சினிமா பக்கம் – பாகுபலி

This entry is part 24 of 29 in the series 19 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன்
0
bagubaliகிராபிக்ஸின் பிரம்மாண்டமும் கலை வண்ணமும் கை கோர்க்கும் ராஜமௌலியின் அசத்தல் முயற்சி.
சூழ்ச்சியால் கைப்பற்றப்பட்ட மாதேஸ்புரியின் சிம்மாசனத்தை மீட்க புறப்படும் ராஜ வாரிசின் கதை.
மழலையிலேயே பலமான கரங்களைக் கொண்ட இளவரசன் பாகுபலி. அவனது இணை யாகப், ராஜ மந்திரிக்குப் பிறந்தவன் பல்லவதேவன். அரசியின் மரணத்தால், மந்திரி பிங்களதேவனின் மனைவி சிவகாமியால் வளர்க்கப்படுகின்றனர் இருவரும். அரியணைக்கு தகுதியானவன் பாகுபலியே எனும் சிவகாமியின் முடிவால் எரிச்சலுறும் பிங்களதேவன், தன் மகனை அரியாசனத்தில் அமர்த்த சதி செய்து, பாகுபலியைக் கொல்கிறான். பாகுபலியின் மனைவி தேவசேனாவை சிறையில் பூட்டுகிறான். ஆனால் அவளுக்குப் பிறந்த குழந்தை, சிவகாமியால் காப்பாற்றப்பட்டு, மீண்டும் பாகுபலியாக வளர்ந்து அன்னையை மீட்கிறான். அவன் அரசனாவானா என்பது அடுத்த பாகத்தில்!
பாகுபலியாக பிரபாஸ். பல்லவதேவனாக ராணா டகுபட்டி. இருவருக்கும் சமமான வாய்ப்பு. அதிரடி போர்க் காட்சிகளில், கிராபிக்ஸின் உதவியுடன் அசத்துகிறார்கள் இருவரும்.
தேவசேனாவாக அனுஷ்கா. அவளை மீட்கும் போராளிகளின் கூட்டத்தில், வீராங்கனை அவந்திகாவாக தமன்னா! அனுஷ்காவுக்கு அதிக வாய்ப்பு இல்லை. தமன்னா முதல் கனவு பாடலிலேயே பட்டாம்பூச்சிகள் உடையாக மாற அசைந்து ஆடி மனதை கலக்குகிறார். நேர் கொண்ட பார்வையுடன் வித்தியாச நடிப்பைக் கொட்டுகிறார். பலே!
சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன். இது இவருக்கு மீண்டும் ஒரு ‘நல்ல’ நீலாம்பரி வேடம். பிங்களதேவனாக நாசர். தொங்கு மீசையை வருடுவதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பில்லை. பாகுபலியின் மெய்க்காப்பாளன் கட்டப்பனாக சத்யராஜ், முத்திரை பதித்திருக்கிறார்.
இயக்குனர் ராஜமவுலியின் உழைப்பு, படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. போர்க்காட்சிகளும், பிரம்மாண்ட அரசனின் சிலையும், அரண்மணைக் காட்சிகளும் கண்களை விரியச் செய்கின்றன. போர் வீயூகங்களை விளக்கும் காட்சி, தமிழ் சினிமாவுக்கு புதிது. அதை செயல்முறையில் காட்டும் பிரம்மாண்டம், இன்னும் பல நாட்கள் பேசப்படும்.
மரகதமணியின் இசையில் “ வீரனே சூரனே “ என்கிற பாடல், தமன்னாவால் பிழைத்துக் கொள்கிறது. நீல வண்ணத்துப் பூச்சிகள் சூழ, தமன்னா ஆடும் வெள்ளை உடை தேவதை ஆட்டம் ஜொள்ளர்களின் சாய்ஸ்.
கொஞ்சம் ஜேம்ஸ் பாண்ட், கொஞ்சம் ஃபாஸ்ட்&ஃப்யூரியஸ், அதோடு நிறைய பென்ஹர், என்று காட்சிகளை உருவி, அதற்கு அரச முலாம் பூசி, ஒப்பேற்றி விடுகிறார் மவுலி. கற்பனை வறட்சியை இது காட்டுகிறது.
செந்தில்குமாரின் கேமரா கோணங்கள் அகன்ற திரையை விட்டு கண்கள் விலகாது பார்த்துக் கொள்கின்றன. சாபு சிரிலின் கலை நேர்த்தி அட்டகாசம். கபாலிகர்களின் மொழியை வடிவமைக்க, மொழி மென்பொருள் கொடுத்து உதவிய மதன் கார்க்கி பாராட்டுக்குரியவர். அவர்கள் பேசும் மொழி நம்பும்படி இருப்பதே அவருக்கான அவார்ட்.
பாதி சாப்பாட்டில் எழுந்தது போலிருக்கிறது கதை. அடுத்த பாகம் வந்தால் தான் வயிறு நிறையும்.
0
பார்வை : பலமில்லை
0
மொழி : கோச்சடையானையும் லிங்காவையும் மிக்ஸ் பண்ணா மாதிரி இருக்குல்ல படம்!
0

Series Navigationஅஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவுநேர்த்திக் கடன்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *