தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்

author
2
0 minutes, 3 seconds Read
This entry is part 25 of 28 in the series 22 மார்ச் 2015

 

முனைவர் க.துரையரசன்

தேர்வு நெறியாளர்

அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)

கும்பகோணம் – 612 002.

முன்னுரை:

தொல்காப்பியம் எழுத்துக்கு மட்டும் இலக்கணம் கூறும் நூலன்று. அது வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறும் நூலாகும். தமிழின் பிற இலக்கண நூல்களிலிருந்து மட்டுமல்லாது பிற மொழி இலக்கண நூல்களிலிருந்தும் இது வேறுபட்டும் மாறுபட்டும் உயர்ந்தும் நிற்பதற்கும் இதுவே மிகப்பெரிய காரணமாகும். இத்தகுப் பெருமை மிகு தொல்காப்பியத்தின் மூன்றாம் அதிகாரமானப் பொருளதிகாரத்தின் முதல் இயல் அகத்திணையியல். இவ்வியலில் காணலாகும் தமிழர்களின் அகம்சார் சிந்தனைகளை இளம்பூரணர் உரைவழி இயம்புவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

உரையாசிரியர்கள்:

உரையாசிரியர்களின் வாழ்க்கையை முற்பகுதி, பிற்பகுதி என இரண்டாகப் பகுக்கலாம். இவர்கள் தங்கள் முற்பகுதி வாழ்க்கையை நூல் தேடுவதிலும் கற்பதிலும் கழித்தனர். பிற்பகுதி வாழ்க்கையைச் சிறந்த நூல்களைத் தேர்வு செய்வதிலும் அதற்கு உரை எழுதுவதிலும் செலவழித்தனர். இவர்கள் கால அறிவு, சொல் அறிவு, சமுதாய அறிவு, மூலநூல் ஆசிரியரின் நடை அறிவு முதலிய பலதுறை அறிவுத் திறம் பெற்றவர்களாக இருந்தனர்.

இளம்பூரணர்:

இளம்பூரணர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர். அதனால் அவர் உரையாசிரியர் என்று அழைக்கப்பட்டார். இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே உரை எழுதினர். ‘தொல்காப்பியம் எழுத்ததிகாரத்துக்கு இளம்பூரணர் உரை கிடைத்துள்ளதா? பலர் எழுதினார் என்பதோடு நிறுத்திக்கொள்கின்றனர். சிலர் அவர் எழுதியிருந்தாலும் அதற்கான சுவடிகள் கிடைக்கவில்லை என்கின்றனர்’1.

‘’‘பிறர் உட்புகுந்து காண முடியா வண்ணம், இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சர்க்கரையுள், தம் அறிவென்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்துகிடந்த அரதனக் குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார்; அறிதற்கரிதாகிய தொல்காப்பியக் கடலைத் தம் மதிவலி கொண்டு கடைந்து, முதன் முதலில் இலக்கண அமுதம் அளித்த பெரியார்’ என்று புலவர் போற்றும் புகழுக்கு உரிய சான்றோர் இவர்’ என்று ஆராய்ச்சித் தொகுதியில் (பக்.398-399) கூறப்பட்டுள்ளதாக மு.வை. அரவிந்தன் எடுத்துக் காட்டியுள்ளார்’2.’’

உரைகளின் சிறப்புகள்:

‘’உரைகள் தோன்றியது நமது நற்பேறேயாகும். அவை தோன்றி இராவிடில் பழம்பெரும் இலக்கண இலக்கியச் செல்வங்கள் அழியாமல் இருந்திருப்பினும் விளங்காமல் இருந்திருக்கும். இருளடர்ந்து உள்ளே நூழையாதபடி வாயில்கள் இறுகமூடி மண்மேடிட்டு முட்செடிகொடிகள் முளைத்துக் கொடிய நச்சுயிர்கள் வாழ்கின்ற பழங்கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்ட பொற்குவியல் போல் பயனற்றுப் போயிருக்கும்’’3 என்பதிலிருந்து உரைகளின் சிறப்புகளை உணரலாம்.

உரைநூல்கள் அறிவுக்களஞ்சியம்; ஐயம் தெளிவிக்கக் கூடியவை; விளக்கம் தரக்கூடியவை; உரையைக் கொண்டு மூலத்தையும் மூலத்தைக் கொண்டு உரையையும் அறியலாம்; மறைந்துபோன நூல்களைத் தெரிந்துகொள்ள உதவுவன.

‘’மூலநூல்கள் தங்கச் சுரங்கம் என்றால், அவற்றின் உரைகள் தங்கச் சுரங்கத்திற்குள் அமைந்துள்ள மற்றொரு வைரச் சுரங்கமாகும். உரைகள் யாவும் அள்ளக் குறையாத அமுத சுரபிகள்; எப்போதும் வற்றாத ஆறுகள்; கால மாற்றத்தால் நிலை குலையாத இமயச் சிகரங்கள்; சமயம் அரசியல் முதலியவற்றின் தாக்கத்தால் கலங்காத கடல்கள்’’4 என்ற தொடர்கள் உரைகளின் சிறப்புகளை எடுத்தியம்புகின்றன.

உரைகளின் இயல்பு:

                பழைய உரை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் இயல்பு இருக்கும். இளம்பூரணர் உரை தமிழ் மரபை உணர்த்தக் கூடியது; சேனாவரையர் உரை வடமொழி இலக்கணத்தைத் தமிழ் மீது திணிக்கும் தன்மை உடையது; பேராசிரியர் உரை இலக்கண இலக்கிய ஆராய்ச்சி நிரம்பியது; நச்சினார்க்கினியர் உரை இலக்கிய நுகர்ச்சிக்கு வழிவகுப்பது; தெய்வச்சிலையார் உரையில் புதுமை மிளிர்கிறது; கல்லாடர் உரை தழுவல் உரையாக அமைந்துள்ளது.

இளம்பூரணர் உரையின் இயல்பு:

இளம்பூரணர் உரையின் இயல்பைப் பின்வருமாறு மு.வை.அரவிந்தன் சுட்டிக் காட்டியுள்ளார். ‘‘இளம்பூரணர் உரை, ஆழமான தெளிந்த நீரோடை போன்றது; பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உடையுடன் அருள் பழுத்த நெஞ்சத்துடன், முகம்மலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகிறது. ஆரவாரமும் பகட்டும் இவர் உரையில் எங்கும் காண்பது அரிது. மிக மிகச் சுருக்கமாகவே தெளிந்த கருத்தைக் கூறி விளங்க வைக்கின்றார். தாம் கருதியதே சிறந்தது என்று எண்ணும் வகையில் இவர் எவ்விடத்திலும் எழுதவில்லை. பிறர் கருத்தை மதித்தலும், புலமை முதிர்ச்சியும், நடுநிலைமையும் உரை முழுவதும் வெளிப்படுகின்றன.

இளம்பூரணர் பிற மொழிப்பயிற்சி மிகுதியாக இல்லாதவர்; தமிழ்க் கடலுள் பல கால் மூழ்கித் திளைத்தவர்; தமிழ் மரபு நன்கு அறிந்த சான்றோர். இவரது தமிழ்நெஞ்சம் பல இடங்களில் வெளிப்படுகின்றது. இவரைச் சிவஞான முனிவர், ‘தமிழ் நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்’ என்று தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் குறிப்பிடுகின்றார்.’’5

இளம்பூரணர் உரைவழி அகச்சிந்தனைகள்:

தமிழர்களின் அகச்சிந்தனைகள் முப்பொருளாகப் பகுக்கப்பட்டுளதை யாவரும் அறிவோம். அவை: முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் என்பனவாம். இதற்கு இளம்பூரணர் கூறியுள்ள விளக்கம் அறிவிற்கு விருந்தாய் அமைந்துள்ளது.

முப்பொருள்:

முதற்பொருள் என்பது நிலமும் பொழுதுமாம்.  முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு.  நிலம் என்பதனால் பொருள்தோற்றுதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதமும் கொள்க என்று கூறி பின்வருமாறு விளக்குகிறார்.

‘‘நிலம் எனவே, நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும், தீக்குக் காரணாமாகிய காற்றும், காற்றிற்குக் காரணமாகிய ஆகாயமும் பெறுதும்’’

‘‘காலமாவது மாத்திரை முதலாக நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அயநம், ஆண்டு, உகம் எனப் பலவகைப்படும்’’6

‘’கருப்பொருளாவது இடத்திலும் காலத்திலும் தோற்றும் பொருள்’’

‘’உரிப்பொருளாவது மக்களுக்கு உரியபொருள்’’

இளம்பூரணர் ஐம்பெரும் பூதங்கள் பற்றி கூறியதிலிருந்து தமிழர்கள் இவ்வுலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்ற அறிவியல் உண்மையை உணர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.

பரத்தையர்:

‘’பரத்தையர் ஆவார் யார் எனின், அவர் ஆடலும் பாடலும் வல்லராகி, அழகும் இளமையும் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி, ஒருவர் மாட்டும் தங்காதார்’’7 என்று இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து பரத்தையர் நுகர்வு இருந்ததையும் இது அகவொழுக்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததையும் உணரமுடிகிறது.

‘’அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே’’8

என்ற நூற்பாவிற்கு, சேரியினும் சுரத்தினும் பிரிதலன்றித் தமது மனையயற்கண் பிரிந்தாராயினும் பிரிவின் கண்ணதே. ஓர் ஊரகத்து மனையயற்கண்ணும் பரத்தையிற் பிரிவு பாலையாம் என்பது இளம்பூரணரின் விளக்கமாகும். முற்கூறிய சேரியினும் சுரத்தினுமன்றித் தம் மனைக்கு அயலே பிரிந்தாராயினும் அதுவும் பிரிவின் கண்ணதாம் என்பது நச்சினார்க்கினியரின் துணிபாகும். உடன் போயவரைத் தேடிச் சுரஞ்செல்லும் செவிலித்தாயரன்றி, தமர், ஏவலர் முதலிய பிறரேயாயினும் அவர் தேடுதல் அண்மைச் சேரியன்றி அகன்ற சேய்மைச் சுரத்தின் கண்ணதேயாகும் என்பது நாவலர் சோமசுந்தர பாரதியாரின் கருத்தாகும்.     எனவே மேற்காண் உரைகளின் மூலம் சங்ககாலத்தில் பரத்தையர் பிரிவு மனையயற்கண்ணும் இருந்தது தெளிவாகிறது.

இருவகைப் பிரிவு:

இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்

உரியதாகும் என்மனார் புலவர்9

இதில் இருவகைப் பிரிவு என்பது தலைவன் தலைவியைப் பிரிதலும் இருவரும் உடன்போகிய வழித் தமரைப் பிரிதலும் என்று இளம்பூரணர் விளக்கமளிக்கிறார். இதன்மூலம் தலைவன் தலைவியைப் பிரிவது மட்டுமே பிரிவு என்ற கருத்துநிலையிலிருந்து அவ்விருவரும் தமரைப் பிரிதலும் பிரிவுதான் என்ற கருத்துப் பெறப்படுகிறது.

முந்நீர் வழக்கம்:

முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை10

மேற்படி நூற்பாவிற்கு உரையாசிரியர்களின்11 விளக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது.

  • இளம்பூரணர்: ஈண்டு அதிகரிக்கப்பட்ட பிரிவு காலிற்பிரிவும் கலத்திற் பிரிவும் என இருவகைப்படும். அவற்றுள் கலத்திற் பிரிவு தலைமகளுடன் இல்லை. எனவே, காலிற் பிரிவு தலைமகளை உடன்கொண்டு பிரியவும் பெறும் என்றவாறாம்.
  • நச்சினார்க்கினியர்: இது முற்கூறிய ஓதல், பகை, தூது, காவல், பொருள் என்ற ஐந்தனுள் பகையும் காவலும் ஒழிந்தவற்றிற்கு ஓரிலக்கணம் கூறுகின்றது. ஓதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லும் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று என்றவாறு.
  • நாவலர் சோமசுந்தர பாரதியார்: இது பெண்டிரொடு கடல் கடத்தல் தமிழ் மரபன்று என்று கூறுகின்றது. மகடூவொடு முந்நீர் வழக்கம் இல்லை, அதாவது பெண்ணோடு கடலேறிச் செல்லுதல் மரபன்று.

மேற்படி உரைகளின்வழி ஆடவர் தங்களின் கடல்வழிப் பயணங்களில் பெண்களை உடன்கொண்டு செல்லுதல் இல்லை. இது தமிழர்களின் மரபாக இருந்துள்ளதை இவ்வுரைகளின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

மடலேறுதல்:

எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்

பொற்புடை நெறிமை இன்மையான12

எந்நிலையிலும் பெண்கள் மடலேறுதல் இல்லை என்பதைக் காட்டும் மேற்படி நூற்பாவிற்கு உரையாசிரியர்களின்13 விளக்கம் வருமாறு:

  • இளம்பூரணர்: எல்லாக் குலத்தினிடத்தும் பெண்பால் மடலேறுதல் இல்லை, பொலிவுறு நெறிமை இல்லாமையான்.
  • நச்சினார்க்கினியர்: கைக்கிளை முதல் பெருந்திணையிறுவாய் ஏழன்கண்ணும் தலைவி மடல்மேல் ஏறினாளாகக் கூறும் புலனெறி வழக்கம் பொலிவுடைமையன்று; ஆதலால் அது கூறப்படாது.
  • நாவல் சோமசுந்தர பாரதியார்: அகத்திணை ஏழனுள் எதன் கண்ணும் தலைவி மடலேற விரும்புதல் அழகிய முறைமை இல்லை.

மேற்காண் உரைகளின் மூலம் மடலேறுதல் என்பது ஆண்களுக்குரியதேயன்றி எந்நிலையிலும் பெண்களுக்கு உரியதன்று என்பது புலனாகின்றது. ஏனெனில் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு முதலான குணங்களைக் கொண்ட பெண்களுக்கு மடலேறுதல் எனபது இழுக்காகும் என்பது தமிழர்களின் மரபாக உள்ளது. இதனால்தான் திருவள்ளுவரும்,

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்14

என்று குறிப்பிட்டுள்ளார்.

இயற்பெயர் சுட்டாமை:

அகப்பொருள் இலக்கியங்களில் இயற்பெயர் சுட்டி எழுதப்படுவது தமிழ் மரபன்று. இதனைத் தொல்காப்பியர்,

‘’மக்கள் நுதலிய அகனைந் திணையும்

சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’’15

என்று குறிப்பிட்டுள்ளார். இந்நூற்பாவிற்கு உரையாசிரியர்களின் விளக்கம் கீழ் தரப்பட்டுள்ளன.

  • இளம்பூரணர்: அகத்திணையுள் கைக்கிளை பெருந்திணை ஒழிந்த ஐந்திற்கும் உரியவாகிய நிலமும் காலமும் கருப்பொருளுமன்றி மக்களைப்பற்றி வரும் புணர்தலும் பிரிதலும் ஐந்து பொருண்மையும் நாடன், ஊரன், சேர்ப்பன் என்னும் பொதுப்பெயரானன்றி ஒருவர்க்கு உரித்தாகி வரும் பெயர் கொள்ளப் பெறார் புலவர்.
  • நச்சினார்க்கினியர்: மக்களே தலைமக்களாகக் கருதுதற்குரிய நடுவணைந்திணைக் கண்ணும் திணைப் பெயராற் கூறினன்றி ஒருவனையும் ஒருத்தியையும் விதந்துகூறி அவரது இயற்பெயர் கொள்ளப் பெறார்.
  • நாவலர் சோமசுந்தர பாரதியார்: மக்கள் மதிக்கும் காதல் கண்ணிய நடுவணைந்திணைகளிலும் தலைமக்கள் தம்முள் யாரும் இயற்பெயர் சுட்டி அகவப் பெறார்.

எனவே தொல்காப்பியர் கூற்றுப்படியே அன்று தொட்டு இன்று வரை அக இலக்கியங்களில் தலைவன், தலைவியரது இயற்பெயர்கள் சுட்டப்படாமல் பொதுப்பெயராலேயே அழைக்கப்படுகின்றனர்.

முடிவுரை:

இங்ஙனம் தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியலில் உள்ள நூற்பாக்களுக்கு உரையாசிரியர் இளம்பூரணர் எழுதியுள்ள உரையின் மூலம் தமிழர்களின் அகப்பொருள் சார்ந்த சிந்தனைகளை விளங்கிக் கொள்ள முடிகின்றது. முப்பொருள் பகுப்பு முறை, இருவகைப் பிரிவு, பரத்தையர் ஒழுக்கம், பெண்கள் கடற்பயணம் மேற்கொள்ளாமை, பெண்கள் மடலேறாமை, அகப்பொருள் இலக்கியங்களில் இயற்பெயர் சுட்டப்பெறாமை முதலான தமிழர்களின் அகம்சார் சிந்தனைகளைக் கண்டறிவதோடு அவற்றின் சிறப்புகளையும் உய்த்துணர முடிகிறது.

 

 

 

 

 

 

 

 

அடிக்குறிப்புகள்

  1. காண்க: 05.02.2015 நாளிட்ட வல்லமை இணைய இதழில் ஹரிகி என்பார் எழுப்பியுள்ள வினா மற்றும் அதற்கு தென்காசி சுப்பிரமணியம் அளித்துள்ள விடை
  2. காண்க: மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், பக்.173-174.
  3. மேலது, ப.98.
  4. மேலது, பக்.57-58.
  5. மேலது, ப.176.
  6. யாமம்-ஏழரை நாழிகைப் பொழுது கொண்டதோர் கால அளவு, இதனைச் சாமமென வழங்குவர்; சிறுபொழுது ஆறனுள் ஒன்றாகிய யாமம் வேறு, இது வேறு. பக்கம்-பதினைந்து நாட்கள் கொண்டது. இருது-இரண்டு திங்கள் கொண்டது. அயனம்-ஆறு திங்கள் கொண்டது.
  7. மேலது, ப. 180.
  8. தொல்.பொருள். அகத்திணையியல், நூ. 41.
  9. தொல்.பொருள். அகத்திணையியல், நூ. 13.
  10. மேலது, நூ.37.
  11. மு. அருணாசலம் பிள்ளை, தொல்காப்பியம் அகத்திணையியல் உரைவளம், பக். 337-341
  12. தொல்.பொருள். அகத்திணையியல், நூ. 38.
  13. மு. அருணாசலம் பிள்ளை, தொல்காப்பியம் அகத்திணையியல் உரைவளம், பக். 347-352.
  14. திருக்குறள், 1137.
  15. தொல்.பொருள். அகத்திணையியல், நூ. 57.

 

Series Navigationஷாப்புக் கடைஉலகம் வாழ ஊசல் ஆடுக
author

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *