முருகபூபதி
சமீபத்தில் அவுஸ்திரேலியா தலைநகர் மாநிலம் கன்பராவுக்கு இரண்டு நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தேன்.
ஒன்று அங்கு வதியும் நண்பர் நித்தி துரைராஜா ஒழுங்கு செய்த கலை, இலக்கிய சந்திப்பு அரங்கு. மற்றது எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்காக அதன் துணைத்தலைவர் பல் மருத்துவர் ரவீந்திரராஜா எற்பாடு செய்திருந்த தகவல் அமர்வு நிகழ்ச்சி.
எனக்கு முன்பின் அறிமுகமில்லாத அன்பர் திரு. சிவசபேசன் அவர்களின் இல்லத்தில் நான் தங்குவதற்கு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சபேசனின் மனைவி கலா அவர்கள் எனக்கு முன்பே நன்கு பரிச்சயமான மூத்த பிரஜைகள் சங்கத்தின் தலைவர் (அமரர்) தாமோதம்பிள்ளை அவர்களின் புதல்வி என்பது அங்குசென்ற பின்னர்தான் தெரியும்.
சிவசபேசன் அவர்கள் கலை, இலக்கிய சந்திப்பில் நடேசனின் மலேசியன் ஏர்லைன் 370 சிறுகதைத்தொகுதி பற்றிய விமர்சன உரையை நிகழ்த்தவிருப்பதாகவும் அங்கு சென்ற பின்னர்தான் அறிந்துகொண்டேன்.
சிவசபேசன் உரையாடும் பாங்கும் சிரிக்கும் தோரணையெல்லாம் எனது நண்பரும் முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான மெல்பனில் வதியும் காலாநிதி காசிநாதர் அவர்களையே அடிக்கடி நினைவூட்டியது. உலகில் ஒருவரைப்போல் ஏழு பேர் இருப்பார்கள் எனச் சொல்வார்கள். அது உண்மைதானோ…?
பொதுவாக பல நூல்வெளியீட்டு அரங்குகளில் நூலைப்பற்றிப்பேசாமல், மேலோட்டமாக நுனிப்புல் மேய்பவர்களைத்தான் பார்த்திருக்கின்றேன். அல்லது வாசகர்களுக்கு வேலை கொடுக்காமல், சிறுகதைத் தொகுதியாயின் அனைத்துக் கதைகளையும் பந்தி பந்தியாக வாசித்துவிட்டு செல்பவர்களையும், நல்ல நடை, நல்ல தமிழ், நல்ல வார்த்தைகள் சிறந்த படைப்பு என்று மீண்டும் மீண்டும் சொன்னதையே திருப்பிச்சொல்லி, ஆசிரியர் மேலும் இதுபோன்ற நூல்களைத்தரவேண்டும் என்றும் முத்தாய்ப்பாக சொல்லிவிட்டு ஆசனத்தில் அமர்ந்துவிடுபவர்களையும்தான் பார்த்திருக்கின்றேன்.
ஆனால், அன்று நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் முதல் நாள் இரவு கண் விழித்து அந்த சிறுகதைத்தொகுதியை ஒரு வரியும் விடாமல் படித்துவிட்டு குறிப்புகள் எடுத்துக்கொண்டு, மறுநாள் பகல்பொழுதில் என்னையும் அருகில் வைத்துக்கொண்டு சில மணிநேரங்கள் தனது மதிப்பீட்டை வெளிப்படுத்திவிட்டே அன்பர் சபேசன் அவர்கள் தமது உரையை செப்பனிட்டார்.
எனக்கு அந்த அனுபவம் புதுமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தமையால் வாசிப்பு அனுபவம் குறித்த இந்தப்பதிவை எழுதுவதற்கு எண்ணினேன்.
சபேசன் அவர்கள் நடேசனின் முதலாவது சிறுகதைத் தொகுதியான ( இதற்கு முன்னுரை எழுதியவர் இலங்கையில் மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப் ) மலேசியன் ஏர்லைன் 370 இ ல் இடம்பெற்ற 19 சிறுகதைகளையும் முழுமையாக படித்துவிட்டு – முதலில் அவை பற்றிய சுருக்கமான தமது நயத்தலை ஆங்கிலத்தில் கட்டமிட்டு பதிவு செய்தார்.
அனைத்துக்கதைகளிலும் போரின் கொடுமை பதிந்திருப்பதையும் சமூகப்பிரச்சினைகள், இனங்களின் உறவுகள், உளவியல் காரணங்கள் என்பன இழையோடுவதையும் சுட்டிக்காட்டி, படைப்பாளி நேரடியாக எந்தவொரு செய்தியையும் சொல்லாமல் மறைபொருளாகவே வாசகர்களுக்கு உணர்த்துவதற்கு முயன்றிருப்பதையும் தன்னால் அவதானிக்க முடிகிறது எனச்சொல்லியவாறு தமது மதிப்பீட்டை தமது மடிக்கணினியில் பதிவுசெய்துகொண்டிருந்தார்.
ஒவ்வொரு சிறுகதையிலும் ஏதாவது ஒரு முக்கிய அம்சத்தை எடுத்து சில நிமிடங்கள் உரையாடினார்.
நானும் எனது கருத்துக்களை உடனுக்குடன் சொன்னேன். அவருடன் பேசப் பேச எனக்கு முன்னாலும் ஒரு புதிய உலகம் விரிந்தது.
அவர் ஆங்கிலத்தில் நிறைய வாசித்திருப்பவர். கன்பராவில் நித்தி துரைராஜா முதலான நண்பர்களுடன் இணைந்து வாசகர் வட்டம் அமைத்து நூல்களை பரிமாறி தத்தமது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.
அனுபவம் சிறந்த பள்ளிக்கூடம் என்பார்கள்.
அன்று திரு. சபேசன் அவர்களுடன் கலந்துரையாடியபொழுது, எனக்கு மூத்த இலக்கிய விமர்சகர் க.நா.சுப்பிரமணியமும் மலேசியா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்களும்தான் நினைவுக்கு வந்தார்கள்.
க.நா.சு. படித்திருக்கிறீர்களா…? என்ற தலைப்பில் தான் படித்த சிறந்த நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள் நூல்கள் பற்றி தமது வாசிப்பு அனுபவத்தை இரண்டு பாகங்களில் எழுதியிருப்பவர். பேராசிரியர் இரா. தண்டாயுதம் – பாரதி முதல் சுஜாதா வரையில் என்ற நூலை எழுதியிருக்கிறார். இதன் முதல் பாகத்தில் பாரதியார் முதல் ஆர். வி. வரையில் மொத்தம் 30 சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து தமது வாசிப்பு அனுபவத்தை விரிவாக பதிவு செய்தவர்.
அந்த நூலின் இரண்டாம் பாகம் வெளிவந்த தகவல் தெரியவில்லை. க.நா.சு.வும் தண்டாயுதமும் இன்று எம்மத்தியில் இல்லை. அவர்களின் குறிப்பிட்ட நூல்கள் என் போன்றவர்களுக்கு பாட நூலாகவே இன்றும் எனது வீட்டு நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பெரும்பாலான நூல் வெளியீடுகளில் நூல்களின் சிறப்பு மற்றும் முதல் பிரதிகளைப்பெற்று படங்களுக்கு போஸ் கொடுப்பவர்களில் எத்தனைபேர், பின்னர் நேரம் ஒதுக்கி அவற்றைப்படித்தார்கள்….? படித்துவிட்டு நூலாசிரியர்களுக்கு தமது வாசிப்பு அனுபவத்தை சொன்னார்கள்…? முதலான கேள்விகளை அவரவர் மனச்சாட்சிக்கு விட்டுவிடுவோம்.
இதழ்கள் பத்திரிகைகளுக்கு தபாலில் அனுப்பப்படும் நூல்களும் பொதி பிரிக்கப்படாமல் ஆசிரிய பீடத்து அலுமாரிகளில் தூசி படிந்திருக்கும் தகவலும் அறிவோம்.
நடேசனின் மலேசியன் ஏர் லைன் 370 சிறுகதை – கடந்த 2014 மார்ச் மாதம் காணாமல்போன மலேசிய விமானம் பற்றிய பூரண விளக்கக் கதையல்லாவிடினும், கணவனால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை சித்திரிக்கும் கதை. காணாமல் போன அந்த விமானத்துடன் கதை பின்னப்பட்டிருந்தது.
குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டால், வெறுப்பு எந்த ரூபத்திலும் வெளிப்படும் என்பதற்கு அச்சிறுதை சிறந்த உதாரணம் எனச்சொன்ன சபேசன் – இனங்களுக்கிடையில் ஏற்படும் விரிசல் எப்படி இலங்கையில் நீடித்த போராக வெடித்தது என்பதையும் நடேசனின் கதைகள் மறைபொருளாக சித்திரிக்கின்றன என்றார்.
போர் எவ்வளவு கொடுமையானது என்பதையும் அவர் மகாபாரதத்திலிருந்தும் விளக்கினார். அவரது விளக்கம் நான் முன்பு கேட்டு அறியாதது.
கிருஷ்ணரை, கௌரவர்களிடம் தூது அனுப்புவதற்கு முன்னர் அவருடன் உரையாடும் தருமர், ” முதலில் அரசுரிமையில் சரி பங்கு கேளுங்கள். முடியாது எனச்சொன்னால் ஐந்து ஊர்களைக் கேளுங்கள், அதுவும் முடியாது எனச்சொன்னால், இறுதியில் ஐந்து வீடுகள் கேளுங்கள்” எனச்சொல்கிறார்.
இயல்பிலேயே முரட்டுத்தனமும் கோபமும் கொண்டிருக்கும் வீமன் வெகுண்டு எழுகின்றான். துரியோதனனிடம் பிச்சையா கேட்கிறீர்கள்…? என்று வாதிடுகின்றான்.
அதற்கு தருமர் போரினால் விளையும் பெரும் துன்பத்தையும் ஈடு செய்ய முடியாத இழப்புகளையும் சொல்கிறார். தம்பியை அமைதிப்படுத்துகிறார்.
தருமர் எப்படி போரை விரும்பவில்லையோ அது போன்று இராமாயணத்தில் வரும் இராவணன் மனைவி மண்டோதரியும் போரை விரும்பவில்லை.
சபேசன் அவர்கள் சொல்லச்சொல்ல எனது மனக்கண்ணில் புதிய வாசிப்பு அனுபவம் துளிர்த்தது.
அவர் – விலங்குப்பண்ணை எழுதிய ஜோர்ஜ் ஓவலையும், கடலும் கிழவனும் எழுதிய ஹெமிங்வேயையும் தனிமையில் நூறு வருடங்கள் எழுதிய கப்ரியேல் கார்ஸியா மாக்குவெஸ்ஸையும் நினவுபடுத்தினார்.
அன்றையதினம் பல மணிநேரங்கள் செலவிட்டு எழுதிய தமது மதிப்பீட்டுரையை அன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கும்பொழுது பவர்பொயின்டில் (Power Point) விளக்கமளித்தார். இதுபோன்ற பவர்பொயின்ட் உரைகளை மாநாடுகள் கருத்தரங்குகளில் ஏற்கனவே பார்த்திருந்தாலும் சிறுகதை இலக்கியத்திற்காக – அதுவும் தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை நூலுக்கு அவ்வாறு கடினமாக உழைத்து தமது உரையை அவர் வெளிப்படுத்திய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது.
இதுபோன்ற முயற்சிகளை எம்மவர் மத்தியில் நாம் அறிமுகப்படுத்தல் வேண்டும்.
அன்றையதினம் அவரது உரையைத் தொடர்ந்து காண்பிக்கப்பட்ட பேராசிரியர் மௌனகுருவின் இரவணேசன் கூத்து ஒளிப்படக்காட்சியிலும் மண்டோதரியின் குரல் போருக்கு எதிரானதாகவே வீச்சுடன் வெளிப்பட்டது.
நடேசனும் ஆங்கிலத்தில் பல படைப்புகளை வாசித்திருக்கும் அனுபவத்தையும் தாம் அந்த நூலில் கண்டுகொள்ள முடிந்திருப்பதாகச்சொன்ன சபேசன், தமிழில் அறிமுகமாகியிருக்கும் பல ஆங்கிலச்சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் பதிவு செய்திருப்பதை எதிர்காலத்தில் அவர் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தற்கொலைப்போராளி என்ற சிறுகதையை நடேசன் தவிர்த்திருக்கலாம் என்று முன்னுரை எழுதிய தெளிவத்தை ஜோசப் ஏன் எழுதினார் என்பது குறித்தும் சபேசனுடன் உரையாடினேன்.
தற்கொலைப்போராளி எவ்வாறு உருவாகின்றான் என்பது பற்றி வாசகர்களும் அறிந்திருக்கத்தானே வேண்டும். அதிலிருக்கும் உளவியலை நாம் புறக்கணிக்கமுடியாது என்றார்.
கன்பரா சபேசன் அவர்களுடனான அந்த சந்திப்பு மிகவும் பெறுமதியானது. வாசிப்பு அனுபவம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், அந்த அனுபவத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம்.
விமர்சகர் க.ந.சு. அவர்களும் பேராசிரியர் தண்டாயுதம் அவர்களும் தமது மதிப்பீடுகளை எழுதுவதற்கு முன்னர் தமது வாசிப்பு அனுபவத்தை எவ்வாறு குறித்துக்கொண்டிருக்கக்கூடும் என்பதையும் அன்று எனது மணக்கண்களின் ஊடாக தரிசித்தேன்.
எழுதுவதற்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ – அதுபோன்று சிறந்த வாசிப்பு அனுபவத்திற்கும் உழைப்பு முக்கியமானதுதான்.
—0—
letchumananm@gmail.com
- இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?
- தொடுவானம் 72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்
- இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்
- முகநூல்
- தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்
- தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்
- உதவும் கரங்கள்
- ஒர் இரவு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10
- பொறி
- மூன்றாம் குரங்கு
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- எழுதவிரும்பும் குறிப்புகள் நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வு
- இளைய தலைமுறை மறந்துபோன சோத்துப்பாறையும்-ஊன்சோறும்
- விழிப்பு
- நான் அவன் தான்
- யானையின் மீது சவாரி செய்யும் தேசம்
- திரை விமர்சனம் – காக்கா முட்டை
- மிதிலாவிலாஸ்-22
- கல்பீடம்
- ஒரு நிமிடக்கதை – நிம்மி
- தெருக்கூத்து
- பூகோளப் பருவ மாறுதலின் எதிர்காலக் கணிப்பீடுகளை விளக்கமாக இப்போது நாசா வெளியிடுகிறது