திரை விமர்சனம் – காக்கா முட்டை

This entry is part 18 of 23 in the series 14 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன்
0
32647-aதிடீர் குப்பத்து பிள்ளைகளுக்கு, பீட்சா மேல் வரும் ஆசைகளும், அதனால் எழும் சிக்கல்களும் கவிதையாக!
கோழி முட்டை தின்ன ஆசை. ஆனால் வசதியில்லை. அதனால், காக்கைகளின் கவனத்தை திசை திருப்பி, காக்கா முட்டைகளை களவாடித் தின்னும் சின்னப் பாண்டியும் பெரிய பாண்டியும், முன்னூறு ரூபாய் பீட்சா மேல் ஆசை கொண்டு, அதற்கு கொடுக்கும் விலைதான் இந்த படம்.
படம் நெடுக, நாமும் சைதாப்பேட்டை திடீர் குப்பத்தில் வசிப்பது போன்ற உணர்வைத் தந்த ஒளிப்பதிவிற்கும் இயக்கத்திற்கும் சொந்தக்காரர் மணிகண்டன். அந்தக் குப்பத்தில், நிஜமாக வசிக்கும் சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷையே, பாத்திரங்களாக தேர்வு செய்ததில், அவருக்கு பாதி வெற்றி கிட்டி விட்டது. பார்வையிலும், நடை உடை பாவனைகளிலும், உச்ச நட்சத்திரங்களுக்கு சவால் விடும் இந்தச் சிறுவர்கள், கிடைத்த விருதுகளை நியாயப்படுத்துகிறார்கள்.
அவர்களின் அம்மாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நிதர்சனத்தில் ஒரு குப்பத்து அம்மாதான் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம். மிகையில்லாத நடிப்பு. போக வேண்டிய உயரங்கள் இன்னும் இருக்கு! குப்பத்தின் களவாணி பிரதீப்பாக, ரமேஷ் திலக். இந்த பாத்திரம் அவருக்கு பிள்ளை விளையாட்டு. பிரித்து மேய்ந்திருக்கிறார்.
எதிலும் காசு பார்க்கும் அதிகார வர்க்கம். அதனால் பந்தாடப்படும் ஏழைகள். இவ்வளவு அழுத்தமான பதிவாக இப்படி ஒரு திரைப்படம் வந்ததில்லை. ஆசைப்பட்ட பீட்சா கிடைக்கும்போது அது அந்தச் சிறுவர்களுக்கு பிடிக்கவேயில்லை. “ ஆயா சுட்ட தோசையே இதைவிட நல்லா இருந்திச்சு இல்லே “ என்று சிறுவர்கள் சொல்வது, இன்றைய நவயுக பெற்றோர்களுக்கான சாட்டையடி.
ஊடகங்களால் புகழ் வெளிச்சம் பட்டு, ஆசைப்பட்ட பீட்சா கிடைத்து, எல்லாம் முடிந்த பிறகும், அந்தச் சிறுவர்கள் வாழ்வில் ஏற்றமுமில்லை. மாற்றமுமில்லை. ரயில் பாதையில் சிந்தும் நிலக்கரி துண்டுகளை சேகரிப்பதாகவே தொடர்கிறது அவர்கள் வாழ்க்கை. யதார்த்தம் நெற்றிப் பொட்டில் அறைகிறது.
ஜி.வி.பிரகாஷ் குமார் படத்துடன் ஒன்றி, பின்னணி இசையும், பாடல்களும் தந்திருக்கிறார். மறைந்த எடிட்டர் கிஷோரின் நினைவை போற்றிப் பாதுகாக்கும் இந்தப் படம். திடீர் குப்பத்தின் வீடுகளை கண் முன்னே கொண்டு வந்த கலை இயக்குனர் விஜய் ஆதிநாதன் விரலுக்கு ஒரு வைர மோதிரம் போடலாம்.
மணிகண்டன் வியாபார சுழலில் சிக்கி சரிந்து போகக்கூடாது. உண்மையான திரை ரசிகன் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறான்.
படத்தயாரிப்பாளர்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு வாழ்த்து சொல்ல வார்த்தைகள் இல்லை! கண்கள் கலங்கி நாம் விடும் கண்ணீரே அவர்களுக்கான பாராட்டு!
நிறைய குறியீடுகள் படத்தில். காக்கை முட்டை இருக்கும் மரம் வெட்டப்படுவதும் அதில் ஒரு பீட்சா கடை வருவதும், அனிச்சையாக, சிறுவர்களின் கவனம் பீட்சா மீது திரும்புவதும் கூட இம்மாதிரி சிறுவர்களின் கனவுகள் சிதைக்கப்படுவதான ஒரு விமர்சனம் தான்.
ரயில் படிகளில் உட்கார்ந்து கடலை போடும் இளைஞர்களை கழியால் தட்டி அவர்களது செல்ஃபோன்களை கீழே விழச் செய்து அபகரிக்கும் சிறுவர் கூட்டமும், அதனால் காக்கா முட்டை சிறுவர்களின் வாழ்வில் அந்த செல்ஃபோனே முக்கிய சாட்சியமாக மாறுவதும் கூட ஒரு வகையில் விமர்சனம் தான்.
உலக போராளி இயக்கங்களின் தொடக்கமே மறுதலிப்பில் தொடங்குகிறது என்பதைக் நெருப்புக் கவிதையாகச் சொல்கீறது காட்சி.
பணக்கார சிறுவர்களின் ஏக்கம் ரோட்டோர கடைகளின் பானி பூரிகளில் இருப்பதையும், அதை அசுத்தம் என மறுக்கும் பெற்றோர்களின் மேலாண்மைத் தனமும் கூட ஒரு கவனத் தாக்குதல் தான்.
0

பார்வை : குறிஞ்சி
0
மொழி : இனிமே படிக்க போங்கடா காக்கா முட்டைங்களா ! அப்புறம் நடிக்க வரலாம்!

Series Navigationயானையின் மீது சவாரி செய்யும் தேசம்மிதிலாவிலாஸ்-22
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    BS says:

    //பணக்கார சிறுவர்களின் ஏக்கம் ரோட்டோர கடைகளின் பானி பூரிகளில் இருப்பதையும், அதை அசுத்தம் என மறுக்கும் பெற்றோர்களின் மேலாண்மைத் தனமும் கூட ஒரு கவனத் தாக்குதல் தான்.//

    ரோட்டோரத்தில் விற்கும் உணவுப்பணங்கள் நம் நாட்டில் எந்தவித உணவுக்கட்டுப்பாடுகளுக்கும் கீழ் வாரா. எ.கா: பழங்களை வெட்டி காலையிலிருந்து மாலை வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். கையேந்தி பவன்கள் எதைப்பயன்படுத்துகின்றன என்று எவருக்கும் தெரியாது. காக்கா பிரியாணியும் உண்டு என்ற திரைப்பட நகைச்சுவைக்காட்சிகள் பொய்யல்ல. இப்படிப்பட்ட உணவுப்பண்டங்களைக் குழந்தைகள் வாங்கிச்சாப்பிடக்கூடாது என்று தான் மருத்துவர் அறிவுறுத்துவார். அதனால், பெற்றோரும் வலியுறுத்துவர். இவர்கள் செய்வது மேலாணமைத்தனம். குழந்தைகளுக்கு எதை வாங்கித்தரவேண்டும் என்பது பெற்றோருக்குத் தெரியும். அதை மேலாணமைத்தனமென்பது ஒரு குதர்க்கப்பார்வை.

  2. Avatar
    paandiyan says:

    ///உலக போராளி இயக்கங்களின் தொடக்கமே மறுதலிப்பில் தொடங்குகிறது என்பதைக் நெருப்புக் கவிதையாகச் சொல்கீறது காட்சி.
    பணக்கார சிறுவர்களின் ஏக்கம் ரோட்டோர கடைகளின் பானி பூரிகளில் இருப்பதையும், அதை அசுத்தம் என மறுக்கும் பெற்றோர்களின் மேலாண்மைத் தனமும் கூட ஒரு கவனத் தாக்குதல் தான்.///

    அக்கா அன்னைக்க சொல்லிச்சு , mouse புடிக்க தெரிஞ்சவன் எல்லாம் விமர்சனம் பன்னாரன்னு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *