தொடுவானம் 71. சாவிலும் ஓர் ஆசை

This entry is part 2 of 24 in the series 7 ஜூன் 2015

டாக்டர் ஜி. ஜான்சன்

71. சாவிலும் ஓர் ஆசை

மிகுந்த ஆர்வத்துடன் ஊர் புறப்பட்டேன். இரண்டு வாரங்களுக்கு வேண்டிய துணிமணிகளை பிரயாணப் பையில் எடுத்துக்கொண்டு கையில் ஒரு நாவலுடன் ஆட்டோ மூலம் வேலூர் கண்டோன்மெண்ட் புகைவண்டி நிலையம் வந்தடைந்தேன். அரை மணி நேரம் காத்திருந்தேன். தொலைவில் கரும் புகையைக் கக்கிகொண்டு ராட்சத மலைப்பாம்பு போன்று கரு நிறத்தில் ரேணிகுண்டா துரித பயணிகள் புகைவண்டி பெரும் இரைச்சலுடன் பிளாட்பாரம் வந்து கிரீச்சிட்டு நிண்டது.
அனேகமாக பெட்டிகள் காலியாகவே இருந்தன. நான் ஆட்கள் இல்லாத ஒரு பெட்டியில் சன்னல் ஓரம் அமர்ந்துகொண்டேன். அப்போது மாலை ஆறு மணி. மறுநாள் காலை ஆறு மணிக்குதான் சிதம்பரம் சென்றடையும். இரவு முழுதும் எனக்குப் பிடித்த இரயில் பிரயாணம். கையில் கொண்டுவந்துள்ள நாவலைப் பிரித்தால் நேரம் போவதே தெரியாது.படிப்பதில் ஆர்வம் உண்டானால் இந்த சவுகரியம். இரவு உணவுக்கு மெட்ராஸ் ஹோட்டலில் பரோட்டாவும் கோழி மசாலாவும் வாங்கியிருந்தேன். பசி எடுக்கும்போது சாப்பிடலாம்.
இது துரித பயணிகள் வண்டி என்பதால் எல்லா ஸ்டேஷன்களிலும் நிற்காது. கண்ணமங்கலம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் போன்ற பெரிய ஊர்களில்தான் நிற்கும். அங்கெல்லாம் உணவுகள் பொட்டலம் கிடைக்கும். நான் தேநீர் மட்டும் வாங்கிக்கொள்ள முடிவு செய்தேன். ( இதுபோன்ற பொது இடங்களில் ஈக்கள் மொய்த்த உணவு வகைகள் விற்பனைக்கு உள்ளதைக் கண்டு அஞ்சுபவன் நான். தண்ணீர் கூட யோசித்துதான் குடிப்பேன். )
நள்ளிரவு போல் விழுப்புரம் வந்தடைந்தேன். அதுவரை என்னுடைய பெட்டியில் ஓரிருவர் ஏறுவதும் இறங்குவதுமாகத்தான் இருந்தனர். விழுப்புரம் வரை யாரும் துணைக்கு வரவில்லை. விழுப்புரத்தில் எஞ்சின் மாற்றுவார்கள். அதனால் அரை மணி நேரம் அங்கேயே நிற்கும். நான் இரங்கி பிளாட்பாரத்தில் நின்றேன். விழுப்புரம் சந்திப்பு என்பதால் அந்த நள்ளிரவிலும் பரபரப்பாகவே காட்சி தந்தது. வடக்கு தெற்கு வழிகளில் செல்லும் அனைத்து வண்டிகளிலும் இங்கு நின்றுதான் புறப்படும்.
விழுப்புரம் தாண்டியதும் நான் இருக்கையில் படுத்துக்கொண்டேன். எனக்குத் துணையாக ஓரிருவர் எனக்கு எதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டனர். நான் படுத்திருப்பது பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. ( நான் கல்லூரி மாணவன் போன்று தோன்றியதால் அந்த மரியாதையாகவும் இருக்கலாம். )
பிரயாணப் பையை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்திருந்த நான் புகைவண்டியின் தாலாட்டில் அயர்ந்து தூங்கிவிட்டேன். திடீரென்று சத்தம் கேட்டு கண்விழித்தபோது கடலூரில் நின்றது. அங்கும் தேநீர் காப்பி விற்றார்கள். வண்டிக்குள் சூடாக இருந்தாலும் வெளியில் குளிர் காற்று வீசியது. சூடான தேநீர் சுவைத்தது.
அதன்பின் தூங்கவில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் சிதம்பரம் வந்துவிடும். அதன்பின் குதிரை வண்டியில் பேருந்து நிலையம் போகலாம். அங்கு முதல் பேருந்து காலியாகவே புறப்படும். அதைப் பிடித்துவிடலாம். பேருந்து நிற்கும் இடத்தில் சண்முகம் கூண்டு வண்டியுடன் காத்திருப்பார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் தெம்மூர்!
Sad Kokiam காலையிலேயே கோகிலம் என்னைக் காண வந்துவிடுவாள். அவள் எந்த நிலையில் உள்ளாளோ என்று தெரியவில்லை. மருத்துவக் கல்லூரி மாணவனானதும் அவளை மறந்தே போய்விட்டேன். நினைப்பதற்கு நேரமே இல்லை. அங்கு புது சூழலில், புது நண்பர்கள் மத்தியில் நேரம் போனதே தெரியவில்லை எப்படியோ மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. இப்போது ஊரை நெருங்கும்போதுதான் கோகிலத்தின் நினைவு வருகிறது. அங்கு அவளைப் பார்ப்பதும் பேசுவதும் தவிர்க்க இயலாததுதான். என்னைக் கண்டதும் அவள் எப்படி பேசுவாள், என்ன கூறுவாள் என்பதைப் பற்றியெல்லாம் யோசித்தேன்.காலைக் குளிரில் திறந்த சன்னலோரத்தில் ஓடும் இரயிலில் அமர்ந்துகொண்டு அதுபோன்று சிந்தனையை ஓடவிட்டது சுகமாகத்தான் இருந்தது.
பளபளவென்று விடிந்தபோது சிதம்பரம் புகைவண்டி நிலையத்திலிருந்து வெளியேறினேன். ஓரிரண்டு குதிரை வண்டிகள் நின்றன. சிதம்பரம் நடராஜர் கோவிலிலிருந்து காதுக்கினிய பிராத்தனைக் கீதங்கள் ஒலித்தன. பேருந்து நிலையம்கூட விடிந்தது போன்று இயங்கத் துவங்கியது. ஒருசில பேருந்துகள் சவாரிக்குத் தயாராகி உறுமிக்கொண்டு நின்றன. நான் காட்டுமன்னார்க்கோவில் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். அது காலியாக இருந்தது. வண்டி புறப்படும் நேரத்தில் ஓரிருவர் ஓடிவந்து ஏறிக்கொண்டனர். வயல் வெளிகள் பனிப் போர்வையால் மூடப்பட்டிருந்தன. வீதியில் வேறு வாகனங்கள் இல்லாததால் அரை மணி நேரத்தில் தவர்த்தாம்பட்டு வந்துவிட்டது. நான் இறங்கிவிட்டேன்.
எங்கள் வீட்டு கூண்டுவண்டி அருகில் சண்முகம் நின்றார். என்னைக் கண்ட காளைகள் இரண்டும் எழுந்து நின்றன. அவை எனக்குப் பழக்கமானவை என்பதால் அடையாளம் கண்டுகொண்டன. என்னை வரவேற்பது போன்று தலையை ஆட்டின. வீடு செல்லப்போவது அவற்றுக்குத் தெரிந்துவிட்டது. ( அங்கு சென்றதும் புண்ணாக்கு கலந்த கஞ்சித் தண்ணீர் கிடைக்கும் )
இராஜன் வாய்க்காலில் நீர் நிறைவாக ஓடியது. பறவையினங்கள் சிறகடித்தன. தூங்கிக்கொண்டிருந்த குடிசைவாசிகள் விழித்துக்கொண்டனர். குடிசை வாசல்களில் பெண்கள் சாணி தெளித்து கோலம் போட்டனர். கிராமத்து தேநீர்க் கடைகளில் சூடு பிடித்தது.
கூண்டு வண்டி வீட்டு வாசலில் நின்றதும் நான் எதிர்பார்த்தபடியே கோகிலம்தான் அங்கு நின்றுகொண்டிருந்தாள். வண்டி புறப்பட்டதிலிருந்து என் வரவை அவள் தெரிந்திருப்பாள். அம்மா அவளிடம் கூறியிருக்கலாம்.
Sad Kokilam 2 என்னைக் கண்டதும் அவள் முகம் நாணியது. அதே வேளையில் குளத்து தாமரை போன்றும் மலர்ந்தது. அவளுடைய கருவண்டு கண்கள் என்னையே மொய்த்தன.காத்திருந்த அக் கண்களில் சோகத்துடன் கூடிய ஆனந்தமும் இழையோடியது.
நான் கொண்டுவந்த பிரயாணப் பையை அவள்தான் எடுத்து வீட்டினுள்ளிலிருந்து வெளிவந்த அம்மாவிடம் தந்தாள். சமையலறையிலிருந்து கோழிக்குழம்பு மணம் அம்மாவைப் பின்தொடர்ந்தது.
அதற்குள் பக்கத்துவீட்டு பால்பிள்ளையும் வந்துவிட்டான்.
துணிகளை மாற்றிக்கொண்டு அவனுடன் வயல்வெளிக்குச் சென்றுவிட்டேன்.
” அண்ணே… நீ போனதிலிருந்து எப்பப் பார்த்தாலும் கோகிலம் உன்னப்பத்திதான் பேசும்.” வரப்பில் தட்டுத் தடுமாறி நடந்தபோது அவன் கூறினான்.
” அப்படி என்ன பேசும்? ” நான் அவனிடம் கேட்டேன்.
” எப்போ வருவே…கடுதாசி வந்ததா என்றுதான். பாவம் அண்ணே அது .” என்பான்.
பால்பிள்ளைக்கு ஓரளவு விஷயம் தெரிந்துள்ளது என்பதை யூகித்துக்கொண்டேன். அவனுக்குத் தெரிந்தால் பரவாயில்லை. யாரிடமும் சொல்லமாட்டான்.அவ்வளவு நம்பிக்கை அவன்மீது எனக்கு. பக்கத்துவீட்டு பால்ய நண்பன் அல்லவா அவன்!
ஊரில் தங்கிய ஒரு வாரமும் இனிமையாகவே கழிந்தது. இராஜகிளிதான் அடிக்கடி வந்து திண்ணையில் உட்கார்ந்துகொண்டு மருத்துவப் படிப்பு பற்றி கேட்கும். மருத்துவம் இன்னும் படிக்கத் துவங்கவில்லை என்று விளக்கம் கூறுவேன். அது உண்மைதான். உடற்கூறு இரண்டாம் ஆண்டில்தான் தொடங்கி மூன்றாம் ஆண்டில் முடியும். அப்போது வேண்டுமானால் நிறைய அனுபவங்கள் பற்றிக் கூறலாம். நான் அவ்வாறு இராஜகிளியிடம் பெசிக்கொண்டிருக்கும்போது கோகிலம் தலை காட்ட மாட்டாள். கெட்டிக்காரிதான் அவள்!
கூடுமானவரை அவளைத் தனிமையில் சந்திப்பதைத் தவிர்க்கப் பார்த்தேன். ஆனால் அவளோ விடுவதாக இல்லை.அவள் எதையோ சொல்லத் தவிப்பது தெரிந்தது. அதனால் அவள்மேல் பாவம் உண்டானது. வழக்கமான குளத்தங்கரை சென்றேன்.பால்பிள்ளையும் தூண்டில்களுடன் துணைக்கு வந்தான்.
அது அந்தி சாயும் வேளை. ஊர் மக்களின் நடமாட்டம் அதிகம் இல்லை. அவள் இடுப்பில் செப்புக்குடம் ஏந்தியவண்ணம் எங்களை நோக்கி நடையிட்டு வந்தாள்.
பால்பிள்ளை தூண்டிலுடன் குளத்தின் மறுகரை நோக்கி நடந்தான். அவள் என்னிடம் வந்தாள்.
” எப்படி இருக்கீங்க? ” என்று கேட்டாள்.
” நீ நல்லா இருக்கிறாயா? ”
” எப்படி நல்லா இருப்பது? சதா உங்கள் நினைப்புதான். எப்போதான் வருவீர்கள் , உங்களைப் பார்க்கலாம் என்று ஆசை ஆசையாக காத்திருந்தேன். நாள்தான் போனதே தவிர, உங்களைக் காணவில்லை. ”
” எனக்கு இப்போதான் லீவு விட்டார்கள். அதனால்தான் வரமுடியவில்லை. ”
” ஆமாம். நீங்கள் படிப்பது டாக்டருக்கு. பெரிய படிப்பு. என் ஞாபகமெல்லாம் எங்கே வரும்? ”
” அப்படியில்லை. அதான் இப்போ வந்துட்டேனே? வராமலா போனேன்? ”
” ஆமாம். வந்துட்டீர்கள்தான். இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கப் போறீங்க? அண்ணன் அண்ணியைப் பார்க்கணும்னு கொஞ்ச நாளில் கிளம்பப்போறீங்க. நான் வழக்கமா கற்பனையிலே வாழவேண்டியதுதான்.”
” அட. அதான் வந்துட்டேனே. ஏன் இப்படி பேசி தனிமையில் கிடைத்த இந்த நேரத்தையும் வீணாக்குறே? வந்துட்டேன் என்று சந்தோஷப்படு.”
” ஆமாம். இனி எனக்கு சந்தோஷம்தான். எப்போது தாலி கட்டிக்க இங்கே வந்து ஒங்களைப் பார்த்துட்டேனோ அப்போதிலேயிருந்து என் சந்தோஷம் எல்லாம் போயிடுச்சி ”
” சரி. இப்போ என்னதான் சொல்ல வர? ”
” நான் சாகப்போறேன். ”
” இது முன்பே நீ சொன்னதுதானே? ”
” ஆமாம். சொன்னேந்தான். ஒரு காரணத்தோடுதான் சாவ காத்திருக்கேன். ”
” நீ என்ன சொல்றே? சாவ காத்திருக்காயா? சாவது அவ்வளவு சொலபமா ஒனக்கு? ”
” ஆமாம். எனக்கு சொலபம்தான். ஆனா அதிலும் ஒரு ஆசை. அதுவாவது நிறைவேறுமா? ”
” அது என்ன சாவிலும் ஒரு ஆசை ? ”
” செத்தா உங்கள் கையிலதான் என் உயிர் போகணும். ” அது கேட்டு நான் திடுக்கிட்டேன்!
” நீ என்ன சொல்றே? என் கையில் உன் உயிர் போகணுமா? அது எப்படி? ”
” அது அப்படிதான். இப்போ உங்களுக்கு புரியாது. ஆனா அது அப்படிதான் நடக்கும். அப்போ உங்களுக்கு புரியும். ”

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.மிதிலாவிலாஸ்-21
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *