சிறுகதைகள் மூன்று
0
1.திரிபுறம்
ரங்காவிற்கு காலையில் இருந்தே மனசு சரியில்லை. ஒரு வாரமாக அவள் வீடு கலைத்துப் போட்ட குருவிக்கூடு மாதிரி இருக்கிறது. இன்று எப்படியும் திரிபுரம் மாமியைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ரங்கா என்கிற ரங்கநாயகிக்கு முப்பது வயது. அவள் கணவன் கோபாலகிருஷ்ணன் மெஷின் மேன். காலையில் ஆறு மணிக்கெல்லாம் சைக்கிளில் போய்விடுவான். வீடு திரும்ப எப்படியும் ஏழு எட்டு மணியாகிவிடும். ஊருக்கு வெளியே தொழிற்சாலை. சமையல் வேலையெல்லாம் அவளுக்கு இல்லை. எல்லாவற்றையும் தொழிற்சாலை நிர்வாகமே கவனித்துக்கொண்டுவிடுகிறது. ஆனால் கொடுக்கிற காசுக்கும் சோற்றுக்கும் சக்கையாக பிழிந்துதான், ஆளை வெளியே விடும். கல்யாண புதிதில் ஓரிரு முறை கணவனுடன் வெளியே செல்வதற்காக அவள் அந்த தொழிற்சாலையின் பெரிய கதவருகில் நின்றிருக்கிறாள். சங்கு ஊதியவுடன் சாரி சாரியாக தொழிலாளிகள் வெளியே வருவார்கள் ஆலையின் புகை போக்கியின் வழியே வழியும் புகைபோல. காலையில் திடப்பொருளாக போகும் இவர்கள் புகையாகத்தான் வெளியே வருகிறார்கள் என்று ரங்காவிற்குத் தோன்றும். கோபியும் அப்படித்தான் வருவான். ஆனாலும் நீரில் போட்ட பஞ்சு போல அவன் முகமும் உடலும் ரங்காவைக் கண்டவுடன் புத்துணர்ச்சியால் ஊறும்.
ரங்கா தன் வீட்டுக்கூடத்தை ஒரு முறை நோட்டம் விட்டாள். எப்படி இருந்த வீடு! எப்படியாகிவிட்டது? சனி, ஒரு வாரம் முன்பு தான் தன் சூம்பிய காலை அவள் வீட்டிற்குள் எடுத்து வைத்தது. பக்கத்து வீட்டு லச்சுமி சன்னல் வழியாகக் குரல் கொடுத்தாள். “லதாம்மா ஒங்களுக்கு •போன்”
ரங்காவிற்கு அது அதிசயமான விசயம். அவளுக்கு யாரும் தொலைபேசியில் அழைப்பதில்லை. உறவு என்றிருந்த பெற்றோர்கள் போய் சேர்ந்து வெகு நாளாகிவிட்டிருந்தன. ஒரே ஒரு அண்ணன் கோவையில் இருக்கிறான். இருக்கிறானா என்று நினைக்கத் தோன்றும்படி இருக்கும் அவன் நடவடிக்கை. வீடு கட்டியிருக்கிறானாம். கார் வாங்கியிருக்கிறானாம். எல்லாம் அண்ணி வந்த ராசி. எல்லாம் வாங்கியவன் உறவுகளை அறுத்துக்கொண்டு, தனிமையையும் வாங்கிவிட்டான் போலிருக்கிறது. முதல் இடி அவள் மேல் இறங்கியது அந்த தொலைபேசி வழியாகத்தான். யாரோ சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது.
“எட்டு நம்பர் ஆக்கிட்டாங்களாம். இனி எல்லாருக்கும் அஷ்டமத்திலே சனி. எங்கே நல்ல செய்தி வரப்போகுது?”
அவள் சந்தோஷத்தைத் தொலைத்த தொலைபேசிச் செய்தி இதுதான். வேலைக்கு நடுவில் கோபிக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது. வலது கையில் அடி. ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். நிர்வாகமே வீட்டிற்கு கொண்டுவந்து சேர்க்கும். வீட்டிற்கு வந்து கதவைத் திறப்பதற்குள், கோபியைக் கொண்டுவந்துவிட்டார்கள். வலது கை பாதிக்கு மேல் மாவு கட்டு போட்டிருந்தார்கள். ஈ.எஸ்.ஐ. பணம் வரும் என்றார்கள். ஒரு காகிதப் பையில் மருந்துகளும் அதனடியில் மருத்துவர் சீட்டும் வைத்துவிட்டு, கைகளை கட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றுவிட்டு, வந்தவர்கள் போய்விட்டார்கள். படுக்கையில் இருந்த கோபி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். கழுத்து வரை போர்த்திவிட்டிருந்தார்கள். அடிபட்ட வலி தூக்கத்திலும் அவன் முகத்தில் தெரிந்தது.
அடுத்த நான்கு நாட்களுக்குள், பி.டி. வகுப்பில் ஒட்டப்பந்தயத்தில் தடுக்கி விழுந்த லதா மண்டையை பெயர்த்துக்கொண்டு கட்டுடன் வந்தாள். அஞ்சறை பெட்டியில் ஆறு மாதமாகச் சேர்த்து வைத்திருந்த ஐநூறு ரூபாயும் காணாமல் போனது. பக்கத்து வீட்டு லச்சுமிதான் ஒருமுறை திரிபுரம் மாமியைப் பற்றிச் சொன்னாள். மாமி ஜாதகம் பார்த்து பிட்டு பிட்டு வைக்கிறாளாம். பரிகாரமும் சொல்கிறாளாம். வந்த பிணியும் பீடையும் பிடறியில் பின்னங்கால் பட ஓடிவிடுகின்றனவாம். ஒரு நாள் துணைக்கு லச்சுமியுடன் போனபோது, ரங்காவும் மாமியைப் பார்த்திருக்கிறாள். கொஞ்சம் தாட்டியான உருவம். இரண்டு ரூபாய் அகலத்திற்கு குங்குமப்பொட்டு. முகமெல்லாம் மஞ்சள் தடவி சற்றே தடித்துவிட்ட முகம். வண்டி மையைத் தடவினாற் போல் அடர்த்தியான புருவங்கள். லேசாக மீசை கூட இருந்தது. மாமியை நோட்டம் விட்டதில், லச்சுமி கேட்டதும், மாமி சொன்ன பரிகாரமும் கோட்டை விட்டாயிற்று. அதில் வருத்தமுமில்லை அவளுக்கு. அப்போது எல்லாம் நல்லபடியாகத்தானே இருந்தது. இந்த ஒரு வாரத்தில்தான் மாமியை நோக்கி நினைவைத் திருப்பிவிட்டிருக்கிறது மனசு. கூட்டம் இருக்கும் என்று எண்ணி காலை ஏழு மணிக்கே கிளம்பிவிட்டிருந்தார்கள் லச்சுமியும் ரங்காவும்.
0
” தெருவை அடைச்சாப்பல கூட்டம் நிக்குமே. என்னா சனத்தையே காணம் ”
லச்சுமி ஆச்சரியப்பட்டாள். தெரு காலியாக இருந்தது. சின்னத் தெரு. ஒரு வாகனம் வந்தால் இன்னொரு வாகனம் ஒதுங்க வேண்டியிருக்கும். மூன்றடி சந்தில் மூன்றாவதாக இருந்தது மாமியின் வீடு. அதற்கப்புறம் அடிபம்பு, குளியலறை, கழிப்பறைகள்…
யாரோ இரண்டு பேர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்தவுடன் நின்றார்கள்.
“மாமி இல்லையே! நேத்து காலையில அவங்க மருமகன் விபத்தில காலமாயிட்டாரு. அங்கே போயிருக்காங்க”
அவர்கள் கடந்து போனபோது சொல்லிக்கொண்டே போனது ரங்காவின் காதுகளில் விழுந்தது.
” பத்துப் பொருத்தம் பாத்து பண்ணிவச்ச கல்யாணம். மருமகன் இப்படி போவாருன்னு யாருமே நெனைக்கல”
கணவனுக்குக் காலை சிற்றுண்டியும், லதாவுக்கு கொடுக்கவேண்டிய மருந்தும், ஞாபகத்தில் வர, ரங்கா வீடு நோக்கி விரைந்தாள்.
0
2.சரியான கட்டணம்.
அந்த ஆட்டோ பின்னால் எழுதியிருந்த வாசகம் மனோவைக் கவர்ந்தது. சாதாரணமாக என்ன எழுதியிருக்கும். பிரசவத்திற்கு இலவசம்.. ( ஒரு பாசக்கார ஆளாக இருக்க வேண்டும் ) சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே! ( காதல் தோல்வி? )
இது வித்தியாசமாக இருந்தது. சரியான கட்டணம் நிறைவான பயணம். அட புதுசாக இருக்கிறதே.. வரிசையில் நான்காவதாக இருந்தது அந்த ஆட்டோ.. மூன்று ஆட்டோக்களுக்கு ஆட்கள் வரும்வரை காத்திருந்து விட்டு அந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டான் மனோ.
ஓட்டுனனுக்கு இருபது வயது தான் இருக்கும். முன்னிருக்கும் கண்ணாடியில் ஒரு முதியவரின் புகைப்படம் இருந்தது., வேறு கடவுளர் படங்கள் ஏதும் இல்லை. மெல்ல பேச்சுக் கொடுத்தான் மனோ.
“ என்ன தம்பி படிக்கலியா? “
“ முடிச்சுட்டேங்க.. இளங்கலை அறிவியல்.. முதல் வகுப்பில் தேர்வாகியிருக்கேன்”
“ அரசு வேலை அல்லது தனியார் வேலை கெடைக்கலியா? “
“ கெடச்சுதுங்க ஆனா போகல “
ஆச்சர்யப்பட்டான் மனோ.. சில பேர் இப்படி இருக்கிறார்கள். ஒருவரிடம் அடிமையாக வேலை செய்ய மாட்டேன். சுய தொழில் தான் செய்வேன் என்கிற வைராக்கியம். அதுவாக இருக்குமோ காரணம்.
“ ஏன் தம்பி ஒருத்தர் கிட்ட வேலை பார்க்கிறது பிடிக்க்கலியா கேவலமா.. ஆட்டோ கூட ஒரு முதலாளிக்கு சொந்தம்தானே.. அப்ப ? “
“ ஆமாங்க இது கூட ஒரு முதலாளிக்கு சொந்தம் தான் ஆனா அந்த மொதலாளி நான் தான் “
வியப்பு கூடியது மனோவுக்கு. இருபது வயதில் சொந்த ஆட்டோ.. வசதி இருக்கும் போல. அவன் எண்ணத்தை படித்தது போல சொன்னான் அந்த இளைஞன்.
“ வசதியெல்லாம் இல்லீங்க.. சாதாரணக்குடும்பம் தான். ஆனால் கை தூக்கி விட என் மாமா இருந்தாரு. இதோ இந்த புகைப்படத்துல இருக்கறவருதான் அவரு”
0
சரவணன் பிறந்தபோதே அவனது தந்தை இறந்து போயிருந்தார். கோஷ்டி சண்டை கட்சி பாகுபாடு என்று எத்தனையோ காரணங்கள் அதற்குச் சொல்லப்பட்டன. ஆதரவற்ற சரவணனையும் அவன் தாயையும் எடுத்து காப்பாற்றியவர் செல்லமுத்து. செல்லமுத்து அந்த பகுதியில் ஒரு முதலாளி. ஆறு ஆட்டோ ரெண்டு டெம்போ என்று வசதியாக வாழ்பவர்.
“ பட்டறையிலே ஆளில்லைன்னு தங்கைச்சி புள்ளையை எடுத்து வளக்குறாரு. அவரு புள்ளைங்கள்ளாம் கான்வெண்டில படிக்கும். இவனுக்கு ஸ்பேனர்தான் “ ஊரே பேசியது.
பொய்யாகினார் செல்லமுத்து. கவர்மெண்ட் பள்ளிதான் ஆனால் நல்ல பள்ளி. வாரத்துக்கு ஒரு முறை தானே சென்று பள்ளி முதல்வரையும் ஆசிரியரையும் சந்தித்து சரவணனின் வளர்ச்சி பற்றி விசாரிக்க தவற மாட்டார் செல்லமுத்து. அவர் பிள்ளைகள் நடந்தே பள்ளிக்கு போகும். சரவணனுக்கு ஆட்டோதான். ஆனால் சரியாக மதிப்பெண்கள் வாங்கவில்லை என்றால் அவர் பிள்ளைகள் வசவோடு தப்பித்துவிடும். ஆனால் சரவணனுக்கு உடம்பு காய்த்துப் போகும். இரவு அவரே உட்கார்ந்து எண்ணெய் தடவுவார் அவன் முதுக்கு.
கொஞ்சம் பெரியவனான உடன் அவனிடம் சொன்னார் செல்லமுத்து.
“ எப்படி இது எல்லாம் வந்தது தெரியுமா? நியாயமான வழியில இல்லை. மீட்டருக்கு சூடு வக்கிறது. ஊர் தெரியாத ஆட்கள் வந்தா சுத்திகினு போயி காசை ஏத்தறது.. கொஞ்ச நாள் கூலிப்படைக்கு கூட ஆட்டோ ஓட்டியிருக்கேன்.. ஆனா என்னா பிரயோசனம் இத அனுபவிக்கறதுக்கு எனக்கு ஆரோக்கியம் இல்லையே”
சரவணன் மனதில் இது ஆழமாக பதிந்து போனது. என்ன படித்தாலும் நானும் ஆட்டோதான் ஓட்டப்போகிறேன். ஆனால் நேர்வழியில் நியாயமான வழியில்.
0
பட்டப்படிப்பு படித்து முடித்தவுடன் மந்திரி சிபாரிசில் அவனுக்கு அரசு வேலை காத்திருந்தது. நிராகரித்தான். ஆட்டோ என்றது செல்லமுத்து அவனை கோபத்துடன் பார்த்தார். அவன் முறைப்பைக் கண்டு அடங்கிப்போனார். முதல் ஆட்டோ அவருடையது.
“ சந்தையில இதன் மதிப்பு எவ்வளவு? “
“ அது எதுக்கு உனக்கு? “
“ சொல்லேன்”
“ நாப்பதாயிரம் ரூபா”
இரவு பகலாக ஓட்டி ஒரே வருடத்தில் அடைத்தான் அந்த பணத்தை. இப்போது ஆட்டோ அவனுக்கு ஒரு பந்தம். நேர்மை எப்போதும் சொந்தம்.
மனோ இறங்கிப் போகும்போது மீட்டரில் நாற்பத்தைந்து ரூபாய் ஆகியிருந்தது. சரவணன் சில்லறை தேடிக்கொண்டிருக்கும்போது இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
சர்ரென்று ஆட்டோ அவனருகில் வந்து நின்றது. ஐந்து ரூபாய் தாளை நீட்டியபடி சிரித்தான் சரவணன்.
0
3.அபிநயங்கள்
0
நீலக்கடலின் அலைகள் நித்தமும் தாலாட்டும் கரையோரம் அமைந்திருந்தது அந்தக் கட்டிடம். முற்றிலும் கண்ணாடிகளால் மறைக்கப்பட்டு ஒரு நீல அரக்கனைப்போல எழும்பி நின்றது அது. நான்கு கோபுரங்கள், எட்டு மின் தூக்கிகள், சிறிய பூங்கா. நடை பயில தனியாக சிமெண்ட் பூசப்பட்ட பாதை. உடற்பயிற்சி கூடம். நூலகம். கோயில். கூடி அளவளாகவும் சிறிய கூடம். அனைத்து இடங்களும் பளிங்குக் கற்களால் நிரப்பப் பட்டிருந்தது.
மேட்டுக் குடியினர் வாழும் குடியிருப்பு அது. கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட அடுக்கு மாடி வீடுகள் இருக்கும். இருபத்தி நான்கு மணி நேர காவல், அந்நியர் வருகைக்குத் தடை, விசாரணை, கவனிப்பு எல்லாம் உண்டு அங்கே.
தனுஜா ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறாள். வருடத்திற்கு பத்து லட்ச ரூபாய் சம்பளம். சொந்தமாக கார், செல் போன், ஏழெட்டு கடன் அட்டைகள் என்று வசதியாக வாழ்பவள். அவளுடைய கணவனுடன் பிணக்கு ஏற்பட்டு அவர்களது உறவு ரத்து ஆகி, நான்கு வருடங்கள் ஆகிறது. அவளுடைய கணவனை ஞாபகப்படுத்தும் ஒரே உறவு, அவளது மகள் பிரயத்தனா.. வயது பத்து.. ஐந்தாவது படிக்கிறாள்.
இங்கே தனுஜாவைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். தனுஜா அமெரிக்க ஆங்கிலம் பேசும் இந்தக் காலப் பெண்மணி. தலை முடியை ஆண்பிள்ளை போல் வெட்டிக் கொண்டு, கால்சராய், குட்டைச் சட்டை போட்டுக் கொண்டு, தொப்புள் தெரிய காரில் போகும், அம்பது கிலோ உடம்புக்காரி. அவளுக்கு அனாவசியங்கள் பிடிக்காது. வெட்டு ஒன்று, துண்டு ரெண்டுதான்.
மார்கழி மாதக் கச்சேரிகள், மற்றும் நாட்டிய நிகழ்வுகளுக்கு, தனுஜா ஒரு கௌரவ விருந்தாளி. கூடவே பிரயத்தனாவும் வருவாள். அங்குதான் அவள் அழகிரியை சந்தித்தாள். கனடா நாட்டிலிருந்து வந்த ஜோத்ஸனா ராமகிருஷ்ணனின் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு, தனுஜா போயிருந்தாள். அந்த நிகழ்வுக்கு அழகிரிதான் நட்டுவாங்கம்.
ஒரு பெண்ணின் நாட்டிய அரங்கேற்றத்திற்கு, ஒரு ஆண் நட்டுவாங்கம் செய்வதே, அவளுக்கு ஆச்சர்யமாகவும், கொஞ்சம் அசிங்கமாகவும் கூடப் பட்டது. ‘ இதென்ன பொட்டைத் தனமா இருக்கு .. இவனுக்கு வேற வேலை கெடைக்கலியா .. ‘ என்று அவள் மனம் நினைத்தது.
அழகிரி அழகான பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தான். ஆறடி உயரமும், எலுமிச்சைப்பழ நிறமும் கொண்டவனாகவும் இருந்தான். பழைய காலத்து பாகவதர் கிராப் வைத்திருந்தான். அதை நடு வகிடு எடுத்து, படிய வாரியிருந்தான். நெற்றியில் ஒரு ரூபாய் அளவு, பெரிய சாந்து பொட்டு வைத்திருந்தான். “ சரியான அம்பி “ என்று முணுமுணுத்தாள் தனுஜா.
கனடா பெண் நிகழ்வு முடிந்தது முக்கியமானவர்களை மேடைக்கு அழைத்து, கவுரவம் செய்தது. போனவர்களில் தனுஜாவும் ஒருத்தி.
“ ப்ளீஸ் மேம்! அழகிரி சாருக்கு நீங்கதான் சால்வை போர்த்தணும் “
“ வித் ப்ளெஷர் “ என்று சால்வையை வாங்கிக் கொண்டே திரும்பினாள் தனுஜா. நெளிந்தபடியே நின்று கொண்டிருந்தான் அழகிரி.. ‘ நெளியாதே ஆம்பளையாட்டம் நில்லு ‘ என்று மனதிற்குள் கருவினாள் தனுஜா. மேலுக்கு சிரித்தபடியே சால்வையை அவன் தோளின் மேல் போர்த்தினாள்.
“ ரொம்ப நன்றிங்க ‘ அவள் கையை மென்மையாகக் குலுக்கினான் அழகிரி. அவன் கை சில்லென்றிருந்தது. கூட கொஞ்சம் ஈரம் வேறு. யாரும் பார்க்காத போது, மெல்ல கைக்குட்டையால் கையை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் தனுஜா.
**
அடுத்த வாரமே, அழகிரியை காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தனுஜாவிற்கு. பிரயத்தனாவின் பள்ளியில் ஆண்டு விழா. அதற்கு அவள், கண்டிப்பாக ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென்று, பள்ளி நிர்வாகி சொல்லிவிட்டார்.
“ கண்ணனைப் பத்தின பாட்டு. பிரயத்தனாவோட அழகுக்கு, அவள் ஆண்டாள் வேஷம் போட்டா, புரோக்கிராம் பிச்சுண்டு போகும். அதனால அவள தயார் பண்ணிடுங்கோ”
பிரயத்தனாவுக்கும் நாட்டிய ஜுரம் வந்து, ஜன்னி கண்டது போல் அரற்ற ஆரம்பித்து விட்டாள்.
“ மம்மி இன்னும் மூணு நாள்தான் இருக்கு. எப்படிம்மா நான் ஆடுவேன். நீதான் ஏற்பாடு பண்ணனும். ஒனக்குதான் பெரிய பெரிய மனுஷாள்லாம் தெரியுமே. அன்னிக்குக்கூட ஒருத்தர், தாம் தீம்னு கட்டையை தட்டிண்டு பாடினாரே அவரக்கூட தெரியுமே. சொல்லிக் கொடுக்கச்சொல்லும்மா..”
‘ தாம் தீம்.. கட்டை ‘ தனுஜா யோசித்தாள். யாரைச் சொல்கிறாள்? “ யாருடி” என்றாள்.
உடம்பை லேசாக நெளித்துக் காட்டினாள் பிரயத்தனா. புரிந்து விட்டது. இதையே அவள் செய்து காட்டி பிரயத்தனாவை சிரிக்க வைத்திருக்கிறாள். அழகிரி ..!பொட்டை ..!
அதிவேகமாக செயல்பட்டாள். லையன்ஸ் கிளம் ராமசுப்புவுக்கு தொலைபேசினாள்.
“ ஓ தனுஜா! ஹௌ ஸ்வீட் மை டியர் “ என்று வழிந்தது அறுபது வயது கிழம்.
‘ குப்பையை ஒதுக்கு மேன் ‘ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டாள். தன் தேவையை அவரிடம் சொன்னாள். இரண்டு மணிநேரத்தில் அழகிரி, அவளது வீட்டின் அழைப்பு மணியை அடித்துக் கொண்டிருந்தான்.
விவரம் சொல்லி, தொகை பேசி, ஏற்பாடு செய்து விட்டு, அவள் நட்சத்திர ஓட்டல் விருந்துக்கு போனாள். வீடு திரும்பிய போது இருட்டியிருந்தது. லேசான போதையில் அழைப்பு மணியை அழுத்திய போது, கதவு லேசாக திறந்திருப்பது தெரிந்தது.
சட்டென்று போதையின் கிறக்கம் விலகியது. ‘மை காட்! என்ன நடந்திருக்கும்? கதவு திறந்திருக்கிறதே! பிரயத்தனா ?’ மனம் வாயு வேகத்தில் சிந்தித்தாலும், உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால்கள் பின்னின. ராஜஸ்தான் கம்பளம் கால்களை இடறியது. தடுமாறி விழுந்த அவளது கைகளில் தனுஜாவின் பிஞ்சு விரல்கள் அகப்பட்டன.
கண்களை இறுக்க மூடிக்கொண்டு, மெல்ல விரல்களை வருடினாள். மேல்நோக்கி கை ஊர்ந்தது. விரல்களைத் தாண்டி முழுக்கையும் அதற்கடுத்தாற்போல் முகமும்.. திடுக்கிட்டு கண்களைத் திறந்தாள்.
சோபாவின் மேல் தனுஜா தூங்கிக் கொண்டிருந்தாள். அயர்ச்சியின் சாயல் அவள் முகத்தில் தெரிந்தது.
‘செக்யூரிட்டி எங்கே? ஆயா எங்கே? மை காட் எல்லோரும் பிரயத்தனாவைத் தனியாகவா விட்டு விட்டு போய்விட்டார்கள்?’ எல்லா விளக்குகளையும் போட்டாள். சுற்றிலும் பார்த்தாள். திவான் கட்டிலில், ஒருக்களித்து படுத்தபடியே, அழகிரி இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ நீ இன்னும் போகலை? “
“ வீட்டில யாரும் இல்ல. கொழந்த தனியா இருந்தது. அதான்.. “ என்று இழுத்தான். அப்புறம் இது ஒங்களோடது..” என்று அவளுடைய பணப்பையை கொடுத்தான்.
“ இது எப்படி ஒங்கிட்ட? “ யூ சீட்! நான் வராம இருந்திருந்தா இதை எடுத்துண்டு ஓடிருப்ப அப்படித்தான “
“ இல்ல மம்மி எடுத்துண்டு போகாம இருக்கறதுக்குத்தான், அங்கிள் இங்கியே இருக்காரு“ என்றாள் தூக்கத்திலிருந்து எழுந்த பிரயத்தனா.
“ வாட் நான்சென்ஸ்! ஆயிரம் ரூபாய் மெய்டெனன்ஸ் தரேன். என்ன செக்யூரிட்டி இருக்கு இந்த காலனில.. அசோசியேஷன் மீட்டிங்ல கிழிக்கிறேன் பாரு.. ஆமா அந்த தடிச்சி ஆயா எங்க.. அடுத்த வாரம் அவளுக்கு சீட்டு கிழிக்கிறேன் பாரு.”
அதுக்கெல்லாம் அவசியமில்ல மேடம். அவ இனிமே வரமாட்டா, ஆமாம் மேடம்! கொழந்த நகை, பணமெல்லாம் அவதான் எடுத்திண்டு போறதா இருந்தா. நான் பாத்துட்டேன். அதான் இதப் போட்டுட்டு ஓடிப்போயிட்டா “ என்றான் அழகிரி..
‘ மை காட் அவளா! நாலு பேரைக் கேட்டு அலசி ஆராய்ந்து, அப்புறம்தானே அவளை வேலைக்கு வச்சேன். இந்த மாசத்தோட அவ வந்து பத்து மாசமாச்சு. ஒரு சின்னத் தப்பு பண்ணலயே அவ.. மே பி பெரிய தப்பு பண்றதுக்காக என் நம்பிக்கையை வளர்த்திருக்கா.. ‘
“ அப்ப நான் கெளம்பறேன் மேடம் “ என்று நெளிந்தபடி சொன்னான் அழகிரி.
அதில் ஒரு ஆண்மை இருப்பதாகப் பட்டது தனுஜாவுக்கு. எங்கோ அவள் மனதில் மூலையில் சின்னதாக ஒரு பூ பூக்கத் தொடங்கியது!
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – 9
- சும்மா ஊதுங்க பாஸ் -1
- மழையென்பது யாதென (2)
- கலப்பு
- இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி
- ஒரு கோடி மெழுகுவர்த்திகள்
- சிறுகதைகள் மூன்று
- சிமோனிலா கிரஸ்த்ரா
- பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்
- விசுவப்ப நாயக்கரின் மகள்
- பாடம் (ஒரு நிமிடக்கதை)
- இயல்பான முரண்
- மிதிலாவிலாஸ்-13
- வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்
- தொடுவானம் 67. விடுதி வாழக்கை
- பிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5
- சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்
- ‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவை
- திரை விமர்சனம் – உத்தம வில்லன்
- பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015
- கவிதைகள்
- சினிமா பக்கம் – திரை விமர்சனம் இந்தியா பாகிஸ்தான்
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
- ஐ
- சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் ஆய்வரங்கு