ஐயம் தீர்த்த பெருமாள்

This entry is part 10 of 20 in the series 26 ஜூலை 2015

வளவ.துரையன்

சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்து பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா மகாமகாபாத்தியாய டாக்டர் உ.வே.சா சாமிநாதையர் அவர்கள் ஆவார். அவரை மிகவும் கவர்ந்த காவியங்களில் ‘வில்லிபாரதமும்’ ஒன்றாகும்.
’அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் அமைந்துள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன’ என்று அவரே எழுதியிருக்கிறார்.
வில்லிபுத்துரார் பாரதத்தில் கீழக்கண்ட பாடலைப் படிக்கும்போது அவருக்கு ஓர் ஐயம் தோன்றியது.
”தண்டார் விடலை தாயுரைப்பத்
தாய்முன் அணுகித் தாமரைக்கைச்
செண்டால் அவள்பைங் குழல்பற்றித்
தீண்டா னாகிச் செல்கின்றான்
வண்டார் குழலும் உடல்குலைய
மானம் குலைய மனம்குலைய
கொண்டார் இருப்பர் என்றுநெறிக்
கொண்டாள் அந்தோ கொடியாளே”
இப்பாடல் சபா பருவத்தில் தருமன் சகுனியுடன் சூதாடித் தோற்றபின் நடக்கும் நிகழ்வைச் சொல்கிறது. இது சூதுபோர்ச் சருக்கத்தில் இருக்கிறது. துரியோதனன் ஆணைக்கேற்பத் துச்சாதனன் திரௌபதியைப் பற்ரி இழுத்துச் செல்லும் செய்தி இதில் கூறப்படுகிறது.
”தன் தாயான காந்தாரி, நீ போய் வா” என்று கூற துச்சாதனன் தாய் போன்ற திரௌபதியின் கூந்தலைத் தன் கையில் உள்ள செண்டால் பற்றி இழுத்துக் கொண்டு போனான். கொடி போன்ற திரௌபதியும் தன் கணவர் அங்கே இருப்பர் என்ற துணிவில் குழல் குலைய, மானம் குலைய, மனம் குலையச் சென்றாள்” என்பதுதான் இப்பாடலின் பொருளாகும்.
அச்ச்சமயதில் திரௌபதி விலக்காகித் தீண்டத்தகாத நிலையில் இருந்தாள். இதைத் “தீண்டாத கற்புடைய செழுந்திருவை” என்று வில்லியே குறிப்பிடுகிறார். அதனால்தான் துச்சாதனன் திரௌபதியைத் தீண்டாமல் செண்டால் பற்றிச் சென்றான் என்று வில்லிபுத்தூரார் குறிப்பிடுகிறார்.
டாக்டர் உ.வே.சா அவர்களுக்கு எழுந்த ஐயம் என்னவென்றால், “துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது? திரௌபதி குழலில் இருந்த மாலைதான் செண்டா? தீண்டத்தகாத நிலையில் தலையில் மலர்மாலை அணிந்திருக்க மாட்டாளே? என்பதுதான். இதை அவர்கள் பல நாள் சிந்தித்தவாறு இருந்தார்.
பிறகு ஒருமுறை தற்பொழுது மயிலாடுதுறை எனப்படும் மாயூரம் அருகில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறுபாதி என்னும் ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அவ்வூர் செல்லும் வழியில் கீழ்மேல் அக்கிரகாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறம் உள்ள குளத்தின் கீழ்க்கரையில் இருந்த பெருமாள் ஆலயத்திற்கு அவர் சென்றார்.
அறங்காவலர், டாக்டர் உ.வே.சா அவர்களை தரிசனத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அத்திருமாலின் திருநாமம் இராஜகோபாலன் என்று தெரிவித்தார்கள். உ.வே.சா பெருமாளைப் பார்த்தபோது அப்பெருமாளின் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று அதன் தலைப்பிலே இரண்டு வளைவுகளுடன் இருந்தது.
உ.வே.சா அறங்காவலரிடம், “அது என்ன” என்று கேட்டார். அவர் ”அதுதான் செண்டு” என்று விடை கூறினார். உடனே ‘செண்டா’ என்று கூறிய உ.வே.சா திகைத்து நின்று விட்டார்.
”எங்கே அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்” என்று அறங்காவலரிடம் வேண்ட, திருக்கோயிலின் பட்டர் கற்பூர தீபத்தால் அது நன்றாகத் தெரியும்படிக் காட்டினார்.
துச்சாதனன் தன் கையில் கொண்டிருந்த தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற செண்டால் திரௌபதியை இழுத்துச் சென்றான் என்பதை அறிந்து உ.வே.சா தம் ஐயம் நீக்கிக் கொண்டார்.
”இதுவரையில் நான் செண்டைப் பார்த்ததில்லை. பெருமாள் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது.” என்று உ.வே.சா. கூறினார்.
அதற்கு அறங்காவலர், “இந்தப் பெருமாளும் மன்னார்குடியிலுள்ள பெருமாளும் ஒரே அச்சு. அவர் கையிலும் செண்டு உண்டு. அவரது திருநாமமே செண்டலங்காரப் பெருமாள் என்பதாகும்” என்று கூறினார். தம் ஐயம் தீர்ந்த உ.வே.சா. அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
==

Series Navigationமறுப்பிரவேசம்துளி விஷம்
author

வளவ.துரையன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //“இந்தப் பெருமாளும் மன்னார்குடியிலுள்ள பெருமாளும் ஒரே அச்சு. அவர் கையிலும் செண்டு உண்டு. அவரது திருநாமமே செண்டலங்காரப் பெருமாள் என்பதாகும்” என்று கூறினார்.//

    செண்டு என்ற வளைவான ஆயுதம் ஏந்தும் பெருமாள் கோவில்கள் மிகச் சிலவே.ஆனால் கையில் கதையை பிடித்திருக்கும் பெருமாள் கோயில்கள் ஏராளம். கதாயுதத்திற்க்கும் செண்டு என்பதே பொதுவான பெயர்.ஏனெனில் கதையின் அமைப்பே பூச்செண்டு போன்று இருக்கும்.ஏராளமான தமிழ் பாடல்களில் இடம்பெறும் செண்டு, உருண்டு திரண்ட கதை ஆயுதத்தையே குறிக்கிறது.

    திருவிளையாடல் புராணத்தில் உள்ள மேருவை செண்டால் அடித்த படலம் குறிப்பிடும் செண்டு கதைதான்.இதனால் அடிக்கப்ப்படும்போது பாறை சுக்கலாக நொறுங்கும்.இருபுறம் வளைவான செண்டால் அடித்து நொறுக்க முடியாது.ஆனாலும் வளைகோல் செண்டு என்றே பாடல் உள்ளது.

    சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும்
    மேலாடையும் தோழன் மார்கொண் டோட — 256 பெரியாழ்வார் திருமொழி

    துவரா டையுடுத் தொரு செண்டு சிலுப்பி 10.8.2 திருமங்கை ஆழ்வார் பெரியதிருமொழி; திருமால் கதாயுதத்தை சிலுப்பி ஆட்டியதாக கூறுகிறார்.

    செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே 3.31.2 என்பது சம்பந்தர் தேவாரம்.
    சிவபெருமான் ஏறும் எருதின் முகில் உள்ள உருண்டு திரண்டது ( திமில் ) செண்டு என்கிறார்.

    வான் வெளியில் காணும் உருண்டு திரண்ட கோள்கள் செண்டுகள் என அழைப்பதைக் காணலாம்.

    தேராது தெளிதல் செண்டு வெளியில்
    ஓராது தறியை மகன் என உணர்தல்- 27-070 மணிமேகலை.
    செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை 10.621 திருமூலர் திருமந்திரம்.

    அனைவரும் அறிந்த எளிய உதாரணம், உருண்டு திரண்ட பெண்களின் அழகிய முலைகளை செண்டு என்கிறார்கள்.

    குன்றும் குன்றும் செண்டும் கன்றும்
    படிவளர்முலையினில் ம்ருக மதம் ஒழுகியர்…- .திருப்புகழ் அருணகிரியார்.

    ஆயர்மாதர் கொங்கைபுல்கு செண்டனென்றும் 1320 பெரியதிருமொழி

    கட்டுரையாசிரியர்.வளவ.துறையனார் உவேசாவின் சுயசரிதையான நினைவு மஞ்சரி முதற்பாகத்தில் (1940) இடம்பெற்ற இரண்டாவது கட்டுரையில் உள்ள செய்தியை இங்கு எழுதியுள்ளார்.

    http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0432.html

  2. Avatar
    BS says:

    இதைப்படித்தவுடன் ஒரு இளநகையுணர்வுதான் வருகிறது.

    பெருமாளின் ஆயுதத்தை வளவ துரையன் விவரித்ததிலிருந்தும், பின்னர் ஷாலியின் எடுத்துக்காட்டுக்களிலிருந்தும் இஃது ஓராயுதம்; கம்பைப்போல, அல்லது கம்பியைப்போல, அல்லது கதையைப்போல என்றுதான் தோன்றுகிறது.

    விலக்காகி தீண்டத்தகாதை நிலையில் (நான் சொல்லவில்லை வளவ துரையன் வில்லிபுத்தூரார் சொன்னதாகச் சொல்கிறார்) இருக்கும் பெண்ணை தொடக்கூடாததாகி, அவளைச் ”சென்டால்// (விவரணையை இங்கு நினைவு கூர்க) இழுத்துச்சென்றான் என்றால் எப்படி? எப்படி ஒரு கம்பால், கம்பியால், கதையால் இழுக்க முடியும்? ஒரு கயிற்றால் அல்லவோ முடியும். அதை வைத்து அவளைத் தொடாமல் கட்டிவிடலாம். பின்னர் தொங்கும் முனையை வைத்து இழுத்துச் செல்லலாம். எப்படி செண்டால்?

    போகட்டும். எப்படி அப்பெண் விலக்காகி இருக்கிறாள் என்று அவனுக்குத் தெரிய வந்தது? தெரிந்து அவள் தீண்டத்தகாதவள்; எனவே யான் தொடாமல் இழுத்துச்செல்லவேண்டுமெனப் புரிகிறான்? தன் கணவன், தன் தாய், தன் உடன்பிறந்தவள் என மூவரைத்தவிர (மருத்துவரையும் சேர்க்கலாம்) வேறெவருக்கும் சொல்லமுடியாத விவரத்தை எப்படி ஒரு அந்நியன் அதுவும் அயோக்கியன் – தெரியும் படி அவள் சொன்னாள்? பாரதக் கதையின்படி அவள் விலக்காகி இருக்கிறாள் எனபது எவருக்குமே தெரியவில்லை. சீலை உரியப்படும் கட்டத்திலும்கூட. அவள் கெஞ்சும் நிலையில் இறுதி முயற்சியாக அவளே சொல்லிவிடுகிறாள் எனபதைப் பாஞ்சாலி சபதத்திலிருந்து தெரியலாம். அதாவது necessity knows no law.

    இதுவும் போகட்டும். ஒருத்தியைக் கொடூரமாக இழுத்துச் செல்பவனைப் பற்றிப் பேசும் கட்டத்தில் தாய் போன்றவள் என்று வில்லிபுத்துரார சொல்வதும் ஒரு வியப்பான செய்தி. அவள் என்ன அவன் தாய் வயதை உடையவளா? ஒருவேளை, தாயைப்போனறு வில்லிபுத்துராருக்கு எனலாம். ஆனால், தாய் போன்ற திரபதியின் கூந்தலை…என்று வளவ துரையன் எழுதுகிறார். எனக்குப்புரியவில்லை. என்னைப்பொறுத்தவரை, பொருந்தா இடம்.

    குழப்பமான பாடல். குழப்பமான விளக்கம். ஒருவேளை எனக்கு மட்டுமே என்று சொல்லிக்கொள்ளுங்கள். ஓகே.

  3. Avatar
    paandiyan says:

    //அவளைச் ”சென்டால்// (விவரணையை இங்கு நினைவு கூர்க) இழுத்துச்சென்றான் என்றால் எப்படி? எப்படி ஒரு கம்பால், கம்பியால், கதையால் இழுக்க முடியும்? ஒரு கயிற்றால் அல்லவோ முடியும். அதை வைத்து அவளைத் தொடாமல் கட்டிவிடலாம். பின்னர் தொங்கும் முனையை வைத்து இழுத்துச் செல்லலாம். எப்படி செண்டால்? ///

    அய்யா BS அவர்கள , ரொம்ப குழப்பி கொள்ளாதீர்கள் , சந்தர்பம் கிடைத்தால் பெருமாள் செண்டை பாருங்கள் , பின் கற்பனை பண்ணுங்கள் . எளிதாக விளங்கும் எப்படி இலுதான் என்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *