பிரம்மலிபி- நூல் மதிப்புரை

பிரம்மலிபி- நூல் மதிப்புரை
This entry is part 21 of 23 in the series 21 ஜூன் 2015

சத்யானந்தன்

IMG_20150620_191306845எஸ்ஸார்ஸியின் பிரம்மலிபி உள்ளிட்ட சிறுகதைகளில் பலவற்றை நாம் திண்ணையில் வாசித்திருக்கிறோம். படிக்காதவற்றையும் சேர்த்து ஒரு தொகுதியாக வாசிக்கும் அனுபவம் நமக்கு அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள கதைகள் மனித உறவுகளில் உள்ள முரண்கள் புதிர்கள் இவை கலைமிகுந்த ஓவியங்களாய் நம்முன் விரிகின்றன.

சுழல்-  இந்தக் கதை நடுத்தர வர்க்கத்துக் கனவுகள் எப்படி வணிகமாகின்றன என்பதைப் பற்றிய கதை – கைபேசி எண்களை எப்படித்தான் கண்டுபிடிப்பார்களோ – மாத சம்பளம் வாங்குகிறவர்களுக்கு இலவச நிலம் கிடைத்தது என்று விளம்பரப்படுத்தி அங்கே நேரில் போனதும் ஒரு லட்சம் இரு லட்சம் என்று பேசத் தொடங்கும் நிலம் விற்கும் இடைத்தரகர் கூட்டம். அங்கதமாக எழுதும் அவரது பாணி இதில் பளிச்சிடுகிறது.

அசடு- தனது உடன் பிறந்தவனே தனது வீட்டின் பகுதியை ஊரை விட்டு வெளியில் உள்ளது என்று வாடகைக்கு எடுக்க முன் வராமற் போவது. அது பற்றி எந்தப் புகார் மனப்பாங்குமில்லாமல் தன்னலமும் சுயகாரியப்புலித்தனமும் எப்படி ரத்த உறவுகளைக் கூட நீர்த்துப் போக வைக்கிறது என்பதைச் சுட்டும் கூர்மையான கதை

ஆகவே – மார்க்ஸியம் பற்றிய கருத்தரங்கே கதையாகிறது. மார்க்ஸிய சிந்தனைத் தடம், வர்க்கப் போராட்டம் பற்றிய தெளிவு இவை எல்லாம் ஒரு அமைப்பு (கட்சியோ தொழிற்சங்கமோ) என்னும் சதுரத்துக்குள் எப்படி புதுப்புது வடிவங்களுக்கும் மாறி விடுகிறது. எத்தனை சமாளிப்புகள், சமாதானங்கள். மார்க்ஸியம் பொருளாதாரத் தத்துவமா மானுடம் உய்வு பெறும் சமதருமத் தத்துவமா இரண்டுமேயா என்னும் பிரமிப்பும் விளிம்பு நிலை மக்களுக்கு வேறு துணையில்லை என்னும் தெளிவும் உழைப்பாளிக்கு உரிய இடம் வேண்டும் என்னும் கனவுகளும் உள்ள ஒரு தொழிற்சங்கவாதிக்குள் இருக்கும் ஆறா வேதனையை வெளிப்படுத்தும் படைப்பு.

காசிக்குத்தான் போனாலென்ன- நட்போ அல்லது பரிச்சயம் மட்டுமோ ஒரு ஆளைப் பயன் படுத்திக் கொள்ளத் தனித்திறமை வேண்டும். அதற்கான கழுகு மனப்பாங்கு ஒன்று வேண்டும். காசிக்குப் போய் ஔர் புரோகிதர் முகவரியில் போய் நிற்கும் தமிழ்குடும்பங்களை உள்ளே அழைக்கக்கூட அந்த இல்லத்தரசிக்கு விருப்பமில்லை. வீட்டுவாசல் பூட்டைத்திறக்காமலே “இன்று போய் நாளை வா என்று அனுப்பி விடுகிறார். ஏனெனில் அவர்களுக்கு வருமானம் தராமல் காசியில் கருமகாரியங்களை முடித்த சனியன்கள் இவை. மறுநாள் அசட்டுத்தனமாகப் போய் நின்றால் ஒரு ஆளுயரப் பெட்டி அவர்களது தூரத்து உறவுக்குத் தரச் சொல்லி தலையில் கட்டப்படுகிறது. இந்த அனுபவம் தரும் பாடத்தால் கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது. சமூகத்தின் தன்னலப் போக்கு மாறப்போவதே இல்லை. நமக்கு தெரிந்த கதை. அவர் படைப்பில் அதன் அனைத்துப் பரிமாணங்களும் நம்முன் விரிகின்றன.

பிரம்ம லிபி- நுட்பமான கதை. நாம் விதி என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் பல தொடர் நிகழ்வுகள் ஒரு மூலப் பிசகின் மீது பின்னிக் கொண்டவை. குடிகாரனாயிருந்தாலென்ன என்று தன் தங்கைக்கு ஒருவனை மணம் முடித்தவன். தங்கையின் மகள் தனது அத்தைக்கு ஒரு தங்கச் சங்கிலியை இரவலாகக் கொடுக்க அவள் கணவன் அதைக் குடிக்காக விற்று விடுகிறான். தன் அப்பாவுக்குத் தெரியாமல் கொடுத்ததற்க்காக வருந்தி அந்தப் பெண் குழந்தை தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் அத்தைக்காரி அவள் பிணத்தைக் கூடப் பார்க்க வராமல் சாவுக்குப் போவதாகச் சொல்லி எங்கோ போயிருக்கிறாள். அண்ணன் வருந்துகிறான். விதியை நொந்து கொள்கிறான். வாழ்க்கையின் மர்ம முடிச்சுகள் ஒன்றோடு ஒன்று பின்னியவை. கதையின் இந்தக் கோணம் நம் சிந்தனையைத் தூண்டும்.

அந்த நாளும் ஒரு நாளே- பணம் சம்பாதிப்பதற்காக புலம் பெயரும் தமிழர் கதி என்ன எந்த அளவு வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை மனதில் தைக்கும் படி சித்தரிக்கும் கதை. சின்னஞ்சிறு குழந்தைகளின் தகப்பன் துபாயில் விபத்தில் இறந்து விடுகிறான். அவனைப் பணியில் அமர்த்திய நிறுவனம் உடலை அனுப்பி வைக்கத் தயாராக இல்லை. பதிலாகப் பணம் தர ஒப்புகிறது. வேறு வழியின்றி அவன் அடக்கம் செய்யப்பட்ட காணொளியோடு மனதை சமாதானப்படுத்திக் கொள்ள ஒப்புகிறார்கள்.

“கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்” & “அலைகள்” இரண்டும் வெவ்வேறு கதைகள் ஆனால் மையமான வலி ஒரு தொழிற்சங்கவாதியின் (உண்மையான ஈடுபாடு உள்ள தொழிற்சங்கவாதி) மனத்தில் ஆறாமல் இருக்கும் ஒரு ஏமாற்றம். கண்ணீர் விட்டோம் முன்னுதாரணமான ஒரு தொழிற்சங்கத்தலைவியின் கதை. புற்று நோயால் பாதிக்கப் படும் வரை அயறாது தோழமையுடன் பணியாற்றிவர். அவரது துக்கத்தில் கூட தொழிற்சங்க உட்பூசல் பேசுமளவு உறுப்பினர்கள் தலைவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள். அலைகள் கதையில் தொழிற்சங்க ஒற்றுமைக்காக, தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபடுவோருக்குள் கைகலக்கும் அளவு கருத்து வேறுபாடுகள் ஏன்? பதில்கள் அனைவருக்கும் தெரியும். தொழிலாளர் ஒரே வர்க்கம் என்னும் அடையாளம் போய் ஜாதி மற்றும் மத அடிப்படையிலான அடையாளங்கள் எப்போது புகுந்தன?

குறி- சாமியின் அருள்வாக்கு ஒரு பெண் மீது சாமி வருவது இது கிராமப்புறங்களில் உள்ள நம்பிக்கை. இது ஒரு கிராமத்துக்கே நன்மை செய்யும் ஒன்றாக புறக்கணிக்கப்பட்ட கிராமக் கோயிலுக்கு மக்கள் மீண்டு வரும் ஒன்றாக அமைகிறது. அரசுப்பணியில் இருந்தாலும் எஸ்ஸாஸிக்கு கிராம மக்களின் நம்பிக்கைகள் சடங்குகளில் நல்ல பரிச்சயம் இருக்கிறது.

மனம்-நகைச்சுவை ததும்ப அண்டை விட்டாருக்குள் இருக்கும் போட்டி பொறாமையை மையப்படுத்திய கதை இது. இரு அண்டை வீட்டுக்காரர்கள் ஒரே ‘நர்ஸரி’யில் முருங்கைக் கன்று வாங்கி வளர்க்கிறார்கள். ஒருவருக்கு வளர்கிறது மற்றவருக்குப் பட்டு விடுகிறது.அண்டை வீட்டுக்காரரிடம் ஒரு குச்சியைக் கேட்டுவாங்க தயக்கம்.  பல வைத்தியம் பார்த்து இறுதியாக அண்டை வீட்டுக்காரர் உடைத்துப் பொட்ட ஒரு கிளையை எடுத்துவைத்து நடுகிறார். நன்றாக செழித்து வளர்கிறது.  காய்த்ததும் அண்டை வீட்டுக்காரருக்குக் காய்களைக் கொடுக்கப் போகும் போது அவர் தன் வீட்டில் இவர் கிளை எடுத்து வந்ததைப் பார்த்ததைக் குறிப்பிடுகிறார்.

நாய்ப்பிழைப்பு- திண்ணையில் வெளிவந்த போது நான் மிகவும் ரசித்த கதை இது , தாய் நாய் ஒன்று ஆறு குட்டிகளை ஒரு வீட்டுமாடிப்படியில் ஈன்றுவிடுகிறது. வீட்டுச் சொந்தக்காரர் அதை வெளியேற்றச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோற்று விடுகின்றன அருவருப்புக்கும் ஜீவகாருண்யத்துக்கும் இடையே அவர் செய்யும் போராட்டமும் அவருடன் போராடி நாய்தன் இடத்தை மீட்டுக் கொள்வதும் “நாய்ப்பிழைப்பு”. மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் புன்னகைக்க கதையில் நிறையவே இருக்கிறது.

நிழல்- வித்தியாசமான கதை. கிரிமினாலஜியில் முனைவர் பட்டம் பெற்றவர் ஒரு காவல் நிலையத்தில் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் பயிற்சியில் இருக்கும் காவலர்களுக்கு. சொற்பொழிவு பற்றிய சிந்தனையில் மூழ்கி பயணச்சீட்டு எடுக்க மறந்து விடுகிறான். அவனிடம் பணம் இல்லை. அவனுக்கு அபராதம் விதித்தவர்கள் அதே காவல் நிலையத்துக்கு அவனை அழைத்து வருகிறார்கள்.  இவன் பின்னாலேயே வகுப்பில் நுழைந்த அவர்களுக்கு வகுப்புக்குள் அனுமதி மறுக்கப்படுகிறது. குழம்பி அவர்கள் வெளியேறுகிறார்கள். நொடியில் அவன் நிலை தலைகீழாய் மாறி விடுகிறது. இடம் பொருள் ஏவல் என்று எளிதாகக் கூறலாம். கதை அதை சுவைபட விளக்குகிறது. நமக்கு இடத்துக்கு இடம் நிலை ஏன் மாறுகிறது என்று பிடிபடுகிறது.

சின்ன சமாசாரம்- நுட்பமான கதை. செருப்பு சின்ன சமாசாரம். அது பழையதானதும் அதைத் தைப்பது மற்றும் புதிது வாங்குவது அதை விட சின்ன சமாசாரம். ஆனால் கதைசொல்லிக்கு தனது பழைய செருப்புக்குப்பின் புது செருப்பை செருப்புத்தைப்பவர் மூலம் தைக்கும் போது அதில் உள்ள வியாபார நுணுக்கம், மற்றும் புது செருப்புப் பொருந்தாமல் போனால் பழைய செருப்பே ஆறுதல் என்னும் ஞானம் எல்லாம் கிடைக்கிறது. எளிய நிகழ்ச்சியில் மனப்பாங்கு செய்யும் வித்தியாசத்தை விளக்கும் கதை.

உறவு- இதே போன்ற ஒரு கதையை என் பாட்டி என்னிடம் சற்றே வேறு மாதிரி நடந்ததைக் கூறினார். பலர் கூடும் இடத்தில் அதாவது கல்யாண வீட்டில் மணப்பெண்ணுக்குத் தலைவாரிவிடும் (தூரத்துச்) சித்தி தலையில் மணப்பெண்ணின் வைர மோதிரம் தற்செயலாகக் காணாமற் போனது திருட்டுப் பழியாக விழுகிறது. சித்தியின் கணவர் அந்தப் பெண் யாரிடம் அதைக் கொடுத்தாள் என்று முதற்கட்ட விசாரணை செய்யும் போதே அது மணப்பெண்ணின் அம்மா மறதியாக ஒரு இடத்தில் வைத்தது வெளிப்படுகிறது. அதற்குள் உறவினர் திருடிப்பட்டம் கட்டுமளவு போய் விடுகிறார்கள். தனது நகையையே அடமானம் வைத்துத் திருமணம் வந்த ஒரு உறவுக்கு பிற உறவினர் தரும் பரிசு இது. உறவு என்பதின் ஆழம் என்ன நம்பகத்தன்மை என்ன என்னும் கேள்வி நமக்கு சமூகத்தின் பல்வேறு முகங்கள் முகமூடிகளைத் தோலுரித்துக் காட்டுகிறது.

வலி- நம் பார்வையில் என்றேனும் ஒருமுறை பட்டிருக்கும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தாயும் மகளும் ரயில் நிலையத்தில் பதட்டமாக இருக்கிறார்கள். மகளின் உடலெங்கும் தாம்புக் கயிற்றால் அடிபட்ட காயங்கள். குடிகாரனிடமிருந்து அவளைக் கூட்டிச்செல்ல வந்த தாய் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறாள் தனது ஊர் ரயிலுக்காக. குடிகார மருமகன் வந்துதன் மனைவியை அடித்து இழுத்துப் போகிறான். கதை சொல்லிக்கு நிகழும் வலி நம்மையும் ஊடுருவுவது கதையின் வலிமை.

தரி-சினம்- பிறகதைகளை விட எளிமையானது. ஷேத்திரம் எனக் கொண்டாடப்படும் கோயில்களுக்குப் போய்வருவது இனிமையான அனுபவமாக அனேகமாக இருப்பதில்லை. திருப்பதிக்குத் தாய் தந்தையுடன் போய் வந்த போது ஒருவருக்கொருவர் எரிச்சல் படும்படி இருந்த அனுபவம்பற்றிய கதை. கதை ஏன் எழுதப்பட்டது என்பதை என்னால் யூகிக்க முடியும். தந்தை காலமான பின் அவருடன் இருந்த இனிப்பு கசப்பு இரண்டு நினைவுகளும் மனதில் ஓடியபடியே தான் இருக்கின்றன. புதியபுரிதல்கள் நிகழ்கின்றன.

வாசம்- ஊரில் ஒன்றாகப் பழகிய நண்பன் சென்னைக்கு வந்தபின் தனது மகனின் திருமணத்துக்குப் பத்திரிக்கை கொடுக்கக் கூட மறந்து விடுகிறான். அதை நினைவு படுத்தும் போதும் வருத்தமில்லை. இந்தக் கதை வெளியூரில் பணிபுரிந்தவர்களுக்கு எளிதில் பிடிபடும். சென்னையின் வாழ்க்கைக் கட்டாயமா அல்லது நகரின் ஒட்டுதலில்லாத் தன்மையின் விளைவா. விடையில்லாத கேள்விகள்.

வாழ்க்கையின் வலி மிகுந்த தருணங்களை அங்கதத்துடன் இலக்கிய வடிவமாக்கும் முயற்சிகள் இந்தச் சிறுகதைகள். வாசகன் அந்த வலியைத் தனதாக உணருகிறான். இதுவே அவரது பெரிய வெற்றி.

sathyanandhan.mail@gmail.com

Series Navigationகும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்மஞ்சள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *