லீலாதிலகம் – அறிமுகம்

author
0 minutes, 1 second Read
This entry is part 16 of 17 in the series 12 ஜூலை 2015

அ.சத்பதி,

முனைவர் பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்- 613010
கைப்பேசி: 9865030071
மலையாள மொழியின் முதல் இலக்கண நூலான லீலாதிலகம் வட மொழியில் எழுதப்பட்ட ஒரு மணிப்பிரவாள இலக்கணமாகும். இந்நூல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். இது மணிப்பிரவாளத்திற்குரிய இலக்கணம், நாட்டுமொழியில் பாட்டு எனப்படும் இலக்கிய வகைக்கு வகுக்கப்பட்ட இலக்கணம் ஆகிய இரண்டிற்கும் இலக்கணம் கூறும் வகையில் லீலா திலகம் எழுதப்பட்டது. மலையாளத்தில் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களைப் பற்றி அறிய உதவும் நூலாக லீலாதிலகம் விளங்குகிறது. இந்நூல் இன்றைய மலையாள மொழிக்குக் குறைந்த பயனையே நல்கினும் தமிழிலிருந்து மலையாளத்தை வேறுபடுத்திய பெருமை லீலாதிலகத்திற்கு உண்டு எனலாம்.
லீலாதிலகம்- பெயர்க்காரணம்:
மலையாள மொழியின் முதல் இலக்கணமான இந்நூலுக்கு ‘லீலாதிலகம்’ என்ற பெயர் எதனால் உருவானது என்பதற்கு லீலாதிலக ஆசிரியர்,
“மணிப்பிரவாளத்தின் உடலினை மலைநாட்டுத்தமிழ் வடமொழி ஆகிய மொழிச்சொற்களென்றும் உயிரினை உவகை, நகை முதலிய மெய்ப்பாடுகள் என்றும், அணிகளை எதுகை மோனை உவமை முதலியனவென்றும் குணத்தை இனிமையுடைமை செறிவு முதலியனவென்றும் குற்றத்தை வழூஉச்சொல் இன்னாச்சொல் முதலியனவென்றும் மணிப்பிரவாள இலக்கணம் கூறும்.”1

என்கிறார். மணிப்பிரவாளத்தை ஒரு பெண்ணாக உருவகித்து இவற்றைக் கூறுவதால் இந்நூலினை லீலாதிலகம் என்று பெயரிட்டுள்ளார் என்பது புலனாகிறது.
லீலாதிலகத்தின் காலம்:
மலையாள மொழியின் முதல் இலக்கணமாகக் கருதப்படும் லீலாதிலகம் கி.பி 14 ஆம் நூற்றாண்டின் பிறபகுதியைச் சார்ந்ததாகும். இந்நூல் 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டாலும் 20 ஆம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. லீலாதிலகத்தின் காலம் பற்றி,
“பேராசிரியர் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை குறிப்பிடும் போது இந்நூல் கி.பி 1385 க்கும் 1400 க்கும் இடைப்பட்டகாலமாகும் எனக் குறிப்பிடுகிறார்”2
என்று வே.சா.அருள்ராஜ் எடுத்துக்காட்டுகிறார். இந்நூல் கி.பி. 1350க்குப் பின்னரே எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கான சான்றுகளை இந்நூலின் வாயிலாகவே கண்டுகொள்ள முடியும். கி.பி 1350 முதல் 1375 வரை ஆண்ட ஆதித்தவர்மனைக் குறிப்பிடும் உண்ணுநீலி சந்தேசப் பாடல் இந்நூலில் காணப்படுகின்றது.
லீலாதிலகத்தின் ஆசிரியர்:
லீலாதிலக இலக்கண நூலையும் அதன் மிகச் சிறந்த உரையையும் இயற்றிய ஆசிரியர் ஒருவரே ஆவார். அவர் யார் என்பது குறித்தோ, எந்த ஊரைச் சார்ந்தவர் என்பது குறித்தோ ஒன்றும் தெரியவில்லை. இந்நூலில் ஆசிரியர் எடுத்துக்காட்டியிருக்கும் பாடல்களில் திருவனந்தபுரம் முதல்; பேராறு வரையுள்ள பல இடங்களைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேணாட்டு மாத்தாண்டவர்மா, திருப்பாப்பூர் இரவிவர்மா, விக்கிரம பாண்டியன் முதலிய அரசர்களைப் பற்றிய குறிப்புகள் இந்நூலில் காணப்படுகின்றன. எனவே இம்மன்னர்களின் ஆதரவில் இந்நூலாசிரியர் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இந்நூலை இயற்றிய ஆசிரியர் திராவிட மொழிகளாகிய தமிழ், கன்னடம் ஆகியவற்றிலும், ஆரிய மொழிகளாகிய சமஸ்கிருதம், பிராகிருதம், ஆகியவற்றிலும் பெரும் புலமை பெற்றவராக விளங்கினார் என்பதை அவர் இயற்றிய நூலில் காணப்படும் மேற்கோள்களே சான்றாக விளங்குகின்றன.
லீலாதிலகத்தின் நோக்கம்:
லீலாதிலகத்கின் நேரடி நோக்கம் இலக்கியத்துக்கு இலக்கணம் எழுதுவதே. மலையாள இலக்கியத்தை மணிப்பிரவாளம், பாட்டு என்று இரண்டு வகையாகப் பிரித்ததே லீலாதிலகமாகும். இலக்கிய வகைகளைக் குறிப்பதற்குக் கையாண்ட சொற்களே லீலாதிலகத்தின் உள்நோக்கைப் புலப்படுத்துவதாக உள்ளது. மலையாள மொழி அமைப்பு தமிழ் மொழி அமைப்பிலிருந்து மாறுபட்டது என்ற கருத்தைப் பல எடுத்துக்காட்டுகளால் விவரிக்கும் போது மலையாள இலக்கியத்தை ‘மணிப்பிரவாள நூல்’ என்றும், இலக்கிய வழக்குகளை ‘மணிப்பிரவாளம்’ என்றும் லீலாதிலகம் குறிப்பிடுகிறது.
கி.பி.14ஆம் நூற்றாண்டுப் பகுதியில் மலையாள மொழி தனி மொழிக்கானத் தனிப்பண்புகளைப் பெற்று வருகிற நிலையில் அதனை நிறுவுவதே தனது குறிக்கோளாகக் கொண்டு லீலாதிலகத்தை அதன் ஆசிரியர் ஆக்கியுள்ளார் எனலாம். லீலாதிலகத்தின் நோக்கமெல்லாம் புதிய கூறுகளைத் தந்து மலையாளம் ஒரு புதிய மொழியாக உருவாகத் தொடங்கியுள்ளது என நிலைநாட்டுவதே ஆகும்.
மணிப்பிரவாளம் என்ற இலக்கிய வகை மலையாள மொழியின் தனித்துவத்தைக் காட்டும் குறியீடாக லீலாதிலகம் அமைந்துள்ளது. மொழியின் தனிச்சிறப்பை விளக்க இலக்கியத்தைக் குறியீடாகக் கொண்டதற்கு காரணம் மொழி, காவியம் (இலக்கியம்), நாடு ஆகிய மூன்றும் பின்னிப்பிணைந்தவை என்று லீலாதிலகம் கருதுவதுதான்.

லீலாதிலகத்தின் கட்டமைப்பு:
மலையாள மொழியின் முதல் இலக்கண நூலான லீலாதிலகம் மணிப்பிரவாள மரபையே விரிவாகப் பேசுகின்றது. இந்நூலிலுள்ள 151 சூத்திரங்களில் (நூற்பா) மலையாள மொழியிலுள்ள செய்யுளின் போக்குகள் குறித்து தெளிவாக விளக்குகிறது. இந்நூலாசிரியர் எட்டு சிற்பங்களில் இச்சூத்திரங்களை அடக்கியுள்ளார். சிற்பம் என்பது இயல் என்பதைக் குறிக்கும். இச்சிற்பங்களுக்கு பெயர் முறை இல்லாமல், எண்ணிக்கை அடிப்படையில் முதற் சிற்பம், இரண்டாம் சிற்பம், மூன்றாம் சிற்பம், நான்காம் சிற்பம், ஐந்தாம் சிற்பம், ஆறாம் சிற்பம், ஏழாம் சிற்பம், எட்டாம் சிற்பம் என்ற முறையில் பெயரிடப்பட்டுள்ளது. லீலாதிலகத்தில் 209 மேற்கோள் பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
முதல் சிற்பம்:
முதல் சிற்பம் பதினொரு சூத்திரங்களைக் கொண்டுள்ளது. இச்சிற்பம் முழுமையும் மணிப்பிரவாளம் என்பதன் இலக்கணத்தை விளக்கும் பகுதியாகவே அமைந்துள்ளது. இந்நூலின் முதல் சூத்திரம்,
பா~h ஸம்ஸ்க்கிருத யோகோ மணிப்பிரவாளம் (லீலா.சூ.1)
என்ற சூத்திரத்தில் கேரளபா~hவும் சமஸ்கிருதமும் இணைந்தது மணிப்பிரவாளம் என்பதையும் இந்த மணிப்பிரவாளத்திலுள்ள ஒவ்வொரு சொல்லையும் விளக்குவதன் மூலம் மலையாள மொழிப்பற்றிய பல உண்மைகளை இச்சூத்திரத்தின் உரை வெளிப்படுத்தியுள்ளது என்பதையும், இப்பகுதி விளக்குகின்றன. இரண்டாம் சூத்திரம் முதல் பத்தாம் சூத்திரம் வரை மணிப்பிரவாளத்தின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன. அதாவது உத்தம மணிப்பிரவாளம், உத்தம மணிப்பிரவாளப் போலி, அதம மணிப்பிரவாளம் போன்றவை மணிப்பிரவாள வகைகளாகும். பதினொன்றாம் சூத்திரம்,
த்ரமிட சங்காதாக்ஷர நிபந்தம் எதுக மோன
வ்ருத்த விசே~ யுக்தம் பாட்டு (லீலா.சூ.11)
என்பது (திராவிட எழுத்துக்களைக் மட்டும் கொண்டு எதுகை, மோனை, பெற்று சிறப்பான விருத்தங்களால் அமைந்தது) பாட்டு என்ற இன்னொரு இலக்கிய வகையும் இச்சிற்பத்தில் விளக்குப்பட்டுள்ளது.
இரண்டாம் சிற்பம்:
இரண்டாம் சிற்பம் இருபத்தைந்து சூத்திரங்களைக் கொண்டுள்ளது. இச்சிற்பத்தில் மணிப்பிரவாளத்தின் உடலான நாட்டு மொழிக்குறித்தும்;, சமஸ்கிருதமாக்கல் குறித்தும் முதல் ஏழு சூத்திரங்களில் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் சமஸ்கிருதத்தில் இல்லாத ன்ற், ற்ற், ற், ழ் என்ற நான்கு எழுத்துக்களும் நாட்டுமொழியில் சிறப்பெழுத்துகளாகத் திகழ்கின்றன. மேலும் ஆய்த எழுத்துப்பற்றிக் கூறும் பொழுது,
ஆய்த எழுத்து கேரள மொழியில் இல்லை
என்றும் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.சமஸ்கிருதச் சொற்கள் குறித்து ஒரு சூத்திரத்திலும் எட்டு வேற்றுமைகள் குறித்து ஆறு சூத்திரங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. வேற்றுமை உருபுகளைக் கூறும் பொழுது,
பேர்,எ,ஒடு,க்கு,நின்று,ன்னு,இல்,விளி,இத்ய~;டகம் (லீலா.சூ.22)
என்னும் சூத்திரம் வேற்றுமை உருபுகளை விளக்கி நிற்கின்றது.
மூன்றாம் சிற்பம்:
மூன்றாம் சிற்பம் இருபத்தொன்பது சூத்திரங்களைக் கொண்டுள்ளது. இச்சிற்பம் முழுமையும் புணர்ச்சி விதிகளை விளக்கும் பகுதியாக அமைந்துள்ளது. நாட்டு மொழியிலுள்ள உயிரெழுத்துக்கள் பன்னிரண்டாகும். அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, ஆகியன. அவற்றுள் ஒள, என்ற உயிரெழுத்தைத் தவிர மீதமுள்ள பதினொரு உயிர்களும் மொழிக்கு முதலில் வருமெனவும் ஐ, ஒ, ஒள, ஆகிய உயிரெழுத்துக்களைத் தவிர மீதமுள்ள ஒன்பது உயிர்களும் மொழிக்கு இறுதியில் வருமெனவும் ‘ஒள’ என்னும் உயிரெழுத்து மெய்யோடு சேர்ந்து மொழிக்கு முதலில் (பௌவம்) வருமெனவும் இச்சிற்பத்தில் விளக்கப்பட்டுள்ளன. உயிரீற்றின் முன் உயிர் புணரும்போது வகரம் (அ+அழகுஸ்ரீஅவழகு) தோன்றும் என்பதை,
அதிதோ : கேவலயோர் வ (லீலா.சூ.38)
என்ற சூத்திரத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. வினா பொருளான எகரத்தின் முன் ஞ, ந, ம, வ, ஆகிய மெய்யெழுத்துக்கள் வந்தால் மெய்கள் இரட்டும் என்பதை,
கேவலாஞ்ஞனமவா நாம் ச (லீலா.சூ.45)
என்ற சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
நான்காம் சிற்பம்:
நான்காவது சிற்பம் இருபத்தெட்டு சூத்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் இருபத்தொரு சூத்திரங்களில் இருபது குற்றங்களை விளக்குகின்றன. அதாவது வழூஉச்சொல், ஆற்றல் இல்லாச் சொல், இன்னாச் சொல், பயனில் சொல், பொருந்தாச் சொல், கொச்சைச் சொல், கூறியது கூறல், கடுஞ்சொல் புணர்தல், புணர்ச்சி வழு, முறை வழு, குறைச் சொல், சொல் இடம் மாறல், நிரனிறை வழு, யாப்பு வழு, செய்யுள் வழு, பொருந்தா யாப்பு, பொருட் சிறப்பின்மை, பொருள் நயமின்மை, பொருந்தாப்பொருள், பொருந்தா எதுகை, முதலியவை இச்சிற்பத்தில் விளக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் குற்றம் குணமாக வருவதுமுண்டு என்பதற்கு,
ஏ~hம் க்வசித் குணபாவ (லீலா.சூ 87)
என்ற சூத்திரம் சான்றாக விளங்குகின்றது.
இலக்கியத்தில் பரத்தையை வருணிக்கக்கூடாது என்ற கருத்தை மறுக்கும் லீலாதிலக ஆசிரியர்,
அன்யஸ்மின்னேவ ப்றேம ச (லீலா.சூ.93)
என்ற சூத்திரத்தில் அவர்களுக்கும் காதல் உண்டு என்று எடுத்துப்பேசி அவர்கள் கூற்றுக்களை எடுத்துக்காட்டுகிறார்.
ஐந்தாம் சிற்பம்:
ஐந்தாவது சிற்பம் ஐந்து சூத்திரங்களைக் கொண்டுள்ளது. இச்சிற்பத்தில் செறிவு, இன்பம், தெளிவு, சமனிலை என்ற நான்கு வகையான குணங்கள் எடுத்தோதப்பட்டுள்ளது.
ശ്லே~மா துர்யப்றஸா தஸமதா குணா (லீலா.சூ.94) என்ற சூத்திரம் நான்கு வகையான குணங்களை எடுத்துக்கூறியுள்ளது. இதில் செறிவு என்பதற்கு ‘நெகிழிசை இன்மை’ என்னும் தண்டியாசிரியரது கூற்றினை இப்பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இச்சிற்பம் குணங்களை விளக்கும் பகுதியாக அமைந்துள்ளது.
ஆறாம் சிற்பம்:
ஆறாவது சிற்பம் ஒன்பது சூத்திரங்களைக் கொண்டுள்ளது. இச்சிற்பம் சொல்லணிகளை விளக்கும் பகுதியாக அமைந்துள்ளது. இதில் சீர் எதுகை, சீர் மோனை, அடி எதுகை, அடி மோனை, எழுத்து மடக்கு, சொற்பொருள் மடக்கு, இயமகம், சிலேடை ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் ஒருமுறை வந்த எழுத்துக்கள் மீண்டும் வருவது எழுத்து மடக்கு என்பதனை,
வர்ண்ணாவ்ருத்தௌ வர்ண்ணானுப்றாஸ (லீலா.சூ.104)
என்ற சூத்திரத்தின் மூலம் விளக்கியுள்ளார்.
ஏழாம் சிற்பம்:
ஏழாவது சிற்பம் இருபத்தொன்பது சூத்திரங்களைக் கொண்டுள்ளது. இச்சிற்பம் அணி வகைகளை விளக்கும் பகுதியாக அமைந்துள்ளது. இதில் உவமை அணி, உவமேயம், ஞாபகவணி, உருவகம், ஐயவணி, மயக்கவணி, அவனுதியணி, வேற்றுமையணி, விளக்கணி, மறுபொருளுவமை, எடுத்துக்காட்டு உவமை, தற்குறிப்பேற்றம், உயர்வுநவிற்சியணி, அன்னியாபதேசம், நிரனிறையணி, தடைமொழி, பரிமாற்றம், சிலேடை அணி, தன்மை நவிற்சி அணி, ஏதுவணி, வேற்றுப்பொருள் வைப்பணி, முரண் அணி, விபாவணை அணி, விசேட அணி, தொடர்பின்மையணி, வீறுகோளணி, பரிசங்கை, அருத்தாபத்தி, கலவையணி போன்ற அணிகள் பேசப்படுகின்றன. கலவையணி என்பதற்கு,
ஸர்வே~hம் ச ஸங்கர (லீலா.சூ.136)
என்ற சூத்திரத்தில் எல்லாச் சொல்லணிகளும் பொருளணிகளும் கலந்து வருவது கலவையணி என்று விளக்கியுள்ளார்.
எட்டாம் சிற்பம்:
எட்டாவது சிற்பம் பதினைந்து சூத்திரங்களைக் கொண்டுள்ளது. இச்சிற்பத்தில் குறிப்புப் பொருள் (வியஞ்சனை) மட்;டுமே விளக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர்
வஸ்தவலங்;கார ரஸபேதாத் த்றிதா ச (லீலா.சூ.139)
என்ற சூத்திரத்தில் குறிப்புப்பொருளினைப் பொருள், அணி, மெய்ப்பாடு, என்று மூன்று வகையாக வகைப்படுத்தியுள்ளார். அதில் பொருள் என்பது வெறும் சாதி, வினை, பண்பு, திரவியம், என்றும், அணி என்பது உவமை முதலிய பொருளணிகள் என்றும் அணிகளில் கூறப்பட்டுள்ளன. மீதம் மெய்ப்பாடு மட்டுமே இச்சிற்பத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவை உவகை, நகை, பெருமிதம், மருட்கை, இளிவரல், அச்சம், வெகுளி, அழுகை, சாந்தம், என்ற ஒன்பது வகையான மெய்ப்பாடுகளும் இச்சிற்;பத்தில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர்
நிர்வேதஸ்ய ശറந்த (லீலா.சூ.151)
என்ற சூத்திரத்தின் மூலம் சாந்தம் என்ற மெய்ப்பாட்டை விளக்கியுள்ளார். லீலாதிலகத்தின் கடைசி சிற்பம் ஒன்பது வகையான மெய்ப்பாடுகளை விளக்குகின்றது. மேற்கூறப்பட்ட எட்டு சிற்பங்களின் வாயிலாக மணிப்பிரவாள இலக்கணம், மணிப்பிரவாள வகைகள், பாட்டு இலக்கணம், நாட்டு மொழி இலக்கணம், சமஸ்கிருதமாக்கல், வேற்றுமை, பால், எண், இடம், வினைச் சொற்கள், இருபது குற்றங்கள், மெய்ப்பாட்டுக் குற்றம், நான்கு வகையான குணங்கள், எதுகை, மோனை, மடக்கு, இயமகம், சிலேடை, உவமை, இருபத்தொன்பது அணிகள், ஒன்பது மெய்ப்பாடுகள், போன்றவைகளும் விளக்கப்பட்டுள்ளன.
முடிவுரை:
மலையாள மொழியின் முதல் இலக்கண நூலான லீலாதிலகம் கி.பி.14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. லீலாதிலகத்தில் 209 மேற்கோள் பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இம்மேற்கோள் பாடல்களை அக மேற்கோள் பாடல்கள், புற மேற்கோள் பாடல்கள், என இரண்டாகப் பிரிக்கப்பட்;டுள்ளன. அக மேற்கோள் பாடல்களில் ஒருவரது இயற்பெயர்ச் சுட்டக்கூடாது என்ற மரபு போற்றப்படாமல் தலைவன் தலைவியரின் இயற்பெயர்கள் சுட்டப்பட்டுள்ளது. பொதுவாகத் தமிழ் இலக்கண நூல்களில் காணப்படுகின்ற செய்திகள் போலன்றி, இந்நூலில் மொழிகளின் பண்பு மற்றும் ஒரு மொழியோடு இன்னொரு மொழிக்குள்ள தொடர்பு, போன்ற செய்திகளும் பேசப்பட்டுள்ளன.

சான்றெண் விளக்கம்:

1.மா.இளையபெருமாள், லீலாதிலகம், தமிழ் மொழிபெயர்ப்பு, ப. 44
2.வே.சா.அருள்ராஜ், மலையாள இலக்கண வரலாறு, ப. 19

Series Navigationதைராய்டு சுரப்பி குறைபாடுகடைசிப் பகுதி – தெருக்கூத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *