விடுதி வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. அதிகாலையிலேயே உற்சாகத்துடன் எழுந்து வகுப்புகளுக்குச் செல்வது இனிமையான அனுபவம்.
காலையில் பசியாறும் போது புது நண்பர்கள் கிடைத்தனர். அவர்களில் சில தமிழ் மாணவர்கள் என்னுடன் நெருக்கமானார்கள். அவர்களில் பெஞ்சமின் மிகவும் நெருக்கமானான். அவன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தான். தமிழ் நன்றாகப் பேசுவான். அவனுடன் மாலையில் அல்லது இரவில் ஆரணி ரோட்டில் வெகுதூரம் நடந்து செல்வோம். இரவில் நடப்பது கொஞ்சம் ஆபத்தானது. வீதியின் குறுக்கே பாம்புகள் நடமாட்டம் அதிகம். எதோ ஒரு அசட்டு தைரியத்தில்தான் அவ்வாறு நடந்து செல்வோம். அவனுக்கு உடற்பயிற்சி செய்வதில் அலாதி பிரியம். மாலையில் ” ஜிம் ” சென்று பளு தூக்குவதில் ஈடுபடுவான். அதனால் உடலைக் கட்டாக வைத்திருந்தான். நல்ல பழக்க வழக்கங்களுடன் மிகுந்த கடவுள் பக்தியும் அவனிடம் கண்டேன். தமிழில் பேசிப் பழக அவன் நல்ல துணையானான்.
அடுத்தவன் டேவிட் ராஜன். இவனும் தமிழ் நன்றாகப் பேசுவான். இவன் பாளையங்கோட்டையிலிருந்து வந்தவன். இவனுக்கு விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் ஆர்வம்.ஹாக்கி விளையாடுவது இவனுக்குப் பிடிக்கும். நன்றாகப் படிப்பான்.
சம்ருதி ஹைதராபாத் நகரிலிருந்து வந்தவான். இவனுக்கு தாய்மொழி தெலுங்கு. அதனால் நாங்கள் ஆங்கிலத்தில்தான் உரையாடிக்கொள்வோம். ஒரே அறையில் தங்கியதால் நாங்கள் இருவரும் இரவில் ” தினகரன் ” தியேட்டரில் ஆங்கிலப் படங்கள் பார்க்கச் செல்வோம். சில நாட்களில் மாலையில் ஆரணி ரோட்டில் பேசிக்கொண்டே நடந்து செல்வோம்.
சீனியர் மாணவர்களில் சிலர் என்னுடன் நெருங்கிப் பழகினர். அவர்களில் ஆனந்த் செல்லப்பா முக்கியமானவர். இவர் ஓர் இசைப் பிரியர். எப்போதும் இவர் கையில் ” கித்தார் ” வைத்திருப்பார். இவர் கிறிஸ்துவ பக்திப் பாடல்கள் எழுதி இசையமைத்து பாடுவார். ( பின்னாட்களில் இவர் எழுதி இசையமைத்துப் பாடிய, ” காரிருள் வேளை கடுங்குளிர் நேரத்தில் ஏழைக் கோலமதா … ” எனும் பாடல் மிகவும் பிரமலமானது! இவருடைய பாடல்கள் கொண்ட குறுந்தட்டுகள் இன்றும் உலகின் பல நாடுகளில் விற்பனையாகின்றன. ) எனக்கு தமிழ் மீது ஆர்வம் உள்ளது அவருக்குப் பிடித்திருந்தது.
ஆர்தர் வழக்கம்போல் எனக்கு நல்ல வழிகாட்டியாக விளங்கினார். அடிக்கடி அவருடைய அறைக்குச் சென்று வருவேன்.
முதலாண்டு வகுப்புப் பாடங்கள் எனக்கு எளிமையாகவே இருந்தன. அனால் கரிம வேதியியலும் உயிர் இயற்பியலும் ( Organic Chemistry and Biophysics ) எனும் பாடம்தான் பிடிக்கவில்லை. அது மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணியது. நிறைய பொருட்களை கற்பனையில் காணவேண்டியுள்ளது. எப்படியோ மனதை அதில் ஈடுபடுத்தி வகுப்புகளில் கவனம் செலுத்தினேன்.
இரவு உணவுக்குப் பின் என் அறையில் உள்ள நால்வரும் பாடங்களில் கவனம் செலுத்துவோம். தெரியாதவற்றை கேட்டு தெரிந்து கொள்ளுவோம்.
பாடங்களில் எனக்கு ஆங்கிலம் மிகவும் பிடித்து. ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” நூலை நான் வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அது உலகப் புகழ்மிக்க அருமையான நாவல். படிக்க சுவையாக இருந்தது.
ஆனால் அதை பாடமாக நடத்திய நேரம்தான் சரியில்லை. ஆங்கில வகுப்பு மதியம் இரண்டு மணிக்கு தொடங்கும். மதிய உணவை விடுதியில் முடித்தபின்பு வகுப்பறைக்கு வந்து அமர்வோம். அப்போது நாவலை ஒருவர் படிக்கவேண்டும். மற்றவர்களின் கைகளிலும் அந்த நூல் இருக்கும். நேரம் ஆக ஆக வகுப்பில் பாதி பேர்கள் தூங்கி வழிவார்கள். சிலர் மேசை மீது தலை வைத்து நன்றாகத் தூங்கியும் விடுவார்கள். குண்டர்ஸ் அது பற்றியெல்லாம் கவலை கொள்ளமாட்டார். அதுதான் ஆங்கிலப் பாடங்களின் சிறப்பு அம்சம். ஆனால் நாங்கள் படிக்கும் நாவல் அப்படியில்லை. மிகவும் விறுவிறுப்பாகக் கதை தொடரும்.
தாமஸ் ஹார்டி எனும் புகழ்மிக்க எழுத்தாளரால் எழுதப்பட்டது இந்த நாவல். மைக்கல் ஹென்சார்ட் என்பவன்தான் கதாநாயகன். அவன் சாதாரண விவசாயிதான். ஒரு சமயம் கிராமத்து சந்தையில் அதிகமாக நாட்டு மதுவைக் குடித்துவிட்டு அதன் போதையில் தன்னுடைய மனைவி சூசனையும், கைக்குழந்தையான மகள் எலிசபெத் ஜேன் என்பவளையும் ஒரு மாலுமியிடம் விற்று விடுகிறான். பதினெட்டு வருடங்கள் கழிந்தபின்பு அந்த தாயும் மகளும் அவனைத் தேடி வருகின்றனர். அந்த மாலுமி கடல் பிரயாணத்தில் காணாமல் பொய் விடுகிறான். சொந்த கிராமத்தில் அந்த மதுபானம் விற்கும் மூதாட்டியிடம் அவர்கள் அவனைப் பற்றி விசாரிக்கிறார்கள். ஹென்சார்ட் கிராமத்தை விட்டுச் சென்றுவிட்டதாகவும், அவன் கேஸ்ட்டர்பிரிட்ஜ் நகரத்தில் உள்ளதாகக் கூறுகிறாள். அங்கு அவர்கள் இருவரும் சென்றபோது அவனை பெரிய செல்வந்தனாகவும் நகரத்தின் மேயராகவும் காண்கின்றனர்.அதன்பின்பு கதை பல்வேறு சிக்கலுடன் சோகத்துடன் செல்கிறது. ( கதை எவ்வாறு செல்கிறது என்பதை பின்பு சமயம் வரும்போது கூறுவேன். )
சனிக்கிழமைகளில் வகுப்புகள் ஒரு மணியுடன் முடிந்துவிடும். பெரும்பாலும் அன்று இரவு தினகரன் தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்க்க நண்பர்களுடன் புறப்படுவேன். சில சமயங்களில் என் வகுப்பு பெண்களும் உடன் வருவார்கள். படம் முடிந்ததும் அவர்களை பெண்கள் விடுதியில் விட்டுவிட்டு திரும்புவோம். சில சனிக்கிழமைகளில் வெளியில் சாப்பிட வேலூர் செல்வோம். அப்போதும்கூட சில பெண்கள் வருவார்கள். இதுபோன்று சில மாணவர்களுக்கு சில பெண்களின் நெருங்கிய நட்பு மலர்வது தெரிந்தது.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயம் செல்ல கல்லூரி பேருந்து விடுதிக்கு காலை எட்டு மணிக்கு வந்துவிடும். அந்த ஆலயம் வேலூர் கோட்டைக்குள் இருந்தது. அது செயின்ட் ஜான் ஆலயம். மிகவும் பிரமாண்டமான முறையில் இந்த ஆலயத்தை 1846 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கட்டி ஆங்கிலத்தில் வழிபாடு செய்துள்ளனர். அங்கு ஒன்பது மணிக்கு ஆங்கில ஆராதனை நடைபெறும். பிரசங்கம் அருமையாக இருக்கும். அனேகமாக அனைத்து கிறிஸ்த்துவ மாணவர்களும் ஆலய வழிபாட்டில் கலந்துகொள்வோம். ஆராதனை முடிந்ததும் தேநீரும் சிற்றுண்டியும் தருவார்கள்.
வேலூர் கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் ஆலயமும் உள்ளது. இது 1550ல் விஜயநகர மன்னர்களின் ஆட்சியின்போது கட்டப்பட்டது. இது சிவன் கோவில். இ ருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோவிலில் இருந்த லிங்கம் அகற்றப்பட்டு, கோவில் இராணுவ வீரர்களின் பாசறையாகப் பயன்படுத்தப்பட்டது. அதனால் இது சாமி இல்லாத கோவில் என்ற பெயர் பெற்றது. பின்பு 1961 ல் மீண்டும் லிங்கம் வைக்கப்பட்டு தற்போது வழிபாடுகள் நடக்கின்றன.
கோட்டைக்குள் ஒரு மசூதியும் உள்ளது. இது திப்பு சுல்தான் காலத்தில் 1750 ஆம் வருடம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இது இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் கீழ் இருப்பதால் இங்கு வழிபாடு நடப்பதில்லை.
ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் விடுதியில் விசேஷ மதிய உணவு கிடைக்கும். அப்போது விடுதியின் உணவகத்தின் கூடம் சாத்தப்பட்டிருக்கும். மேசையில் உணவு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அன்று ஒவ்வொரு இடத்திலும் ஒரு கிண்ணத்தில் கோழிக்கறி இருக்கும்.அது தொடை, இறக்கை, உடல் என்று பெரிய துண்டுகளாக இருக்கும். இன்னொரு பாத்திரத்தில் கோழிக் குழம்பு இருக்கும். அதில் நிறைய கோழி ஈரல்கள் நிறைந்திருக்கும். சரியாக பனிரெண்டு மணிக்கு மணி அடிக்கப்படும். அப்போதுதான் கதவுகள் திறக்கப்படும். அதுவரை வெளியில் காத்திக்கும் நாங்கள் முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்வோம். அனைவருமே கோழியின் தொடை உள்ள இடத்துக்குதான் முந்துவோம். எல்லாரும் இடம் பிடித்தபின்பு எழுந்து நின்று ஜெபம் சொல்வோம். அப்போது கண்களை மூடி ஜெபம் செய்து திறந்து பார்த்தால் தொடைக் கறிக்கு பதில் வேறு கறி மாறியிருக்கும். இதை புரிந்து கொள்பவர்கள் ஜெபம் செய்யும்போது தொடைக் கறி கிண்ணத்தை இறுகப் பற்றிக்கொண்டுதான் ஜெபம் செய்வோம்!
( தொடுவானம் தொடரும் )
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – 9
- சும்மா ஊதுங்க பாஸ் -1
- மழையென்பது யாதென (2)
- கலப்பு
- இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி
- ஒரு கோடி மெழுகுவர்த்திகள்
- சிறுகதைகள் மூன்று
- சிமோனிலா கிரஸ்த்ரா
- பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்
- விசுவப்ப நாயக்கரின் மகள்
- பாடம் (ஒரு நிமிடக்கதை)
- இயல்பான முரண்
- மிதிலாவிலாஸ்-13
- வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்
- தொடுவானம் 67. விடுதி வாழக்கை
- பிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5
- சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்
- ‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவை
- திரை விமர்சனம் – உத்தம வில்லன்
- பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015
- கவிதைகள்
- சினிமா பக்கம் – திரை விமர்சனம் இந்தியா பாகிஸ்தான்
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
- ஐ
- சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் ஆய்வரங்கு