காலியில் பின்னுக்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். “மனிதனுக்கு இலவசமாக சந்தோஷம் கிடைத்தால் என்றாவது ஒருநாள் அதன் அசலை வட்டியுடன் செலுத்த வேண்டியிருக்கும்.”
“நீ ரொம்பவும்தான் பயமுறுத்துகிராய்.”
“எதற்கு ஷிபாலி?” பின்னாலிருந்து அபிஜித்தின் குரல் கேட்டது.
மைதிலி அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றுகொண்டாள்.
“பாரு அபீ! மைதிலி என்னை எப்படி பயமுறுத்துகிறாளோ? மைதிலி பேசுவதைக் கேட்டால் சிலசமயம் நான் ஏதாவது தவறு செய்கிறேனோ என்று பயந்து கொண்டிருப்பேன்.”
“என்ன விஷயம்?” கோட்டை கழட்டிக் கொண்டே கேட்டான்.
ஷிபாலி கடகடவென்று ஒப்பித்தாள் .
“அதுதானா? மைதிலிக்கு பொறுப்புகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். பொறுப்புகள் இருப்பது மிகப் பெரிய வரம் என்பாள் அவள். வினய் எங்கே? நேற்று முன்தினம் பார்ட்டீக்குக் கூட வரவில்லை. போனில் கூட எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை.”
“சென்னைக்கு போயிருக்கிறான்.”
“என்ன? மாதத்தில் இருபது நாள் அங்கேயே இருக்கிறான். இன்னொரு பிராஞ்ச் அங்கே ஓபன் செய்திருக்கிறானா?”
”யாருக்கு தெரியும்?” தோள்களை குலுக்கினாள் ஷிபாலி.
“எப்போது வருகிறான்? அவனிடம் எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.”
“எனக்குத் தெரியாது அபீ. வீட்டுக்குப் போனதும் மாமியாரிடம் கேட்டு உனக்கு போன் செய்கிறேன்.”
அபிஜித் மைதிலி இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.
“இதற்காகத்தான் நான் சத்தம் போடுகிறேன். உண கணவன் எப்போது வருவானோ உனக்குத் தெரியாதா?” என்றாள் மைதிலி.
“எல்லோரும் உன் அளவுக்கு பொசெசிவ் ஆக இருப்பார்களா என்ன?” என்றான் அபிஜித் புன்முறுவலுடன்.
“அப்படிச் சொல்லு அபீ!” என்றாள் ஷிபாலி சந்தோஷம் பொங்கும் குரலில்.
“ஷிபாலி பியூட்டி கிளினிக் தொடங்கப் போகிறாளாம். என்னை பார்ட்னர் ஆக சேரச் சொல்கிறாள்”” என்றாள் மைதிலி.
“உன்னையா? பியூட்டி பார்லரா? அப்போ அதற்கு இயற்கை சிகிச்சை நிலையம் என்று பெயர் வைக்க வேண்டியிருக்குமோ என்னவோ?” என்றான் அவன்.
“அப்படி எல்லாம் முடியாது. மைதிலி வெறும் டம்மி பார்ட்னர் மட்டும்தான். மைதிலி இருக்கிறாள் என்றால் நிறைய பேர் வருவார்கள்.”
ஷிபாலி சொன்ன தோரணைக்கு மைதிலி, அபிஜித் இருவரும் சிரித்து விட்டார்கள்.
“முதலில் நீ இதைப்பற்றி உன் மாமியார், மாமனாரிடம் சொன்னாயா?”
“”இந்த அறிவுரை சொன்னதே அவர்கள்தான்.”
“பியூட்டி பார்லர் தொடங்கு என்றா?”
“இல்லை. அது என்னுடைய சொந்த யோசனைதான். மைதிலியை பார்ட்னர் ஆக சேர்த்துகொள் என்று சொன்னது அவர்கள்தான்.”
இதைக் கேட்டதும் அபிஜித்தும் மைதிலியும் விஷயம் புரிந்து விட்டாற்போல் பார்த்துக் கொண்டார்கள்.
“ஆகட்டும். மைதிலிக்கு சம்மதம் என்றால் எனக்கும் ஓ. கே. தான்.”
“எனக்கு சமயம் இருக்காது. ப்ளீஸ்” சட்டென்று சொன்னாள் மைதிலி.
“நீ வெறும் டம்மி பார்ட்னர் மட்டும்தான்” என்றால் ஷிபாலி.
மைதிலி மௌனமாக இருந்தாள்.
“மைதிலி எந்த வேலையைச் செய்தாலும் பொறுப்பாக செய்வாள். இது ஒத்துவராது. மிசெஸ் மாதுரிடம் சொல்கிறேன். அவள் ஒப்புக் கொள்வாள்” என்றான் அபிஜித்.
“தாங்க்யூ. மை டியர் பிரதர்! தாங்க்யூ.“ அபிஜித்தின் கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு போய்விட்டாள்.
“ஏற்கனவே தாய் தந்தை செல்லம் கொடுத்து ஷிபாலியை குட்டிச் சுவராக்கி விட்டார்கள் என்றால் மாமனார் மாமியார் அவர்களை மிஞ்சிவிட்டார்கள். ஷிபாலியின் மூளையில் மண்ணை நிரப்புவதுதான் அவர்களுடைய வேலை.” மைதில அபிஜித் அருகில் வந்தாள். “அது சரி. நான் எப்போ போசெசிவ் ஆக நடந்து கொண்டேனாம்?”
“ஒஹ் ! அதுவா!“ அபிஜித் ஒரு வினாடி நிறுத்தினான். “இதுதான். என் மனதில் இருப்பதை வெளியில் சொல்லும் சுதந்திரம் கூட இல்லை எனக்கு. கூண்டில் நிற்கவைத்து கேட்பது போல் எப்படி கேட்கிறாய் பார்.”
“நான் உங்களுக்குப் பிடிக்காத காரியம் ஏதாவது செய்தால் உடனே சொல்லச் சொல்லியும், நான் உடனே என்னை மாற்றிக் கொள்வேன் என்றும் ஆயிரம் தடவை சொல்லி விட்டேன்.” மைதிலி ரோஷத்துடன் சொன்னாள்.
மைதிலியின் ஆள்காட்டி விரலை தன் கையால் பற்றிக் கீழே இறக்கிக் கொண்டே “மைதிலி! நீ போசெசிவ் என்று சொன்னேனே ஒழிய அது எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னேனா?” என்று கேட்டான்.
அந்த அளவுக்கு யோசிக்கவில்லை என்பது போல் பார்த்தாள் மைதிலி.
“அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நீ எவ்வளவு போசெசிவ் ஆக இருக்கிறாயோ அந்த அளவுக்கு எனக்கு சந்தோஷம்.”
“அப்படி என்றால்?” புரியாதவள் போல் பார்த்தாள்.
“உதாரணத்திற்கு…” அவன் மனைவியின் தொளின் கையைப் பதித்து அருகில் இழுத்துக் கொண்டே சொன்னான். “நான் சிலசமயம் ‘மைதிலி! லீவ் மி அலோன்’ என்று சொல்வேன் இல்லையா? அது போல் நீயும் சொல்லவேண்டும் என்று தோன்றும். அது மட்டுமே இல்லை. என் மீது வேறொருவரின் நிழல் கூட படுவதுவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று நீ சபதம் செய்தால் எனக்கு பிடிக்கும். ஆனால் நீ அப்படி சொல்ல மாட்டாய். சொல்லு.. எப்போதாவது சொல்லியிருக்கிறாயா?”
மைதிலி இயலாமையுடன் பார்த்தாள்.
“சொன்னதில்லை. சொல்லவும் மாட்டாய். நீ அப்படி சொல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று நான் சில சமயம் யோசித்ததுண்டு. ஒருக்கால் நமக்குக் குழ….”
“அபீ! ப்ளீஸ்!” மைதிலி அவன் வாயைக் கையால் பொத்தினாள். “ஐ யாம் சாரி” என்றாள்.
எதிர்பாராத விதமாக உரையாடல் சீரியஸ் டாபிக் நோக்கி திரும்பியதும் அறையில் மௌனம் குடி கொண்டது.
அதற்குள் போன் மணி ஒலித்தது. அபிஜித் ரிசீவரை எடுத்துக் கொண்டு “ஹலோ! மாதவனா! ஒரு நிமிஷம்..” என்றவன் குரலைத் தாழ்த்திக் கொண்டு பக்கவாட்டில் திரும்பி “மைதிலி! ட்ராயிங் ரூமில் சித்தார்த் உட்கார்ந்திருப்பான். அவனிடம் பேசிக்கொண்டிரு. நான் இதோ வந்து விடுகிறேன்” என்றான்.
மைதிலி திடுக்கிட்டாற்போல் பார்த்தாள்.
மைதிலி கிளம்பிப் போகும் முன் அபிஜித் “அவன் காலையிலேயே ஆபீசுக்கு வந்துவிட்டான். டிபன் ஏதாவது கொடுத்த பிறகு காபி கொடுக்கும் ஏற்பாடுகளைப் பார்” என்று எச்சரித்தான்.

Series Navigationகவிதைகள்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *