தமிழாய்வுத்துறைத் தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
புதுக்கோட்டை-1
E-mail: Malar.sethu@gmail.com
மனித வாழ்க்கை பொருளை மையமிட்டதாக அமைந்துள்ளது. பொருள் இல்லையென்றால் வாழ்க்கை என்பது பொருளற்றதாக மாறிவிடுகின்றது. வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவது பொருளே ஆகும். பொருளுள்ளவர்கள் சமுதாயத்தில் வலிமையுள்ளவர்களாக விளங்குகிறார்கள். பொருளற்றவர்கள் வலிமையிழந்து சமுதாயத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுப்பின் அடையாளமிழக்கின்றார்கள். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி, வழிப்படுத்தி மனத்தில் வலுவாக வாழ்வில் நம்பிக்கை கொள்ள வைப்பது பொருளே ஆகும். அரசன் முதல் கீழ்நிலையில் வாழும் கடைக்கோடி மனிதன் வரை உலகில் வாழ்வதற்குப் பொருளே ஆதாராமாக அமைந்திலங்குகின்றது.
பொதுமறையாம் திருக்குறள் உலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழ்வியல் நெறிகளை வகுத்துரைத்துள்ளது. அதிலும் குறிப்பாக மனிதன் பொருளீட்டி எவ்வாறு அறவழியில் வாழ வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. திருக்குறளில் பொருளின் தன்மையும் பொருளீட்டும் முறைகளும் அவற்றைத் திட்டமிட்டுச் செலவு செய்யும் முறைகளும் எடுத்துரைக்கபட்டுள்ளது. குறள் கூறும் பொருளியல் சிந்தனைகள் இன்றளவும் வழிகாட்டும் பொருளியல் நெறிகளாக உள்ளன.
பொருளின் தன்மை
பொருள் மனிதனுக்கு மதிப்பைத் தருகின்றது. சமுதாயத்தில் பொருள் படைத்த மனிதர்களையே மதிக்கின்றனர். பொருள் இல்லாதவர்களை யாரும் மதிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. “இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்” என்பது நமது முன்னோரின் பொன்மொழி. பொருள் சேர்ந்தாரை உயர்வடையச் செய்கின்றது. ஒன்றுமே இல்லாத மனிதர்களையும் ஒரு பொருட்டாக மதிக்கின்ற அளவிற்கு உயர்த்தும் தன்மை கொண்டதாக விளங்குகின்றது. பொருளின் இத்தகைய தன்மையினை,
“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்”(751)
என்று திருக்குறள் குறிப்பிடுகின்றது. பொருள் இருப்பவனையே இவ்வுலகம் மதிக்கும். பொருள்வளம் இல்லாதவனை, அவன் நல்ல பண்புள்ளவனாக இருந்தாலும் அவனை அனைவரும் இழிவாக நடத்துவர். அதனால் பொருளின் அருமை அறிந்து அனைவரும் நல்வழியில் பொருளீட்ட வேண்டும் என்பதை,
“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு”(752).
என்ற குறள் தெளிவுறுத்துகிறது.
பொருள் வறுமை எனும் இருளை அகற்றும் வல்லமை கொண்டது. எந்த இடத்திற்கும் சென்று அங்குள்ள வறுமையை ஒழித்துவிடும் தன்மை பொருளுக்கு உண்டு. மனிதனின் வாழ்வை அணையாமல் காக்கக் கூடிய விளக்காகப் பொருள் இருக்கின்றது. அதனால் பொருளின் தன்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்தல் வேண்டும் என்பதை,
“பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று” (753)
என வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.
மேலுலகும் இவ்வுலகும்
பொருளைப் பிறருக்குக் கொடுத்து ஒரு மனிதன் அருளைப் பெறமுடியும். ஆனால், பொருளற்ற ஒருவன் தம் வாழ்க்கையை நடத்த இயலாது எனும்போது அருள் வாழ்க்கை அவனுக்கேது? தனிமனித வாழ்விற்கும், சமுதாய நிலைப்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியத்தேவை பொருளாதாரப் பெருக்கமாகும். பிறவிப் பயனும், இப்பிறவியில் நாம் செய்யவேண்டிய கடமைகள் என்ன என்பன பற்றிப் பல குறள்களில் பேசியுள்ளார். பொருள்தனைப் போற்றிவாழ் எனும் கூற்றுக்கேற்பக் கிடைத்த பொருளினை வைத்துக் காத்து வாழ வேண்டும்” என்கின்றார். நேர்மையான வழிகளில் பொருள் தேடி அதனை நன்முறையில் அனுபவித்து வாழவேண்டும்.
“அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”. (247)
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
பொருளீட்டும் முறை
பொருளற்றவரை இச்சமுதாயம் ஒருபோதும் மதிப்பதில்லை என்பதால் பொருள் நிறையச் சேர்க்க வேண்டும் எனும் எண்ணமுள்ள மக்களுக்கு வள்ளுவர் சில விதிமுறைகளை வகுத்துத் தருகின்றார். நேர்மையான வழிகளன்றி தீயவழிகளில் ஒரு போதும் செல்வத்தைச் சேர்த்தல் கூடாது. அதனைக் கட்டாயம் நீக்கிவிட வேண்டும்.
கருணையுடனும், அன்புடனும் நேர்வழியில் பொருளைச் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு வரக்கூடிய செல்வம் மேலும் மேலும் வளரும். கருணைக்கும், அன்புக்கும் எதிராக இரக்கமின்றிப் பிறரை வருத்திச் சேர்க்கும் செல்வம் நிலைக்காது அழிந்துவிடும். அதோடுமட்டுமல்லாமல் அது வளர்வதைப் போன்று வளர்ந்து இல்லாமலாகிவிடும். பெருங்கேட்டினைக் கொணர்ந்துவிடும் தன்மை கொண்டது. அதனால் அறவழியில் வராத பொருளை விரும்பாது, அப்பொருளால் தீமையே வரும் என்று எண்ணி அதனை வேண்டாம் என்று ஒதுக்கிவிட வேண்டும். இத்தகைய பொருளீட்டும் முறையினை,
“அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்” (755)
என்ற குறள் வழி வள்ளுவர் எடுத்தியம்புகிறார். அன்பின் வழியாலும், அருளின் வழியாலும் ஒரு மனிதன் சேர்த்து வைக்காத பொருளானது அம்மனிதனுக்கும் அவன் வழித்தோன்றலுக்கும் தீராத துன்பத்தைத் தரும்.
நேர்வழியில் பொருளீட்ட வேண்டும். அதுவே அறத்தையும் இன்பத்தையும் தரும். பிறரை வருத்தாமல் வரும் பொருளால்தான் இன்பம் கிடைக்கும். அதுவும் நிலைத்த இன்பமாக இருக்கும். நல்வழியில் சேர்த்த பொருளால் மட்டும்தான் நல்ல அறச் சிந்தனைகள் உருவாகும். அதனால் அறந்தழைக்கும். அதனால் நேரிய வழியில் பொருளீட்ட வேண்டும் என்ற அறநெறியை,
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்” (754)
என்ற குறள் நமக்கு எடுத்துரைக்கின்றது. நேர்வழியில் வந்த பொருளானது அன்பினையும், அறத்தினையும் வளர்க்கின்றது. தீய வழியில் சேர்க்கப்பட்ட பொருள் அன்பினையும், அறத்தினையும் இழக்கச் செய்கின்றது. பிறரின் அழிவிலும்! அழுகையிலும் பெற்ற பொருளை வெறுத்தொதுக்குதல் வேண்டும். அதுவே பொருளீட்டும் முறையில் தலைசிறந்தது.
அரசனுக்குரிய பொருள்களும்
பொருளாதாரத்தின் நிலையினைத் தனிமனிதன், குடும்பம், சமுதாயம், நாடு எனப் பல நிலைகளில் திருக்குறள் தெளிவுறுத்துகிறது. பொருளற்றவனை அரசனாக இருந்தாலும் சராசரியான மனிதனாக இருந்தாலும் உலகோர் மதிப்பதில்லை. அனைவரையும் மதிப்பிற்குள்ளாக்குவது பொருள். அறிவால் இழிந்த ஒருவனும் அவையில் பேசப்பட பொருளே காரணமாக அமைகின்றது. வாழ்வின் இருளைப் பொருள் அகற்றுகின்றது. பகை நாட்டிலிருந்து வரியாக வந்தபொருள், திறைப்பொருள் போன்றவை அரசனுக்கு உரியவையாகும். இதனை,
“உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்” (756)
என்று திருக்குறள் எடுத்தியம்புகிறது.
ஒருவனின் பிறப்பு முதல் இறப்பு வரை செல்வம், செல்வந்தன், செல்வாக்கு எனச் சென்று கொண்டே இருக்கின்றது. ஆகவே நீ பொருளைச் செய். அதுவே உன் பகைக்கு, பகைவருக்குப் பயந்தோடச் செய்யும் ஆயுதம். அதனைக் காட்டிலும் கூரியது, வலிமைமிக்கது வேறொன்றுமில்லை என்பதை,
“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்” (குறள் 759)
என்று திருக்குறள் எடுத்துரைக்கின்றது. இது அரசனுக்கு மட்டுமல்லாது குடிமக்களுக்கும் மிகவும் பொருந்தும் தன்மை கொண்ட நெறியாகும்.
பொருளைச் செலவு செய்யும் முறை
பொருளைத் தேடுவதைப் போன்றே அதனைச் செலவு செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். மனம்போன போக்கில் பொருளைச் செலவு செய்தால் அதனால் செல்வம் தேய்ந்து வறுமையுற நேரிடும். தன்னுடைய வருவாயை அறிந்து அரசனோ, குடிமக்களோ செலவு செய்தல் வேண்டும். வரவுக்கு மீறி செலவு செய்தால் நாடும் வீடும் அழிவைச் சந்திக்க நேரிடும். அதனால் வரவறிந்து செலவு செய்து வாழ்க்கையை நடத்துதல் வேண்டும். இதனை,
“ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை”(478)
என்ற திருக்குறள் எடுத்துரைக்கின்றது.
பொருள் வரும் வழி சிறியதாக இருந்தாலும் செலவு செய்யும் வழி அகலமாக இருத்தல் கூடாது. அதாவது செலவினை அதிகம் செய்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் வாழ்வில் எந்தவிதமான துன்பமும் வராது. வருவாய்க்குள் செலவு இருத்தல் வேண்டும் அது அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் என்று இத்திருக்குறள் நமக்குப் பொருளைச் செலவு செய்யும் முறையினை தெளிவுறுத்துகின்றது. இது எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் எம்மக்களுக்கும் பொருந்தும் நெறியாகும் என்பது நோக்கத்தக்கது.
நாடு முன்னேற வேண்டுமானால் நாட்டை ஆள்வோர் திட்டமிட்டுப் பொருளீட்டிச் செலவு செய்தல் வேண்டும். பொருள் வருவாய் வழி அறிந்து அப்பொருளை ஈட்டுவதற்கு உரிய திட்டத்தை வகுத்தலும், பின்னர் திட்டத்தின்படி பொருளை ஈட்டுவதும், ஈட்டிய பொருளைப் பெருக்கி வளர்த்தலும் அதனைக் காத்தலும் ஆகிய பல்வேறு திறமைகளை உடையவனாக அரசன் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் அரசனால் நாடும், மக்களும் அளப்பறிய பயன் பெறுவர். இத்தகைய அரிய பொருளியல்ச் சிந்தனையை,
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு” (385)
என்று வள்ளுவர் மொழிகின்றார். இச்சிந்தனை திட்டமிடல்(Planning& Management) செயலை அடிப்படையாகக் கொண்டிலங்குகின்றது.
பொருளியல் மேலாண்மை
முயன்று பொருள் தேட வேண்டும். முறையாகத் தேட வேண்டும். அவ்வாறு தேடப்பட்ட பொருள் சிக்கனமாகப் பயன்படுத்தப்படவும் வேண்டும். சிக்கனம் இழந்த குடும்பம் பொருளாதாரத்தால் நலிவடையும். நாடு தன் வலுவிழக்கும். உலகத்தால் இழிவாகப் பேசப்படும் நிலையும் வரும்.
“ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி” (குறள் 477)
கொடுப்பவர், பெறுபவர் இருவருடைய தன்மையையும் கருத்தில் கொண்டு பொருள் வழங்கல் வேண்டும். அவ்வாறு கடைப்பிடிக்காதவன் வாழ்க்கை இருப்பதுபோல் இருந்து இல்லாமல் விரைவில் போய்விடும்.
“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்” (குறள் 479)
என்பது குறள்.
பொருளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். பொருளைப் பேணி அதனைப் பெருக்குதல் வேண்டும். அது பொருள் நிலைக்கும் வழியாகும். அவ்வாறு வருவதையும் செலவு செய்வதையும் மேலாண்மை செய்யாது விட்டுவிட்டால் பொருள் நமக்குரியதாக இருக்காது. இத்தகைய பொருளியல் மேலாண்மைச் சிந்தனையை,
“பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு” (252)
என்ற குறள் நமக்கு எடுத்தியம்புகின்றது. இறைவன் அருள் வேண்டும் எனில் பிற உயிர்களைக் கொல்லாது அதன் ஊனை உண்ணாது இருத்தல் வேண்டும். பொருள் வேண்டும் எனில் அதனை முறையாகக் கையாண்டு பேணி வளர்த்து மேலாண்மை செய்தல் வேண்டும் என்ற அரிய பொருளியல்ச் சிந்தனையை இக்குறள் வழி நமக்கு வள்ளுவர் வழங்குகின்றார்.
பொருளின் பயன்
நாம் தேடிய செல்வத்தைப் பிறருக்கு ஈத்துவக்கவேண்டும். ஈத்துவக்கும் இன்பமே வாழ்வின் பெரும் பேரின்பமாகும் என்கிறது வள்ளுவம். மேலோர் பொருளை ஈட்டுதல் பிறர் திறத்துப் பயன் படுத்தற்பொருட்டாகும் (பர்தருஹரி – 41). அறவழியில் தேடிச் சேர்த்த பொருள், அனைவருக்கும் பரவலாக்கப்பட வேண்டும். பொருள் ஓரிடத்தில் குவிவதால் மட்டும் பலன் ஏற்படுவதில்லை. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் எனப் பொருளை அனைவரிடத்திலும் சென்று சேரும் வகையில் பரவலாக்க வேண்டும்.
முறையாக நாம் சேர்த்துவைத்த பொருள் யாவும் நம்மைச் சார்ந்தவர்க்கும் நம்மைச் சார்ந்த சமுதாயத்தினருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை,
“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள் 212)
என்று திருக்குறள் தெளிவுறுத்துகிறது.
திருக்குறள் காட்டிய வழியல் பொருளை ஈட்டி, அதனைப் பாதுகாத்து, வரவறிந்து செலவு செய்து, நாட்டையும் நமது வீட்டையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வோம். குறளின் பொருளியல்ச் சிந்தனை எக்காலத்திற்கும் பொருந்தும் பொருளியல்ச் சட்டமாக அமைந்திலங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
————————————–
- புறநானூற்றில் மனிதவள மேம்பாடு
- மிருக நீதி
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
- நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்
- மிதிலாவிலாஸ்-20
- தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்
- பரிசுத்தம் போற்றப்படும்
- “என்னால் முடியாது”
- அந்தப் புள்ளி
- ஒலி வடிவமில்லாக் கேள்விகள்
- எழுத நிறைய இருக்கிறது
- ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ்
- வடு
- தங்கராசும் தமிழ்சினிமாவும்
- திருக்குறள் உணர்த்தும் பொருளியல்ச் சிந்தனைகள்
- சும்மா ஊதுங்க பாஸ் – 3
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7
- விளம்பரமும் வில்லங்கமும்
- பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்