சும்மா ஊதுங்க பாஸ் – 2

author
0 minutes, 0 seconds Read
This entry is part 25 of 25 in the series 17 மே 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

கொஞ்ச நாள் கழித்து ஒருநாள், பட்டாபி ரகுபதியின் ரூமிற்குள் வேகமாக நுழைந்து, “சார், இந்த வாசுவின் கிண்டல் ரொம்பத்தான் அதிகமாகி விட்டது” என்றான்.

“என்ன நடந்தது” என்று திகிலுடன் கேட்டார். வாசு வேறு ஏதாவது புதுப் பிரச்சினையை ஆரம்பித்து விட்டானோ என்று மனதில் நினைத்துக் கொண்டே.

“அந்த மெஷின் இருக்கில்லையா சார்” என்று ஆரம்பித்தான் பட்டாபி.

“எந்த மெஷின்” என்று கேட்டார் ரகுபதி புரியாமல்.

“அதான் சார், நீங்கள் தப்பான அளவு கொடுத்து…” என்று முடிக்கு முன்,

“சரி சரி, மேலே சொல்” என்றார் வெறுப்போடு.

“அந்த மெஷினுக்கு மாலை போட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, கற்பூரம் காட்டி, மணியடித்து பூஜை செய்கிறான் வாசு” என்றான் பட்டாபி.

அதைக் கேட்ட ரகுபதி அதிர்ந்து விட்டார். இது அவருக்கு ஏற்பட்ட உச்சகட்ட அவமானம். இந்த செயல் மூலம் அவரை வாசு நிச்சயமாக கிண்டல் செய்கிறான் என்பது இப்போது உறுதியாகி விட்டது. இந்த முறை அவனை விடக்கூடாது என்று எண்ணிக் கொண்டார்.

“என்ன தைரியம் அவனுக்கு. விட்டேனா பார். என்னை யார் என்று நினைத்துக் கொண்டான். அவனுடைய வேலைக்கே சங்கு ஊதி விடுகிறேன் பார்” என்றார் ஆத்திரத்தில்.

“சார் நீங்களே அந்த வார்த்தையை சொல்கிறீர்களே” என்றான் பட்டாபி. அவன் சுட்டிக் காட்டிய பிறகுதான் அதை உணர்ந்தார் ரகுபதி. அதனால் அதை சுட்டிக் காட்டிய பட்டாபி மீது கோபம் வந்தது.

“போ, போய் உன் வேலையைப் பார்” என்று அவனைப் பார்த்து கத்தினார்.

அவருடைய நினைவுகள் பின்னோக்கி சென்றது.

ஒருமுறை 750 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு மெஷின் தயாரிப்பதற்கு ஆர்டர் வந்தது. வழக்கமாக சங்கரன்தான் அதற்குத் தேவையான அளவுகளை வரைந்து கொடுப்பார். அதை வைத்து இரும்பு தகடுகளை வெட்டி வெல்டிங் செய்து மெஷினை தயார் செய்வார்கள். ஆனால் அந்த ஆர்டர் வந்த போது சங்கரன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். அவர் திரும்பி வர நான்கு நாட்களாகும் என்று தெரிந்தது.

வழக்கமாக 300, 500, 1000, 1500 லிட்டர் போன்ற அளவுகளில்தான் மெஷின்களுக்கு ஆர்டர் வரும். 750 லிட்டர் என்பது இதுதான் முதல் முறை. அந்த ஆர்டர் மிகவும் அர்ஜென்ட் என்பதால், ரகுபதி ஒரு முடிவு செய்தார். சங்கரனிடம் கேட்டு தேவையான அளவுகளை வாங்கி விட்டால், ஏற்கெனவே அது போன்ற மெஷின்களைச் செய்து அனுபமுள்ளவர்களை வைத்து, மெஷினைத் தயார் பண்ணி விடலாம். சங்கரன் இல்லாமலே வேலை முடிந்தது என்று நமக்கும் முதலாளியிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்றெல்லாம் திட்டமிட்டார்.

போனில் சங்கரனைத் தொடர்பு கொண்டு அளவுகள் வேண்டுமென்று கேட்டார் ரகுபதி. சங்கரன் ஒரு யோசனை சொன்னார். ஏற்கெனவே 500 லிட்டர் மெஷின் தயாரித்த போது தான் வரைந்து கொடுத்திருந்த அளவுகளை எடுத்துக் கொள்ளச் சொல்லி, அதில் உள்ள நீளம், அகலம் என்று ஒவ்வொன்றுக்கும் மாற்று அளவுகளைச் சொல்லி குறித்துக் கொள்ளச் சொன்னார். அவர் சொன்னது போல ரகுபதியும் குறித்துக் கொண்டார்.

பல முகப்பு கொண்ட அந்த கொள்கலத்துக்குத் தேவையானது மொத்தம் பன்னிரண்டு தகடுகள். அவற்றில் எட்டு தகடுகள் ஒரே அளவாகவும், மீதி நான்கு தகடுகள் வேறு ஒரு அளவாகவும் இருக்கும், வெல்டிங் செய்து அவைகளை இணைத்தால் மெஷின் ரெடியாகி விடும். சங்கரன் சொன்ன அளவுகளின்படி அவர் வரைந்த படங்களைக் கொடுத்து தகடுகளை வெட்டி தயார் பண்ணச் சொன்னார் ரகுபதி.

ஆனால் நடந்தது வேறு. ரகுபதி குறித்துக் கொடுத்த அளவுகளில் ஏதோ குளறுபடி நடந்து விட்டது. அதை வைத்து மெஷின் தயார் பண்ணினால் அது இரண்டு கோபுரங்களை அடிப்பாகத்தில் இணைத்தது போல் ஒரு அமைப்பு வந்து விட்டது.

அதைப் பார்த்த அனைவரும் சிரித்து விட்டார்கள். சங்கரன் வந்து அதைப் பார்த்து விட்டு, வாசுவைக் கூப்பிட்டு ஏன் இப்படி நடந்தது என்று விசாரித்தார்.

“வாசு, உனக்குத்தான் தெரியுமே, ஏன் இப்படி மாற்றி வெட்டினே”

“நான் ரகுபதி சாரிடம் சொன்னேன். ஆனால் அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. ‘நான் சொல்வது போல் செய். எல்லாம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லி விட்டார்” என்றான் வாசு.

அந்த மெஷினை சரி பண்ண முடியாமல், அதை ஓரமாக வைக்கச் சொல்லி விட்டார் சங்கரன். அதில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக முதலாளியிடம் நன்றாகத் திட்டு வாங்கினார் ரகுபதி. அதன் பிறகு அந்த மெஷினைப் பார்க்கும் போதெல்லாம் ரகுபதிக்கு அவமானமாக இருக்கும். அவருடைய தகுதியின்மைக்கு அத்தாட்சியாக ஒரு அவமானச் சின்னமாக அது அங்கே இருக்கிறது.

கோபுரம் போல் தோற்றமளிக்கும் அந்த மெஷினுக்குத் தான் இப்போது மாலை போட்டு கற்பூரம் காட்டியிருக்கிறான் வாசு. இது தன்னைக் கிண்டல் செய்வதல்லாமல் வேறென்ன? அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று மனதிற்குள்ளேயே புழுங்கிக்கொண்டு இருந்தார் ரகுபதி.

மானேஜர் சங்கரனிடம் சொல்லலாமா என்று யோசித்தார். அவர் வாசுவைக் கூப்பிட்டு விசாரிப்பார். அவன் அதற்கு புராணக்கதை அது இது என்று ஏதாவது வியாக்கியானம் சொல்லுவான். பிறகு அந்த பிரச்சினை ஒன்றுமில்லாமல் போய் விடும். நமக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு உரிய தீர்வு கிடைக்காது. முதலாளியிடம் சொல்லலாமா? அவரும் மானேஜரிடம்தான் விசாரிப்பார். என்ன செய்யலாம்?

அன்று முழுதும் ரகுபதிக்கு வேலையே ஓடவில்லை. மதியம் சாப்பாடு கூட வேண்டாம் என்று சொல்லி விட்டார். சாயந்திரம் வேலை முடிந்ததும் காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போகாமல் வேறு பாதையில் புறப்பட்டார். கொஞ்ச நேரம் நிம்மதியாக வெளியில் எங்காவது போய்விட்டு வரவேண்டும் என்று தோன்றியது. வழியில் பட்டாபியைப் பார்த்து அவனையும் காரில் ஏற்றிக் கொண்டார். கார் கடற்கரை நோக்கி ஓடியது.

கடற்கரை வந்ததும் பட்டாபியை ஓரிடத்தில் இறக்கி விட்டு, “இங்கேயே நில். காரை பார்க் செய்து விட்டு வருகிறேன்” என்றார் ரகுபதி.

வெகுநேரம் காத்திருந்தும் ரகுபதி வராததால் அவரைத் தேடிக் கொண்டு பட்டாபி சென்றான். பார்க்கிங்கில் இருந்த அவருடைய காரைக் கண்டு பிடித்தான். காரின் உள்ளே கண்களை மூடியபடி ரகுபதி உட்கார்ந்திருந்தார். கதவைத் திறந்து கொண்டு அவருக்குப் பக்கத்தில் அமர்ந்தான் பட்டாபி.

“சார்…” என்று அழைத்தான். ரகுபதி மெதுவாக கண்களைத் திறந்து அவனைப் பார்த்தார்.

“இந்தாங்க சார், இதைக் கொஞ்சம் ஊதுங்க” என்றான் பட்டாபி.

நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தார் ரகுபதி. அவன் கையில் ஒரு சிகரெட் பாக்கெட்.

“அந்த வார்த்தையைச் சொன்னதுக்கு தப்பா எடுத்துக்காதீங்க சார். புண்பட்ட மனத்தை புகை விட்டு ஆத்தனும்னு சொல்வாங்க. அதனால இதைப் பத்த வச்சு ஊதுனீங்கன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும் என்று அந்த சிகரெட் பாக்கெட்டை நீட்டினான்.

முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, “வேண்டாம்” என்றார்.

“ஏன் சார் பிடிக்காதா” என்று கேட்ட பட்டாபிக்குப் பதில் சொல்லாமல் வேண்டாம் என்பதற்கு அடையாளமாக தலையை மட்டும் ஆட்டினார்.

“கொஞ்சம் இருங்க சார், சாப்பிட ஏதாவது வாங்கிக் கொண்டு வருகிறேன்” என்று கதவைத் திறந்து வெளியே சென்றான் பட்டாபி.

அவன் போன பிறகு அவன் உட்கார்ந்த இடத்தைப் பார்த்தார். அந்த சிகரெட் பாக்கெட் அங்கேயே இருந்தது. அவருக்கு பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தது. சீட்டில் நன்றாக சாய்ந்து கண்களை மூடினார்.

சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அவர் விடக் காரணமாய் இருந்த சம்பவம் அவர் நினைவுக்கு வந்தது.

காலேஜில் அவர் படிப்பில் கெட்டிக்கார மாணவராக இல்லையென்றாலும், கல்லூரி வாழ்க்கை அவருக்குப் போரடிக்கவில்லை. அதற்குக் காரணம் அவருடன் படிக்கும் அவருடைய நண்பர்கள்தான். எப்போதும் விளையாட்டுத் தனமாகவும், இளமைக்கே உள்ள குறும்புத்தனத்தோடும் இருக்கும் அவர்களுடன் இருந்தால் மனம் முழுக்க உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

அவர்கள் எல்லோருமே புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்தான். அதனால் ரகுபதிக்கும் புகை பிடிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. திருமணம் ஆகும் வரைக்கும் ரகுபதிக்கு அந்தப் பழக்கம் இருந்தது. பிறகு மனைவிக்காக அந்தப் பழக்கத்தை விட்டு விட்டார். அதுவும் சாதாரணமாக மனைவி சொன்னதும் விட்டு விடவில்லை.

திருமணமான புதிதில் அவருடைய மனைவி கங்கா, அவரிடம் கொஞ்சலாக புகைப் பழக்கத்தை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டாள். அவர் மனைவிக்காக சரி என்று சொல்வது போல் சொல்லிவிட்டு, ‘ஆனால் திடீரென்று அந்தப் பழக்கத்தை விடமுடியாதே’ என்றார். அதற்கு கங்கா ஒரு உபாயம் சொன்னாள்.

‘சிகரெட் பிடிக்க வேண்டும் என்று எப்பொழுது தோன்றுகிறதோ, அந்த நேரத்தில் சாப்பிட ஏதாவது வாயில் போட்டுக் கொள்ளுங்கள். அதனால் கொஞ்ச நாட்களில் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் போய் விடும்’ என்று. கட் பண்ணிய ஆப்பிள் துண்டுகள், சிப்ஸ் என்று அவருடைய ஆபீஸ் பையில் வைத்து அனுப்புவாள்.

ஆனால் அவர் எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதைப் பார்த்த சிலர் அதையும் கிண்டலாக பேச ஆரம்பித்தார்கள். வேறு என்ன செய்யலாம் என்று மனைவியுடன் ஆலோசனை செய்தார். ‘வெத்திலை போடலாம் என்றால் ஆபீஸ் நேரத்தில் சரிப்படாது. சரி மூக்குப் பொடி போட்டுக் கொள்கிறேன். சரிதானே’ என்றார் ரகுபதி.

அவருடைய திட்டம் புரியாத ராஜம் எப்படியோ சிகரெட்டை மறந்தால் போதும் என்று சரி சொல்லி விட்டாள். ஆனால் நேரங்கெட்ட நேரத்திலெல்லாம் சர் சர்ரென்று பொடியை உறிஞ்சுவதும், அதே கையால் காபி டம்ளரை வாங்குவதும் வேறு பொருள்களை தொடுவதும் அவளால் சகிக்க முடியவில்லை. இந்த கண்றாவிக்கு சிகரெட்டே தேவலாம் என்று பொடியை விட்டு விடச் சொல்லி விட்டாள். இப்படிக் கெட்டிக்காரத்தனமாக மனைவியின் வேண்டுகோளுக்கு வேட்டு வைத்த அவர் தானே சிகரெட்டை விடும்படியான ஒரு நாளும் வந்தது.

கங்காவின் பிறந்த வீட்டு விசேஷத்துக்கு ஊருக்குப் போய்விட்டு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்கள். காலையில் கோவையிலிருந்து புறப்பட்ட வண்டி, ஏழே முக்காலுக்கெல்லாம் ஈரோடு வந்துவிட்டது. கங்காவின் அம்மா தயார் செய்து கொடுத்திருந்த டிபனை சாப்பிட்டு முடித்தார்கள். காலையில் சாப்பிட்ட உடன் சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் சிகரெட் இல்லை.

மரியாதை காரணமாக மாமியார் வீட்டில் சிகரெட் பிடிக்க மாட்டார். அதனால் கொண்டு போகவில்லை. அங்கே இருந்தவரை கடையில் போய்த்தான் பிடித்து விட்டு வருவார்.

அடுத்த ஸ்டேஷனில்தான் வாங்க முடியும். எப்போது சேலம் வரும் என்று காத்திருந்தார். எட்டரை மணி வாக்கில் சேலம் ஸ்டேஷனில் வண்டி நுழைந்தவுடன் எழுந்தார்.

“என்ன ஊதணுமா” என்ற மனைவிக்கு பதில் ஏதும் சொல்லாமல் வாசலுக்குச் சென்று, வண்டி நின்றவுடன் இறங்கினார். பிளாட்பாரத்துக் கடையில் ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி உடனே ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். அடுத்த சில நிமிடங்களில் வண்டி கிளம்ப தயாரானது. ஏறுவதற்கு வசதியாக வாசலில் நின்று கொண்டு சிக்ரெட்டைப் புகைத்தார்.

வண்டி கிளம்பியது. அதைப் பிடித்து ஏற முயன்றார். ஆனால் ஒரு கரம் அவரை ஏற விடாமல் தடுத்தது.

“ஹலோ, விடுங்க, வண்டி கிளம்பிறுச்சு” என்றார்.

“வண்டி போகட்டும். நீங்க வாங்க” என்ற குரலுக்குச் சொந்தமான ஆளை நிமிர்ந்து பார்த்தார். ரயி;ல்வே போலீஸ்.

“ஏன் சார் ஏற விட மாட்டேங்குறீங்க”

“இங்கே சிகரெட் பிடிக்கக் கூடாதுன்னு தெரியாதா”

“சாரி சார், தெரியாமல் செய்து விட்டேன். இனிமேல் இப்படிப் பண்ண மாட்டேன்”

“வாங்க ஸ்டேஷன்ல போய் பேசலாம்” என்று அவரை கூட்டிக் கொண்டு போனார்கள். வண்டி போவதையே பின்னால் திரும்பி பார்த்தபடி அவர்கள் பின்னால் நடந்தார். கங்கா வண்டியில் தனியாகப் போகிறாள். என்னைக் காணோம் என்று தவிப்பாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ஸ்டேஷனில் அபராதம் கட்டச் சொன்னார்கள். அபராதம் கட்டினார். பணம் போனால் பரவாயில்லை. ஆனால் பயணத்தில் தடை ஏற்பட்டு விட்டதே. மனைவிக்குப் போன் செய்து நடந்த விஷயங்களைச் சொன்னார். தான் அடுத்த ரயிலைப் பிடித்து வந்து விடுவதாகவும் அவளை வீட்டுப் போய் விடும்படியும் சொன்னார். ஆனால் அவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த பின்பும் கங்காவின் கோபம் குறையவில்லை.

மனைவியை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அவள் அவருடன் பேசவில்லை. இனிமேல் சிக்ரெட்டைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்து பலவிதமாகவும் மன்றாடிய பிறகே அவள் அவரை மன்னித்தாள். அன்றிலிருந்து சிகரெட்டை மனதாலும் நினைத்துப் பார்ப்பதில்லை.

(தொடரும்)

Series Navigationசவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *