This entry is part 25 of 26 in the series 10 மே 2015

 

—-நாஞ்சில்நாடன்

’ஐஎனும் இந்தச் சொல், இன்று,இங்கு ஒரு தமிழ் சினிமாவின் தலைப்பாக அறியப்படுகிறது. அல்லது நான் என்ற பொருளில் வரும் ஆங்கிலச் சொல் I என்பதை நினைவுபடுத்தும். மேலும் சிலருக்கு கண் எனும் பொருளில் வரும் Eye எனும் சொல்லை. நம்மில் எவருக்கும் ஐ என்பது தமிழ்ச்சொல் அன்று.

ஆனால் இந்த ஓரெழுத்துத் தமிழ்ச் சொல்லை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித்தொகை எனும் எட்டுத்தொகை நூல்களும் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி எனும் பத்துப்பாட்டு நூல்களும் பயன்படுத்துகின்றன.

தமிழ் அகரவரிசையின் உயிரெழுத்துகளில் ஒன்பதாவது எழுத்தான ஐ எனும் நெடில் எழுத்து, ஒரு தனிச் சொல்லாகும். இதனை ஓரெழுத்துச் சொல் என்பார்கள். ஐ எனும் எழுத்தைக் குறிக்க, ஆத்திசூடி பயன்படுத்தும் நூற்பா, ”ஐயம் இட்டு உண்” என்பதாகும். ”இல்லை என்று இரப்பார்க்கு இல்லை என்னாது பிச்சை இட்டபின் உண்பாயாக” என்பது அதன் பொருள்.

ஐ எனும் நெட்டெழுத்துச் சொல்லுக்கு இருபத்து நான்கு பொருள்கள் கூறுகின்றது தமிழ்ப் பேரகராதி. தலைவன், தந்தை, கணவன், அரசன், கடவுள், தமையன் மனைவி, சந்தேகம், அழகு, நுண்மை, வியப்பு, கோழை, இருமல், பெருவியாதி, சவ்வீரம் எனும் நஞ்சு, மந்தாரம், ஊண், கை, திசாமுகம், மலைஉச்சி, கடுகு, தும்பை, சர்க்கரை, ஐந்து என்பன அவை.

மேற்சொன்ன பொருள்களைத் தமிழின் நிகண்டுகளும், பழந்தமிழ்ப்பாடல் வரிகளும் தருகின்றன. கொங்கு மண்டலத்தில் தலைவரைக் குறிக்க ஐயன் எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஐயர் எனும் சொல்லும் தலைவரைக் குறிப்பதுதான். ”ஐயர் யாத்தனம் கரணம் என்ப” என்பது தொல்காப்பியம். பின்னர் ஐயர் என்பது அந்தணர்களில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாக ஆகிப் போயிற்று. கிறிஸ்தவப் போதகர்களையும் இன்று ஐயர் என்றே குறிக்கின்றனர்.

ஆனால் இன்று ஐ என்ற சொல் எங்காவது மேற்சொன்ன பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றதா? வேண்டுமானால் வியப்பு எனும் உணர்ச்சியின் ஒலிக்குறிப்பாகக் பயன்படுத்தப்படுகிறது எனலாம். ஐ, ஐயோ, ஐயே என்றெல்லாம் ஒலி எழுப்புகிறோம்.

ஐ எனும் சொல்லைத் தலைவன் எனும் முதற்பொருளில் திருவள்ளுவர் கையாள்கிறார். பொருட்பாலில் படைச்செருக்கு எனும் அதிகாரத்தின் திருக்குறள் 771 பேசுகிறது.

”என்னைமுன் நில்லன்முன் தெவ்விர் என்னை

முன்னின்று கல்நின் றவர்”.

இதில் எங்கே ஐயா ஐ எனும் சொல் வருகிறது என்று கேட்பீர்கள்தானே? திருக்குறளைச் சொல் பிரித்துச் சொல்வேன்.

”என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ

முன் நின்று கல் நின்றவர்”

என்று எழுதலாம். ஈண்டு ஐ எனில் தலைவன், தெவ்விர் எனில் பகைவர், கல் எனில் நடுகல். நடுகல் என்றால் இறந்த வீர்ர்களின் புதைகுழி மேட்டில் நடப்படும் கல்.

படைச்செருக்கு என்பது அதிகாரத்தின் தலைப்பு. தன் முன்னால் போருக்குத் தயாராக நிற்கும் பகைவர்களைப் பார்த்து வீரன் ஒருவன் பெருமிதத்துடன் அறைகூவிச் சொல்கிறான். தன் தலைவனின் வீரத்தை மெச்சிச் சொல்கிறான். ‘என் தலைவன் முன்னால் வந்து நிற்காதீர்கள் பகைவர்களே! அங்கே தொலைவில் பாருங்கள், பல நெடுகற்கள் தெரிகின்றன அல்லவா? அந்த நெடுகற்கள் யாவும் என் தலைவன் முன்னால் முன்பு போருக்கு வந்து நின்ற பகைவர்கள். அவர்கள் இன்று நெடுகற்களாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

 

அற்புதமான திருக்குறள்.திருக்குறளை இலக்கியம் அல்ல, நீதி நூல் என்று வாசிக்காமலேயே வாதாடியவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய குறள் வெண்பா. செய்யுளின் உணர்ச்சியையும், பாவத்தையும், சொற்களின் நேர்த்தியான கட்டமைப்பையும் கவனியுங்கள். எத்தனை வியத்தகு விதத்தில் ஐ எனும் ஓரெழுத்துச் சொல் தலைவன் என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது?

 

எங்கே தொலைத்தோம்; ஏன் தொலைத்தோம்; யாருக்காகத் தொலைத்தோம்; என்று தொலைத்தோம் இந்த ஆழமான சொல்லை. குறைந்த பட்சம் ‘தல’ எனும் சொல்லுக்கான மாற்றுச் சொல்லாகவேணும் ’ஐ’ என்று சொல்லக்கூடாதா?

 

இதைத்தான் ‘தன் படை வெட்டிச் சாய்தல்’ என்கிறார்கள் போலும்!

 

 

Series Navigationஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் ஆய்வரங்கு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *