பாச்சுடர் வளவ. துரையன்
ஒரே பாசுரம் பெற்ற திவ்யதேச வரிசையில் இடம் பெறுவது திருநிலாத்துண்டம் என்னும் பெயர் பெற்ற திவ்யதேசமாகும். இத்திவ்யதேசம் பல அதிசயங்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டதாகும். முதலில் இத்திவ்யதேசம் ஒரு சைவத்திருக்கோயிலின் உள்ளே இருக்கிறது. ஆமாம்; இத்திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலின் உள்ளேதான் உள்ளது. இதேபோல திருக்கள்வனூர் எனும் திவ்யதேசமும் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயிலுக்குள்ளேதான் இருக்கிறது.
திருநிலாத்துண்டம் மற்றும் திருக்கள்வனூர் இரண்டும் எப்படி சைவத் திருக்கோயில்களுக்குள் வந்தன என்பது தெரியவில்லை. ஒருவேளை நிலாத்துண்டத்தான் கோயிலும், ஏகாம்பரேசுவரர் கோயிலும் எதிர் எதிரே இருந்த போது இரண்டுக்கும் சேர்த்து ஒரே சுற்று மதில் எழுப்பினார்களா அல்லது அக்காலத்திலேயே வைணவ சைவ வேறுபாடு இன்றி இவற்றை அமைத்தார்களா என்பதெல்லாம் தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டியவையாகும்.
இதேபோல வைணவத் திவ்யத்தேசத்தில் சிவபெருமானுக்குக் கோயில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. பாண்டிய நாட்டுத் திவ்யதேசங்களுள் ஒன்றான திருக்குறுங்குடியில் சிவன் சன்னதி இருந்துள்ளதைத் திருமங்கையாழ்வார்,
“அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர்
பக்கம் நின்ற பண்பர் ஊர்போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாயவாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற உண்ணும் குறுங்குடியே” [1798]
என்று காட்டுகிறார்.
மேலும் நிலா என்றாலும், திங்கள் என்றாலும் ஒரே பொருள்தானே? அப்படியிருக்க நிலாத்துண்டத்தான் எனும் திருநாமம் எப்படி ஏற்பட்டது என்பதும் தெரியவில்லை. இத்திவ்யத்தேசத்திற்குப் புராண வரலாறு உண்டு.
அதாவது கைலாசத்தில் ஒருமுறை சிவபெருமானுக்கும் பார்வதி அம்மைக்கும் ஒரு போட்டி ஏற்பட்டது. பார்வதி இந்த ஊருக்கு வந்து ஒரு மாமரத்தின் கீழே தவம் புரிந்தார். சிவபெருமான் அத்தவத்தைச் சோதிக்க எண்ணினார். எனவே தம் நெற்றிக்கண்ணால் தீ ஜ்வாலை எழுப்பி அம்மாமரத்தை எரிக்கத் தொடங்கினார். பார்வது அம்மை தாபம் தாங்காமல் உடனே மஹாவிஷ்ணுவைத் தன் மனத்தில் எண்ணித் தியானிக்கத் தொடங்கினார்.
அங்கே ஆபத்பாந்தவனாகத் தோன்றிய திருமால் தம் அம்ருத கிரணங்களால் மழை பொழிவித்தார். மாமரம் தப்பிப் பிழைத்தது. பார்வதி தேவியும் தம் தவத்தைத் தொடர்ந்து செய்தார். அவர் தாபம் தீர்ந்தது. பார்வதி அம்மையின் தாபத்தைத் தீர்த்ததால் அதாவது துண்டித்ததால் இங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்னும் திருநாமம் உண்டாயிற்று என்பர். நிலவினது குளிர்ச்சியான கதிர்களால் பார்வதியின் யாகத்திற்கு உண்டான தடை துண்டிக்கப்பட்டதால் நிலாத்திங்கள் துண்டத்தான் எனும் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவார்கள்.
இப்பெருமாளின் அருகில் எப்போதும் குளிர்ச்சியான கதிர்கள் வீசிக்கொண்டிருக்கின்றன என்பதை அவர் அருகில் சென்றால் அறியலாம். மற்றொரு வரலாறும் உண்டென்பார்கள். அதாவது மாமரம் பெருமாள் அருளால் தளிர்க்க மீண்டும் பார்வதி தவம் செய்யத் தொடங்க சிவபெருமானுக்குக் கோபம் வந்தது. அந்த யாகத்தை மீண்டும் தடை செய்ய கங்கையை அனுப்பினார். பார்வதியும் தம் தமக்கையான கங்கையிடம் யாகத்தைத் தடை செய்ய வேண்டாமென வேண்டினார். ஆனால் பார்வதி தம் தவத்திற்காக மணலினால் செய்திருந்த லிங்கத்தைக் கங்கை கரைக்க முயன்றார். முடியவில்லை. சந்தோஷப்பட்ட பார்வதி லிங்கத்தை தழுவிக் கொண்டார். இவ்விருவருக்கும் நிலாத்திங்கள் துண்டத்தான்தாம் அருள் புரிந்தார். இவ்வாறு சிவபெருமானுக்கும் பார்வதி அம்மைக்கும் ஒருங்கே அருள் புரிந்த திவ்யதேசமாக இது திகழ்கிறது
காஞ்சிபுரத்தின் ஸ்ரீஏகாம்பரேசுவர்ர் கோயிலுக்குள் இத்திவ்யதேசம் இருப்பதால் இங்கு சிவன் குருக்களே பூசை செய்து தீர்த்தம் கொடுக்கிறார். அவ்வகையில் சிவன் கோயில் குருக்கள் பூசை செய்யும் ஒரே திவ்யதேசமும் இது ஒன்றேதான்.
திருமங்கையாழ்வார்,
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய்
உள்ளுவா ருள்ளத்தாய் உலக மேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சி னுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணி னேனே
[திருநெடுந்தாண்டகம்—8]
என்று ஒரே பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இப்பெருமான் கலாத்திங்கள் துண்டத்தான் என்று போற்றப்படுகிறார். கலை என்றால் நிலவு என்று ஒரு பொருளும் வளர்தல் என்று ஒரு பொருளும் கூறுவார்கள். அந்நூலில்,
”நிலாத்துண்டத்தானாக எழுந்தருளி உள்ள பெருமாளே! உன்னை அருச்சுனன் வணங்கும்போது உன் திருவடிகளில் அர்ச்சித்த மலர்களைப் பாண்டரங்கம் எனும் கூத்தாடும் சிவபெருமான் தன் தலையில் ஏற்றுக் கொண்டார். அப்படி இருந்தும் இவ்வுலகில் ஒரு சிலர் நீயே பரம் பொருள் என்று இன்னும் தெளியாமல் இருக்கிறார்களே” எனும் பொருளில்,
“மீண்டும் தெளியார்கள் மேதினியினோர் நின்னடிப்பூ
பாண்டரங்க மாடிப் படர்சடைமேல்—தீண்டிக்
கலாத்திங்கள் துண்டத்தான் மீதிருப்பக் கண்டு
நிலாத்திங்கள் துண்டத்தா னே”
பாடப்பட்டுள்ளது.
மேற்கு நோக்கி நின்று அருள் பாலிக்கும் இப்பெருமானுக்கு வடமொழியில் சந்திர சூடப்பெருமாள் என்ற திருநாமமும், தமிழில் நிலாத்துண்டத்தான் என்ற பெயரும் வழங்கப்படுகின்றன.
————
- மிதிலாவிலாஸ்-25
- தொடுவானம் 76. படிப்பும் விடுப்பும்
- என்னுள் விழுந்த [ க ] விதை !
- சண்டை
- பாபநாசம்
- மண்தான் மாணிக்கமாகிறது
- சாகசம்
- வொலகம்
- ஆச்சாள்புரம் [ வையவனின் குறுநாவல்களை முன்வைத்து ]
- திரு நிலாத்திங்கள் துண்டம்
- அந்நியத்தின் உச்சம்
- பிரித்தறியாமை
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -4
- கதிர்த்தேய்வு அளப்பாடு முறையில் முந்தைய பூகாந்தத் துருவத் திசை மாற்றக் காலக் கணிப்பு.
- தைராய்டு சுரப்பி குறைபாடு
- லீலாதிலகம் – அறிமுகம்
- கடைசிப் பகுதி – தெருக்கூத்து