தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
மைதிலி தொழிலாளர் கோ ஆபரேடிவ் சொசைட்டிக்கு வந்தாள். மெம்பர்களை அழைக்கச் செய்தாள். அந்த மீட்டிங்கில் தான் கமிட்டியின் டைரக்டர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்தாள்.
“என்ன மேடம் இது?” வைஸ் பிரசிடென்ட், மற்ற மெம்பர்கள் திகைத்து விட்டார்கள்.
“சொந்த வேலைகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. மாலதி நன்றாக பயிற்சி பெற்றுவிட்டாள். இருந்தாலும் நான் எத்தனை வருடங்களுக்கு இந்த பொறுப்பில் இருப்பது? இனிமேல் இதை நீங்களாகவே நடத்திக்கொள்ள வேண்டும்.”
“எங்களால் ஏதாவது தவறு நடந்து விட்டதா மேடம்?” வாடிய முகத்துடன் கேட்டாள் மாலதி.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை. தயவுசெய்து நீங்க வேறு விதமாக நினைக்காதீங்க,”
எல்லோரும் கண்ணீருடன் விடை கொடுத்தார்கள். மைதிலி போஸ்ட் ஆபீசுக்கு வந்தாள். நூறு ரூபாய்க்கு ஸ்டாம்ப் பேப்பர் மீது கையெழுத்து போட்டாள். தான் பாட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள். மைதிலி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தன்னுடைய பெயரில் கணக்கு வழக்கு இருக்கிறது. வங்கி கணக்குகளுக்கும் தன்னுடைய ஒப்புதல் கையெழுத்து வேண்டும்.
தபாலில் அதை அபிஜித்துக்கு சின்ன குறிப்புடன் சேர்ந்து அனுப்பி வைத்தாள்.
‘அபீ! திடீரென்று எதிர்பாராத விதமாக கிளம்பி வந்து விட்டதில் வேண்டிய ஜாக்கிரதைகளை மேற்கொள்ள முடியாமல் போய் விட்டது. வெற்று ஸ்டாம்ப் பேப்பர் மீது கையெழுத்து போட்டு அனுப்புகிறேன், வேண்டிய விதத்தில் எழுதிக் கொள்ளவும். எப்படி இருக்கிறாய்? ஜுரம் குறைந்து விட்டதா? இப்படி உன் நலனை விசாரிக்கும் தகுதி எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்.
மைதிலி கவர் மீது முகவரி எழுதி ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பி விட்டு வெளியே வரும் போது கம்பெனி ஸ்டெனோ எதிரே வந்தான்.
“மேடம்! நீங்களா? தபாலாபீசுக்கு நீங்களே வந்தீங்களா? எல்லோரும் என்னவாகி விட்டார்கள்?” என்றான் வியப்புடன்.
“நான்தான் வேண்டுமென்றே வந்தேன்” என்றாள். அவன் மரியாதைக்காக மைதிலியுடன் வெளியே வந்தான். “கார் எங்கே இருக்கு?” சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டான்.
“இல்லை.”
“ஆட்டோவைக் கூப்பிடுகிறேன்.” அவன் போகப் போன போது தடுத்துவிட்டாள். பஸ் வந்ததும் மக்கள் கூட்டத்துடன் ஏறிக் கொண்டாள். பஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்த மைதிலியைப் பார்த்து ஸ்டெனோ பின்னால் வாயைப் பிளந்தபடி நின்றுவிட்டான்.
பஸ்ஸில் உட்கார்ந்த பிறகு மைதிலி பேப்பரைத் திறந்து பார்த்தாள். அதில் சித்தூ டிசைன் செய்த ஆடையில் சோனாலியின் விளம்பரம் இருந்தது.
மைதிலி இதழ்களை இறுக்கினாள். தான் சித்தார்த்தா பக்கம் வந்துவிட்டதில் அபிஜித்தும், தானும் பயணித்துக் கொண்டிருந்த படகு தலைகீழாகி விட்டதா?
பேப்பர்களில், போஸ்டர்களில் எங்கே பார்த்தாலும் ஆடைகளின் விளம்பரம் இருந்தது.
சித்தார்த்தா ராஜினாமா கொடுத்துவிட்டான். அபிஜித் என்ன செய்யப் போகிறான்? அவளுக்கு உடனடியாக இந்த ஊரை விட்டு போய் விட வேண்டும் போல் இருந்தது. இங்கே இருந்து அபிஜித்துக்கு மேலும் தொல்லை தருவது நியாயம் இல்லை.
எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு பஸ்கள் மாறி வரும் போது ரொம்ப தாமதமாகிவிட்டது. களைப்புடன் வந்து நின்று கதவைத் தட்டினாள்.
உடனே கதவுகள் திறந்து கொண்டன. எதிரே சித்தார்த்தா! அவன் கண்கள் சிவந்து இருந்தன. தலைமுடி கலைந்து இருந்தது. வீட்டில் சாமான்கள் தாறுமாறாக கிடந்தது இருந்தன. அரசியும், காய்கறியும் தரையில் இறைந்து கிடந்தன. அவன் உடைகள், புத்தகங்கள் நாலாப்பக்கமும் வீசி இருந்தன. அவன் போட்ட டிராயிங் பேப்பர்கள் கிழித்து துண்டாகி இருந்தன.
“என்ன நடந்தது?” பதற்றத்துடன் கேட்டாள்.
சித்தார்த்தா முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“என்ன நடந்தது சொல்லு.” குரலை உயர்த்தி கேட்டாள். பதில் சொல்லாமல் போய் ஸ்டூல் மீது உட்கார்ந்து தலையைக் குனிந்து கொண்டான்.
“சொல்லு கண்ணா! இப்படி வந்து வீட்டை நாசமாக்கியது யாரு?” ஆவேசமாக கேட்டாள்.
“”நான்தான்!!” கிணற்றுக்குள்ளே இருந்து வந்தது போல் இருந்தது அவன் குரல்.
“நீயா!!” மைதிலி வியப்புடன் தாறுமாறாகக் கிடந்த சாமானையும், தரையில் பதித்த பார்வையுடன் உட்கார்ந்திருந்த சித்தூவையும் மாறி மாறி பார்த்தால்.
“நீயா? எதற்காக? என்ன நடந்தது?” அவள் குரலில் பயம்! அவன் உடனே பதில் சொல்லவில்லை.
“சொல்லு கண்ணா! எதனால்?”
“நீ,,, நீ அவரிடம் போய் விட்டாய் என்று நினைத்தேன்.”
“நானா?”
அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
மைதிலியின் விழிகளில் நீர் திரண்டு வந்தது. அந்த சாமான்களையும் அவனையும் திரும்பவும் மாறி மாறி பார்த்தாள். உடைந்திருந்த கண்ணாடித் துண்டுகளில் அவன் அந்தரங்கம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
மைதிலி அவன் அருகில் வந்தாள். தலை மீது கையைப் பதித்தாள். அவன் நிமிர்ந்தான். அவன் கண்களில் தென்பட்ட உணர்வை பார்த்ததும் அவள் இதயம் இளகிவிட்டது. மௌனமாய் அவன் தலையை வயிற்றுடன் அழுத்திக் கொண்டாள். எல்லையில்லாத ஆனந்தத்தில் அவள் மனம் திளைத்துக் கொண்டிருந்தது. இந்த சுருஷ்டி தன்னை ஒரு பெண்ணாகப் படைத்து, தாயாக்கி ஒரு அபூர்வமான வரத்தை அளித்து இருக்கிறது. இந்த அனுபவம் எதற்கும் ஈடு இளையற்றது.
“எனக்கு பயமாக இருந்தது, நீ திரும்பி வரமாட்டாயோ என்று.” சித்தூ சொன்னான்.
அவன் தலையை வயிற்றுடன் மேலும் அழுத்திக் கொண்டாள். குனிந்து தலைமீது முத்தம் பதித்தாள். “நான் போய் விடுவேனா? உன்னைவிட்டு! அதிலும் உன்னிடம் சொல்லாமல்! என் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் அப்படி நடக்காது. என்னை நம்புவாயா?” இரண்டு கைகளாலும் அவன் முகத்தை பிடித்து வலுக்கட்டாயமாக உயர்த்தினாள்.
அவன் மைதிலி பக்கம் பார்த்தான். அந்தக் கண்களில் பயமற்ற தன்மை! குரலில் உறுதி!
மைதிலி திடீரென்று சொன்னாள். “எங்கே என்னை அம்மா என்று கூப்பிடு.”
அவன் கண்ணிமைகள் படபடத்தன. அவள் கைகளிலிருந்து முகத்தை நகர்த்த வேண்டும் என்று முயற்சி செய்தான். ஆனால் அவள் பிடி தளரவில்லை.
“எனக்கு… எனக்கு வராது.” தெளிவற்ற குரலில் சொன்னான்.
“நான் கற்றுத் தருகிறேன். சொல்லு.. அ …ம் … மா!” சிறுகுழந்தைக்கு கற்றுத் தருவது போலவே சொன்னாள். அவன் இதழ்கள் உச்சரிக்க முயன்று நின்றுவிட்டன.
“சொல்லு சித்தூ! அ …. ம்மா!”
“அம்மா!” மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல் சொன்னான். அவளைப் பார்க்கப் பார்க்க அவன் கூச்சமும் தயக்கமும் காணமல் போய்விட்டன.
“கூப்பிடு கண்ணா! என் தங்கமே! கூப்புடு.”
“அம்மா!” சித்தூ தனக்கு மிகவும் பிரியமான அந்த வார்த்தையை அபூர்வமாக உச்சரித்தான்.
மைதிலி அவன் முகத்தை விட்டுவிட்டு அவனை அழுத்தமாக கட்டிக் கொண்டாள். “என் தங்கமே! பத்தொன்பது வருடங்களுக்கு பிறகு நான் உனக்கு அம்மா என்ற வார்த்தையைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.” அவள் கண்கள் கண்ணீர் வடித்தன.. அவன் நெற்றியில், கன்னத்தில், தலையில் முத்தமாறி பொழிந்தாள்.
அபூர்வமான அந்த தொடுகையில், அமிருதமழையில் அவன் நனைந்து கொண்டிருந்தான். அதுவரையில் அனுபவித்து வந்த வேதனைகளுக்கு மந்திர ஜலம் தெளித்தது போல் அவன் உடலும், மனமும் தேறிக் கொண்டிருந்தன. அவனுள் ஏதோ தெரியாத மனோ பலம்! சுயநம்பிக்கை!
சித்தார்த்தா சிரித்தான். மைதிலியும் அந்தச் சிரிப்பில் சேர்ந்து கொண்டாள். திடீரென்று சித்தார்த்தா எழுந்து கொண்டான். மைதிலியை சிம்மாசனத்தில் உட்கார வைப்பது போல் அந்த பழைய ஸ்டூலில் உட்கார வைத்தான். முழங்காலில் சரிந்து மைதிலியின் மடியில் தலையை புதைத்துக் கொண்டான். “அம்மா! என்னை எப்போதும் விட்டுவிட்டு போக மாட்டாய் இல்லையா? மாட்டேன் என்று வாக்கு கொடு எனக்கு” என்றான்.
மைதிலி தன மடியில் இருந்த அவன் தலைமீது கையை வைத்தாள். “மாட்டேன். எப்போதும் போக மாட்டேன்” என்றாள்.
“அவரை விட்டுவிட்டு உன்னால் இருக்க முடியுமா?”
“முடியும்.”
அவன் கைகள் அவள் புடவையின் கொசுவத்தை பலமாக பற்றிக் கொண்டன. மடியிலிருந்து நிமிர்ந்து பார்த்துக் கொண்டே சிரித்தான். “நான் அதிர்ஷ்டசாலிதானே?” நம்பமுடியாதாவன் போல் கேட்டான்.
ஆமாம் என்பது போல் பார்த்தாள் மைதிலி. ஆனால் உள்ளே எங்கேயோ மகனுக்குக் கொடுத்த வாக்கு அவள் இதயத்தை கத்தியால் தயையின்றி இரண்டு பகுதிகளாக கிழித்துவிட்டது போல் இருந்தது.
அவள் மனம் ஒரே சமயத்தில் மழையும், வெயிலும் அடித்த நிலம் போல் இருந்தது.
*****
நான்கு நாட்கள் கழிந்தன. அந்தச் சின்ன போர்ஷனில் மைதிலி, சித்தார்தாவுக்கு ஒரு சந்தோஷமான உலகம் கிடைத்து விட்டது.
சித்தூ எழுந்து பல் தேய்த்து விட்டு வரும் போது மைதிலி தயாரித்துக் கொண்டிருக்கும் காபியின் மணம் வந்து தாக்கும். அவன் டவலால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் போது மைதிலி சூடான காபியைக் கோப்பையில் கொண்டு வந்து தருவாள்.
“உனக்கு?” கோப்பையை வாங்கிக் கொள்ளும் போது அவன் கேட்பான்.
“நீ குடி. நான் அப்புறமாய் குடிக்கிறேன்.”
“ஊஹும். முதலில் நீ குடி.” மைதிலியை வலுகட்டாயமாக குடிக்க வைப்பான். அவன் தலைக்குக் குளித்துவிட்டு வந்தால் மைதிலி தலையைத் துவட்டி விடுவாள். அது அவனுக்கு அபூர்வமான ஆனந்தம்.
நினைவு தெரிந்த நாள் முதல் அவன் அப்பாவைவிட அம்மாவுக்காக நிறைய கனவுகள் கண்டான். நிறைய தவித்தான். ரமாகாந்த் மாமா வெளிநாட்டுக்கு போகும் போது கொடுத்த பழைய ட்ரங்க் பெட்டியில் இருந்த தந்தையின் போட்டோவைவிட தாய் எழுதிய டைரிதான் அவனுக்கு ஒரு அழகான உலகமாய் இருந்து வந்தது. அவளை மிருதுவான சுபாவம் கொண்டவளாக, அன்பு வடிவமாக ஊகித்துக் கொண்டான். தனக்கு வேதனை ஏற்பட்ட போது அந்த டைரியில் முகம் புதைத்து ஆறுதல் பெற்று வந்தான். அதற்கு அழகான அட்டையைப் போட்டான்.
கசங்கி, பழசாகி விட்ட அந்த டைரி மகனுக்கு உயிருக்குச் சமம் என்று தெரிந்த போது மைதிலியின் மனம் காவேரியைப் போல பரவசமடைந்தது.
சின்ன வயது முதல் வாழ்க்கையைப் பற்றி ஏதாவது நல்ல கொடேஷன் தென்பட்டால் அதை அதில் எழுதி வந்தாள். அந்த டைரி தன் மகனுக்கு இவ்வளவு வருடங்களாய் துணையாய் இருந்து வந்தது தெரிந்த போது அவள் சந்தோஷத்திற்கு எல்லைகள் இருக்கவில்லை. தன் சின்னஞ்சிறு மகன் தன்னைப் பற்றி நினைப்பான் என்று தெரிந்திருக்கவில்லை.
சித்தூ காபியை அருந்திக்கொண்டே டைரியில் இருந்த வரிகளை படித்து காண்பிப்பான்.
அனசூயா தன்னிடம் இருந்த தையல் மிஷினைக் கொண்டு வந்து இங்கே போட்டாள். அனசூயா, சித்தூ, சின்னா தையல் வேலையைத் தொடங்கி விட்டார்கள். சின்னா தன் சின்னஞ்சிறு விரல்களால் பட்டன்களை தைக்கும் போது மைதிலி அவன் கன்னத்தை வழித்து திருஷ்டிக் கழித்தாள்.
வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கண்ணாயிரம் இவர்கள் ஜோலிக்கு ஏனோ வரவே இல்லை. “நீங்கள் வந்ததில் எனக்கும் விடிவுகாலம் வந்து விட்டது அம்மா” என்றாள் அனசூயா.
மைதிலி தானும் தையல் மிஷனில் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். சித்தூ கற்றுக் கொடுத்தான். ஒரு முறை மைதிலியில் விரல் மிஷின் ஊசிக்கு அடியில் மாட்டிக் கொண்டு ரத்தம் வந்தது.
“நான்தான் வேண்டாம் என்று சொன்னேன் இல்லையா.” சித்தூ ஓடிப் போய் அலமாரியிலிருந்து மருந்து எடுத்து வந்து கட்டு போட்டான்.
“நான் கற்றுக் கொள்ளாமல் எப்படி முடியும்? வீட்டில் எல்லோரும் கஷடப்பட்டு உழைக்க வேண்டும். சின்னா கூட எப்படி வேலை செய்கிறான் பார். எனக்கு வேலை கிடைக்கும் வரையில் ஏதாவது செய்ய வேண்டாமா?” என்றாள்.
“வேலையா? நத்திங் டூயிங்! நான் எவ்வளவு சம்பாதிக்கிறேனோ அதில் வாழ்க்கையை நடத்துவோம்” என்றான் சித்தூ. அம்மாவை எழுப்பி கட்டில் மீது உட்கார வைத்தான். “இன்று முதல் இந்த மிஷின் ஜொலிக்கு வரக்கூடாது” என்று மிரட்டினான்.
“பாரு அனசூயா! எப்படி மிரட்டுகிறானோ?” என்றாள் போலியாய் பயத்தைக் காட்டி.
சித்தூ சிரித்து விட்டான். அனசூயா, சின்னாவும் அவனுடன் சேர்ந்து சிரித்தார்கள்.
மைதிலியும் சிரித்துவிட்டு சித்தூவின் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.
இரவு ஒன்பது மணி………
தொலைவில் காரில் உட்கார்ந்து இருந்த அபிஜித் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். மைதிலி அனுப்பிய ஸ்டாம்ப் பேப்பர் அவனுக்கு வந்து சேர்ந்தது. அவளை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்று கிளம்பி வந்தான். தொலைவில் விளக்கு எரிந்து கொண்டிருந்த அந்த அறையில் தையல் மிஷனுக்கு அருகில் உட்கார்ந்து இருந்த மைதிலியைப் பார்த்தான். அடுத்ததாக நடந்த நிகழ்வையும் கவனித்தான். அவன் இதயத்திலிருந்து பெருமூச்சு ஒன்று வெளிவந்தது. தனிமை ஆக்டோபஸ் போல் அவனை சூழ்ந்துக் கொள்ளத் தொடங்கியது. மைதிலி போய் விட்டதில் அவனுக்கு வருத்தம் இல்லை. அவர்களுடைய சந்தோஷத்தில் தான் வேற்று ஆளாக எஞ்சி நின்றுவிட்டான். தன்னுடைய துரதிர்ஷ்டத்தை அவனால் நம்பமுடியவில்லை. காரை பின்னால் திருப்பிக்கொண்டு போய்விட்டான். அவன் மனதை போலவே காரும் அவர்களை விட்டு தொலைவாகப் போய்க் கொண்டிருந்தது.
*****
மைதிலி அன்சூயாவுடன் சேர்ந்து அடுத்த தெருவில் இருந்த கடையை வாடகைக்கு விடப் போவதாக கேள்விப்பட்டு பார்க்கப் போனாள். அங்கே பொட்டிக் போன்று எதையாவது தொடங்கலாம் என்று முடிவு செய்தாள். நான்கு நாட்களுக்கு முன்னால் மகனிடம் பெங்களூருக்கு போய் விடலாம் என்று சொன்ன போது, “எதுக்கு?” என்றான் சித்தூ.
“அங்கே போனால் என்னால் வேலைக்கு போக முடியும்.”
“வேண்டாம் என்று சொல்லிவிட்டேனே. நம் வீட்டு பொறுப்பு என்னுடையதுதான். எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு மம்மி.” அவன் அருகில் வந்தான். “என்னால் ராஜபோகங்கள் தரமுடியாவிட்டாலும், குறை எதுவும் வரவிட மாட்டேன். இந்த ஊராக இருந்தால் என்னுடைய திறமையைப் பற்றித் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். எனக்கு வேலை கிடைக்கும். அதனால் பெங்களூருக்கு போக வேண்டாம் என்று சொல்கிறேன்” என்றான்.
அன்று முதல் மைதிலி வேலையைப் பற்றி யோசிப்பதை நிறுத்தி விட்டாள். அனசூயா துணையாக இருக்கும் போது எந்த வேலையைத் தொடங்கினாலும் நல்ல பலன் கிடைப்பது உறுதி. ஆனால் அவர்கள் போகும் போது ஏற்கனவே யாரோ அந்தக் கடைக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள்.
மைதிலி வீட்டுக்குத் திரும்பி வந்த போது சித்தூ ஒரு விளம்பரப் பலகையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.
“வா மம்மி! நாளைக்கே நாம் கடையை தொடங்கப் போகிறோம்” என்றான்.
“எங்கே?” என்றாள்.
“இங்கேதான். நம் வீட்டு முன் அறையில்.”
“இந்த சந்துக்குள் யார் வருவார்கள்?” என்றாள் அனசூயா.
“வேலையில் திறமை இருந்தால் எங்கே இருந்தாலும் கஸ்டமர்கள் வருவார்கள். அம்மா! நம் கடையில் பெயரை பார்.” எழுதி முடித்த போர்டை முன்னால் நீட்டியபடி பெருமையுடன் மைதிலியின் பக்கம் திரும்பினான் சித்தூ.
“மைதிலி பொட்டிக், பெண்களுக்கு மட்டுமே”
ரொம்ப அழகாக எழுதி இருந்தான் சித்தூ. ஆனால் அந்தப் பெயரை பார்த்ததும் இதயத்தில் ஈட்டி பாயந்தாற்போல் இருந்தது.
‘மைதிலி! கண்ணைத் திறந்து பாரு.’ அன்று அபிஜித் சொன்னது கண்முன்னே நின்றது. மைதிலி இண்டஸ்ட்ரீஸ்! என்ற பெயர் பலகையைப் பார்த்த கணம் நினைவுக்கு வந்தது.
“அந்தப் பெயர் வேண்டாம்.” சட்டென்று சொல்லிவிட்டாள்.
“ஏன்?” கேட்டான் சித்தூ.
“எனக்கு விருப்பம் இல்லை.” வேறு பதில் சொல்ல முடியாதவள் போல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
சித்தூவின் முகத்தில் இருந்த உற்சாகம், பெருமை யாரோ விளக்கை ஊதி அணைத்து விட்டது போல் அடங்கி விட்டன.
“வேறு ஏதாவது பெயரை எழுது தம்பி” என்றாள் அனசூயா.
“போர்டே வேண்டாம்.” அவன் வெள்ளை பெயிண்டை கொண்டு வந்து எழுத்துக்களை அழிக்க முற்பட்டான். மைதிலி தடுக்கப் போனாள்.
“வேண்டாம். ஐ யாம் சாரி!” தாய் பக்கம் திரும்பி பார்க்காமலேயே சொன்னான். “சில சமயம் நான் முட்டாளாக நடந்து கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு போர்டை காலால் தள்ளிவிட்டு போய் விட்டான்.
அரைமணியில் திரும்பி வந்து விட்டான். அவன் கையில் பொட்டலம் இருந்தது. தாயிடம் கொடுத்தான்.
“என்ன இது?” என்றாள்.
“மாதுளம்பழம்.”
“எதுக்கு?”
“எனக்கு ரொம்ப பிடிக்கும்.”
மைதிலி பொட்டலத்தை பிரிக்கப் போனாள். அந்த பேப்பரில் அபிஜித் கம்பெனியின் விளம்பரம் இருந்தது. சோனாலி அணிந்திருக்கும் ஆடையின் டிசைன் சித்தூ போட்டவை அல்ல. கொஞ்சம் கூட நன்றாக இல்லை என்று முடிவு செய்து அபிஜித் ஒதுக்கி வைத்தவை. பிரசாத் போட்டிருந்த டிசைன் அது. வேறு வழியில்லாமல் அபிஜித் அதையே எடுத்துக்கொண்டு மார்கெட்டில் கொண்டு வருகிறான் போலும்.
“பழம் உரிக்க வில்லையா மம்மி?” சித்தூ கேட்டான்.
யோசனையிலிருந்து மீண்டவளாய் பார்த்தாள் மைதிலி. தட்டை கொண்டு வந்து மாதுளம்பழத்தை உரித்துக் கொண்டிருந்தாள்.
சித்தூ பின்னாலிருந்து வந்து சிறுகுழந்தை போல் தாயின் தோளில் தலையைக் சாய்த்துக் கொண்டான்.
“சாரி மம்மி! உனக்கு வேதனையைக் கொடுத்தால் எனக்கு இருமடங்கு வேதனையாய் இருக்கும்.” மன்னிப்பு கேட்பது போல் சொன்னான்.
மைதிலி இதழ்களை இறுக்கினாள். சித்தூ அம்மாவுக்கு மாதுளை முத்துக்களை வாயில் தரப் போனான்.
“வேண்டாம்” என்றாள் அவள்.
“எனக்கும் வேண்டாம்.” சித்தூ நகர்ந்து விட்டான்.
மைதிலி சமையலை முடித்தாள். “சித்தூ! சாப்பிட வா” என்று அழைத்தாள்.
“நீயும் சேர்ந்து சாப்பிடுவாயா?”
“இப்போ எனக்கு பசிக்கவில்லை கண்ணா.” கெஞ்சுவது போல் சொன்னாள்.
“எனக்கு பசி இல்லை.” அவன் போய் சுருண்டு படுத்தான்.
மைதிலி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். சித்தூவை கெஞ்சி எப்படியோ சாப்பிட வைத்தாள். தான் அபிஜித்தைப் பற்றி கொஞ்சம் யோசித்தாலும் அவனுக்குத் தெரிந்து போய் விடுகிறது. பாதுகாப்பற்றத் தன்மையை உணருகிறான். அவனை எப்படி நம்ப வைப்பது? என்ன செய்வது?
தான் இங்கே சித்தூவுடன் சந்தோஷமாக இருக்கிறாள். அபிஜித் தனிமையில் இருக்கிறான். அவன் வாழ்க்கையில் எந்தப் பெண்ணாவது வந்தால் தவிர தன்னைவிட்டு இந்த கவலை போகாது. ஆனால் அது சாத்தியம்தானா? ஒருக்கால் அது உண்மையாகிவிட்டால் தன்னால் தாங்கி கொள்ள முடியுமா?
மைதிலியின் தோளில் கை ஒன்று படிந்தது. நிமிர்ந்து பார்த்தாள்.
எதிரே சித்தார்த்தா! அவன் கையில் கிண்ணத்தில் தயிர் சாதம் இருந்தது.
“பசிக்கவில்லை கண்ணா.”
சித்தூ தலை குனிந்து கொண்டான்.
“சரி கொடு. சாப்பிடுகிறேன்.”
“பசி இல்லை என்றால் வேண்டாம்.” அவன் உள்ளே வைத்து விட்டு வந்தான்.
மைதிலி சூனியத்தை வெறித்து பார்த்தபடி உட்கார்ந்து இருந்தாள். சித்தூ வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். அவள் கையை தன் கையில் எடுத்துக் கொண்டான்.
“மம்மி!”
“ஊம்.”
“உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலிதானா?”
“அந்த சந்தேகம் ஏன் வந்தது?”
“சில சமயம் வருகிறது.”
“சித்தூ கண்ணா! நீ ஒரு பைத்தியம்!” அவன் தலையை கலைத்தாள்.
அவன் உடனே அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.
“என்ன?” என்றாள்.
“எனக்கு தெரியும். நீ என்னிடம் இருக்க மாட்டாய். போய் விடுவாய்.”
“என் உடம்பில் உயிர் இருக்கு வரையில் அது நடக்காது.”
“நான் நினைப்பதும் அதுதான். நீ அவரைப் பற்றிய கவலையுடன் இருப்பாய். சரியாக சாப்பிட மாட்டாய். பட்டினி கிடப்பாய். நீ உயிருடன் இருக்க மாட்டாய். என்னைவிட்டுப் போய் விடுவாய்.”
மைதிலி சித்தூவை வலுக்கட்டாயமாக எழுப்பி உட்கார வைத்தாள். “இந்த பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் உனக்கு ஏன்?”
அவன் அழுது கொண்டிருந்தான். “இதுதான் நடக்கப் போகிறது மம்மி! என்னை விட்டுப் போக மாட்டேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறாய். போக மாட்டாய். ஆனால் இது போல் இளைத்து துரும்பாகி விடுவாய். இதுதான் என் அதிர்ஷ்டமா? சொல்லு மம்மி! நீ அவரிடமிருந்து முழுமையாக வரவில்லை. உன் உடல் மட்டும் இங்கே! நீ என்னிடம் இல்லவே இல்லை.” ஆவேசமாக சொன்னான்,
“சித்தூ!” மைதிலி அவனை அருகில் இழுத்துகொண்டு அவன் மார்பில் ஒதுங்கினாள். “அப்படிச் சொல்லாதே சித்தூ! அப்படிச் சொல்லாதே கண்ணா!” அவளும் அழுது கொண்டிருந்தாள்.
“எனக்கு பயமாக இருக்கு மம்மி!”
“பயம் எதுக்கு?”
“ஒருமாதம் பழகிய எனக்கே உன்னைவிட்டு இருக்க முடியவில்லையே. பதினெட்டு வருடங்கள் கூடவே வாழ்ந்த அவர் உன்னை விட்டு எப்படி இருப்பார்? அவரால் இருக்க முடியாது. வந்து உன்னை அழைத்துக் கொண்டு போய் விடுவார். எனக்கு பயமாக இருக்கு மம்மி.” சித்தூ அழுது கொண்டிருந்தான்.
மைதிலியின் இதயம் கண்ணீர் குளமாக மாறியது.
- மிதிலாவிலாஸ்-26
- தொடுவானம் 77. செயின்ட் ஜார்ஜ் கோட்டை
- தோற்றுப் போகக் கற்றுக் கொள்வோம்
- மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்
- ‘ரிஷி’யின் கவிதைகள்
- ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்
- காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்
- வீடெனும் பெருங்கனவு
- அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா
- மொழிவது சுகம் ஜூலை 18 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -4
- காரைக்குடி கம்பன் கழகம் 58ஆம் வருட விழா
- கெளட் நோய் ( Gout )
- பரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுடோவை முதன்முதல் நெருங்கிப் படமெடுத்த நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்தி
- மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வு
- ஆறாண்டு காலத் தவிப்பு –
- வாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்
- கள்ளா, வா, புலியைக்குத்து
- சிவப்பு முக்கோணம்
- ‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்
- சொல்லின் ஆட்சி
- எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?
- தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு
- அஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவு
- சினிமா பக்கம் – பாகுபலி
- நேர்த்திக் கடன்
- நெசம்
- வழி தவறிய பறவை
- ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை
- கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும்