தேமொழி
விசுவப்ப நாயக்கர் என்பவர் மதுரை நாயக்கர் மன்னர்களுள் ஒருவர். விஜயநகர பேரரசின் பகுதியாக இருந்த தமிழகத்தில், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, விஜயநகர பேரரசின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு வரி அளித்து, முழு தன்னாட்சி உரிமை பெற்றுக் கொண்ட நாயக்கர் பேரரசின் பிரதிநிதிகளால் மதுரை, தஞ்சை, செஞ்சி பகுதியில் நாயக்க மன்னர்களின் ஆட்சி துவங்கியது. மதுரை நாயக்கர்கள் 1529 ஆம் ஆண்டு துவங்கி 1736 ஆம் ஆண்டு வரை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்தனர். தஞ்சை, செஞ்சி நாயக்கர் மன்னர்களைவிடவும் மதுரை நாயக்கர்களே நீண்டகாலம் ஆட்சி செய்தனர்.
மதுரை நாயக்கர் மன்னர்கள்:
விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்திலேயே மதுரை நாயக்கர் ஆட்சியின் பகுதியாக இருந்தாலும், மதுரை நாயக்க மன்னராக “விசுவநாத நாயக்கர்” 1529 ஆண்டு முதல் விஜயநகர அரசின் பிரதிநிதியாக அரசுப் பொறுப்பை ஏற்றார். மாலிக்காபூர் படையெடுப்பினால் களையிழந்து இருந்த மதுரையை வளமையான நிலைக்கு மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இவர் காலத்தில் பாளையப்பட்டு ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, நாடு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு, 72 பாளையப்பட்டுகளின் தலைவர்களான பாளையக்காரர்களின் கீழ் ஆட்சி நடைபெறத் துவங்கியது.
தளவாய் அரியநாத முதலியார்:
விசுவநாத நாயக்கரின் முதலமைச்சரான “தளவாய் அரியநாத முதலியார்” என்பவர் இந்த பாளையப்பட்டு ஆட்சிமுறைக்கு முதலில் வழிவகுத்தவர். முதலமைச்சராகவும் இராணுவ அதிகாரியாகவும் பணியற்றியதுடன் மட்டும் அல்லாமல், பாளையப்பட்டு திட்டம் கொண்டு வந்தது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தை 1569 ஆம் ஆண்டு கட்டுவித்தது என இவர் பல அரிய பணிகளை முன்னின்று ஏற்று மதுரை நாயக்கர் மன்னர்களுக்கு உதவியவர். மன்னர் விசுவநாத நாயக்கர் ஆட்சியின் காலம் (1529 – 1564) முதற்கொண்டு, அவருக்குப் பின்னர் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 – 1572), வீரப்ப நாயக்கர் (1572 – 1595), இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 – 1601) காலம்வரை எனத் தொடர்ந்து வந்த நாயக்க மன்னர்களின் ஆட்சி காலங்களிலும் இவர் அவர்களுக்கு ஆலோசனை கூறும் பொறுப்பில் இருந்து புகழ் பெற்றவர்.
மீனாட்சியம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தின் வாயிலில் தளவாய் அரியநாத முதலியார் குதிரை மீது அமர்ந்திருக்கும் சிலையும் உண்டு. குடிமக்களின் மிகுந்த மதிப்பையும், மரியாதையையும் பெற்றிருந்த இவர் 80-வது வயதில், கி.பி. 1600-இல் முதுமையுற்று மறைந்தார். இவர் மறைந்த காலதில் நாயக்க மன்னர்கள் இருவர் குழுவாக ஆட்சி நடத்தினர். இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும் (1595 – 1601) அவரது சகோதரரான “விசுவப்ப நாயக்கரும்” இணையாக நாட்டை ஆண்டனர். இவர்கள் ஆட்சியில் திருச்சி மாநகரம் இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அத்துடன் திருச்சி மிக முக்கியமான நகராகவும் இவர்கள் ஆட்சியில் விளங்கியது.
மன்னர் விசுவப்ப நாயக்கர்:
மதுரை நாயக்க மன்னர்கள் வரிசையில், வரலாற்றுக் கோணத்தின் அடிப்படையில் அதிகம் பேசப்படாத, புகழ் பெற்றிராத மன்னரான விசுவப்ப நாயக்கர் உண்மையில் மிகவும் புகழ்பெற்ற மதுரை “திருமலை நாயக்கரின்” பாட்டனார் ஆவார். இவர் அதிகம் அறியப்படாதற்கு இவர் தனது மூத்த சகோதரர் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கருடன் ஆட்சியை இணையாக நடத்தியது ஒரு காரணமாக இருக்கக் கூடும்.
மன்னர் விசுவப்ப நாயக்கர் ஆட்சி காலத்தில்தான் தளவாய் அரியநாத முதலியார் உயிர்நீத்தார். விசுவப்ப நாயக்கர் பற்றியும், தளவாய் அரியநாத முதலியார் பற்றியும் சில வரலாற்று ஆவணங்களும், மதுரை குனியூர் கல்வெட்டும்(Kuniyur Plate) தகவல்கள் தருவது போலவே, திருச்சியில் உள்ள சிறுதெய்வ கோயிலொன்றும் தகவல் தருகிறது.
பெரிய நாச்சியம்மன் திருக்கோவில்:
திருச்சி தென்னூரில் “பெரிய நாச்சியம்மன் திருக்கோவில்” (தென்னூர் ஹை ரோடு, திருச்சி 620017, புவியிடக்குறியீடு: 10°48’58″N 78°40’48″E) என்ற குலதெய்வம் கோவில் ஒன்று உள்ளது. இத்தெய்வம் வாணிய செட்டியார் குலத்தின் குலதெய்வம். இக்கோவில் வாணிய செட்டியார் சமூகத்தின் பருத்திக்குடையான், தென்னவராயன், பயிராலழக, பாக்குடையான், மாத்துடையான் மகரிஷி முதலான 5 கோத்திர குடி மக்களுக்கும் உரிமையானது. பெரியநாச்சி அம்மனும், அவரது கணவர் வீரிய பெருமாள் என்பவரும், பிள்ளையற்ற இவர்களின் சிதைக்குத் தீமூட்டிய வீரப்ப சுவாமி என்பவரும் இச்சமூக மக்களுக்கு மூதாதையர்கள். இந்த மூதாதையர்களை இக்குலமக்கள் குலதெய்வங்களாக வணங்கி வழிபடுகிறார்கள்.
பெரியநாச்சி அம்மையாருக்கு கோவில் எழுப்பி அக்கோயிலில் அவர் கணவர் வீரிய பெருமாள் மற்றும் மகன்முறை ஏற்று இறுதிச் சடங்குகள் செய்த வீரப்ப சுவாமி ஆகியோரையும் குலதெய்வங்களாக வணங்கி வருகிறார்கள். இம்மூவரையும் சேர்த்து இக்கோவிலில் “33 சிறுதெய்வங்கள்” உள்ளனர். அவர்களில் மன்னர் விசுவப்ப நாயக்கர், தளவாய் அரியநாத முதலியார் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் எவ்வாறு இக்கோயில் தெய்வங்களானார்கள் என்பதை இக்கோவிலின் தலவரலாறு மூலம் அறிந்து கொள்ளலாம். மன்னர் விசுவப்ப நாயக்கர் மற்றும் தளவாய் அரியநாத முதலியார் ஆகியோர் பற்றிய குறிப்புகளைக் கணக்கில் கொண்டு பெரியநாச்சி அம்மையார் வாழ்ந்த காலத்தை பின்னோக்கிக் கணித்தால், அம்மையார் வாழ்ந்த காலம் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது தெரிகிறது. குறிப்பாக அவர் உயிர் நீத்ததை 1595-1600 க்கும் இடைப்பட்ட காலம் என்றும் காலகட்டத்தை மேலும் குறுக்கலாம். இவர் வாழ்ந்த காலம் 1580 – 1600 க்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் உத்தேசமாகக் கூறலாம்.
தலவரலாறு வழங்கும் தகவல்:
தலவரலாறாகக் கூறப்படுவது நான்கு நூற்றாண்டுகளுக்கு (420 அண்டுகளுக்கு) முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. வாய்வழிக் கதையாக அக்குல மக்களிடம் வழங்கி வருகிறது. இருப்பினும் அவர்கள் சரியான காலத்தைக் கணக்கிடவில்லை என்பதையும் கோவிலின் இணையதள பக்கம் வழங்கும் தலவரலாறு மூலம் அறிய முடிகிறது. வாணியச் செட்டி குலத்தைச் சேர்ந்த பெரியநாச்சி அம்மையாரும், அவர் கணவர் வீரிய பெருமாளும் தங்கள் குலத் தொழிலான எண்ணை வியாபாரம் செய்து வருகின்றனர். திருச்சி உறையூர் பகுதியில் வசித்து வருகின்றனர், இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்தக்காலக்கட்டதில் உறையூரில் இருந்து விசுவப்ப நாயக்கர் ஆட்சி செய்யும் பொழுது தளவாய் அரியநாத முதலியார் அவரது அமைச்சரராக இருந்திருக்கிறார். இவரது காலத்தில் நாயக்கர்களுக்கு தலைநகராக விளங்கியது மதுரைதான். ஆனால் பிற்பாடு இவரது பேரன் தலைநகரை திருச்சிக்கு மாற்றினார், பிறகு மற்றொருவர் ஆட்சிக்கு வந்து தலைநகரை மதுரைக்கு மாற்ற, பிறகு மறுபடியும் திருச்சி மதுரை என்று இரு ஊர்களும் நாயக்கர் காலத்து தலைநகர்களாக மாறி மாறி இருந்து வரும் வழக்கம் தொடர்ந்தது. உறையூரில் இருந்து விசுவப்ப நாயக்கர் திருச்சி பகுதியை அரசாள, மதுரையில் இவரது அண்ணன் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில்தான் இருமன்னர்கள் அடங்கிய குழுவின் ஆட்சி நடந்தது என்பதை வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். உறையூரில் மன்னர் விசுவப்ப நாயக்கரின் அன்பு மகள், இளவரசி இறந்துவிடுகிறாள். மிகவும் துயருற்ற மன்னருக்கு ஆட்சியிலும் நாட்டமின்றிப் போகிறது.
கடைவீதியில் ஒருநாள் தற்செயலாக பெரியநாச்சி அம்மையாரைப் பார்த்ததும் மன்னர் வியக்கிறார். பெரியநாச்சி அம்மையார் இறந்த இளவரசியின் சாயலில் இருக்கவும் அவரைப் பற்றி அமைச்சரிடம் தகவல் சேகரித்து அவரை அழைத்துவரச் சொல்கிறார். பெரியநாச்சி அம்மையார் தனது கணவருடன் சென்று மன்னரை சந்திக்கிறார். மன்னர் தனது மகள் போலவே இருக்கும் பெரியநாச்சி அம்மையாரை அவரது மகளாகவே எண்ணுவதாகவும், அவருடன் அரண்மனையில் தங்கிவிடும்படியும் கூறுகிறார். அரண்மனை வாழ்வில் இத்தம்பதியருக்கு ஆர்வம் இருந்ததாகத் தெரியவில்லை. மன்னர் பெரியநாச்சி அம்மையாரைப் பார்க்க விரும்புவதாகத் தகவல் அளிக்கும் பொழுதெல்லாம் வந்து சந்தித்துச் செல்வதாகக் கூறி இருவரும் திரும்பி விடுகிறார்கள். எனினும், பெரியநாச்சி அம்மையாரைக் கண்டவுடன் மன்னரும் மனக்கவலையை மறந்து ஆட்சியில் கவனம் செலுத்துகிறார். இவர்களும் தங்களது எண்ணை வாணிபத்தைத் தொடர்கிறார்கள்.
ஒருநாள் புதுக்கோட்டை பகுதியின் காட்டிற்கு வேட்டைக்குச் சென்ற மன்னருக்கு கிடைத்த விலங்கின் இறைச்சியை தனது மகளாகக் கருதும் பெரியநாச்சி அம்மையாருக்குக் கொடுக்க விருப்பம் ஏற்படுகிறது. அவரது சேவகர்களில் ஒருவனிடம் அதைக் கொடுத்தனுப்புகிறார். அன்றைய வியாபாரத்தை முடித்து விட்டு, தனது நாய் துணைக்கு வர, வீடு திரும்பிக் கொண்டிருந்த வீரிய பெருமாளை அவன் வழியில் சந்திக்கிறான். சேவகன் அவரிடம் மன்னர் கொடுத்தனுப்பியதை பெரியநாச்சி அம்மையாரிடம் கொடுக்க தான் செல்வதாகக் கூற, வீரிய பெருமாளும் அது என்ன என்று தெரியாமலேயே அவர் தலைமீதிருக்கும் எண்ணெய்ப் பானையின் மீது வைக்கச் சொல்லி, தான் கொடுத்துவிடுவதாகவும் அவனிடம் கூறிவிடுகிறார். அவர் வீடு திரும்பும் வழியில் கோட்டை முனி அவரை அடித்துக் கொன்றுவிடுகிறது. உடலெல்லாம் ரத்தக்கறையுடன் நாய் பெரியநாச்சி அம்மையாரிடம் ஓடி வருகிறது. ஏதோ விபரீதம் நடந்ததை அறிந்து பெரியநாச்சி அம்மையார் நாயினைத் தொடர்ந்து சென்று இறந்து கிடக்கும் கணவரைக் கண்டு அழுது அரற்றுகிறார். பிறகு அவரது இறுதிக் காரியங்களை முடிப்பதற்காக உடலை வண்டியிலேற்றி உறையூருக்குத் திரும்புகிறார். வழியில் இப்பொழுது கோவில் இருக்கும் இடத்திற்கு அருகில் வரும் வண்டி அதற்கு மேல் செல்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வருகிறது.
தனது கணவருக்கு அங்கேயே சிதை மூட்டும் ஏற்பாடுகளை செய்யத் தொடங்குகிறார் பெரியநாச்சி அம்மையார். இதற்குள் தகவலறிந்த மன்னர் விசுவப்ப நாயக்கர் அங்கு வருகிறார். இறுதி காரியங்கள் முடிந்தவுடன் பெரியநாச்சி அம்மையாரை அவர் தன்னுடன் அழைத்து சென்றுவிட விரும்புவதையும் சொல்கிறார். ஆனால், பெரியநாச்சி அம்மையார் தனது கணவனுடன் உடன்கட்டை ஏற்பப்போவதாகக் கூறி உறுதியாக மறுத்துவிடுகிறார். எனவே மன்னரும் வேறுவழியின்றி வருத்தத்துடன் சந்தனக் கட்டைகள் அடுக்கிய சிதையை அமைத்துக் கொடுக்க, பெரியநாச்சி அம்மையார் கணவருடன் உடன்கட்டை ஏறுகிறார்.
சிதை ஏறும்பொழுது, தங்களுக்கு மகன் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கை செய்ய யாருமில்லையே என்று வருந்தி கணவரின் குலதெய்வமான பெருமாளிடம் பெரியநாச்சி அம்மையார் வேண்ட, அவரது கணவரின் சொந்த ஊரில், மலையின் மீது குடிகொண்டிருக்கும் பெருமாள் வீரப்ப சுவாமியாக உருவெடுத்து வந்து, மகன் பொறுப்பினை ஏற்று சிதைக்குத் தீ மூட்டுகிறார். சில நாட்களுக்குப் பிறகு மன்னரின் கனவில் பெரியநாச்சி அம்மையார் தோன்றி தான் சக்தியின் வடிவமாக பூமியில் தோன்றி செய்ய நினைத்த கடமைகளை முடித்துவிட்டதாகவும், அவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் அவருக்குக் கோவில் ஒன்று எழுப்பி, அவரது குலமக்கள் வணங்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறார். கனவில் தோன்றிய, தனது மகளாகக் கருதிய பெரியநாச்சி அம்மையார் சொன்னது போலவே அவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் அவருக்கு ஒரு கோவிலை எழுப்புகிறார் மன்னர் விசுவப்ப நாயக்கர். இன்றுள்ள கோயலின் கருவறை (உடன்கட்டை ஏறிய இடத்தில்) சுவர்களில் தீப்பிழம்புகள் படம் வரையப்பட்டுள்ளது.
காலத்திற்கேற்ற தலவரலாறு விளக்கம்:
வாய்வழியாகக் கூறப்பட்டு வந்துள்ள தலபுராணக்கதையில் ஏதோ ஓர் உண்மை இழை இருக்கிறது என்ற அனுமானத்திலும் நாம் இந்த நிகழ்ச்சியை அணுகலாம். அந்த அனுமானம்தான் இக்கட்டுரைக்கும் அடிப்படை. மக்களின் காலத்திற்கு ஒவ்வாத புரிதல்களால் இக்கதை இந்நாளில் பல இடங்களில் கேள்விகள் பல எழுப்பும் வண்ணம் அமைந்திருக்கிறது. ஆனாலும் தகவல்களை சரியான கோணத்தில் அணுகி, என்னதான் நடந்திருக்கக் கூடும் என்பதையும் சரிவர யூகிக்க முடியும்.
இலங்கையின் வரலாற்றை ஒரு பௌத்த தொன்ம சார்புநிலை நூலாக “மாகாவம்சம்” என்ற பெயரில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தேரவாத புத்தத் துறவி “மகாநாம தேரர்” என்பவர் பாலி மொழியில் எழுதினார். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட “கெய்கர்” (Wilhelm Geiger) என்பார் நூல்பதிப்பின் முன்னுரையில் அந்நூலை அணுகும் முறையை,
“…that our method is simply to eliminate from the tradition all the miraculous stories and consider what is left over as authentic history”
என்று விவரிப்பார். அதே கோணத்தில் இந்தத் தலவரலாற்றிலும், இயற்கையில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாத புனைவுகளைப் புறந்தள்ளி, ஊடாடிச் செல்லும் வரலாற்றுக் குறிப்புகளை மட்டுமே கொள்வோமானால், இது நடந்த காலகட்டம் மன்னர் விசுவப்ப நாயக்கர் வாழ்ந்த காலம், தளவாய் அரியநாத முதலியார் உயிரோடு அரச குடும்பத்துடன் தொடர்பில் இருந்த காலம் என்றும் அனுமானிக்கலாம்.
அரசரிடம் இருந்து அனுப்பப்பட்ட பொருளையும், அரசரின் சேவகன் வீரிய பெருமாளுடன் பேசிக்கொண்டிருப்பதையும் கண்டவர் யாருக்கோ அப்பொருளைக் கொள்ளையடிக்கும் எண்ணம் வந்திருக்கலாம். அது என்ன என்று அறியாமலேயே வீரிய பெருமாளைத் தாக்கிக் கொலை செய்துவிட்டு பொருளை எடுத்துக் கொண்டோடி இருந்திருக்கலாம். அப்பொருளை இறைச்சி என்று சொல்வதே கோட்டை முனியுடன் தொடர்பு படுத்த எழுந்த எண்ணமாகவும் இருக்கலாம். அக்காலங்களில் காரணம் கூற இயலாதக் கொலைகளை பேய், பிசாசு, காட்டேறி, முனியாண்டி ஆகியோர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறிவிடும் வழக்கம் இருந்ததை நாம் அறிவோம். பெரியநாச்சி அம்மையாருக்கும் அவர் கணவருக்கும், அவரது கணவர் வழி உறவில், மகன் முறையில் உள்ளவர் யாரேனும் ஒருவர் சிதைக்குத் தீயிட்டிருந்திருக்கலாம். பிறகு இறந்தவர் நினைவாக அங்கு கோவிலும் எழுப்பப்பட்டிருக்கிறது.
திருச்சி புத்தூரில் இன்றும் விசுவப்ப நாயக்கர் தெரு என்று ஒரு தெரு பெரியநாச்சி அம்மன் கோவிலின் வடமேற்குப் பகுதியில் உள்ளது (தெரு இருக்கும் பகுதியின் புவியிடக் குறியீடு: 10°49’3″N 78°40’44″E), அது அக்கால உறையூர் நகரின் பகுதியாக இருந்திருந்திருக்கலாம். இது தற்கால அருணா தியேட்டருக்கு பின்புறம் உள்ள பகுதி. ஆனால் இத்தெருவுக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு உரியவர் மன்னர் விசுவப்ப நாயக்கர் என்றும், அவர் புகழ் பெற்ற மன்னர் திருமலை நாயக்கரின் பாட்டனார் என்பதும் இந்நாள் மக்களுக்குத் தெரியாது என மிக உறுதியாக நம்பலாம். இன்றைய கோவில் குளத்தின் வடக்குப் பகுதி இடுகாடாகவும் இருந்திருக்கிறது. இடுகாட்டின் பயன்பாட்டில் இருந்த குளம் (குளத்தின் புவியிடக் குறியீடு: 10°49’0″N 78°40’48″E) இப்பொழுது கோவிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கொடுக்கப்படுகின்றன. மன்னர் விசுவப்ப நாயக்கர் பெரியநாச்சி அம்மனின் தந்தை முறை என்று குறிப்பிடப்பட்டு, அவரது தளவாய் அரியநாத முதலியாருடன் கோவிலில் குடியேற்றப்பட்டு இருவரும் பெரியநாச்சி அம்மையாரின் குடும்பத்துடன் இன்று குலதெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றனர்.
_______________________________
கட்டுரை வழங்கும் தகவலுக்கான தரவுகளின் மூலம்:
History of the Nayaks of Madura, By R. Sathyanatha Aiyar, 1924, Humphrey Milford Oxford University Press; – see Chapter 5, Page 82 & Chapter 6, Page 89 & page 395
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி – https://ta.wikipedia.org/s/l5d
தளவாய் அரியநாத முதலியார் – https://ta.wikipedia.org/s/xy9
ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில், தென்னூர், திருச்சி – http://sriperiyanachiammantemple.org/
Santhipriya’s pages, By N.R.Jayaraman – http://santhipriyaspages.blogspot.com/2014/12/blog-post.html
Geiger, Wilhelm. (2013). pp. 15-6. Mahavamsa The Great Chronicle of Ceylon. London: Forgotten Books. (Original work published 1912) – http://www.forgottenbooks.com/readbook_text/Mahavamsa_The_Great_Chronicle_of_Ceylon_1000058910/15
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – 9
- சும்மா ஊதுங்க பாஸ் -1
- மழையென்பது யாதென (2)
- கலப்பு
- இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி
- ஒரு கோடி மெழுகுவர்த்திகள்
- சிறுகதைகள் மூன்று
- சிமோனிலா கிரஸ்த்ரா
- பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்
- விசுவப்ப நாயக்கரின் மகள்
- பாடம் (ஒரு நிமிடக்கதை)
- இயல்பான முரண்
- மிதிலாவிலாஸ்-13
- வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்
- தொடுவானம் 67. விடுதி வாழக்கை
- பிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5
- சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்
- ‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவை
- திரை விமர்சனம் – உத்தம வில்லன்
- பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015
- கவிதைகள்
- சினிமா பக்கம் – திரை விமர்சனம் இந்தியா பாகிஸ்தான்
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
- ஐ
- சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் ஆய்வரங்கு