கணையாழியும் நானும்

This entry is part 16 of 24 in the series 7 ஜூன் 2015

வே.சபாநாயகம்.

kanaiyazhi1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப் பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு ஒரு நண்பர் மூலம் அறிமுகமாயிற்று. ஆனால் கணையாழி 10 மாதங்கள் கழித்துதான் பார்க்கக் கிடைத்தது. அப்போதே நான் பல இலக்கிய சிற்றேடுகளுக்கு சந்தா கட்டி வரவழைக்கும் ஆர்வமுடையவனாக இருந்தேன். அதற்கு முன்னோடியாகத்தான் தீபமும், கணையாழியும் என் சேகரிப்பில் வந்தன. இவை இரண்டும்தான் எனக்கு இலக்கிய உலகின் நான் அறியாத சாளரங்களைத் திறந்து விட்டன. தீபம் முழுக்க முழுக்க இலக்கியம் என்றால் கணையாழி ஆரம்பத்தில் அதன் ஆசிரியக் குழுவினரின் அரசியல் ஈடுபாடு காரணமாய் – ‘தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளி லிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும், அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம்’ என்ற முடிவோடு ஆரம்பமாயிற்று. நாட்பட நாட்பட கி.கஸ்தூரி ரங்கன் அவர்கள் சென்னை வந்த பிறகு இ.பா போன்ற இலக்கிய ஜாம்பவான்களின் கூட்டமைப்பில் முழுக்க முழுக்க இலக்கிய இதழாகி, இன்றைய ம.ராஜேந்திரன் அவர்களது ஆர்வத்தால் புதிய புதிய அம்சங்களுடன், புதிய பரிமாணங்களுடனும் வளர்ந்து 50ஆம் ஆண்டை நெருங்கி பொன்விழா கொண்டாட உள்ளது.

முதல் பத்து இதழ்கள் கிடைக்காத நிலையில், எனது இயல்பின்படி எதுவும் தொடக்க முதலே வேண்டும் என்ற அவாவில், தீபம் எஸ். திருமலையின் யோசனைப்படி பெல்ஸ் ரோடில் இருந்த அப்போதைய சென்னை அலுவலகப் பொறுப்பில் இருந்த திரு.அசோகமித்திரன் அவர்களைச் சந்தித்து, விட்டுப் போன இதழ்களைப் பெற்றுத் தர வேண்டினேன். அப்போது அ.மி அவர்கள் பொறுப்பில் கணையாழி சென்னையில் தயாரிக்கப் பட்டு தில்லியில் அச்சாகி வெளிவந்து கொண்டிருந்தது. அ.மி அவர்கள் சற்றும் சுணக்கமில்லாது, அலுவலத்தில் கிடைத்தவற்றோடு விற்பனையாளர்களிடம் தேங்கிப் போன இதழ்களை எனக்காக சிரமம் மேற்கொண்டு கேட்டுப்பெற்று உதவியதை நான் நன்றியோடு நினைவு கூர்கிறேன். அவர்களது அந்த உதவியால் தான் கணையாழி யோடான எனது உறவு வலுப்பெற்றது எனலாம்.

தில்லியில கஸ்தூரிரங்கனுடன் இ.பாவும், ஸ்ரீரங்கம் எஸ். ஆர் என்ற பெயரில் சுஜாதா அவர்களும், தி.ஜானகிராமன் அவர்களும் இணைந்து வித்தியாசமாக கணையாழியை வெளியிட்டு வந்தனர். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற சுஜாதா வாசகர்கள்களை புதிய ரசனைக்கு இட்டுச் சென்று கணையாழிக்கு ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தித் தந்தார். தி.ஜாவின் மிகச் சிறந்த ‘மோகமுள்’ போன்ற நாவல்கள் வெளிவந்து கணையாழிக்கு கனம் கூட்டின. சென்னையில் அ.மி அவர்களது பங்கு மகத்தானது. தயாரிப்பில் பெரும்பணி யாற்றியதோடு அவரும் நிறைய எழுதி கணையாழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தார். கி.கஸ்தூரி ரங்கன் சென்னையில் நிரந்தரமாய்த் தங்க நேர்ந்தபோது அ.மி யுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு அ.மி கணையாழியிலிருந்து விலகிக் கொண்டார்.

கி.க சென்னை வந்த பிறகு நான் சென்ன சென்ற போதெல்லாம அவரை கணையாழி அலுவலத்தில் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் இ.பா வும் உடனிருப்பார். இருவரும் என்னை ஒரு நல்ல வாசகனாக உணர்ந்து எழுத உற்சாகப்படுத்தி வந்தனர். கி.க அவர்கள் கணையாழி விமர்சனத்துக்கு வந்திருக்கும் நூல்களை, எனது சென்னை சந்திப்போதெல்லாம் தந்து விர்சனம் எழுத வைத்தார். அதன் மூலம் கணையாழி வாசகருக்கு என்னை பரிச்சயப் படுத்தினார் இதன் மூலம் கணையாழி குடும்பத்தில் ஒருவன் போல ஆனேன்.

அடுத்து கணையாழியின் குறிப்பிடத்தக்க படைப்பாளியா கும் வாய்ப்பு 1987இல் தொடங்கப்பட்ட ‘தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி’ என்னை வாசகர்கள் கவனிக்கும்படி செய்தது. பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட என்னுடைய ‘அசல் திரும்பவில்லை’ பெரிதும் பாராட்டுக்கு உள்ளானது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நான் எழுதிய ‘இனியொரு தடவை’, ‘யானை இளைத்தால்…..’. ‘மீட்பு’ குறுதாவல்கள் ‘தி.ஜா. நினைவு’ப் போட்டியில் தேர்வாகி வெளிவந்தன. என்னுடன் மேற்கண்ட போட்டியில் பரிசு பெற்றவர்களில் ஒருவரான ம.ராஜேந்திரன் எனது ’இனியொரு தடவை’ ரசித்துப் பாராட்டியதுடன் அவரது பொறுப்பில் கணையாழி வந்த பிறகு ‘மீட்பு’ என்ற குறுநாவலை வெளியிட்டு கணையாழியுடனான எனது தொடர்பை உற்சாகப் படுத்தினார்.

1995இல் மே மாதம் நான் வழக்கம்பொல கி.கவைச் சந்தித்தபோது கணையாழிக்கு முப்பது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கணையாழியின் புதிய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுப்படுத்தும் வகையில கடந்த 30 ஆண்டு இதழ்களை வரும் ஆண்டுகளில் அறிமுகப் படுத்த நினைப்பதாகவும் அதை நான் எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார்கள். 25 ஆண்டுகள் முடிந்தபோது ‘கணையாழி 25’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக மாலன் எழுதியதைச் சுட்டிக்காட்டி, ‘கணையாழியின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் 1965 முதல் ஒவ்வொரு இதழாக அறிமுகப்படுத்தி எழதச் சொன்னார். ஒரு ஆண்டு இதழ்களை மாதந்தோறும் எழுதலாமே, ஒவ்வொரு இதழாக எழுதினால் முடிவே இல்லமல் போய்க்கொண்டிருக்குமே என்று நான் சொன்னபோது, அதைப்பற்றிக் கவலைப் படாமல் தொடங்குமாறு சொன்னார். அதன்படி, 1995ஜூன் முதல் தொடங்கி 2000 வரை எழுதினேன். அனேகமாக கணையாழியில் தொடர்ந்து நீண்ட நாட்கள் இதழ் தோறும் எழுதியது நானாகத்தான் இருப்பேன் என்று எண்ணுகிறேன். பின்னர் கணையாழியில் புதிய அம்சங்களை வெளியிட எண்ணுவதால் என் தொடரை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைக்கக் கேட்டபொழுது, நான் அதன்படி செயல்பட்டேன். ஒவ்வொரு இதழாக அறிமுகப் படுத்தியதை மாலன் தினமணிக்கதிரில் ‘படித்ததும் பிடித்ததும்’ என்ற தலைப்பில் நான் எழுப்பிய அதே சந்தேகத்தை எழுப்பி விமர்சித்திருந்தார்.

இத்தொடரை வரவேற்றாலும் கணையாழியின் வளர்ச்சிக்கும் பெரிதும் காரணமாய் இருந்த அசோக மித்திரன் அவர்களது அதிருப்திக்கு ஆளாக நேர்ந்தது துர்அதிஷ்டமானது. அவரிடத்தில் யாரோ இத்தொடரில் அவரைப் புறக்கணிப்பதாகச் சொல்லக் கேட்டு என்மீது அதிருப்தியில் இருந்திருக்கிறார். உண்மையில் வெகுநாட்களாக அவரது அருமையை உணர்ந்த நான் நிறைய தடவை அவரது பங்களிப்பைப் பாராட்டி எழுதி இருக்கிறேன். அவர் அதிருப்தியில் இருப்பதை அறியாமல் ஒருதடவை இலக்கிய சிந்தனை விழாவொன்றில் அவரைச் சந்தித்த நான், ‘தொடரைப் பார்க்கிறீர்களா, உங்களைப் பற்றி நிறையக் குறிப்பிட்டுள்ளேன்’ என்றேன். அவர் என்னைப் பார்க்காமல், சுமுகம் காட்டாமல் ‘எல்லாரும் அப்பபடித்தான்’ என்றார். நான் பதறிப்போய் உண்மையை உணர்த்த முற்பட்டபோதும் அவர் சமாதானம் அடையவில்லை என்பது இன்னும் உறுத்தலாவே உள்ளது.

பின்னானில் கி.க அவர்களின் வேண்டுகோளின்படி, கணையாழி இதழ் தொகுப்பை 4 பகுதிகளாக ‘கலைஞன் பதிப்பகம்’ வெளியிட்டபோது முதல் பத்தாண்டு இதழ்களைத் தொகுத்ததும் கணையாழியிண் தொடர்பில் எனக்குக் கிடைத்த பேறாகும்

பின்னர் தொடர்ந்து கணையாழியில் எழுதாவிட்டாலும் அவ்வப்போது என் சிறுகதையை வெளியிட்டும் , இணையத்தில் அறிமுகப்படுத்த ‘கணையாழியின் கதை’யை எழுத வைத்தும் இப்போது பொன்விழாத் தொடக்கத்தில் ‘கணையாழியும் நானும்’ என்ற தலைப்பில் என் கணையாழி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வைத்தும் என்னைக் கௌரவப்படுத்தும் ம.ராஜேந்திரன் அன்பில் நெகிழ்கிறேன்.

முதல் இதழ் 40 பைசா விலையில் செய்தித்தாள் போன்று கவர்ச்சியின்றி வெளியான கணையாழி, இன்று வெகுவாகத் தோற்றத்திலும் தரத்திலும் உயர்ந்து நிற்பதைக் காணும் போது ம.ராஜேந்திரன் அவர்களது இலக்கிய ஆர்வமும் கலாரசனையும் விதந்து போற்றுதலுக்கு உரியதாகும். மேலும் பலசாதனைகளை நிகழ்த்த கணையாழி நூற்றாண்டு விழாவும் காணவேண்டும் என வாழ்த்துகிறேன்.

Series Navigationகம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணைகனவு திறவோன் கவிதைகள்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *