வழக்கறிஞர் கோ. மன்றவாணன்
அண்மையில் பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. மூன்று மாடிக் கட்டடம் ஒன்றில் தோ்வு நடந்துகொண்டிருந்தபோது, அந்தக் கட்டடத்தின் வெளிப்புறத்துச் சுவர்களில் வரிசை வரிசையாக ஏறி நின்று மாணவர்களுக்கு விடைத்துணுக்குகள் வழங்கி உள்ளனர். அப்படி வழங்கியவா்கள் அந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பா்கள்தாம். அந்தக் காட்சியை ஊடகங்கள் ஒளிபரப்பின. நாளிதழ்கள் வெளியிட்டன. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது ஏதோ உயர்ந்தோங்கிய கட்டடத்துக்குப் பூச்சு வேலை நடைபெறுகிறது என எண்ணத் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் ஸ்பைடர்மேன்கள் போல் சுவரில் தொற்றிக்கொண்டும் ஒட்டிக்கொண்டும் தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பிட் சப்ளை பண்ணி இருக்கிறார்கள். இவை அத்தனையும் அந்த மாநிலக் காவல் துறையினரின் முன்னிலையிலேயே பயமின்றி நடந்துள்ளன.
அங்குக் காப்பி அடிப்பது என்பது காப்பி குடிப்பது போன்ற ஓா் அங்கீகாரம் பெற்ற பழக்கமாகிவிட்டிருக்கிறது.
அதற்கடுத்த நாளில் தமிழ்நாட்டில் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரண்டாம் வகுப்புக் கணக்குத் தேர்வின் போது காப்பிக் கலாச்சாரத்தின் மற்றொரு படையெடுப்பு நடந்துள்ளது. தேர்வில் வினாத்தாள் வழங்கியவுடன் அந்தப் பள்ளியின் ஆசிரியா் அந்த வினாத்தாளை அப்படியே வாட்ஸ் அப்பில் படம் எடுத்து, உரிய ஆசிரியா்களுக்கு அனுப்பி இருக்கிறார். அவர்கள் அதற்குச் சரியான விடைகளை வாட்ஸ் அப் வழியாகவே அனுப்பி இருக்கிறார்கள். அந்த விடைகளை மாணவர்களுக்குச் சொல்லித் தேர்வு எழுத வைத்துள்ளார்கள்.
இப்படி எதற்கு பள்ளி நிர்வாகமே செய்கிறது? என்ற கேள்வி எழலாம். கல்வி என்பது கொள்ளை லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டதால் வந்த சீரழிவு இது. தங்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி என்று காண்பித்து, நிறைய மாணவர்களைச் சோ்த்து வருமானம் ஈட்டத்தான் அவ்வாறு தனியார் பள்ளிகள் செய்கின்றன. அதிகாரிகளின் கெடுபிடியால் சில அரசுப் பள்ளிகளும் காப்பி அடிப்பதில் வல்லமையைக் காட்டுகின்றன. தனியார் பள்ளிகளின் தோ்வு முடிவுகளைக் காரணமாகக் காட்டி, அரசுப் பள்ளியிலும் அதே போல் தோ்வு முடிவு தேவை எனக்கூறிப் பள்ளி நிர்வாகத்தை அரசு அதிகாரிகள் விரட்டுகின்றனா். குறிப்பிட்ட பாடத்தில் மாணவா்கள் தோல்வி என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் பணிமாறுதல் செய்யப்படும் நிலையும் உள்ளது. இதைத் தவிர்க்கவே அரசுப் பள்ளி ஆசிரியா்களும் அறைக்கண்காணிப்பாளா்களைக் குளிர்வித்துக் காப்பி அடித்தலை உரம்போட்டு வளா்க்கிறார்கள். அதில் அமோக விளைச்சலையும் காண்கிறார்கள்.
ஒரு மதிப்பெண் இரு மதிப்பெண் கேள்விகளுக்கு அந்தந்தப் பள்ளி ஆசிரியா்களே தோ்வுக் கூடத்துக்குள் வந்து விடை சொல்லிக்கொடுக்கிறார்கள். இவைஎல்லாம் நாம் சிறந்த பள்ளி என்று சொல்லி, இலட்ச லட்சமாகக் கொண்டுபோய்க் கொட்டிக்கொண்டிருக்கும் பள்ளிகளில் சா்வ சாதாரணமாக நடக்கிற நிகழ்வுகளாகிவிட்டன.
சில ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையில் உள்ள ஒரு பள்ளியில் விடைகளை நகலச்சு எடுத்து மாணவா்களுக்கு வழங்கி உள்ளனா். இப்படித் தோ்வெழுத வைத்து, நாளிதழ்களில் கட்டணம் செலுத்தி, சாதனை விளம்பரங்களைப் பக்கம் பக்கமாக வெளியிட்டுத் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்கிறார்கள்.
காப்பி அடித்தலில் பல வகைகள் உள்ளன. அதுபற்றித் தனிக்கட்டுரையே எழுதலாம். தொழில்நுட்ப வளர்ச்சியைக் காப்பி அடித்தலுக்குப் பயன்படுத்துவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திருட்டுத்தனமாக நடந்த காப்பி அடித்தல், இன்று விளம்பரம் செய்து கூப்பிடாத குறையாக வெட்ட வெளிச்சமாக நடந்துகொண்டிருக்கிறது.
மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வாங்கிக்கொடுப்பதற்கு, புனித ஆசிரியா்களே புரோக்கா்களாக மாறிப் பொருளீட்டுகிற கொடுமையும் அரங்கேறித்தான் வருகிறது. தன்னாட்சிக் கல்லூரிகளில் இந்த வியாபாரம் நல்லாத்தான் நடக்கிறது.
இது ஒரு பக்கம் என்றால், உயா்கல்வியின் லட்சணம் மறுபக்கம் பல்லிளிக்கிறது. கல்வியின் உயா்நிலைப் பட்டம் முனைவா் பட்டமாகும். இன்றைக்கு முனைவா் பட்டம் எப்படிப் பெறப்படுகிறது?
99 சதவீத முனைவா் பட்ட ஆய்வுகள் போலியானவை என்றும்- ஏற்கனவே செய்த ஆராய்ச்சியை அப்படியே நகலெடுத்துக் கொடுத்தவை ஆகும் என்றும் ஓா் ஆய்வு சொல்கிறது. முனைவர் பட்ட வழிகாட்டிப் பேராசிரியா்களே கணிசமாகப் பணம் வாங்கிக்கொண்டு ஆய்வேடுகளை அவா்களே நகலெடுத்துத் தரமாகப் பைண்டிங் செய்து கொடுத்துவிடுகிறார்கள். வைவா நடக்கும்போது, அந்த ஆய்வு சரியானதுதானா என்பதை அறிய அறிஞர்கள் கேள்வி கேட்டு அலசி ஆராய்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து நெறிப்படுத்துவார்கள். அதற்கு தற்போது வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. வைவா என்பது ஒரு சங்கப்பலகை போல நடக்க வேண்டும். ஆனால் வைவா என்பது விருந்து உபசரிக்கும் வைபவம் போல நடக்கிறது. சில இடங்களில் கேளிக்கைகளும் மதுவிருந்துகளும் உண்டாம். இத்தகையோர் முனைவா் பட்டம் பெற்றுக் கல்லூரியில் பேராசிரியா்களாக வருகிறார்கள். முனைவா் பட்டம் வாங்கிய பலரிடத்தில் அவா்களின் ஆய்வேட்டில் உள்ளதைப் பற்றிக் கேட்டாலே அதுபற்றி அறவே தெரியாமல் திருதிரு என்று முழிக்கிறார்கள். அவா்கள் விலைகொடுத்து வாங்கிய ஆய்வேட்டை அவா்களே படிப்பதில்லை.
போகிற போக்கைப் பார்த்தால் காப்பி அடிப்பதைத் தங்களின் கலாச்சார உரிமை என்று போர்க்கொடி தூக்குவார்கள் போலிருக்கிறது. புத்தகத்தைத் திறந்துவைத்துத் தோ்வு எழுதலாம் என்று சட்டம்கூட இயற்ற நம் அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள். அப்படி பார்த்து எழுதுகிற தோ்வு முறையைக் கொண்டுவந்தால்கூட, அதிலும் வேறு ஆட்களை அமா்த்தித் தோ்வு எழுதுவார்கள். அதற்கு இப்போதே ஒரு சான்று உண்டு. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கல்வி அமைச்சரே தனக்காக ஆள்வைத்துத் தோ்வெழுதிச் சிக்கிக்கொண்டதை மறக்க முடியுமா? தெரிந்தவை கடுகெனச் சில. தெரியாதவை கடலெனப் பல.
இப்படி எங்கும் காப்பி எதிலும் காப்பி என்றான பிறகு, கல்வியின் தரம் எப்படி இருக்கும்? இந்தக் காப்பிக் கலாச்சாரத்தால் ஒழுங்காகக் கல்வி கற்கும்- நோ்மையாகப் படிக்கும் மாணவா்கள்தாம் பின்தங்கி விடுகிறார்கள். அவா்களின் வாய்ப்பு அயோக்கிய தனத்தால் பறிக்கப்படுகிறது.
இதற்கு யாரைக் குறை சொல்வது? அரசையா? மக்களையா?
இதோ தொலைக்காட்சியில் ஒரு பாட்டு ஒலிக்கிறது…
நீங்கள் அத்தனை பேரும் உத்தமா்தானா சொல்லுங்கள்…
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப்பார்த்துக் கொள்ளுங்கள்…
- தொடுவானம் 61. வேலூர் நோக்கி….
- இந்தப் பிறவியில்
- காப்பியமாகும் காப்பிக் கலாச்சாரம்
- கோழி போடணும்.
- ஆத்ம கீதங்கள் –22 ஆடவனுக்கு வேண்டியவை -2 [தொடர்ச்சி]
- சிரித்த முகம்
- கோர்ட்..மராத்தியத் திரைப்படம்: சிறந்த படத்திற்கான இவ்வாண்டின் தேசிய விருதுபெற்றது
- இராம கண்ணபிரானின் வாழ்வு கதைத்தொகுப்பு – ஒரு பார்வை
- தமிழ்தாசன் கவிதைகள்—–ஒரு பார்வை
- மறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்
- நாடக விமர்சனம். சேது வந்திருக்கேன்
- உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்
- றெக்கைகள் கிழிந்தவன்
- திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.
- கூடு
- அழகிய புதிர்
- டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
- மூளைக் கட்டி
- உலகத்துக்காக அழுது கொள்
- தெலுங்கு எழுத்தாளர் ஒல்கா அவர்களின் படைப்பு , தமிழில்
- நாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் குள்ளக் கோள் புளுடோவை நெருங்குகிறது.
- சிலம்பில் ஊர்ப்புனைவுகள்
- புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
- குகை மா. புகழேந்தி எழுதிய ” அகம் புறம் மரம் ” —-நூல் அறிமுகம்
- “எதிர்சினிமா” நூல் வெளியீடு
- “தனக்குத்தானே…..”
- “மெர்ஸல்”ஆகிப்போனார்கள்…
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015
- வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)
- மிதிலாவிலாஸ்-7
- எனது நூல்களின் மறுபதிப்பு