கல்லூரி நிர்வாகக் கட்டிடத்தின் நுழைவாயிலில் நுழைந்ததும் எதிரே சிற்றாலயம் தெரியும். அதற்கு எதிரே ஒரு தாமரைத் தடாகம். அதில் அழகிய மலர்கள் மலர்ந்திருந்தன.
நுழைவாயிலின் வலது பக்கத்தில் கல்லூரி முதல்வரின் அறையும் அலுவலகமும் இருந்தன. அதன் வெளியே வராந்தாவில் அனைவரும் ஆவலுடன் கூடியிருந்தனர். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியும் ஒருவித பீதியும் குடிகொண்டிருந்தது. தேர்வு பெற்றால் பெரும் குதூகலம். இல்லையேல் பெரும் சோகம்.
அலுவலகத்தின் முன்னே ஒரு ஒலிவாங்கி ( மைக் ) வைக்கப்பட்டிருந்தது. அதில்தான் பெயர்கள் வாசிக்கப்படும். சரியாக நான்கு மணிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேக்கப் சாண்டி கையில் ஒரு தாளுடன் வந்தார். அவருடன் அங்கி உடுத்திய பாதிரியார் ஒருவரும் வந்தார். அவர்தான் கல்லூரியின் இறைப் பணியாளர் ( பாதிரியார் ) அவருடைய பெயர் மறைதிரு ஊமன் . அவரும் மலையாளிதான்.
மறைதிரு ஊமன் சுருக்கமாக ஜெபம் செய்தார். நேர்காணலில் பங்கு பெற்ற அனைவருக்காகவும் ஜெபம் செய்தார். இந்தத் தேர்வை கடவுள்தான் செய்துள்ளார் என்று கூறி, தேர்வு பெற்றவர்களின் சார்பாக கடவுளுக்கு நன்றி கூறினார். தேர்வு பெறாதவர்களுக்கு ஆறுதலுக்காகவும் சமாதானத்துக்காகவும் இறைவனிடம் மன்றாடினார்.
அதன் பின்பு கல்லூரி முதல்வர் தேர்வு பெற்றவர்களை வாழ்த்தியும், தேர்வு பெறாதவர்களை மனம் தளராமல் அடுத்த முறை மீண்டும் முயற்சி செய்யுமாறும் வேண்டிக்கொண்டார். அதன் பின்பு தேர்வு பெற்றவர்களின் பெயர்களை வாசிக்கத் தொடங்கினார்.
நெஞ்சம் படபடக்க அதைச் செவியுற்றேன்.
” ஏபெல் ஆறுமுகம், அசோக் டயால் சந்த் , பாலாஜி நாயிடு, டீ. ஆர் . பெஞ்சமின் , பாபி தாமஸ், சார்லஸ் பிரேம்குமார், டேவிட் ராஜன், கிளமென்ட் தீனதயாளன், போரஸ் டாபார், ஜார்ஜ் ஜேக்கப் , ஜேக்கப் கோறுளா, வி.ஜெகதீஸ், ஜெயமோகன், பிரேம்சந்தரன் ஜெயரத்தினம், எல்மோ பாஸ்கர் ஜான்சன், ஜி. ஜான்சன்………………! “
அதன்பின் மற்ற பெயர்கள் என் காதில் விழவில்லை. நான் கொண்ட இன்ப அதிர்ச்சிக்கு எல்லை இல்லை! அண்ணனும் ரூபனும் ஆர்தரும் என்னை இறுக அணைத்துக்கொண்டனர்! நான் கண்கலங்கினேன்! கடவுளுக்கு நன்றி சொன்னேன்! என் தந்தைக்கு நன்றி சொன்னேன்!
நான் தேர்வு பெற்றுவிட்டேன்! இனிமேல் நான் ஒரு மருத்துவ மாணவன்! இன்னும் ஐந்தரை வருடத்தில் நான் ஒரு மருத்துவனாவேன்! என் சிறு வயதுக் கனவு இன்று பலித்துவிட்டது! நான் படிப்பில் காட்டிய ஆர்வமும் உழைப்பும் தக்க பலனைத் தந்துவிட்டன! என்னுடைய நீண்ட நாள் கனவு இன்று நனவாகிவிட்டது! சந்தேகமே இல்லை! இது கடவுளின் அழைப்புதான்! ஒரு சல்லிக் காசும் செலவழிக்காமல் உலகின் புகழ்மிக்க மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்துவிட்டது!
ஒவ்வொரு பெயர் வாசிக்கப்பட்டதும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். உடன் வந்த உறவினர் உற்சாகத்துடன் கட்டிப் பிடிப்பதும் முத்தமிடுவதுமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேர்வு பெறாதவர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருந்தனர்.சில பெண்கள் சோகத்தை தாங்கமுடியாமல் அழுதனர். உறவினர்கள் அவர்களை ஆறுதல் படுத்தி அழைத்துச் சென்றனர்.
தேர்வு பெற்றவரின் அறுபது பெயர்களையும் முதல்வர் வாசித்து முடித்தார். அறுபது பேர்களில் முப்பத்தைந்து ஆண்களும், இருபத்தைந்து பெண்களும் இருந்தோம். நாளை வகுப்புகள் துவங்கும் என்றும் கூறிவிட்டு விடை பெற்றார்.
மகிழ்ச்சியில் திக்கு முக்காடி நின்ற என்னிடம் மூன்று இளைஞர்கள் வந்தனர். முதலில் எனக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நானும் நன்றி சொன்னேன்.
” உனக்கு இங்கு இடம் கிடைத்துவிட்டது என்ற பெருமையா உனக்கு? முதலில் உன்னுடைய காலணிகளைக் ( ஷூ ) கழற்று! ” என்றனர். நான் செய்வதறியாது திகைத்தேன். அருகில் நின்ற ஆர்தரைப் பார்த்தேன்.
” இவர்கள் உனக்கு சீனியர்கள். இப்போது ரேகிங் தொடங்குகிறது. அவர்கள் சொல்வதுபோல் செய். ” என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவிவிட்டார். ரூபன் அண்ணனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
நான் வேறு வழியில்லாமல் காலணிகளைக் கழற்றினேன். அதன் கயிறுகளை ஒன்றாக இணைக்கச் சொன்னார்கள். அப்படியே செய்தேன். அதை கழுத்தில் மாட்டிக்கொள்ள சொன்னார்கள். நான் மாட்டிக்கொண்டேன்.
கொஞ்ச நேரத்தில் தேர்வு பெற்ற முப்பத்தைந்து மாணவர்களும் கழுத்தில் காலணிகளை மாட்டிக்கொண்டு நின்றோம். எங்களைச் சுற்றிலும் நிறைய சீனியர் மாணவர்கள். எங்களை வீதியில் வரிசையாக நிற்கச் சொன்னார்கள். தேர்வு பெற்ற பெண்களுக்கும் இதே நிலைதான். அவர்களைச் சுற்றிலும் சீனியர் பெண்கள் கூடியிருந்தனர். அவர்கள் கழுத்தில் காலணிகள் இல்லை. அவர்களை வரிசையில் நிற்கச் சொல்லி பெண்கள் விடுதிக்குள் கொண்டு சென்றனர்.
வரிசையில் நின்ற எங்களை இராணுவ அணிவகுப்பு போன்று ” லெப்ட் …ரைட் … லெப்ட் …ரைட் ” என்று உரக்க கத்திக்கொண்டு செம்மண் வீதி வழியாக ஆண்கள் விடுதிக்கு கொண்டு சென்றனர்.
எனக்கு இது புது அனுபவம். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது இப்படி இல்லை. அங்கு ரேகிங் தடை செய்யப்பட்டிருந்தது. இங்கு ரேகிங் மூன்று நாட்கள் நடக்குமாம். கல்லூரி பாரம்பரியங்களில் இதுவும் ஒன்றாம்.
நேராக உணவுக் கூடத்தின் முன் நின்றோம். அங்கு காலணிகளை ஒரு ஓரத்தில் அடுக்கி வைத்தோம். கூடத்தினுள் வடையும் தேநீரும் தரப்பட்டது.
பின்பு வெளியே வந்து விடுதி முகப்பில் அணிவகுத்து நின்றோம். அப்போது இருவர் இராணுவ உடையில், இடுப்பில் நீண்ட வாளுடன் வந்தனர். அவர்களில் ஒருவர் நல்ல நிறத்துடன் உயரமாக இருந்தார். நிச்சயமாக வட இந்தியாவைச் சேர்ந்தவர்தான். அடுத்தவர் மஞ்சள் நிறத்தில் குள்ளமாக இருந்தார். சீன இனத்தவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.
அவர்களில் அந்த வட நாட்டவர் ரேகிங் பற்றிய விளக்கம் தந்தார்.
“: இந்த உலகப் பிரசித்திப்பெற்ற கல்லூரியில் மருத்துவம் பயில தேர்வு பெற்றுவிட்டீர்கள் என்று நீங்கள் பெருமை கொள்ளவேண்டாம். இன்னும் ஐந்தரை வருடங்கள் நீங்கள் எங்களுடன் இந்த விடுதியில் தங்கப் போகிறீர்கள். அதற்கு நீங்கள் தகுதி உள்ளவர்கள்தானா என்பதைக் கண்டறிய இப்போது இந்த ரேகிங் நடக்கிறது. இதில் தேறினால்தான் இங்கு நீங்கள் தங்க முடியும். இல்லையேல் இங்கே தங்க விட மாட்டோம். நாங்கள் இங்கே நாகரிகமாக வாழ்ந்து வருகிறோம். அதைக் கெடுக்க நீங்கள் வந்துள்ளீர்கள். நீங்கள் நாகரீகம் தெரியாத காட்டு மிராண்டிகள். உங்களைத் திருத்தி நாகரீகம் கற்றுத் தருவது சிரமம்தான். இருந்தாலும் எங்கள் நேரத்தையும் தியாகம் செய்து உங்களைத் திருத்தும் பணியில் இறங்கியுள்ளோம். இன்றிலிருந்து மூன்று நாட்கள் உங்களுக்கு இராணுவப் பயிற்சி போல் கடுமையான பயிற்சிகள் தரப்படும். அதற்கு பீல்ட் மார்ஷல் நானும், உதவி பீல்ட் மார்ஷல் இவரும் இங்கு வந்துள்ளோம். இது வேண்டாம் என்று நீங்கள் பயந்தால் இப்போதே உங்களுடைய பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பலாம். கல்லூரி முதல்வரிடம் நாங்கள் சொல்லிக்கொள்கிறோம். இப்போதே சொல்லிவிடுங்கள். யாரவது ஊர் திரும்பணுமா? ” இவ்வாறு கூறியவர் எங்களைப் பார்த்தார். யாரும் கை தூக்கவில்லை.
அடுத்து அந்த சீனர் பேசலானார்.
” நம்முடைய பீல்ட் மார்ஷல் இட்ட கட்டளைக்கு நீங்கள் அனைவரும் சம்மதிப்பது தெரிகிறது. ஆகவே உங்கள் அனைவரையும் திருத்தும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு இரண்டு எஜமான்கள் தரப்படுவார்கள். அவர்களுக்கு நீங்கள் வரும் மூன்று நாட்களும் அடிமைகளாக இருக்கவேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும்.அது எத்தகைய கட்டளையாக இருந்தாலும் நீங்கள் தயங்காமல் செய்தாக வேண்டும். உதாரணமாக பெண்கள் விடுதிக்கு சென்று வரச் சொன்னால்கூட சென்றுதான் வரவேண்டும். அவர்களுடைய காலணிகளை காலையில் பாலிஷ் செய்யவேண்டும்.காலுறைகளை ( சாக்ஸ் ) நீங்கள்தான் துவைத்துத் தரவேண்டும். இதர எடுபிடி வேலைகள் செய்துதர வேண்டும். இதில் தேறினால் அவர்கள் உங்களை பரிந்துரை செய்வார்கள். அதன்பின்புதான் நீங்கள் இங்கு தொடர்ந்து இருப்பதும் அல்லது ஊர் திரும்புவதையும் எங்கள் இராணுவ நீதிமன்றம் முடிவு செய்யும்! என்ன சம்மதமா? ” என்று சொல்லிவிட்டு எங்களுடைய பதிலுக்கு காத்திருந்தார்.
நாங்கள் சம்மதம் என்பதுபோல் தலையசைத்தோம்.
அதன்பின் இராணுவ டிரில் மாதிரி கடுமையான பயிற்சி நடந்தது. விடுதி முன் வட்ட வடிவில் வீதி இருந்தது. அதில் பத்து தடவை ஓடினோம். அதன்பின் கைகளை தரையில் ஊன்றி நெஞ்சைத் தூக்கி இறக்கி ஐம்பது தடவைகள் அவ்வாறு செய்ய வேண்டும். நான் முன்பே இதை சிங்கப்பூரில் ஓட்டப் பந்தயப் பயிற்சியின்போது செய்திருந்ததால் என்னால் முடிந்தது. சிலருக்கு முடியவில்லை. அவர்கள் மீது வாளியில் கொண்டு வந்த தண்ணீரை ஊற்றினர். மற்ற சீனியர் மாணவர்கள் கைகொட்டி உரக்க சிரித்தனர். அவர்கள் முன் இப்படிச் செய்வது அவமானமாகத்தான் இருந்தது. வேறு வழி இல்லாமல் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.
அதன் பின்பு இனிமேல் ‘ அட்டண்ஷன் ” என்பதற்கு ” சஞ்சிவீஜி ஜா சக் ” என்றும் ” அட் ஈஸ் ” என்பதற்கு ” ச்சியா மன் பக் ” என்பார்களாம். இவை இரண்டும் என்ன மொழி என்பது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. அதன்படியே நாங்கள் செய்தோம்.
ஆறரை மணிக்கெல்லாம் உடல் வலித்தது. எப்போது இது முடியும் என்ற ஆவல் உண்டானது. நல்ல வேளையாக ஒருவாறு முடிவு பெற்றது. அப்போது எங்கள் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ள இரண்டு எஜமானர்களிடம் நாங்கள் ஒப்படைக்கப்பட்டோம். எனக்கு மாரிசன் டேவிட் என்பவரும் ஆர்தர் செல்வராஜும் தரப்பட்டனர். ஆர்தரையே தந்தது ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது. மாரிசன் டேவிட் பெரிய உருவமானவர். நல்ல சிவப்பு. வட இந்தியர்தான். பார்க்க பயமாக இருந்தது. அவர் என்னை ஆர்தருடன் அறைக்கு அனுப்பி வைத்தார். இரவு உணவுக்குப்பின் அவருடைய அறைக்கு வரச் சொன்னார்.
போகும் வழியில் ஆர்தர் எனக்கு ஆறுதல் கூறினார். மாரிசன் டேவிட் மிகவும் நல்லவர் என்றார். மற்றவர் மத்தியில் அவர் கடுமையாகவே என்னிடம் நடக்கப் போவதாகவும் அது பற்றி கவலை வேண்டாம் என்றார். எல்லாமே வெறும் நடிப்புதான் என்றும் ரேகிங் என்றால் இப்படிதான் இருக்கும் என்றார். அது கேட்டு அறுதல் அடைந்தேன். இன்னும் இரண்டு நாட்கள் இந்த துன்பத்தை உற்சாகமாக ஏற்க முடிவு செய்தேன்.
குளித்து முடித்தபின்பு இருவரும் உணவு உண்ண சென்றோம். அங்கும் சில சீனியர்கள் என்னைப் பிடித்துக்கொண்டு உணவை நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டும் என்றனர். எஜமானுடன் உட்கார்ர்ந்து உண்ணக் கூடாது என்றனர்.
மாரிசன் டேவிட் அறைக்குச் சென்றேன். அவர் என்னைப் பற்றி விசாரித்தார். எனக்கு என்னென்ன திறமைகள் உள்ளன என்று கேட்டார். நான் எழுதுவது, ஓட்டப்பந்தயம் பற்றி கூறினேன். அவரும் வெளியில் கடுமையாகவே நடந்துகொள்ளப் போவதாகக் கூறினார். நான் சரி என்றேன். அரை மணி நேரத்தில் என்னை அறைக்குச் சென்று ஓய்வெடுக்கச் சொல்லி விடை கொடுத்தார்.
அறைக்குத் திரும்பிய நான் ஆர்தருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு படுத்ததுதான் தெரியும். நன்றாக உறங்கிவிட்டேன்.
( தொடுவானம் தொடரும் )
- மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.
- சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை
- ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை
- சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?
- இரு குறுங்கதைகள்
- அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…
- இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்
- புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்
- தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு
- மிதிலாவிலாஸ்-10
- தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்
- வைரமணிக் கதைகள் – 12 கறவை
- மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2
- ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !
- வீடு பெற நில்!
- சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி
- ஜெமியின் காதலன்