கிணறு கூப்பிடுகிறது. ஏர் கூப்பிடுகிறது. பானையில் உறங்கும் வேர்க்கடலை வித்து கூப்பிடுகிறது. எல்லாமே ஒரே கூப்பாடு தான்.
கொல்லையில் பனைமரத்தின் கீழே வேட்டியை வழித்து உட்கார்ந்திருந்த ஆறுமுகம் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நீல வானில் வெள்ளியிலே ஒரு கண் முளைத்த மாதிரி. விடிவெள்ளி தான்.
மழையெல்லாம் வராது என்று கிண்டலாக அது சிரிப்பது போலிருந்தது.
கிணறு, ஏர், வேர்க்கடலை எல்லாக் கூப்பாட்டிற்கும் விடிவெள்ளியின் ஏளனச் சிரிப்பு தான் விடை. அவன் மனசை எதுவோ சுரண்டியது.
இன்னும் இரண்டு வெட்டு வெட்டினால் கிணற்றில் தண்ணீர் வந்துவிடும். ஒரு வெட்டு வெட்ட ஆயிரமாவது ஆகும். அவ்வளவு பாறை. முக்கால்வாசி வெட்டு வந்ததும் பல்லை இளிக்கும் பாறை. தோட்டா வைத்துத் தகர்க்க வேண்டும்.
இரண்டாயிரத்துக்கு எங்கே போவது?
நில அடமான பாங்கில் வாங்கின கடனில் பாதியைத் தங்கை சுலோசனா கல்யாணம் விழுங்கி விட்டது. இருந்த மிச்சத்தில்தான் கிணறு பாதியில் நின்றது.
பணம், பணம், மனசு பணத்தை நோக்கிக் கூப்பாடு போட்டது.
மூன்று ஏக்கர் மேட்டு நிலத்தையும் இப்படி ஒரு மொட்டைக் கிணற்றையும் வைத்துக் கொண்டு விழிப்பவனுக்குப் பணம் தர எவரும் தயாராயில்லை. அதுவும் பாங்கில் அடமானம் போட்ட நிலம்.
நினைத்து நினைத்தே மனசு ஒரு சுரங்கமாகி விட்டது. கையாலாகாத்தனத்தையும், கசப்பையும் எதிரொலிக்கிற சுரங்கம்.
பருவ மழை பெய்திருந்தாலாவது மேட்டு வெள்ளாமைக்குக் கரம்பை ஓட்டி, கடலைக்காய் போட்டிருக்கலாம். மழை பெரிய மௌனமாகச் சாதிக்கிறது. மழை வரவில்லை யென்று கங்கம்மாவுக்குக் கூழ் வார்த்தார்கள். சேரியிலிருந்து ஒரு கூட்டம் பெண்கள் ஏரிக்கரைக்குப் போய் மாரடித்து ஒப்பாரி வைத்து அழுதார்கள்.
வானம், இந்த மனிதர்களால் இன்னும் என்னென்ன செய்ய முடியும் என்று வேடிக்கை பார்த்தது. ஊருக்குள் பாரதப் பிரசங்கம், அர்ஜுனன் தவசுக்குப் பனை மரம் நட்டு, ராத்திரி வேளைகளில் சிறுவர்கள் கூட்டம் அதைச் சுற்றிக் கபாடி விளையாடுகிறது.
அர்ஜுனன் தவசு தப்பினால், பதினெட்டாம் போரன்று கட்டாயம் மழை உண்டாம். இப்படித் தான் காமனை எரிப்பதற்கு ஊர் முழுக்கப் பழம்பாய், துடைப்பம் முறம் என்று சேகரிக்கிற போதும் சொன்னார்கள். மழை வரவில்லை. காமன் வேஷம் போட்டுக் கொண்டு ஊர் முழுக்க அலைந்த சாமிநாதன் ரதி ஒப்பாரியைக் கேட்டு, தண்ணியடித்துத் தூங்கிப் போனான்.
ஆனால் மழை வரவில்லை!
அது தற்போது வராமலிருப்பதில் ஆறுமுகத்துக்குக் கொஞ்சம் ஆறுதல். அதற்குள் எங்காவது பணம் புரண்டாலும் ஒரு மெட்டு இறக்கி விடலாம். மழை வந்தால் கிணறு வெட்டை நிறுத்தி விட வேண்டியதுதான். கிணறு வெட்டு ஆட்களும் தெற்கே போய் விடுவார்கள். ஆறுமுகம் பெருமூச்செறிந்தான்.
போன வருஷம் காசிக்கு ஊரில் ஒரு குடும்பம் போய் விட்டு வந்தது. கங்கை சமுத்திரமாக ஓடுகிறதாம்! வழியெல்லாம் கிருஷ்ணா, கோதாவரி என்று நதிப் பிரவாகங்களைப் பற்றி அவர்கள் கொட்டியளந்த போது வாய் பிளந்து கேட்டான் ஆறுமுகம்.
மனத்துக்குள் புண்ணைப் பிடுங்குவது போல் ஒரு வேதனை. இந்த ஊர், இந்த மாவட்டம் என்ன பாவம் பண்ணியது? கொட்டாறு போல் ஒரு மணல்வெளி. அதற்கும் எட்டு மைல் போக வேண்டும். பெயர் தான் பாலாறு. பாலாவது கிடைத்துவிடும். தண்ணீர்தான் கிடைக்காது.
“யாராது பனை மரத்தடியிலே ?”
தூரத்தில் ஒரு குரல். அசப்பில் துரைசாமி மாதிரி இருந்தது. குரல் மாற்றம்.
“நான்தான், ஆறுமுகம்!”
“ஆறுமுகமா… எவனோ நொங்கு திருடன் ஒக்காந்திருக்கான்னு பார்த்தேன்!”
பேசியது பெருமாள். இப்போது குரல் தெளிவாயிற்று. ஆறுமுகம் எழுந்து விட்டான்.
“என்னடா இவ்வளவு கார்த்தாலே?”
“ஜலவாதிக்கு வந்தேன்.”
“தங்கச்சி புள்ள பெத்துக்க வந்துச்சே, ஊருக்குப் போயிடுச்சா?”
“போயிடுச்சுப்பா!”
“மச்சானுக்கு என்ன சீரு பண்ணே?”
“என்னாத்தப் பண்றது? வெள்ளி அரணாக் கொடியும் காலுக்குக் கொலுசும் போட்டு அனுப்பிச்சேன்.”
“மாப்பிள்ளை தோல் ஷாப்பிலேருந்து நின்னுட்டானாமே!”
“ஆமா… அவருக்குக் கைகட்டிச் சம்பளம் வாங்கறது பிடிக்கலியாம். லுங்கி வியாபாரம் போறேன்னு சைக்கிள்ள லுங்கியைக் கட்டிட்டு அலையறார்…”
பெருமாள் சூள் கொட்டினான். பெருமாளுக்கு அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று பிக்கல் பிடுங்கல் கிடையாது. அவன், சிவப்பாய் வாட்ட சாட்டமாய், பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அவர் மனைவி கோவிந்தி.
இருவருமே கஷ்டவாளிகள். பெருமாள், காடான காட்டுக்குள்ளும் போய் விறகு வெட்டித் தலைச்சுமை எடுத்து டவுனில் விற்று வருவான். கோவிந்தி ஆடு மேய்ப்பாள்.
ஆரம்பத்தில் நாலு உரு ஆடுதான். போன மாதம் கலப்பைக்காக மரம் வெட்டி வர நாடு பார்த்தான். மலைக்குப் போய்த் திரும்பும் போது, ஆட்டு மந்தையோடு அவளைச் சந்தித்தான். எண்பது உருவுக்கு வளர்ந்திருந்தது பெரிய மந்தை.
“என்ன கோவிந்தி, பணக்காரி ஆய்ட்டே?”
“அட போயெண்ணா… ஒங் கண்ணு ஒண்ணு படாத இருந்ததுதான் கொறச்சல்.”
“அல்லார் கண்ணும் பட்டிருச்சா?”
“பின்னே… நாலு உரு வைச்சிருந்தா கோவிந்தி. எண்பது உருவாக்கிட்டா. ஆட்டுக்கு நூறுன்னாலும் எட்டாயிரம்னு காதுபடப் பேசிக்கறாங்க.”
“பேசத்தான் பேசுவாங்க! ஆம்படையானும் பொண்டாட்டியுமா ஓடி ஓடிச் சம்பாறிக்கறீங்களே, புள்ளையா குட்டியா? யார் தின்னப் போறாங்க…? எதுக்குச் சேத்து வக்கறீங்க? ரெண்டு வட்டி மூணு வட்டின்னு ஊருக்குள்ளே ஒங்க பணம் ஓடுதாமே?”
கோவிந்தி வெட்கத்தோடு சிரித்தாள்.
“ஒனக்கு இன்னாண்ணா மூணு ஏக்கர் பூமி வச்சிருக்கே… பேசறே! எங்களைச் சொல்லு. தோல் ஷாப் ஓரமா இருந்த நெலத்திலே மருந்துத் தண்ணி பாஞ்சு பாஞ்சு பூமி பாழாப் போயி, அதை வித்துக் கொண்டாந்த பணம் ஜீரணமாயிப் போச்சு. குத்தகைக்கு ஓட்ற நெலத்திலே ஒரு குடிசை போட்டிருக்கோம். எழுந்துக்கங்கன்னு செட்டியாரு சொன்னா எழுந்துக்க வேண்டியது தான்.”
“அப்போ நெலம் வாங்கப் பணம் சேத்தறீங்க!”
அதற்குக் கோவிந்தி பதில் சொல்லாமல் சிரித்தாள்.
நிலம் வைத்திருப்பவன் பணத்திற்கும், பணம் வைத்திருப்பவன் நிலத்திற்குமாக என்ன பறப்பு இந்தப் பறப்பு
பெருமாள் நின்று கொண்டிருக்க, வேலஞ்செடியில் முள்ளை விலக்கி, பல் துலக்கக் குச்சி ஒடிக்கும் போது, என்ன ஜாக்கிரதையாகக் குச்சி ஒடித்தும் முள் சற்றுக் கீறிவிட்டது. ஒரு பொட்டு ரத்தம். கீழே கிடந்த சருகில் துடைத்து எறிந்தான்.
“என்னடா ஆறுமுகம்… ஆனி கழிஞ்சுடுச்சு, இன்னும் மழையில்லே…?”
“ஒனக்கு மழையில்லேன்னு என்னா கவலை? வெறகு வெட்டச் சவுகரியமாச்சு. ஆட்டுக்கு வேலங்காய் தின்னே வயிறு ரொம்பிவிடும்.”
“தெரியாதா விஷயம்?”
“என்னாதுண்ணா?”
“ஆடுங்களை வித்துட்டேண்டா.”
“மொத்த உருவுமா?”
“மொத்தமுந்தான்.”
“பெரிய தொகை கெடைச்சிருக்குமே!”
“ஏதோ கெடைச்சுது.”
ஆறுமுகத்திற்குப் பாறைக்கு அடியில் நீர் கசிவது போல் ஒரு நம்பிக்கை. பெருமாளிடம் பணம் இருக்கிறது.
“என்னாண்ணா அவ்வளவு பிகுவாச் சொல்றே.”
“இதிலே என்னோட பிகுவு. கெடச்சுதுன்னு தான் சொன்னேனே…”
பெருமாளின் பணம் பிகுவாகச் சேர்த்ததுதான். மேய்த்து, விறகு சுமந்து, கரும்பாலை சீஸனில் வெல்லப் பதம் பார்த்து, ஈரத் துணியைக் கையில் வைத்து, கை சூடு பொறுத்து, வெல்ல உருண்டை உருட்டிக் கூலி வாங்கிச் சேர்த்த பணம்.
காலையில் கேழ்வரகுக் களியும் புளி ஊறுகாயும் சாப்பிட்டு விட்டுப் புணாயில் கூழை ஊற்றித் தோளில் மாட்டி, மூங்கில் கூப்பில் மூங்கில் வெட்டி, அது தப்பினால் விறகு சுமந்து நகரத்தில் கேட்கும் அடாவடி விலைக்கு எதிர்ச் சவால் போட்டுச் சேர்த்த பணம்.
“எட்டு ரூபா வந்துதா?”
“கூடக் குறையண்ணு வைச்சுக்கயேன்.”
தாயத்தை எப்படி உருட்டுவது என்று யோசிக்கிற மாதிரி மௌனமானான் ஆறுமுகம்.
“பணத்தை என்னாண்ணா பண்ணப் போறே?”
“கைல ஏது? அப்பவே வாங்கினவுடனே கை மாறிடுச்சே.”
சப்பிட்டு விட்டது. சுதாரித்தான் ஆறுமுகம். பெருமாள் பண விஷயத்தில் கறாரானவன். பிடியே தரமாட்டான்.
“எத்தினி வட்டிக்கு?”
“ரெண்டரை வட்டிதான்.”
“யாருக்கு?”
“அந்தக் கதை ஒனக்கு ஏண்டா?”
மீண்டும் நம்பிக்கை ஆறுமுகத்திற்கு மீண்டது.
“கொஞ்சம் நில்லுண்ணா, போயிடாதே! தோ வந்துடறேன்.”
ஆறுமுகம் சரசரவென்று செவத்தான் கிணற்றுக்குப் போனான். அக்கம் பக்கம் எல்லாம் மோட்டார் பம்ப் போட்டு விட்ட இந்த நாளில், அவன் ஒருவன் மட்டும் தான் கவலை இறைத்துக் கொண்டிருந்தான். ஆறுமுகம் கால் கழுவித் திரும்பும் வரையில் ஒரு பல் குச்சியை மென்று கொண்டு பெருமாள் நின்று கொண்டிருந்தான்.
“பெரியப்பு நெலத்தைப் பேசிக்கிட்டிருந்தியே, படிஞ்சிடுச்சா?”
“டேய்ப்பா… அவன் ஆனை வெல சொல்றாம்ப்பா, அது நமக்குக் கட்டாது.”
“பேரத்துக்கு உட்காந்து பார்த்தியா?”
“அவன்தான் எடமே குடுக்கலியே.”
“பாம்புக் கடிக்கு மந்திரம் போடற முனிசாமி முட்றாப்பிலே இருக்கு.”
“அவரு மட்டுமா? காங்கிமேன் இல்லே… குறிகாரி ஆம்படையான். அவனும் மோதறான். அதனாலேதான் பெரியப்பு கோபுரத்திலே ஒக்காத்திருக்கான்.
ஆறுமுகம் எதிர்பார்த்த தகவல் வந்துவிட்டது. பெருமாளு சொன்னது போல் பணம் கைமாறவில்லை. காத்திருக்கிறது. ஏரிக்கரை கொக்கு போல்.
“நான் பேசிப் பாக்கட்டுமா அண்ணா.”
“அவன் மசிய மாட்டாண்டா.”
“இல்லேன்னா சிங்காரத்தை ஜூரிவிட்டா கேப்பான்.”
“எந்தச் சிங்காரம்?”
“தெருக்கூத்துச் சிங்காரம்.”
“முயற்சி பண்ணிப்பாரு.”
“உன் முடிவு சொல்லு.”
“பதினஞ்சுக்கு மேலே வேணாம்டா.”
ஆக, பெருமாளிடம் பதினைந்து நிகரம் உண்டு.
“ஆமா, விடிகாத்தாலே நீ எங்கே வந்தே?”
“செட்டியாரு நுங்கு வேணும்னு சொல்லிட்டிருந்தாரு இது முத்திட்டிருக்கும்னேன். பரவால்லேன்னாரு. யாரோ மரத்தடியிலே ஒக்காந்திருக்கான்னு தோணிச்சு. அதுக்குத் தான் வந்தேன்.”
“அண்ணா.”
ஆறுமுகம் பளிச்சென்று தொனி மாறிக் கூப்பிட்டான்.
“என்னடா?”
“கெணறு வெட்டுப் பாதியிலே நின்னிருக்கு.”
“அதான் பார்த்தேனே…”
இருவரும் நடந்து கொண்டே ஆறுமுகம் கிணற்றருகே வந்துவிட்டனர். பொழுது, முதல் சலவையில் சாயம் போன துணி மாதிரி மெல்ல வெளுத்திருந்தது. மரங்களில் கீச்சு கீச்சு கீச்சென்று ஒரே சத்தம்.
பெருமாள் சத்தத்தைக் கேட்டு மரங்களை நிமிர்ந்து பார்த்தான்.
“அணிலுங்க இணை தேடற காலம்டா ஆறுமுகம். இன்னும் மழை வரல்லை.”
அப்போதைக்கு அப்போது ஆளுக்கு ஆள் சொல்லிக் கேட்டு மரத்து விட்டாலும், மழை இல்லாத செய்தி நறுக்கென்று, ஒரு கத்தி செருகுவது போலக் குத்திவிட்டுத் தான் போகிறது.
“மண்ணைப் பாத்தியாண்ணா?”
பெருமாள் குனிந்து நிலத்தைப் பார்த்தான். செம்பாட்டு மண்வாக்கில் வறண்டு வெடிப்பு விட்டு வாய் பிளந்திருந்தது.
“கெணத்தைப் பாரேன்.”
பெருமாள் குனிந்து பார்த்தான்.
மழித்துவிட்ட கருப்புத் தலை போல, உள்ளே ஒரு பாறை முகம் எழுப்பி நின்றது.
“எத்தனை மெட்டு வெட்டணும்னாரு தண்ணி பாக்கறவரு?”
“இன்னும் ரெண்டு மெட்டாம். அந்தப் பாறையை ஒடச்சு எடுத்துட்டா கீழே ஜீவதாரை ஓடுதாம். ஒரு மெட்டுக்கு ஒரு ரூபான்னா ரெண்டாயிரம் வேணும்.”
கிணறு, குடிபெயர்ந்தவர்கள் கைவிட்ட வீடு போல் அத்துவானமாக இருந்தது. எவ்வளவு பணத்தை இதில் கொட்டுவான் ஆறுமுகம்?
“நான் ரெண்டரை வட்டி கொடுக்கறேண்ணா. ஒரு ரெண்டு ரூபா எல்ப் பண்ணு.”
“என்னாடாது வெள்ளாட்றியா? அதான் மின்னாலியே சொல்லிட்டேனே கைவசம் எங்கிட்டே பணம் இல்லேன்னு.”
அந்த நேரத்தில் முசுமுசு சென்று இரைத்து நாக்கைத் தொங்கப் போட்டு, வயிறும் சுமையு மாய்க் கர்ப்பமாயிருந்த பெண் நாய் ஒன்று ஆறுமுகம் கிணற்றுக்குத் தொட்டி கட்டியிருந்த இடத்திற்கு ஆவலாக ஓடி வந்தது.
இருவரும் அதைத் திரும்பிப் பார்த்தனர்.
நாய் தொட்டியைச் சுற்றி வந்து மோந்து பார்த்துத் தண்ணீர் ஓடும் கால்வாயை ஒருமுறை குனிந்து, எதையோ தேடிவிட்டு இருவரையும் பார்த்தது. தண்ணீர்.
பெருமாள் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“கொஞ்சம் யோசனை பண்ணிச் சொல்லுண்ணா.”
பெருமாள் நாயையும் கிணற்றையும் ஒருமுறை பார்த்து விட்டு ஆறுமுகத்தைப் பார்த்தான்.
“நா கார்த்திகை தீபத்துக்கு அண்ணாமலையாரைப் பார்க்கக் குடும்பத்தோட போகணும்ன்னு ஒரு உண்டி போட்டு வச்சிருக்கேன்.”
“கார்த்திகைதானேண்ணா! அதுக்குள்ளே களக்கா அறுவடை வந்துடும். நான் திருப்பிடறேன்.”
பெருமாள் ஏமாற்றத்துடன் வயிற்றுச் சுமையோடு திரும்பிச் செல்லும் நாயையே பார்த்துக் கொண்டு சொன்னான்.“அது சாமி உண்டிக்கைடா. கொழந்தையில்லேன்னு கும்பிடிக்கைக்காக எட்டு வருஷமா வளர்ற உண்டி.”
“அதான் சொல்லிட்டியேண்ணா.”
“முழுக்கக் கேளு.”
“சொல்லு.”
“உண்டிக்கையை ஒடைக்கிறது தெய்வ குத்தம்.”
ஆறுமுகம், காசு தலையாக விழப் போகிறதா, பூவாக விழப் போகிறதா என்பது போல் பெருமாளைப் பார்த்தான்.
“ஒடைச்சு எடுத்த காசை வட்டிக்கு விடறது பெரிய பாவம்டா.”
காசு சுண்டிக் கொண்டு மேலேதான் கர்ணம் போட்டுக் கொண்டிருந்தது. இன்னும் தரையில் விழவில்லை.
“கார்த்திகை பொறந்ததும் திருப்பிடுவே இல்லே…”
“களக்கா பிடுங்கக் காலம் தப்பிப் போச்சுண்ணாக் கூடத் தோட்டத்தைக் காட்டிக் கவுண்டர் கிட்டே பணம் வாங்கித் தரணேண்ணா!”
“எனக்கு வட்டி வேண்டாம்டா.”
பாறைக்குக் கீழே ஒரு கண் பிளத்து சரசரவென்று ஊற்றுப் பொங்கிய மாதிரி ஈரம் படர்ந்தது, ஆறுமுகம் மனத்தில். கண்களில் நீர் தளிர்த்தது.
“அண்ணா…!” என்றான்.
கண் பார்வை, அடுத்த கொல்லைக் கிணற்றில் தண்ணீர் தேடிக் கொண்டு போகும் அந்தக் கர்ப்பிணி நாயையே ஏதோ யோசனையில் பார்த்துக் கொண்டிருக்க பெருமாளுக்கு தூரத்தில் அதன் வால் ஆடுவது மட்டும் தெரிந்தது.
+++++++++++++++++++++++++++++++
வைரமணிக் கதைகள்
[வையவன் ]
முதற் பதிப்பு : 2012
பக்கங்கள்:500
விலை:ரூ. 500
கிடைக்குமிடம்: தாரிணி பதிப்பகம்
4 A, ரம்யா ப்ளாட்ஸ்
32/79, காந்தி நகர் 4வது பிரதான சாலை
அடையார், சென்னை-20
மொபைல்: 99401 20341
- மிதிலாவிலாஸ்-5
- கவிதைகள்
- ஹைதராபாத் பயணக்குறிப்புகள்: சுப்ரபாரதிமணியன்
- நப்பின்னை நங்காய்
- வைரமணிக் கதைகள் -6 ஈரம்
- பிளக்ஸ் போர்டு வருகையினால் அழிந்து வரும் ஓவியக்கலை
- தொடரகம் – நானும் காடும்
- ஒரு தீர்ப்பு
- தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !
- விண்வெளியில் நான்கு பரிதிகளைச் சுற்றும் அண்டக்கோளுடன் கூட்டாக இயங்கி வரும் புதிய அமைப்பு கண்டுபிடிப்பு
- உயரங்களும் சிகரங்களும்
- ஆத்ம கீதங்கள் –19 ஒரு மங்கையின் குறைபாடுகள் [A Woman’s Shortcomings]
- தொடுவானம் 58. பிரியாவிடை
- பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்
- என் சடலம்
- சீஅன் நகரம் -4 டவோ மதகுரு லவோட்சு
- யாமினி க்ருஷ்ணமூர்த்தி (6)
- மகளிர் தினச் சிந்தனை ஊர்மிளை
- திரை விமர்சனம் – எனக்குள் ஒருவன்
- பேருந்து நிலையம்
- நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 5