நாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1

This entry is part 13 of 23 in the series 21 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன்

தூக்கு தண்டனை கைதிகள் இருவர். செய்யாத கொலைகளுக்கு மரணம். உண்மையில் யார் கொலையாளி? சிக்கலான முடிச்சுகளுடன் ஷ்ரத்தாவின் புதிய நாடகம்.
வங்கிக் கொள்ளையில், விபத்தாக முடியும் காசாளரின் மரணம். குற்றம் செய்ததாக கைது செய்யப்படும் அண்ணாமலை உண்மையில் அந்த வழக்கில் நிரபராதி.
காதலித்து மணக்கும் காயத்திரியை, காதல் கணவன் ரகுராமனே கொன்றதாக வழக்கு. அவன் நிரபராதி என்றால் கொன்றது யார்?
ஒரு ஆய்வு நூலை எழுத, நேரடி அனுபவத்திற்காக, சிறையில் அண்ணாமலையையும் ரகுராமனையும் சந்திக்கும் விக்னேஷ், ஒரு நிருபர் பார்வையில் அவிழ்க்கும் முடிச்சு, நீதி சாவதில்லை என்கிற தத்துவத்தின் சாரம்.
சிவாஜி சதுர்வேதியை தவிர மற்ற எல்லோருமே இளைஞர்கள். மேடை நிர்வாகத்தை திறம்பட கவனித்தவர்கள் இளம் பெண்கள். ஷ்ரத்தா, நாடக முடிவில் அவர்களை அறிமுகப் படுத்தியிருக்கலாம். அசத்தி விட்டார்கள் இந்த இளமை பட்டாளம்.
ஜெயிலர் சிவகடாட்சமாக மேடையின் ஒரு பகுதியை ஆக்ரமித்து (!) சகஜ பாவங்களால் கவனம் ஈர்க்கிறார் சிவாஜி. இன்னொரு பக்கம் ரகுராமாக சூரஜ்ஜும், அண்ணாமலையாக ஆனந்த் ராமும் பட்டையைக் கிளப்புகிறார்கள். காத்தாடியின் நாடகத்தில் சின்ன பாத்திரங்களில் வந்த கார்த்திக் பட் இதில் விக்னேஷ். நெடிய வசனங்களை அட்சர சுத்தமாக அவர் பேசுவதைக் கேட்பதே சுகம். காயத்திரியாக அர்ச்சனா ஜெயராஜ் படு இயல்பு. முடிச்சு அவிழ்க்கும் முக்கிய பாத்திரத்தில் ‘ இப்படிக்கு நந்தினி ‘ லாவண்யா, கச்சிதம்.
வழக்கின் இன்னொரு கோணத்தை காட்ட உதவும் டேவிட் பாத்திரத்தில் கிரிஷ்,. ஜாகிங்கும் ஜோக்கிங்குமாக அமர்களம் பண்ணுகிறார். பாராட்டுக்கள்.
விவேக் சுவாமிநாதனின் இசையை, இடவெளி விடாமல் ஒலிக்கச் செய்த சுப்புவுக்கு, இந்த நாடக வெற்றியில் பிரதான பங்குண்டு.
நகைச்சுவையே எங்கும் வரக்கூடாது என்கிற கங்கணத்தோடு இயக்கிய டி.டி. சவுந்தரராஜன், தன் முடிவை இன்னொரு முறை பரிசீலனை செய்வது அவசியம். சிரிப்பலைகள் சொற்பமாகவும், ‘ உச் உச் ‘ தவளைகள் அதிகமாகவும் இருக்கும் நாடகம். வெளியில் மழை தூறிக் கொண்டிருந்ததால், பருவ நிலையோடு ஒத்து போனதாக நாம் கொள்ளலாம்.
ஷ்ரத்தா 5 காட்சிகள் மட்டுமே போட்டு திருப்தி பட்டுக் கொள்ளும் குழு. அதற்குமேல் அவர்களுக்கே சலிப்பு வந்து விடும் போல.
சில நல்ல நாடகங்களை, வேறு குழுக்கள் மீண்டும் மேடையேற்ற, அவர்கள் அனுமதி தரலாம். அதனால் நாடகக் கலை வளரும். செய்வார்களா?
ஷ்ரத்தாவின் அடுத்த படைப்பு ஹாரராக இருக்கலாம். அதை மட்டும் தான் அவர்கள் தொடவில்லை. தூண்டில் போட்டாச்சு. மீன் சிக்குகிறதா பார்ப்போம்.
வழமை போல, வித்தியாச காட்சி ஜோடனைகளுடன், அரங்கேறியிருக்கிறது ஷ்ரத்தாவின் கேஸ் நெ. 575/1. பாராட்டுக்கள்.
0

Series Navigationசங்க இலக்கியத்தில் ​வேளாண் பாதுகாப்புபுகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *