மிதிலாவிலாஸ்-6

This entry is part 25 of 25 in the series 15 மார்ச் 2015


தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

Yaddana_profile_0மைதிலி டிராயிங் ரூமுக்கு வந்தாள். சித்தார்த் கண்ணாடிக் கதவு அருகில் நின்று கொண்டு புல்தரையை பார்த்துக் கொண்டிருந்தான். மைதிலியின் மனதில் இனம் தெரியாத கலவரம். மனதை திடப்படுத்திக் கொண்டு நடந்து வரும் போது காலடிச் சத்தம் கேட்டு அவன் இந்த பக்கம் திரும்பினான்.
மைதிலி குசலம் விசாரிப்பது போல் முறுவலித்தாள்.
அவன் வணக்கம் தெரிவித்தான். அந்த முகத்தில் தயக்கம் தென்பட்டுக் கொண்டிருந்தது.
“உட்கார்! அவர் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். இப்போ வந்து விடுவார்” என்றாள். தன்னை விட வயதில் ரொம்ப சிறியவன். அந்த வயதில் இருக்கும் இளைஞர்களை ஒருமையில் விளிப்பதுதான் மைதிலியின் பழக்கம்.
சித்தார்த் உட்கார்ந்து கொண்டான். திரும்பவும் அதே நிலையான தன்மை. எந்த விதமான தடுமாற்றமும் இல்லாத தன்மை.
அவனிடம் எந்த விதமாக உரையாட வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை. அவன் மற்ற இளைஞர்களைப் போல் .கலகலவென்று உரையாடுவதில் ஆர்வம் இருப்பவன்போல் தெரியவில்லை. இந்த உலகத்திற்கும், தனக்கும் நடுவில் குறுக்குச் சுவர் ஏதோ எழுப்பி விட்டவன் போல், மௌனத்திற்குப் பின்னால் மறைத்திருக்கும் நபர் போல் இருந்தான்.
மைதிலி கேட்டாள். “குடிக்க தண்ணீர் வேண்டுமா?”
அவன் வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தான். திரும்பவும் நிசப்தம்.
“காபி கொண்டு வரச் சொல்கிறேன்.” மைதிலி எழுந்துகொள்ளப் போனாள். திரும்பவும் அதே மறுப்பு. அந்த மறுப்பை காட்டுவதில் அவனுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. எந்த தயக்கமும் இல்லாமல் தன் அபிப்ராயத்தை எதிராளிக்கு குறிப்பாக உணர்த்தி விட்டான். மறுபடியும் மௌனம்.
மைதிலி அவனை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தாள். தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும்.
அவன் எதையும் பொருட்படுத்தவில்லை. உள்ளேயிருந்து அபிஜித் போனில் பேசுவது கேட்டுக் கொண்டிருந்தது. அவன் அபிஜித்தின் வருகைக்காக காத்திருப்பது புரிந்தது.
அங்கே இருந்த பைலை எடுத்துப் பார்த்தாள். அவனுடன் உரையாடலை நீடிப்பதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. மைதிலியும் மௌனத்தை அடைக்கலம் பெறுவது போல் செய்துவிட்டான் அவன். எங்கேயும் நிசப்தம். தொலைவில் எங்கேயோ ராஜம்மா வேலைக்காரியின் மீது சத்தம் போடுவது கேட்டுக் கொண்டிருந்தது. குருவிகள் இரண்டு பறந்து வந்து மின்விசிறியின் மீது உட்கார்த்து கீச் கீச் என்று கத்திக் கொண்டிருந்தன. மைதிலி தலையை நிமிர்த்தி அவற்றின் ரகளையை முறுவலுடன் ரசித்துக் கொண்டிருந்தாள். அவனும் அந்தப் பக்கம் பார்த்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான். சூனியத்தை நோக்கி பழக்கப்பட்டு விட்டது போல் அவன் கண்கள் நிசப்தமாக பார்த்துக் கொண்டிருந்தன.
மைதிலிக்கு அவன் முகத்தை மேலும் மேலும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவன் போக்கு வித்தியாசமாக, ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது.
“நன்றாக டிராயிங் போடுவாயா?” என்று கேட்டாள்.
“ஏதோ கொஞ்சம்.”
“ஸ்லோகன் எழுதுவது எப்படி வந்தது? வீட்டில் யாருக்காவது டாலென்ட் இருக்கா?”
“இல்லை.”
அந்த பதில்கள் ரொம்ப சிறியவை. அத்துடன் அவன் சொல்லும் தோரணை கத்தரித்து விட்ட துண்டுகள் போல் இருந்தன.
சற்று நேரம் அந்த பைலை புரட்டிப் பார்த்தாள். பிறகு மூடிவிட்டு டீபாய் மீது வைத்து விட்டாள்.
“சித்தார்த் ரொம்ப நல்ல பெயர்.” பாராட்டுவது போல் சொன்னாள்.
அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.
“இந்தப் பெயரை உனக்கு வைத்தது யார்?”
அவன் உடனே பதில் சொல்லவில்லை. மைதிலி பதிலுக்காகக் காத்திருப்பவள் போல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நானே வைத்துக் கொண்டேன்.” நறுக்கென்று கத்திருப்பது போல் சொன்னான்.
மைதிலிக்கு வேடிக்கையாக இருந்தது. இவனே வைத்துக் கொண்டானா? தாய் தந்தை சூட்டிய பெயர் பிடிக்கவில்லையா? நாற்காலியில் பின்னுக்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். அவனைப் பார்க்கப் பார்க்க மனம் தன் வசத்தை இழந்து கொண்டிருந்தது. ஏதோ தெரியாத சந்தோஷமும், துக்கமும் சூழ்ந்து கொண்டிருந்தன. ஆனால் இருவருக்கு நடுவில கழிந்து கொண்டிருந்த காலம் முள்ளின் மேல் இருப்பது போல் முகத்தை சுளித்துக் கொண்டிருந்தது.
மைதிலிக்கு அபிஜித் எப்போது வருவானோ என்று இருந்தது. இப்படிப்பட்ட சுபாவம் கொண்ட பையனிடமிருந்து அபிஜித் எந்த விதமாக வேலை வாங்கப் போகிறான்? அபிஜித்திடம் ஒரு விசேஷ குணம் இருக்கிறது. தான் வேலையை வாங்க வேண்டிய நபர்களிடமிருந்து, அதிலும் அவர்களிடம் திறமை இருக்கிறது என்று நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் அவர்களிடம் அவனுக்கு பூமாதேவி அளவுக்கு பொறுமை வந்துவிடும். தன்னுடைய போக்கிற்கு அவர்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவன் நினைக்க மாட்டான். அவர்களுடைய சுபாவத்தை அறிந்து, எப்போதும் அவர்கள் நல்ல மூடில் இருக்கும்படி பார்த்துக் கொள்வான். அதனால் இயற்கையாகவே அவனுடைய முன்னிலையில் எதிராளியின் திறமை பன்மடங்காக வெளிப்பட்டு ஒளிவீசும். மைதிலிக்கு இவனைப் பற்றி அபிஜித்திடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
அதற்கு அபிஜித் அங்கே வந்தான்.
அவன் வருகையை கவனித்ததும் சித்தார்த்தின் முகம் பிரசன்னமாயிற்று. எழுந்து நின்று கொண்டான். அப்படி எழுந்து கொள்வதில் மேலதிகாரி ஒருவருக்கு கொடுக்கும் மதிப்பை விட தனக்கு பிரியமான நபரிடம் காட்டும் மரியாதைதான் அதிகமாக இருந்தது.
அபிஜித்தின் கையில் ப்ரீப்கேஸ் இருந்தது. வந்ததுமே அவன் நேராக சித்தார்த்தின் அருகில் சென்றான். அவன் தோளில் கையைப் பதித்து “ஐ யாம் சாரி. அவசரமாய் ஒரு நபரை சந்திக்க வேண்டியிருக்கிறது. அரைமணியில் திரும்பி விடுவேன். நீ மேடத்துடன் உட்கார்ந்து அந்த டிசைன்களை தயார் செய்துவிடு. அவங்களுக்கும் இதைப்பற்றிக் கொஞ்சம் தெரியும்.” கிளம்புவதற்கு முற்பட்டவன் இரண்டடிகள் பின்னால் வந்து திரும்பி சித்தார்த்தாவைப் பார்த்துகொண்டே “ஈசிட் ஒ. கே. உனக்கு இதில் ஆட்சேபணை இல்லையே?” என்று கேட்டான்.
சித்தார்த் ஓ.கே. என்பதை கண்ணாலேயே தெரிவித்தான்.
அபிஜித் போகும் முன் மைதிலி அருகில் நின்று “மைதிலி! அரைமணியில் வந்து விடுகிறேன். டேக் கேர் ஆப் ஹிம்” தாழ்ந்த குரலில் சொன்னான்..
மைதிலி தலையை அசைத்தாள்.
“வருகிறேன்.. பை! “ சித்தார்த், மைதிலியிடம் பொதுவாக சொல்லிவிட்டு அபிஜித் போய் விட்டான்.
அபிஜித் கிளம்பிவிட்டதற்கு அறிகுறியாய் கார் கிளம்பிய சத்தம் கேட்டது. சித்தார்த் உட்கார்ந்து கொண்டான்.
திரும்பவும் அங்கே நிசப்தம்.
மைதிலி பைலை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். நான்கைந்து டிசைன்கள் நன்றாகவே வரைந்திருந்தான்.
“இல்லத்தரசி வீட்டுச் சாவிக் கொத்தை ஏப்ரனில் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? அதன் தேவை என்ன இருக்கு?” என்று கேட்டாள்.
“கட்டாயம் வைத்துக் கொள்ளணும். காலை வேளையில் வேலை செய்யும்போது குழந்தைகள் ஏதாவது கேட்கலாம். கணவர் பணம் எடுத்துக் கொடுக்கச் சொல்லலாம். எங்கேயோ வைத்து விட்டு தேடி கொண்டு இருப்பதை விட இப்படி பாக்கெட்டில் வைத்துக் கொள்வது நல்லது. வேலை மும்முரத்தில் இருக்கும் போது சாவிக் கொத்து கைவசம் இருப்பது வசதியாக இருக்கும்.”
விவரமாக அவன் சொன்ன தோரணைக்கு நிமிர்ந்து பார்க்காமல் மைதிலியால் இருக்க முடியவில்லை.. அவன் வயது பதினெட்டு அல்லது பத்தொன்பது இருக்கக் கூடும். அவன் மடியில் கைகளை வைத்துக் கொண்டு அவற்றை பார்த்தபடி பதில் சொல்லி கொண்டிருந்தான்.
“ஏப்ரன் டிசைன் போட வேண்டுமென்று உனக்கு ஏன் யோசனை வந்தது?”
“பெண்களுக்கு அது ரொம்பவும் முக்கியம்.”
“அந்த எண்ணம் உனக்கு வருவதற்குக் காரணம்?”
அவன் பதில் சொல்லவில்லை.
“ப்ளீஸ்! சொல்லு.”
ஒரு வினாடி ஆழமான நிசப்தம். நிறை குடம் போல் இருந்த மௌனத்தின் அடியிலிருந்து வந்தது போல் அவனுடைய பதில் வந்தது.
“எங்க அக்கா ஸ்டவ்வில் சமைத்துக் கொண்டிருந்த போது தீ பற்றிக் கொண்டு இறந்து போய்விட்டாள். நான் எப்போதும் ஏப்ரன் போட்டுக் கொள்ளச் சொல்லி சண்டை போட்டுக் கொண்டிருந்தேன்.” அவன் குரல் திடீரென்று நின்றுவிட்டது. துக்கம் வார்த்தைகளை விழுங்கி விட்டது போல் இருந்தது..
மைதிலி பின் வாங்கியது போல் பின்னால் நகர்ந்து உட்கார்ந்தாள். “ஐ ஸீ!” என்றாள். அவன் மௌனம் அவளுக்குப் புரிவது போல் இருந்தது.
“எத்தனை அக்கா உனக்கு?”
“ஒருத்திதான்.”
“அண்ணன் தம்பி?”
“யாரும் இல்லை.”
“அம்மா அப்பா?”
அவன் பதில் சொல்லவில்லை.
“இல்லையா?”
இல்லை என்பது போல் தலையை குறுக்கே அசைத்தான்.
“வீட்டீல் யார் யார் இருப்பார்கள்?”
“பாட்டி மற்றும் நான்.”
“உன் அக்காவின் அம்மா, அப்பா அவர்கள்?”
“அக்காவுக்கு யாருமே இல்லை. எங்க பக்கத்து வீட்டு பூசாரியின் அக்கா மகள். அவளுக்கும் தாய் தந்தை இல்லை.”
மைதிலிக்குப் புரிந்து விட்டது. “உங்க அக்கா என்ன வேலை செய்து கொண்டிருந்தாள்?”
“கோவிலை பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருப்பாள்.”
“கல்யாணம் ஆகிவிட்டதா?”
இல்லை என்பது போல் தலையை அசைத்தான்.
“அக்கா இறந்து போய் எவ்வளவு நாளாகிறது?”
“நான்கு வருடங்கள்;.”
மைதிலியின் இமைகள் ஒரு வினாடி மூடித் திறந்தன. அதாவது இவனுக்கு பதினான்கு வயது இருக்கும் போது மிகவும் பிரியமான நபரை இழந்து விட்டான் போலும். அவள் மனம் கருணைக் கடலாக மாறியது.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் திரும்பவும் விறைப்பாக உட்கார்ந்திருந்தான்.
“அக்காவைப் பற்றிய எண்ணங்கள் அடிக்கடி வருமா?” தன்னையும் அறியாமல் கேட்டுவிட்டாள்.
ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான்.
“உனக்கு பெயரை பாட்டி ஏன் வைக்கவில்லை?”
“எனக்குத் தெரியாது. பப்லூ என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஸ்கூலில் சேரும்போது பெயரைக் கேட்டார்கள். நான்தான் சொன்னேன்.”
“அந்தப் பெயர்தான் சொல்லணும் என்று தோன்றுவானேன்?”
“எங்க அக்கா எப்போதும் சித்தார்த்தன் அடி பட்ட புறாவைக் காப்பாற்றிய கதையைச் சொல்லிக் கொண்டு இருப்பாள். எனக்கு அந்தக் கதை மிகவும் பிடிக்கும். அந்தப் பெயர் எனக்குப் பிடித்தமானது.”
அதற்குள் போன் வந்தது. மைதிலி எழுந்து போனாள். ஷிபாலியின் மாமியார் போன் செய்தாள். பியூட்டி பார்லரில் சேரச் சொல்லி கெஞ்சத் தொடங்கினாள். வேலையாய் இருப்பதாகவும், அப்புறமாக பேசுவதாகவும் சொல்லிவிட்டாள்.
ராஜம்மா வந்து “காபி கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.
“கொண்டுவா. சித்தார்த் இருக்கிறான் இருவருக்கும் காபி கொண்டுவா. அந்த பையன் சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவா” என்றாள் ஹாலுக்கு வந்து கொண்டே.
சித்தார்த் தான் வரைந்த டிசைன்களை மேலும் மெருகேற்றிக் கொண்டிருந்தான்.
ராஜம்மாமா ட்ரேயில் கேக், ஆபிள் துண்டுகள், மிக்சர், எல்லாம் கொண்டு வந்தாள்.
அவன் பைலை பார்த்து கொண்டிருந்த போது மைதிலி தட்டில் கேக், இனிப்புகளை வைத்து விட்டு அவனிடம் நீட்டினாள்.
அவன் வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தான்.
“உனக்கு எது பிடிக்குமோ அதை எடுத்துக் கொள்” என்றாள்.
அவன் எடுத்துக் கொள்ளவில்லை.
“எடுத்துக் கொள்” என்றாள்.
அவன் நுனி விரல்களால் மிக்சரை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
ராஜம்மா காபி கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனாள்.
மைதிலி கோப்பையை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“வேண்டாம்.”
“எடுத்துக் கொள் ப்ளீஸ்!” அவன் எடுத்துக் கொண்டான். இடது கையால் கோப்பையைப் பிடித்தபடி காபியைக் குடித்துக் கொண்டே வலது கையால் எழுதிக் கொண்டிருந்தான்.
மைதிலியும் காபி குடித்துக் கொண்டிருந்தாள். அவன் தலை குனிந்த நிலையில் இருந்தது. மின்விசிறியின் காற்றுக்கு அவன் கிராப் அலையாய் அசைந்து கொண்டிருந்தது.
மைதிலிக்கு அவன் தலையை வருடிக் கொடுக்கவேண்டும் போல் தோன்றியது. தன் எண்ணங்களைக் கண்டு அவளுக்கு பயமாகவும் இருந்தது. அதற்குள் போன் ஒலித்தது. அவள் எழுந்துக் கொள்ளப் போனபோது ராஜம்மா கார்ட் லெஸ் போனை கொண்டுவந்து கொடுத்தாள்.
மைதிலி போனை எடுத்ததும் மறுமுனையில் “ஹலோ மைதிலி!” என்று அபிஜித்தின் குரல் கேட்டது.
“ஊம்” என்றாள்.
‘சித்தார்த் இருக்கிறானா?”
“இருக்கிறான்.”
“இங்கே எனக்கு வேலை முடியும் போல் இல்லை. அவனை வீட்டுக்குப் போகச் சொல்லிவிடு. நாளைக்கு சரியாக ஒன்பது மணிக்கு நம் வீட்டுக்கு வரச் சொல்லு. நீ ஏழு மணிக்கு காரை எடுத்துக் கொண்டு சாரதா மாமியின் வீட்டுக்கு வந்தால், நானும் மாதவனும் அங்கே இருப்போம். அவருடைய கார் சர்வீசுக்கு போயிருக்கிறதாம். என்னுடைய கார் வேண்டுமாம்.”
“அப்படியே செய்கிறேன்.”
அபிஜித் போனை வைத்துவிட்டான்.
மைதிலி அபிஜித் வரப் போவதில்லை என்ற விஷயத்தை சித்தார்திடம் தெரிவித்தாள். அவன் கிளம்புவதற்காக எழுந்து கொண்டான்.
“நாளை காலையில் ஒன்பது மணிக்கு இங்கேயே வரச் சொன்னார்” என்றாள்.
தலையை அசைத்தான். அவன் போகும் போது மாதர் சங்கத்தின் செகரெட்ரியும், இரண்டு மெம்பர்களும் வந்தார்கள்.
இந்த முறை நிதியை சேகரிப்பதற்கு என்ன புரோகிராம் செய்யலாம் என்பதைப் பற்றி பேச்சு வார்த்தை நடந்தது. மன்றத்தின் அரசியலை பற்றி ரொம்ப நேரம் பேசி விட்டு கிளம்பினார்கள்.
மைதிலி நேரத்தைப் பார்த்துக் கொண்டாள். ஏழேகால்.
ராஜம்மாளிடம் இரவு சமையலைப் பற்றி சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டாள்.
வெளியில் வந்து தன்னுடைய வெள்ளை நிற மாருதி காரை கேரேஜ்லிருந்து வெளியே எடுத்தாள். கேட் அருகில் கூர்க்கா செல்யூட் செய்துவிட்டு கேட்டை சாத்தினான்.
காரை வலது பக்கம் தெரு முனையில் திருப்பும் போது அங்கே பஸ் ஸ்டாப் அருகில் சித்தார்த் உட்கார்ந்திருப்பது தென்பட்டது. யோசித்துக் கொண்டே பத்தடி முன்னால் போய்விட்ட மைதிலி ரியர் வ்யூ கண்ணாடி வழியாக பார்த்தாள்.
சந்தேகம் இல்லை. அவன்தான். பஸ் வருவதற்காக காத்திருக்கிறான் போலும். மைதிலி வாட்சை பார்த்துக் கொண்டாள். அவன் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரமாக காத்துக் கொண்டிருக்கிறான்.
மைதிலி காரை நிதானாமாக ரிவர்ஸ் செய்தாள். பஸ்ஸ்டாப் அருகில் நிறுத்தி கதவைத் திறந்தாள்.
அவன் பார்த்ததுமே எழுந்து நின்றான். “கமின்!” என்றாள்.
அவன் பார்வையாலேயே பணிவாக மறுத்தான். “பஸ் இப்போ வந்து விடும்” என்றான்.
“எங்கே போகணும்?” அவள் கேட்டாள்.
சொன்னான்.
“நான் அந்த பக்கம்தான் போகிறேன். கொஞ்சம் பக்கத்துத் தெரு வழியாக போக வேண்டும். அவ்வளவுதான்.” அவன் போக வேண்டிய இடத்தைச் சொன்னதும் அவள் சொன்னாள்.
“பரவாயில்லை.” அவனுள் ஏதோ தயக்கம். முகத்திற்கு நேராக மறுப்பு சொல்ல முடியவில்லை.
“உங்க சார் கேட்டால் உன்னை பஸ்ஸ்டாப் அருகில் பார்த்தும், லிப்ட் கொடுக்காமல் போனதற்கு என்னை சத்தம் போடுவார். அப்புறம் உன் விருப்பம்” என்றாள். அபிஜித் பற்றிய பிரஸ்தாபனை வந்ததும் அவன் முகத்த்தில் பிரசன்னம் தெரிந்தது.
“வந்துதான் ஆகணும். தவிர்க்க முடியாது” என்றாள் கார் கதவைத் திறந்து கொண்டே.
அவன் பின்பக்கத்து கதவைத் திறக்கப் போனபோது மைதிலி முன்னால் வந்து உடகாரச் சொன்னாள். வந்து உடகார்ந்தான். அவனுக்கு கார் கதவை சரியாக சாத்த தெரியவில்லை.
மைதிலி குனித்து கையை நீட்டி கதவை சாத்தினாள். கார் கிளம்பியது. நெரிசலான தெருக்கள் வழியாக மைதிலி டிரைவிங் நன்றாக பழக்கப்பட்ட நபர் போல் அனாயாசமாக காரை செலுத்திக் கொண்டிருந்தாள். சிக்னலில் சிவப்பு விளக்கு போட்டதால் கார் நின்றுவிட்டது.
அவன் சீரியஸ் ஆக உட்கார்ந்திருந்தான்.
மைதிலிக்கு பக்கத்தில் அவன் உட்கார்ந்து இருப்பது சந்தோஷமாக இருந்தது. அபிஜித் இருந்தால் அந்த நிம்மதி வேறு. இனம் தெரியாத சந்தோஷம் இது. மனதை திளைக்கச் செய்து கொண்டிருந்தது. தன்னுடைய தவம் ஏதோ பலித்து விட்டது போல், சூனியமாக இருந்த தன் வாழ்க்கையில் பல விதமான வண்ணங்கள் பிரவாகமாய் ஊடுருவிக் கொண்டு வருவது போல்.
அவன் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு அருகில் இழுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
“இவன் என்னுடையவன். நான் இவனுக்குத்தான் முழுமையாக சொந்தமாவேன்.” உள் மனதில் ஏதோ கூக்குரல் ஒலித்துக் கொண்டிருதது.
பச்சை விளக்கு எரிந்தது. கார் நகர்ந்தது.

Series Navigationஉதிராதபூக்கள் – அத்தியாயம் 6
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *