ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
திருத்துறைப்பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் கலத்தில் நான் தமிழ்ப்பாடத்தில் வாங்கிய மதிப்பெண் எப்போதும் 15 – ஐத்
தாண்டியதில்லை. அதுவும் 14 1/2 தான் ஆசிரியரின் கருணையால் 15 ஆகும் ; இது வாடிக்கை ! ஆங்கிலத்தில் மட்டும் நான் எப்போதும்
முதல் மாணவன். தமிழில் இவ்வளவு எழுத்துக்கள் இருந்தால் கஷ்டமாக இருக்காதா ? வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் அப்பாவின் கை
என் முதுகைப் பதம் பார்த்ததில்லை. கணிதம் கஷ்டமாக இருந்தது ; அறிவியல் புரியவில்லை ; சமூக அறிவியலில் ஒரே பழங்கதைகள் ;
நீதி போதனை வகுப்புதான் எனக்கு எப்போதும் பிடிக்கும். ஏனென்றால் அதில் தேர்வு கிடையாது. உடம்பு பூஞ்சையாக இருந்ததால்
உடற்பயிற்சி வகுப்பில் அனுமதி பெற்று விளையாட்டு மைதானத்தில் ஓரமாக உட்கார்ந்து கொள்ளலாம் !
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் சினிமாப் பாடல் ஒன்று காதில் விழுந்தது. அதன் சில கருத்துகள் புதுமையாகவும்
நயமாகவும் இருந்தன. காதல் பாடல் என்றாலும் , அப்போது காதலைப்பற்றி ஒன்றும் தெரியாது. மழையில் சிவாஜி கணேசனும்
மாலினியும் பாடும் வாயசைக்கும் ” காணா இன்பம் கனிந்த தேனோ ? ” என்ற பாடல்தான் என் படம் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.
இப்பாட்டுதான் எனக்கு முதலில் கவிதைப் பாடம் நடத்தியது. ” மேகம் யாவும் பேரலையோடு மேளம் போலே முழங்குவதாலே ” என்ற
வரிகள் இடையிடையே வரும் இனிய இசை இழைகளோடு [ ஹம்மிங் ] என் மனத்துள் புகுந்து கிளறின. இந்த உவமையணி என்னை மிகவும்
சிந்திக்க வைத்தது. ” கன்னல் மொழியே மின்னல் யாவும் விண்ணில் வாண வேடிக்கையோ ” என்ற நயம் என்னுள் இலக்கியக் கதவைத்
திறந்துவிட்டது. டி. ஏ. மோதி – பி. சுசீலாவின் அசாதாரணக் குரல்களில் இப்பாடல் எப்போது கேட்டாலும் அலுப்பதில்லை.
15 மதிப்பெண் ‘ சாதனை ‘ எஸ். எஸ். எல். சி. அரையாண்டுத் தேர்விலும் தொடர்ந்தது. தலைமையாசிரியர் என் அப்பாவைக் கூப்பிட்டு,
” ஒங்க பையன் பாஸ் பண்ணிடுவான்… ஒரு வேளை ஃபெயிலாப் போனா தமிழ்லதான் ஃபெயிலாவான். ” என்று சொல்லிவிட்டார். என்
அப்பா வழக்கம்போல் கோபிக்காமல் சாதாரணமாகச் சொன்னார். இந்த மென்மையான எச்சரிக்கை என்னைக் கடுமையாக உஷார்ப்படுத்தியது.
என் வகுப்புத் தோழன் பத்மநாபனோடு சேர்ந்து , ” நான் மனப்பாடம் செய்ததை ஒங்கிட்ட ஒப்பிக்கறேன்… நீ எங்கிட்ட ஒப்பி.. ” என்று
நிபந்தனை போட்டுப் படித்தேன். எஸ். எஸ். எல். சி முழு ஆண்டு அரசு தேர்வில் 56 மதிப்பெண்கள் வாங்கி ‘ மகா சாதனை ‘ செய்தேன்.
1964 – இல் அதிராம்பட்டினம் காதிர் மொகைதீன் கல்லூரியில் சேர்ந்தேன். தமிழ்ப் பேராசிரியர்கள் திரு. அப்துல் கபூர் , திரு. முகமது
பாரூக் [ இருவரும் சகோதரர்கள் ] ஆகியோரிடம் பாடம் கேட்டேன். அவர்களின் சிறந்த போதனை என்னைத் தமிழின் பக்கம் மெல்ல மெல்ல
இழுத்துச் சென்றது. ஒரு கால கட்டத்தில் முற்பகல் கம்பராமாயணத்தில் ‘ குகப் படலம் ‘ கேட்பேன். பிற்பகல் ‘ மந்தரை சூழ்ச்சிப் படலம் ‘
கேட்பேன். எனவே கம்பர் என் மனத்தில் வந்து உட்கார்ந்துகொள்ள ஆரம்பித்தார். இலக்கிய உணர்வு கடுங்காற்று வேகம் கொண்டது. எனவே
கவிதை எழுதவேண்டும் என்ற ‘ விபரீத எண்ணம் ‘ வந்தது. ஆனால் 15 என்ற எண் அடிக்கடி மனத்தில் தோன்றி என் ஆசையில்
மண்ணள்ளிப் போட்டது.
1965 – இல் திருச்சியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். [ பி. யு. சி. ‘ அவுட் ‘ என்று சொல்லவும் வேண்டுமா என்ன ? ]
அங்கு தமிழ் கற்பித்தவர் திரு. ஹூசைன். பெரிய பெரிய வாக்கியங்களை அனாயாசமாக அள்ளி வீசுவார். மாணவர்கள் கட்டுண்டு
கிடப்பார்கள். என் கவிதை ஆர்வம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அப்போது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘ தைப்பாவாய் ‘ படிக்கக் கிடைத்தது.
அந்த அழகுத் தமிழை – இன்பத் தமிழைப் பருகப் பருக என் மனத்திலும் சில் சொற்கள் தேன் பூசிக்கொண்டு திரிந்தன. முதலில் புனைபெயர்
வைத்துக்கொள்ள விரும்பினேன். கண்ணதாசன் என்ற பெயரையொட்டி ‘ முருகதாசன் ‘ என்று பெயர் வைத்துக்கொண்டேன். [ கண்ணதாசன்
போல் புகழ் பெறலாம் என்று அசாத்திய நம்பிக்கை ! ] இடையிடையே விமர்சனமும் எழுதலானேன். [ தி. ஜானகிராமனின் ‘ அக்பர் சாஸ்திரி ‘
புத்தகம் கிடைத்தது ] ‘ தைப்பாவை ‘ யிலுள்ள கவிதையொன்றைத் தழுவி , பெண்ணைப்பற்றி ஒரு கவிதை எழுதினேன். நண்பர் ஒருவர்
என் கவிதை நன்றாக இருப்பதாகச் சொன்னார். தொடர்ந்து மரபுக் கவிதை , புதுக்கவிதை இரண்டையும் படிக்க ஆரம்பித்தேன். 1971 – இல்
திருச்சியிலிருந்து வெளிவந்த ‘ இன்று ‘ என்ற சிறு பத்திரிகையில் என் முதல் கவிதை வெளியானது. நண்பர் பேராசிரியர்
திரு. எஸ். ஆல்பர்ட் என் கவிதை பற்றி , தான் அரை மணி நேரம் பேசியதாகச் சொன்னார். [ நான் அக்கால கட்டத்தில் சொந்த கிராமத்தில்
இருந்தேன் ] அவர் என்ன பேசினார் என்று நான் கேட்கவும் இல்லை ; அவர் சொல்லவும் இல்லை. பின்னர் தீபம் , கணையாழி , சாவி ,
கல்கி ஆகிய இதழ்களில் என் கவிதைகள் வெளிவர , எனக்குச் சற்று தெம்பாக இருந்தது.
ஆசிரியர் பணியில் இருந்தபோது கவிதைத் தொகுப்பு கொண்டுவர ஒரு பதிப்பகத்தில் கவிதைகள் தந்தேன். முன்னட்டை நவீன ஓவியம்
வரைந்து கொடுத்தவர் நண்பர் கிரி. பதிப்பகத்தாரிடம் கொடுத்த கவிதைகளின் கதி என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை.
சொந்தமாகப் புத்தகம் போடலாம் என்றால் பொருளாதாரம் என் காதைப் பிடித்துத் திருகியது. என் பெண்டாட்டியின் சங்கிலி அவள்
கழுத்திலேயே இருக்கட்டும் என்று நான் எண்ணியதால் என் முதல் தொகுப்பான ‘ கவசம் ‘ வெளிவர எனக்கு 62 வயதாகிவிட்டது. அதற்கு
வரவேற்பு கிட்டவே அடுத்த தொகுப்பிற்குத் தயாரானேன். இரண்டாவது தொகுப்பு ‘ உரிய நேரம் ‘ வெளிவந்தது. என் கவிதை ஒன்று
திருச்சி பெரியார் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டது. அதே கல்லூரியில் தமிழ் முதுகலை மாணவர் ஒருவர் என் கவிதைகளை
ஆய்வு செய்து , ஆய்வேட்டை என்னிடம் தந்தார். இடையிடையே என் விமர்சன ஆர்வம் தினமணி , கணையாழி ஆகிய பத்திரிகைகளில்
கட்டுரைகளாகவும் பிற பத்திரிகைகளில் கடிதங்களாகவும் பிரசுரமாகி நல்ல கவனம் பெற்றன. இவற்றின் பலனாக சென்ற ஆண்டு
‘ கவிதையும் என் பார்வையும் ‘ என்ற 320 பக்கமுள்ள விமர்சன நூல் வெளிவந்தது.
ஒரு சினிமாப் பாடல் கவிதை விதை தூவ , தேர்ந்த பேராசிரியர்கள் கற்பிக்க ஒரு சாதாரண மாணவன் கவிஞனாகவும் விமர்சகனாகவும்
வளர முடிந்திருக்கிறது… ” எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. ” என்பதில் சற்று மகிழ்ச்சிதான் எனக்கு !
- மிதிலாவிலாஸ்-25
- தொடுவானம் 76. படிப்பும் விடுப்பும்
- என்னுள் விழுந்த [ க ] விதை !
- சண்டை
- பாபநாசம்
- மண்தான் மாணிக்கமாகிறது
- சாகசம்
- வொலகம்
- ஆச்சாள்புரம் [ வையவனின் குறுநாவல்களை முன்வைத்து ]
- திரு நிலாத்திங்கள் துண்டம்
- அந்நியத்தின் உச்சம்
- பிரித்தறியாமை
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4
- கதிர்த்தேய்வு அளப்பாடு முறையில் முந்தைய பூகாந்தத் துருவத் திசை மாற்றக் காலக் கணிப்பு.
- தைராய்டு சுரப்பி குறைபாடு
- லீலாதிலகம் – அறிமுகம்
- கடைசிப் பகுதி – தெருக்கூத்து