மெஹ்தி ஹசன்
சமீப காலங்களில், 1400 வருடங்கள் பழைய மதமான இஸ்லாமில் சீர்திருத்தம் (reformation) வேண்டும் என்று பல தேய்ந்த ரிக்கார்ட் போல குரல்கள் எழும்பியிருக்கின்றன. “நமக்கு முஸ்லீம் சீர்திருத்தம் வேண்டும்” என்று நியூஸ்வீக் அறிவிக்கிறது. “ஹப்பிங்க்டன் போஸ்ட் “இஸ்லாமின் உள்ளேயே சீர்திருத்தம் நடைபெற வேண்டும்” என்று கூறுகிறது. பாரிஸில் ஜனவரில் நடந்த படுகொலைக்கு பின்னர், எகிப்திய ஜனாதிபதியான அப்துல் ஃபடா அல் சிசி, “முஸ்லீம் சமுதாயத்தின் மார்ட்டின் லூதராக” வரலாம் என்று பைனான்ஸியல் டைம்ஸ் எழுதியது. (மனித உரிமை கழகத்தின் அறிக்கைகளின்படி, ஆயுதம் தாங்காமல் ஊர்வலம் சென்ற போராட்டக்காரர்கள் மீது திட்டமிட்டு படுகொலை நடத்தியதாக கூறப்படும் சிசி அவர்களை வைத்துகொண்டு என்ன சீர்திருத்தம் செய்யமுடியும் என்று பைனாஸியல் டைம்ஸ் விளக்கலாம்)
அதற்கப்புறம் அயான் ஹிர்ஸி அலி. சோமாலியாவில் பிறந்த, நாத்திகவாதியான இந்த முன்னாள் முஸ்லீம் புதிய புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். “ஏன் இஸ்லாமில் இப்போது சீர்திருத்தம் வேண்டும்” என்ற தலைப்பில். இவர் அவ்வப்போது டிவி ஸ்டூடியோக்களில் தோன்றியும், பத்திரிக்கைகளில் கட்டுரைகளாகவும், தாராளவாத முஸ்லீம்களும், பாரம்பரிய முஸ்லீம்களும் இஸ்லாமின் அடிப்படையான மத நம்பிக்கைகளை துரந்து ஒரு புதிய முஸ்லீம் மார்டின் லூதரின் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்று கூறுகிறார். பெஞ்சமின் நெட்டன்யாஹூவுக்கு நோபல் அமைதி பரிசு வழங்கவேண்டும் என்று கூறும் இவர், இஸ்லாமை “அழிவுப்பாதை, சாவுக்கு இட்டுசெல்லும் வழி” என்று கூறும் இவர் விடுக்கும் அழைப்புக்கு முஸ்லீம்கள் செவிசாய்ப்பார்களா என்பது வேறொரு விஷயம்.
இந்த கருத்துக்கள் புதியவை அல்ல. 2002இலேயே நியூயார்க் டைம்ஸின் பிரபல எழுத்தாளர் தாமஸ் ப்ரீட்மென் இஸ்லாமிய சீர்திருத்தத்தை வேண்டி கட்டுரை எழுதியிருக்கிறார். சார்ல்ஸ் குர்ஜெர் , மிஷல் ப்ரோவர்ஸ் ஆகியோர் இந்த “சீர்திருத்த உவமையை” 20ஆம் நூற்றாண்டு ஆரம்பித்தலிருந்தே வந்திருப்பதை கண்டு சொல்கிறார்கள். “இஸ்லாமிய பழமையை விரும்புபவர்களிலிருந்து தாராளவாத முஸ்லீம்கள் வரைக்கும் எல்லோருமே இந்த முஸ்லீம் லூதர்களை தேடி வந்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.
பொத்தாம்பொதுவாக பார்த்தால், வன்முறை தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதையும், இஸ்லாமின் ஆன்மாவை காப்பாற்றுவதையும், கூடவே மத்திய கிழக்கு நாடுகளை காப்பாற்ற விரும்புபவர்கள் இந்த “சீர்திருத்தத்தை” ஆதரிக்க வேண்டுமாம். கிறிஸ்துவ மதத்தில் சீர்திருத்தம் வந்தது, பிறகு மறுமலர்ச்சி வந்தது பிறகு மதசார்பின்மை வந்தது பிறகு தாராளவாதம் வந்தது அதன் பின்னால் நவீன ஐரோப்பிய ஜனநாயகம் தோன்றியது. ஆகவே ஏன் இஸ்லாமுக்கு இதே போல வர விரும்பக்கூடாது? மேற்கு இதற்கு உதவக்கூடாதா? — இப்படித்தான் இந்த வாதம் போகிறது.
கிறிஸ்துவ ஸ்டைல் சீர்திருத்தம் இஸ்லாமுக்கு வராமலிருப்பதே நல்லது என்பதுதான் உண்மை. இந்த ”முஸ்லீம் மார்ட்டின் லூதர்” கருத்தை எடுத்துகொள்வோம். லூதர் வெறுமனே, தனது 95 கொள்கைகளை விட்டன்பர்க் கோட்டை சர்ச்சில் 1517இல், பாதிரிமார்களின் தவறான நடத்தைகளை எதிர்த்து மட்டுமே அறையவில்லை. கூடவே, ஜெர்மன் நிலப்பிரபுகளுக்கு எதிராக போராடிய ஜெர்மன் விவசாயிகளை “வெட்டி வீழ்த்த”வேண்டும் என்றும் கோரினார், அவர்களை “பைத்தியம் பிடித்த நாய்கள்” என்றும் எழுதினார். 1543இல் “யூதர்களும் அவர்களது பொய்களும்” என்ற புத்தகத்தை எழுதினார். அதில் யூதர்களை “சாத்தானின் மக்கள்” என்றும், அவர்களது வீடுகளையும் அவர்களது கோவில்களையும் அழிக்கவேண்டும் என்றும் கோரினார். அமெரிக்க சமூகவியலாளரும் ஹோலோகாஸ்ட் என்னும் யூத இன அழிப்பு ஆய்வாளருமான ரோனால்ட் பெர்கர் கூற்றின்படி, யூத எதிர்ப்பை ஜெர்மன் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகவும், தேசிய அடையாளமாகவும் மார்ட்டின் லூதர் அமைத்தார். 2015இல் சீர்திருத்தத்துக்கும் நவீனத்துவத்துக்கும் முஸ்லீமகளின் லட்சிய புருஷனாக இவர் அமைய முடியுமா?
கண்ட பரப்பளவில், முன்னெப்போதையும் விட அதிகமாக ரத்தம் பெருக்கெடுத்து ஓடுவற்கான கதவுகளை இந்த புரோட்டஸ்டண்ட் சீர்திருத்தம் திறந்து வைத்தது. பிரஞ்சு மதப்போர்களை மறக்கமுடியுமா? அல்லது ஆங்கில உள்நாட்டு போர்களை மறக்கமுடியுமா? பல கோடிக்கணக்கான அப்பாவிகள் ஐரோப்பாவில் இறந்தார்கள். சுமார் 40 சதவீத ஜெர்மன் மக்கள் தொகை முப்பதாண்டு போரில் மரித்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் இப்போது வகுப்புவாத போர்களும், அன்னிய நாட்டு ஆக்கிரமிப்புகளும், காலனியாதிக்கத்தின் தீய விளைவுகளும் கசப்பினை உருவாக்கி கொண்டிருக்கும்போது, இது போன்றதொரு சீர்திருத்தத்தையா எதிர்பார்க்கமுடியும்? அதுவும் முன்னேற்றம், தாராளவாதம் சீர்திருத்தம் என்ற பெயரில்?
இஸ்லாம் கிறிஸ்துவ மதம் அல்ல. இந்த இரண்டு மதங்களும் ஒப்பிடத்தகுந்தவை அல்ல. ஆசியாவிலிருந்து ஆபிரிக்காவரைக்கும் இருக்கும் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளின் மீது ஐரோப்பிய மையவாத வரலாற்று பார்வையை திணிப்பதும், இந்த இரண்டு மதங்களையும் ஒரே மாதிரி பார்ப்பதும் மிகுந்த அறியாமையால் விளைவதுதான். ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பாரம்பரியமும், புத்தகங்களும் உள்ளன. ஒவ்வொரு மதத்தை நம்புபவர்களும் புவியரசியலாலும், சமூக பொருளாதார இயக்கங்களாலும், பல்வேறு வகையான வழிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய ஆன்மீகவியலும், கிறிஸ்துவத்தின் ஆன்மீகவியலும், மிகவும் வேறானவை. உதாரணமாக, இஸ்லாமில் எப்போதுமே ஒரு கத்தோலிக்க ஸ்டைல் பாதிரியார்களோ, கடவுளால் நியமிக்கப்பட்ட போப்புகளுக்கு அடங்கியவர்களான பூசாரிகளோ இருந்ததில்லை. அப்படியென்றால், இந்த “இஸ்லாமிய சீர்திருத்தம்” யாருக்கு எதிராக நடைபெறும்? யாருடைய கதவில் “95 பத்வாக்களை” அறைவது?
உண்மை என்னவென்றால், இஸ்லாமில் ஏற்கெனவே அதன் “சீர்திருத்தம்” நடந்துவிட்டது. அதாவது, பிராந்திய கலாச்சாரங்கள் துடைத்தெறியப்பட்டு தூய இஸ்லாம் உருவாக்கும் வழிமுறை தோன்றிவிட்டது. அது சகிப்புத்தன்மை மிகுந்த, பன்மைத்தன்மை மிகுந்த, பல சமயங்கள் இணைந்து வாழும் ஒரு பொன்னுலகை படைக்கவில்லை. மாறாக, அது உருவாக்கியது சவுதி அரேபிய மன்னராட்சி.
சவுதி அரச குடும்பத்துடன் ஒப்பந்தம் கொண்ட முகம்மது இப்னு அப்துல் வஹாப், ஹிஜாஜின் மக்களிடம் அளித்தது இந்த சீர்திருத்தம்தானே? இஸ்லாத்தில் பின்னர் தோன்றிய புதுமைகளை களைந்து, பல நூற்றாண்டுகளாக அறிஞர்களும், விளக்க உரையாளர்களும் உருவாக்கிய அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, பாரம்பரிய உலேமாக்களையும், பாரம்பரிய மத தலைவர்களையும் உதறிவிட்டு உருவாக்கிய தூய இஸ்லாத்தைத்தானே அவர் மக்களுக்கு அளித்தார்?
யாரையேனும் முஸ்லீம் மார்ட்டின் லூதர் என்று அழைக்கமுடியுமென்றால், அது இப்னு அப்துல் வஹாப் அவர்களைத்தான் அழைக்கமுடியுமென்று சிலர் வாதிக்கலாம். அவரை விமர்சிப்பவர்கள் பார்வையில், மார்ட்டின் லூதரின் அடிப்படைவாதமும், அந்த ஜெர்மன் துறவியின் யூத வெறுப்பும் ஒருங்கே இணைந்திருக்கும் உருவமே இப்னு அப்துல் வஹாப். முஸ்லீம் ஆன்மீகவியலை விமர்சித்ததால், அவரது காலத்தில் இருந்த இஸ்லாமை அவர் கடுமையாக விமர்சித்ததால், அவரது குடும்பத்தாலும் காபிர் என்று விலக்கி வைக்கப்பட்டார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய மைக்கல் கிராபோர்ட் கூறுகிறார்.
என்னை தவறாக எடுத்துகொள்ளாதீர்கள். முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் சீர்திருத்தங்கள் தேவை. அரசியல், சமூக பொருளாதார, மத சீர்திருத்தங்கள் தேவை. முஸ்லீம்கள் தங்கள் தங்கள் நாட்டு இஸ்லாமின் பாரம்பரியத்தையும் பன்மைத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும், பரஸ்பர மரியாதையும் மீட்டெடுக்கவேண்டும். செயிண்ட் காத்ரீன் கிறிஸ்துவ துறவிகளுக்கு நபிகள் முகம்மது எழுதிய கடித்த்திலும், அல்லது “convivencia” என்று மத்தியகால முஸ்லீம் ஸ்பெயின் அரசில் அழைக்கப்பட்ட சேர்ந்து வாழ்தலிலும் அவர்கள் கண்டெடுக்கவேண்டும்.
முஸ்லீமல்லாதவர்களிடமிருந்தும், முன்னாள் முஸ்லீம்களிடமிருந்தும் இஸ்லாமில் சீர்திருத்தத்துக்கான சோம்பேறித்தனமான குரல்கள்தான் அவர்களுக்கு வேண்டாம். இவை அனைத்துமே மேம்போக்கானவை, மிகவும் எளிமைப்படுத்தப்பட்டவை, வரலாற்று பார்வை அற்றவை. வெறும் வெற்று கோஷங்களிலும், ஒரு சில சொற்கோர்வைகளிலும் இவற்றை கூறுவது எளிது. வரலாற்று ரீதியான பார்வையும், மூல காரணங்களை ஆராய்வதுமே தேவையானது. முஸ்லீம் படிப்பாளிகளின் மற்றும் ஆய்வாளர்களின் குரல்களை ஒதுக்கிவிட்டு தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் குரல்களை மையப்படுத்துவதுதான் இப்போது நடக்கிறது.
உதாரணமாக, ஹிர்ஸி அலி, அமெரிக்க மீடியா பேட்டிகளிலும், நியூயார்க் டைம்ஸ்லிருந்து பாக்ஸ் நியூஸ் வரைக்கும், எளிய கேள்விகளால் பாராட்டப்படுகிறார். ஜான் ஸ்டூவர்ட் என்ற நகைச்சுவையாளர் மட்டுமே, தனது டெய்லி ஷோவில், தூய கிறிஸ்துவத்துக்கான சீர்திருத்தம் நூற்றாண்டுகால வன்முறையையும் படுகொலைகளையுமேதானே உருவாக்கியது என்ற முக்கியமான கேள்வியை கேட்டார்.
இஸ்லாமிய மதத்துக்கு லூதர் செய்தது போல, இன்று யாரேனும் செய்யமுடியுமென்றால், அது ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதிதான். இவர்தான் தூய இஸ்லாத்தின் பெயரால், கற்பழிப்புகளையும் கொள்ளைகளையும் செய்துகொண்டிருக்கிறார். இன்னும் லூதரை போலவே, யூதர்களின் நண்பராகவும் இல்லை. மிகவும் எளிமையாக இஸ்லாமின் சீர்திருத்தத்தை கோருபவர்கள் அவர்கள் எதற்கு விரும்புகிறார்கள் என்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
–
*மெஹ்தி ஹசன் அல்-ஜஜீரா ஆங்கில தொலைக்காட்சியில் பணிபுரிகிறார்.
மொபெ. ஆர்.கோபால்
- இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?
- தொடுவானம் 72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்
- இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்
- முகநூல்
- தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்
- தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்
- உதவும் கரங்கள்
- ஒர் இரவு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10
- பொறி
- மூன்றாம் குரங்கு
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- எழுதவிரும்பும் குறிப்புகள் நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வு
- இளைய தலைமுறை மறந்துபோன சோத்துப்பாறையும்-ஊன்சோறும்
- விழிப்பு
- நான் அவன் தான்
- யானையின் மீது சவாரி செய்யும் தேசம்
- திரை விமர்சனம் – காக்கா முட்டை
- மிதிலாவிலாஸ்-22
- கல்பீடம்
- ஒரு நிமிடக்கதை – நிம்மி
- தெருக்கூத்து
- பூகோளப் பருவ மாறுதலின் எதிர்காலக் கணிப்பீடுகளை விளக்கமாக இப்போது நாசா வெளியிடுகிறது