முனைவர் சு.மாதவன்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை 622001
உலக உயிர்களிலேயே தன்னையும் மேம்படுத்திக் கொண்டு தன் சமூகத்தையும் மேம்படுத்தும் உயர்த்தும் ஒரே உயிரினம் மனித இனமாகும். இந்த இனம் வெறும் உயிரினம் மட்டுமன்று; மாறாக – சிறப்பாக – மனித இனம் ஓர் உயரினம் (உயர் இனம்). எனவேதான், தமிழ்ச் சான்றோர் மனிதனை ‘உயர்திணை’ என்றனர்.
இத்தகைய நோக்குநிலைப் பின்னணியில், மனிதன் தன் இயல்பு வளத்தையும் இயற்கைவளத்தையும் படைப்பாளுமையோடு கைக்கொண்டு மனித வாழ்வியலை வளப்படுத்தி மேம்படுத்துவதே மனிதவள மேம்பாடு எனலாம்.
அத்தகைய, மனிதவள மேம்பாட்டுச் சிந்தனைகள் புறநானூற்றில் நிறைந்திருப்பதை இந்த உரை சிறிதே கோடிட்டுக் காட்ட விழைகிறது.
மனித வள மேம்பாடு
மனிதன் ஓர் இயற்கை: அவனது வாழ்வியல் பின்னணிகளெல்லாம் ஒவ்வோர் இயற்கை. மண், செடி, கொடி, பூ, மரம், காய், கனி, விலங்கு, பறவை என உலகத்து இயற்கையனைத்தையும் நிற்பன, ஊர்வன, பறப்பன, நடப்பன என நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். அவற்றின் அறிவு வகைகளுக்கேற்ப,
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” (தொல்.பொருள்.571)
என்று தொல்காப்பியம் ஆறுவகையாக வரையறுத்துள்ளது. இந்த அறிவு வரையறை, உயிர்களின் அறிவாளுமைப் பண்புகளின் அடிப்படையில் படைப்பாளுமையுடைய ஒரே உயிராக உயிரியாக விளங்குபவன் மனிதன். எனவே, பிற உயிருள்ளன, உயிரற்றன அனைத்தையும் பயன்படுத்திப் புதியன படைக்கிற சிந்தனை வளமும் ஆற்றல் வளமும் கொண்ட மனிதனின் வளமே மனிதவளம் எனப்படுகிறது. மனித வள மேம்பாடு என்பது தன் வளத்தால் பிறர் வளத்தையும் மேம்படுத்தி நலத்தை விளைவிப்பது.
மனித வளம் என்பது மனிதனின் வளம், மனிதனுக்கான வளம் என்ற இரண்டின் ஒருங்கிணைந்த வளம் எனக் கொள்ளலாம். மனிதன் பயன்படுத்தும் மனிதனல்லாத பிற வளங்கள் எல்லாம் மனிதனுக்கான வளங்களாகும். இந்த மனிதனுக்கான வளங்களைத் தன் படைப்பாளுமை – ஆற்றலால் புதியன படைக்கும் ஆற்றலே மனிதனின் வளம் ஆகும். இந்த நோக்கின் அடிப்படையிலும் மனித குல வரலாற்றின் அடிப்படையிலும் மனித வாழ்க்கையை வளப்படுத்திய முப்பெருங் கூறுகளாகத் திகழ்பவை உழைப்பு, மொழி, கல்வி என்பவை. ஒத்திசைவால் உருவான மனித வாழ்வின் இருபெரும் பகுதிகளாக ஒளிர்பவை பண்பாடு. நாகரீகம் என்பன. ஆக, உழைப்பும், மொழியும், கல்வியும் ஈன்ற பண்பாடும் நாகரீகமுமே மனிதவள மேம்பாட்டுக் காரணிகள் எனலாம்.
எனவே, மனித வளங்கள் என்பன உழைப்பு, மொழி, கல்வி ஆகியனவாகும் மனிதவள மேம்பாடு என்பது அவற்றின் விளைச்சல்களான பண்பாடும் நாகரீகமும் என வரையறுக்கலாம்.
இவற்றைத் தமிழ் இலக்கிய – இலக்கண வரையறைப்படிக் காணவேண்டுமென்றால், மனித வளம்மேம்பாட்டிற்கான அடிப்படைகளாக அறம், பொருள், இன்பம் ஆகியவை திகழ்க்கின்றன.
மனிதவள மேம்பாடு – கருத்துக்கள், கொள்கைகள் கோட்பாடுகள்
மனிதவள மேம்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பணிமேம் பாட்டுக்கான ஆற்றல்களின் ஒருங்கிணைவைக் குறிக்கிறது. அவை முறையே, அறிவு, திறன்கள், படைப்பாற்றல் கூறுகள், நடத்தைகள், விழுமியங்கள், நம்பிக்கைகள் ஆகியனவாகும் (இணையதளப் பதிவு, ர்சுனு). ஒரு முழுமனிதனுக்குள் இயங்கும் சமூக, பொருளாதார, உளவியல் வளங்கள் அனைத்தும் மனிதவளங்கள் எனப்படும். இவ் வளங்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தகைமையன.
ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் செயல்படும் சமூக நிறுவனத்தையோ தொழில் நிறுவனத்தையோ மேம்படுத்துவதற்காக அவனது படைப்பாளுமையிலிருந்து உருவாக்கிக்கொள்ளும் திறன்கள் அனைத்துமே மனித வளங்கள் எனக்காள்ளத்தகுவன. இத்தகைய படைப்பாற்றல் திறன்களின் வெளிப்பாட்டுக் கூறுகளான
• உழைப்பு
• மொழி
• கல்வி
இம் மூன்றும் மானுட சமூகத்தின் தேவைகளை நிறைவுசெய்வதற்காக மனிதர்களின் கூட்டுழைப்பினால் உருவானாவை: இயங்குபவை. இவை மூன்றும் பிற உயிரினங்களிடமிருந்து மனிதரை வேறுபடுத்திக் காட்டும் சிறப்பியல்புகளாகும். இவற்றை ஒருங்கிணைக்கும் ஆற்றலே படைப்பாளுமை என்பதாகும். எனவே, மனிதர்களின் படைப்பாளுமையால் வளரும் உழைப்பால், மொழியால், கல்வியால் நிறைவேறும் செயல்திட்டத்தையே மனிதவள மேம்பாடு என்கிறோம்.
இத்தகைய மனிதவள மேம்பாட்டுக் கூறுகளால்தான் சமூக இயங்கியலின் எல்லா மாற்றங்களும் ஏற்றங்களும் நடந்தேறுகின்றன. இவை நாகரீகம், பண்பாடு எனும் வெளிப்பாட்டுக் கூறுகளாக இயல்கின்றன என்பதும் தெளிவாகிறது
மனிதவள மேம்பாட்டுக் கூறுகள் – தருக்க இயைபு
• வயிற்றுப் பசியால் உணவுத் தேடலும் உழைப்பும் நிகழ்கின்றன.
• கூட்டுழைப்பால் மொழியும் கலை இலக்கியமும் விளைகின்றன.
• மேற்சொன்ன இரண்டு பன்முகப் பொருண்மைகளின் வரலாற்று உறழ்வால் கல்வி முகிழ்க்கிறது.
• கல்வியால் பண்பாடும் நாகரீகமும் செழிக்கிறது.
• இவை அனைத்தினதுமான ஒருங்கிணைவால் மனிதவளம் பெருகி, மிளிர்ந்து, ஒளிர்ந்து நெறிகாட்டுகிறது.
மனித வளம் தொடர்புடைய சொற்களின் பதிவுகள்
மனிதர் – இனி. நா. 25 – 4 – முதல் பதிவு இது மட்டுமே
வளம் – தொல். ஐஐஐ – 88 – 5
புறம். 29 – 16, 203 – 2, 248 – 3, 371 -24, 391 – 4 (5)
கல்வி – தொல். ஐஐஐ – 186 – 1, 253 – 1
கல்வியெ னென்னும் வல்லாண் சிறாஅன் – புறம். 346 – 3
கலை – தொல். ஐஐஐ – 546 – 2, 590-1, 591-1,
புறம். 28 – 18, 116 – 11, 12, 152 -3, 161-11, 166 -11
266 -11, 236 -1, 320-5,7, 347 -7.
காட்சி – தொல். ஐ – 83, 101, ஐஐஐ -18 -1, 63 – 19, 88 -4,
105 -4, 111-2, 591-1, 656-1.
புறம். 170 – 3, 192 – 11, 210 -2, 213 – 6, 15, 214 -2, 236 -11
பள்ளி : தொல் – ஐ – 100, 102
புறம். 33 – 20, 246 – 9, 375 – 3
படைப்பு : புறம். 22 – 30, 188 – 1
புறநானூற்றில் மட்டுமே இச்சொல் இடப்பெற்றுள்ளது – படைப்பு என்பது சமூக நடவடிக்கை என்பதால் இருக்கலாம்.
பிறப்பு : தொல் -ஐ 101, 102…………….
புறம். 183 – 3, – ஓரிடத்தில் மட்டும் வந்துள்ளது.
மொழி : தொல். ஐ – 36, ………..
புறம். 10 – 2, 25 – 5, 34 – 13, 54 –9, 58 – 27, 85 – 5,
122 – 8, 151 – 9, 158 -12, 178 – 9, 206 – 2, 209 – 16,
239 – 18, 366 –9, 369 – 3, 376 – 22, 394 – 5.
மொழியர் : புறம். 366 – 6, புறநானூற்றில் மட்டுமே வந்துள்ளது
மொழியலன்: புறம். 138 – 7, 239 -6, 149 – 3,
மொழிவோர் : புறம். 377 – 21(2), 22(2)
விழுமம் : தொல். ஐஐ – 353 -1, ஐஐஐ – 42 – 3, 144 – 45, 231 – 1.
புறம். 53 – 4, 180 – 3, 281 – 8.
உழை : தொல். ஐஐ – 83 -1, ஐஐஐ – 169 – 1, 556 – 1
581 – 1, 584 – 11, 591 – 1, 602 – 1.
புறம். 105 – 5, 236 – 6, 161 – 12.
(தரவு : ஐனெநஒ னநள அழவள னநடய டவைவநசயவரசந வயஅழரடந யnஉநைnநெ எழட.ஐஇ ஐஐஇ ஐஐஐ ஐளெவவைரவ குசயnஉயளை னு’ iனெழடழபநைஇ Pயனெiஉhநசல 1967இ 1968இ 1970)
புறநானூறு (திணை அடிப்படை) ஆட்சி
வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வாகை காஞ்சி
பொதுவியல் திணை
மனித வளம்
பாடாண் திணை
திணை வளம்
ஒழுக்கம் விளைவு
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள மனிதவள மேம்பாட்டுக் கூறுகளை அவற்றின் உள்ளியங்கு ஆற்றல்களான உழைப்பு, மொழி, கல்வி எனும் மூன்று தளங்களில் பின்வருமாறு பகுக்கலாம்:
1) உழைப்பு : நீர்வளம் – உணவு வளம், தொழில்வளம், படைப்பாற்றல்
(செயல்வளம்) வளம், ஆளுமை வளம், ஈகை வளம், விருந்தோம்பல்
பண்பு வளம்.
2) மொழி : சொல்வளம், கருத்துவளம்
(சிந்தனைவளம்)
3) கல்வி : கல்வி வளம், படைப்பாற்றல் வளம், ஆளுமை வளம்,
(சிந்தனைவளம்) தொழில்வளம், ஈகை வளம்.
1) உழைப்பு (செயல்வளம்)
வயிற்றுப் பசிக்கான உழைப்பு உணவுத்தேடல் வேட்டை, வேளாண்மை, வணிகம், தொழில் நுட்பம் என வந்து சேர்ந்திருக்கிறது.
“நீர்இன்று அமையா வாழ்க்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
………………………………………………..”
எனவே,
“தட்டோர் அம்ம இவண்தட் டோரே
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே” (புறநா.18)
என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல்.
இப்பாடல், உலகத்து உயிர்களின் பசிப்பிணி தீர்க்கும் உழைப்பின் மேன்மையைப் போற்றுகிறது. உழைப்பின் வழிப்பெறும் பொருளை,
“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே”
என்னும் உயர்வாழ்வு வாழ்ந்த தமிழர்,
“தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே” (புறநா.182)
எனும் உயர்சிந்தனையை உலகுக்களித்தனர்.
உழைப்பின்வழி விளைவது ஆளுமை. இத்தகைய ஆளுமை வளமேம்பாட்டை,
“ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே” (புறநா. 196)
என்று கொண்டு வாழ்ந்தனர் தமிழர்.
இத்தகைய பின்னணியில், உலக உயிர்களின் பசிப்பிணிநீக்க வேளாண்மை பெருக்குதல், விளைச்சலைப் பகிர்ந்துண்ணல் என ஆளுமை மேம்பாட்டை பெறுவதற்கு அடிப்படையாக விளங்குவது தொழில்வளம் பெருக்குதலாகும். இதையும்,
“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” (புறநா. 312)
என்ற பாடல், வேலைப்பிரிவினையின்;வழிப் போரைக்கூட எதிர்கொண்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ்ந்துள்ளது என்பதை அறியத் தருகிறது.
2. மொழி (சிந்தனை வளம்)
உணவுத் தேடல் கூட்டுழைப்பாக மாறிய காலகட்டத்தில் கருத்துப் பகிர்வின் விளைவாய் சைகை, ஒலி, சங்கேதம் என வளர்ந்து மொழி தோன்றியது. மொழியின் வளர்ச்சிக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பெருந்துணைபுரிவன புதிய கலைக்சொல்லாக்கங்கள் ஆகும். இத்தகைய சொல்லாக்கங்களைப் புறநானூற்றில் மிகுதியாகக் கண்டறிய இயலும். இங்கு சில சொற்கள் சுட்டப்படுகின்றன:
1) தமிழக் கூத்தனார், 2) வாணிகப் பரிசிலன், 3) பசிப்பிணி மருத்துவன், 4)பசிப்பகைப் பரிசில், 5) விழுத்திணை.
இவற்றில், ‘விழுத்திணை’ என்னும் சொல் கூர்ந்து ஆழ்ந்து ஆராய்ந்து இரசிக்கத்தக்கது. தமிழில் அகத்திணை, புறத்திணை என்ற இரண்டும் விழுத்திணையாய்த் திகழ்தல் வேண்டும் என்பதைப் புறநானூற்றுச் செய்யுள்கள் (இரண்டு) விளக்குகின்றன (புறநா. 24, 183). உயர்ந்த பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த வாழ்வியலை ‘விழுத்திணை’ என்னும் சொல் விளம்புகிறது.
மனிதர்களுக்குள்,
“வேற்றுமை இல்லா விழுத்திணை” (புறநா. 183)
வாழ்வியல் வளரவேண்டும் என்பது சிறந்த மனிதவள மேம்பாட்டுச் சிந்தனை அல்லவா?
3. கல்வி (சிந்தனை வளம்)
உழைப்புவழி உணவும் மொழியும் விளைந்தன. உழைப்பும் மொழியும் இணைந்து கல்வியை விளைத்தது. இந்தக் கல்விதான் எல்லாவற்றையும் விளைத்தது. இத்தகைய கல்வி தரும் சிந்தனை வளம்தான் மனித வள மேம்பாட்டை வளர்க்கிறது. அதன்வழிச் சமூக மேம்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
புறநானூற்றுக் காலத்தில் ஆரியப் பண்பாட்டுக் கூறுகள் தமிழ்ச் சமூகத்தில் கலந்தன. கல்வி என்பது சிறுபான்மையான உடல் உழைப்பற்ற மூளையுழைப்பால் ஏமாற்றிப் பிழைப்போர்க்கு மட்டுமே உரியதாக இருந்தது. வர்ணாசிரமதர்மமுறை தந்த முறையற்ற முறை இது. இதைப் புறநானூற்றுப் புலவராகவும் இருந்த பாண்டிய நெடுஞ்செழியன் என்னும் அரசன் எதிர்த்துப் பாடியுள்ளான்:
“வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” (புறநா.398)
எல்லோருக்கும் உரியது கல்வி மட்டுமல்ல, உழைப்பும் தான். எனவே, உழைப்பின்வழி விளைந்த உணவுப்பொருள்கள் எல்லாம் பகிர்ந்துண்ணு வதற்குரியவை ஃ கொடுத்துண்ணுவதற்குரியவை என்ற மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையைத் தமிழர் பெற்றிருந்தனர். இதை,
“பெற்றது மகிழ்ந்தும் சுற்றம் அருத்தி
ஒம்பாது உண்டு கூம்பாது வீசி” (புறநா.47)
“பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே” (புறநா.181)
“பசிப்பிணி மருத்துவன் இல்லம்” (புறநா.173)
“உண்படாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்” (புறநா.95)
போன்ற செய்யுள்கள் சிறப்பாக எடுத்துரைத்துச் சிறப்பிக்கின்றன.
ஈகை மட்டுமன்றி, வாய்மை, பொய்யாமை நன்மை செய்தல் என்ற பண்பாட்டு வளங்களும் மனிதவள மேம்பாட்டுச் சிந்தனைகளாகப் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன.
வாய்மை
“பீடில் மன்னர் புகழ்ச்சி வேண்டிச்
செய்யாக் கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று என்சிறு செந்நாவே” (புறநா.148)
பொய்யாமை
“வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன் மெய்கூறுவல்” (புறநா.139)
நன்மைசெய்தல்
“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது: அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே” (புறநா.195)
“பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே” (புறநா.197)
197வது பாடலின் புறநானூற்றுத் தொடர்,
“பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்”
என்ற கலித்தொகைப் பாடலடியை ஒத்ததாகும்.
முடிவுகளாக …
1. ஆறறிவதுவே… படைப்பாற்றல் என்பதைப் புறநானூறு தெளிவுபடுத்துகிறது. இத்தகைய படைப்பாற்றல் வழியாக மனித வள மேம்பாட்டுச் சிந்தனைகள் விளைகின்றன.
2. அகத்திணையின் முதல், கரு, உரிப்பொருள்களும் புறத்திணையின் அரசு, சமூகம், உலகியல்களும் மனிதனை உயர்திணையாக்கும் மனிதவள மேம்பாட்டுக் கூறுகளாகத் திகழ்கின்றன.
3. புறத்திணையைப் பொருத்த அளவில், மனிதவள மேம்பாட்டுச் சிந்தனைக் கூறுகளாக உழைப்பு, மொழி, கல்வி ஆகியன விளங்குகின்றன.
4. புறத்திணை வாழ்வியல் விழுத்திணை வாழ்வியலாக அமைதல் வேண்டும் என்பது புறநானூற்றுப் புலவர்களின் மனிதவள மேம்பாட்டு நோக்குநிலையாக அமைந்துள்ளது.
செம்மொழிப் பயிலரங்கம் – 08.02.2015
கணேசர் கலை அறிவியல் கல்லூரி
மேலைச்சிவபுரி – புதுக்கோட்டை மாவட்டம்
- புறநானூற்றில் மனிதவள மேம்பாடு
- மிருக நீதி
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
- நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்
- மிதிலாவிலாஸ்-20
- தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்
- பரிசுத்தம் போற்றப்படும்
- “என்னால் முடியாது”
- அந்தப் புள்ளி
- ஒலி வடிவமில்லாக் கேள்விகள்
- எழுத நிறைய இருக்கிறது
- ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ்
- வடு
- தங்கராசும் தமிழ்சினிமாவும்
- திருக்குறள் உணர்த்தும் பொருளியல்ச் சிந்தனைகள்
- சும்மா ஊதுங்க பாஸ் – 3
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7
- விளம்பரமும் வில்லங்கமும்
- பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்