வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…

author
0 minutes, 10 seconds Read
This entry is part 4 of 24 in the series 7 ஜூன் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…

வைகறை [ 1979 ] அடைக்கலாப்புரம் [ தூத்துக்குடி மாவட்டம் ] கிராமத்துக்காரர். பள்ளி ஆசிரியரான இவர் தற்போது புதுக்கோட்டைவாசி.
இது இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இவர் நந்தலாலா.காம் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். 64 பக்கங்களில் 54
பக்கங்கள் இவர் குழந்தை ஜெய்குட்டி பற்றிய பாசத்தைக் கவிதைக் கோப்பைகளில் நிரப்பித் தந்துள்ளார். பருகும்போதே திராட்சை ரசத்தின்
இனிமை மனமெங்கும் பரவுகிறது.
வைகறையின் கவிதைகள் எளியவை. தேர்ந்த சொல்லாட்சியில் குழந்தைமை சிறப்புப் பெறுகிறது. புதிய சிந்தனைகள் , அழகான கற்பனைகள்
கவிமனம் வழியாக இப்புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கின்றன !

புத்தகத்தின் பின்னட்டையில் ஒரு கவிதை !

மின்சாரமற்ற இரவு
மெழுகுவர்த்தியை
ஊதியணைத்தவன்
இரவாக்குகிறான்
இரவை

சாதாரணக் காட்சி கவிஞனின் மொழி நயத்தால் கவிதையாகியிருக்கிறது. ‘ இரவை இரவாக்குகிறான் ‘ என்பதில் கவித்துவ உயிர்ப்புள்ளி
தெறித்து விழுந்து மெருகூட்டுகிறது. ‘ கவிஞன் கண்டாலே கவிதை ‘ என்ற சினிமாப் பாடல் வரி இங்கு சரியாகப் பொருந்துகிறது.

‘ ஜெய்குட்டியின் மொழி ‘ என்ற கவிதை நன்றாக இருக்கிறது.

ஜெய்குட்டியின் மொழியைக்
கற்கத் தொடங்கிய போது
புரியத் தொடங்கியிருந்தது
பொம்மைகளின் மொழி ;
கிறுக்கல்களின் மொழி ;
அவனது ஆட்டுக்குட்டியின் மொழி

–என்று கவிதை தொடங்குகிறது.

இன்று எனக்கவன்
கற்றுத் தந்திருக்கிறான்
ஒரு செடியின் மொழியினை
நாளை விரியக்கூடும்
பறவையின் மொழியாக ;
அது வானம் முழுவதும் நரப்பும்
சிறகின் மொழியினை

கவிதை வளர்ச்சியும் கவிமனப் பாங்கும் நன்றாகக் கலந்து நிற்கின்றன. தன் குழந்தை மனத்தின் பின்னாலேயே செல்கிறது அப்பா பாசம் !

யாருமற்ற தனிமையில் நான்
வானம் பார்த்தபடி நிற்கிறேன்

மேலிருந்து
இறங்கி வரலாம் ஓர் இறகு
எனக்கு மட்டுமான
ஜெய்குட்டியின் மொழியோடு

என்று கவிதை பிரமிள் காட்டிய படிமம் சற்றே மாற முடிகிறது. இக்கவிதையின் எல்லா வரிகளிலும் அப்பா பாசம் மெழுப்பட்டுள்ளது

‘ எழுத்துகளோடு வருபவன் ‘ என்றொரு கவிதை !

புரட்டிக் கொண்டிருக்கிறான் ஜெய்குட்டி
ஒரு புத்தகத்தை

என்று சாதாரணமாகத் தொடங்குகிறது.

வாசிக்கத் தெரியாதபடி
பரவிக் கிடக்கும் எழுத்துக்களில்
படர விடுகிறான் விரல்களையும்
அதைவிட மெல்லிய
புன்னகையையும்…

குழந்தையின் அறியாமைகூட அழகுதான். என்ன செய்ய முடியும் அந்தக் குழந்தையால் ? படிக்க வேண்டும் என்ற ஆசை புன்னகையில்
முடிகிறது. இந்தத் தயக்கமே அடுத்த வெற்றிக்கான களமாகிறது.

ஒவ்வொரு பக்கமாய்ப்
புரட்டும் போது
சுழல்வதாய் இருந்தது
அவனுக்குள் ஒரு மின்விசிறி

‘ மின்விசிறி சுழல்வது ‘ என்பது அழகான படிமம் !

முழுவதும் புரட்டி முடித்தவன்
தனியே விட்டுச் சென்ற
அப்புத்தகத்திலிருந்து இப்போது
அவனைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன
சில எழுத்துக்கள்
அதன் பின் சில வார்த்தைகள்

எழுத்துக்கள் – வார்த்தைகள் பின் தொடர்தல் அழகான படிமம் ! தற்குறிப்பேற்ற அணியும்கூட.

ஓடிவரும் ஜெய்குட்டியை
வாரியணைத்து முகர்ந்து பார்க்கிறேன்
எழுத்துக்களின் வாசனையை
இன்னும் சில கவிதைகளுக்காக
ஆம் !கவிதை பிறந்துவிட்டது. ‘ எழுத்துக்களின் வாசனை ‘ என்பது புதிய சொற்சேர்க்கை ! கவிதையில் சொற்கள் கச்சிதமாக அமைந்து
விட்டன. எளிமை அழகூட்டுகிறது.

‘ டம்ளர் நிறைய ‘ என்ற கவிதை குழந்தையின் மழை விளையாட்டைக் கருவாகக் கொண்டது.

வீடு முழுவதும்
நீர்த்தடங்கள் விரிய
நடந்து கொண்டிருக்கிறான் ஜெய்குட்டி
டம்ளர் நிறையத்
தண்ணீரை ஏந்தியபடி

கவிதையின் தொடக்கத்திலேயே கவிதைக்கான முன்னேற்பாடுகள் பளிச்சிடுகின்றன.

தாகமெனக் கேட்ட தாத்தாவையும்
தாவெனக் கேட்ட அம்மாச்சியையும்
கடக்கிறான்
பார்வைகளால் நிரப்பிவிட்டு…

‘ கடக்கிறான் ‘ என்றது முக்கியமன்று. ‘ பார்வைகளால் நிரப்பிவிட்டு ‘ என்ற வரி சிறப்பான பதிவு. ‘ தண்ணீர் தர மாட்டேன் ‘ எனச்
சொல்லாமல் சொல்லிவிட்டான் .

தன் அம்மாவையும்
என்னையும்
கவனிக்காத மாதிரி
கடக்கும் வித்தையை
அப்போது கற்றிருக்கிறான்

அந்த அலட்சியம்தானே குழந்தைமை ! உணவைக்கூட மறக்கச் செய்யும் மாயம் விளையாட்டிற்கு உண்டு !

முற்றம் வந்தவன்
” அப்பா மழை பாருங்க ‘ என்றபடி
டம்ளர் தண்ணீரை
மேல் வீசிச் சிதற வீசுகிறான்
வீடெங்கும் நனைந்த பிறகுதான்
பெய்யத் தொடங்கியிருந்தது
அன்றைய மழை !

முத்தாய்ப்பு விசேஷ அர்த்தம் தருகிறது. அந்தக் குழந்தையின் விளையாட்டு தந்தை மனத்தில் நிலைத்து விட்டது என்பதே பாசமிகு
யதார்த்தம்.
‘ தயவு செய்து தனியே இருக்க விடுங்கள் ‘ என்ற கவிதையும் அழகாக அமைந்துள்ளது.
நிறுத்தியிருக்கிறான் அவன்
இப்போதுதான்
இதுவரை
கையிலிருந்த கரண்டியால்
பாத்திர அதிர்வுகளை
இசையாக்கிக் கொண்டிருந்தான்

சுவாரஸ்யமான உயிர்ப்புடன் கூடிய காட்சி !

ஒவ்வொரு தட்டலிலும் நிகழும்
தலையசைப்பிலும்
உடலசைப்பிலும்
இசையாகிக் கொண்டிருந்தான்
தன் குழந்தையை இசை வடிவில் காண்பது அபூர்வமான கவி தரிசனம் !
அவன் இசையாவதும்
இசை அவனாவதும்
இன்னும் தொடர்ந்திருக்கும்

யாரோ காரணமாக ‘ அவன் தனிமை உடைகிறது ‘ என்கிறார் வைகறை ! இக்கவிதை உச்சம் தொட்டு முடிகிறது.

‘ நிறைந்து கிடக்கிறேன் ‘ ஓர் அற்புதமான கவிதை ! அசாதாரணமான படிமங்கள். இக்கவிதையில் வாசகன் தன்னை நிரப்பிக்கொள்ள
விரிந்த பரப்பு உருவாகியிருக்கிறது.
படுத்துக் கிடக்கும் என் கன்னத்தில்
முத்தமிடுகிறான் ஜெய்குட்டி
அது சிறு மீன் குஞ்சாக மாறி
நீந்தத் தொடங்குகிறது.
என் தலை முதல் கால் வரை
இப்போது நான்
மீன் தொட்டியா,
குளமா,
கடலா,
தெரியாமல் விழித்தபடி கிடக்கிறேன்

தொடர் படிமத் தாக்குதல் கவிதையைத் தூக்கி நிறுத்தி உயர்த்திப் பிடிக்கிறது. !

இப்போது அவன்
என் மறு கன்னத்தில் முத்தமிடுகிறான்
அது சிறு பறவையாகிப்
பறக்கத் தொடங்குகிறது எனக்குள்.
பூட்டிக்கிடக்கும் என் வீட்டிற்குள்
நிறைந்து கிடக்கிறேன் நான்
பாதி கடலாகவும் ;
பாதி வானமாகவும் ;
இரண்டே இரண்டு முத்தங்களால்.

முதல் முத்தம் சிறு மீன் குஞ்சாக மாறியது. இரண்டாவது முத்தம் சிறு பறவையானது. மொழிநடையில் கவிஞர் உயர உயரப் பறக்கிறார்.
‘ பூட்டிக் கிடக்கும் என் வீட்டிற்குள் ‘ என்ற வரி நெருடுகிறது. தந்தையும் மகனும் வீட்டிற்குள் இருக்கும்போது வீடு எப்படி பூட்டிக் கிடக்கும் ?
பதில் கவிதையில் இல்லை. ‘ நிறைந்து கிடக்கிறேன் ‘ என்னும் தலைப்பில் கவித்துவம் உள்ளது. பாச மயக்கம் அழகாகப் பதிவகியுள்ளது.
இத்தொகுப்பில் சிறந்த கவிதைகள் பல உள்ளன. அவற்றுள் மேற்கணட கவிதை முதலிடம் பெறுகிறது. குழந்தைகள் பற்றிய பதிவுகள்
அதிகம் இல்லை என்ற நிலையில் இத்தொகுப்பு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. பாராட்டுகள் ! வெளியீடு ; பொள்ளாச்சி இலக்கிய
வட்டம், பில்சின்னாம்பாளையம், சமத்தூர் 642 123 பொள்ளாச்சி. செல் 90955 17547 பக்கங்கள் 64 விலை ரூ.50.

.

Series Navigationமிதிலாவிலாஸ்-21இரை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *