1974-இல் பிறந்த பொ. செந்திலரசு எம். ஏ. பி. எல் படித்தவர். சேலம் மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர். 25 – க்கும் மேற்பட்ட இலக்கிய ஏடுகளில் இவர்
கவிதைகள் பிரசுரம் கண்டுள்ளன. காத்திரமான கவிதை மொழி , புதிய சிந்தனைகள் வழிப் படிமங்கள் இவரது கவிதைகளின் முக்கிய இயல்புகள் எனலாம். ” சாமிக்
குதிரை ” ஒரு நல்ல கவிதை. நுணுக்கமான வெளிப்பாட்டில் உரிய சொற்களால் கவிதை நகர்கிறது .
காற்றைக் கிழிக்கும்
கனைப்புகளினூடே
காது நிறைந்த போர்க்கள சப்தங்களையும்
லாடக் குளம்படியல் நிகழ்ந்த
ராஜிய வெற்றிகளையும்
அசுவ மேதச் சுகிப்புகளையும் அசைபோட்டு
கவிதையின் தொடக்கத்திலேயே ஒரு நல்ல தொடக்கம் என்ற முத்திரை விழுகிறது. “காது நிறைந்த ” என்பது நயம் !
பின் நாளில்
ராஜியங்களற்ற சுதந்திர தேசத்தின்
ஆமை அணி வகுப்புகளும்
வண்டிக்காரனின்
கழுத்தில் மாட்டிய
கொள்ளுப் பைகளுமாய்
வாழ்க்கைப்பட
கடிவாளமும் கண்பட்டியும்
கழற்றப்பட்ட சந்தோஷத்தில்…
என்று தொடர்கிறது. குதிரையின் மூன்று நிலைப்பாடிகள் இக்கவிதையில் சுட்டப்படிகின்றன.
தினம் தெருவோரம்
சுவரொட்டி தின்றது
கோவிலுக்கு நேர்ந்துவிட்ட
எங்களளூர்ச் சாமிக் குதிரை
மேற்கண்ட மூன்றாம் நிலைதான் கவிதையின் கருப்பொருளாகியுள்ளது. இதன் கட்டமைப்பில் ஒரு தெளிவு காணப்படுகிறது.
” மழை மாலை ” மழை நீரில் காகிதக் கப்பல் விடும் சிறுவனைப் பற்றியதாகும். நீண்ட ஒரே வாக்கியம் காட்சிப் படுத்துதல் என்னும் உத்தியில் அமைந்துள்ளது.
சின்னச் சின்னத் திருப்பங்களில்
குச்செடுத்துக் கிளறி
தடுக்கும் குப்பைகள்
தரை தட்டும் தடைகள் நீக்கி
முடிந்த மட்டும் அடுத்த தெருவரை
ஆறேழை அனுப்பி வைக்க
எனத் தொடங்குகிறது. மழை விளையாட்டு பசுமையாக மனத்தில் நிற்கிறது.
தோழனிடம் சொல்லிச் சிலிர்க்கவாவது
வேண்டும்
இன்னொரு மாலை
எனக் கவிதை முடிகிறது. பின்னோக்கிய காலப் பயணத்தின் நல்ல பதிவிது.!
” சேகரிப்பு ” என்ற கவிதை, தெருவோரக் குப்பைகள் சேகரிக்கும் ஒருவனை மனிதாபிமானத்துடன் பார்க்கிறது. குப்பையில் காணப்படும் பொருட்கள் பட்டியலிடப்
படுகின்றன. இதன் பின் வரும் பகுதி ஒரு செய்தியைச் சொல்ல , கவிதை முடிகிறது.
நானும்
சேகரித்துக் கொள்வேன்
முடை வீச்சத்தோடு
பழைய பேப்பர் பொறுக்கும்
என்
சமகாலத் தோழனின் வறுமையைக்
கவிதையாக
ஒரு சாமானியன் தோளில் விழும் நட்புக் கரம் கவிதை சொல்லியை உயர்த்தி விடுகிறது.
” வாடு வேட்டை ” வித்தியாசமான கவிதை. முகத்தில் வடுக்கள் உள்ள ஒருவனின் மன நெருடல்களைச் சொல்கிறது.
எப்படியும் தப்பவியலாதவாறு
முகத்தில் நெளியும்
வடுக்களைத் துரத்திப் புணரும்
பார்வைகளின் அதீதத்தில்
களைத்தயர்கிறேன்
என்பது கவிதையின் தொடக்கம். பிறரது பார்வைகள் அவனை மிகவும் துயரடையச் செய்கின்றன. பார்வைகள் பற்றிய விளக்கம் நுணுக்கமானது.
தினம் வேட்டையாடி
என்னைப் புசித்தே
யென் வடுக்கள் பசியாறுகின்றன.
மனக்குத்தல் அவனைப் பொசுக்குகின்றன.
” பிச்சை புகினும் ” என்றொரு கவிதை… பிச்சைக்காரன் மேல் கொண்ட ஈரத்தைச் சொல்கிறது. பிச்சைக்காரனின் தோற்றத்தை விளக்குகிறது செந்திலரசின் பேனா.
கண்கள் இரைஞ்ச
நாட்களின் இருளேறிய உடையுடன்
அடிக்கடி எதிர்ப்பட்டு விடுகிறாய்
அழுக்கான உடையை இருளேறிய உடை என்பது புதுமையான பார்வை !
ஜெகமெரிக்கும்
என் கோபமத்தனையும்
என்ற வரிகளில் பாரதியார் கோபம் தெரிகிறது.
” நீதிமன்றக் குறிப்புகள் ” கவிதையில் புதிய அழகான படிமம் காணப்படுகிறது
துலாத் தட்டுகள்
நிரப்பும் வாதங்களில்
மிதந்து கரையேறுகின்றன.
மெய் பொய்களின்
காலச் சுவடுகள்
இப்படிமம் உருவாக்க சட்டம் படித்த ஒருவர் கவிஞராக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அதுதான் இங்கே நடந்திருக்கிறது.
நீதி மன்ற வளாக
சோடியம் வேப்பரின்
மஞ்சள் இரவொளியில்
தினம் நனைந்தலைகிறது.
வாய்தக்களோடு
வாழ்க்கையை முடித்த ஆன்மாக்கள்
என்பதில் உண்மை கழுத்து நெரிபடத் தவிக்கிறது. படிமம் உக்கிரம் கொள்கிறது. இக்கவிதை இலக்கிய நயங்களுடன் நாட்டு நடப்பைப் பதிவு செய்துள்ளது.
” உளியின் விதி ” மிக முக்கியமான கவிதை. சொற்கள் இலக்கியச் சாற்றில் ஊறி வெளிவந்துள்ளன. எனவே கவிதைமகள் அழகாகத் தோற்றமளிக்கிறாள்.
விரியும் மணல் வெளி
செதுக்கிச் செய்ததோர்
பல்லவப் பொழுதில்
சில்லுகள் உதறிச்
சிலிர்த்து நிற்கும்
சிற்பங்கள்
என்பது கவிதையின் தொடக்கம். ” பல்லவப் பொழுது ” என்பது அரிய சொற்சேர்க்கை. “சில்லுகள் உதறி ” என்பதும் நல்ல வெளிப்பாடு.
உளியின் உருவமாய்
பாறைகளின் அணுக்களில்
உயிர்களோடி
பிரகதீஸ்வரம் உயர
விண்முட்டி நீண்ட
பாறை நிழலில் களைத்துக்
காலாற ஓய்வெடுக்கும்
சிற்பத் தமிழ்
உளியின் உருவமாய் ” என்பது நயமான வெளிப்பாடு. கோபுரத்தை உளியின் உருவம் என்று யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. ” சிற்பத் தமிழ் ” என்பது கவிஞர்
செந்திலரசுவின் சிறப்புத் தமிழ் !
சுத்தியால் சப்தமருந்தி
காலந் தின்ற
கலையின் எச்ச நீட்சியென
நீளும் பின் வாழ்வில்
அம்மிக்கொத்தி
அடிக்கல் பெயர்கள் செதுக்கித் தீர்க்கும்
உளியின் வயிற்றுப்பாடு
என்று கவிதை முடிகிறது. ” சுத்தியல் சப்தமருந்தி “என்பது நுணுக்கமான கவித்துவம் தெறித்து விழும் சொல்லாட்சி. ” உளியின் வயிற்றுப்பாடு ” என்பதன் பின்னணியில்
சிற்பியின் வாடிய முகமும் சிற்பக் கலையின் பெருஞ் சரிவும் உணர்த்தப்படுகின்றன. எனவே கவிமொழியின் உச்சம் தொடுகிறது இக்கவிதை !
இவர் கவிதைகளில் ஆங்கே காணப்படும் நயங்கள் ரசிக்கத்தக்கன. நண்பர்களுக்குள் மன வருத்தம் ஏற்படுவது இயல்பு. இக்கருத்தைக் கவிதையில் சொல்வது எப்படி ?
குரோதம் பிணைத்த சங்கிலியில்
குரைத்துக் கொண்டிருக்கிறது
நம் நட்பு
பல்லி சுவரில் போவதை நாம் பார்த்திருக்கிறோம் “சுவர் நீந்தும் பல்லி ” என்கிறார் கவிஞர். வறுமையில் துயரம் அடைகிறாள் ஒருத்தி: வறுமையின் இயல்பு பேசப்
படுகிறது.
கடைவாயில் காமம் ஒழுக
ஆக்டோபஸ் கைகளென நீளும்
வறுமையின் திரட்சிப் பிடியில்
வாழ்க்கை அகப்பட
பொ. செந்திலரசுவின் கவிதைகள் பொன் தகடுகள் வேய்ந்த அழகழகான கோபுர வரிசைகள் இப்புத்தகம் முழுவதுமோ அல்லது சில கவிதைகளோ ஆங்கிலத்தில் மொழி
பெயர்க்கப்பட வேண்டும் . இவரிடம் தமிழ் நிமிர்ந்து நிற்கிறது !
.
S
- ஜெர்மனி கிறிஸ்துவர்கள் மீது விதிக்கப்படும் கட்டாய சர்ச் வரி காரணமாக ஏராளமான கிறிஸ்துவர்கள் சர்ச்சுகளிலிருந்து வெளியேறுகின்றனர்
- நகங்கள் ( 2013 ) – மலையாள திரைப்படம்
- வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா
- தொடுவானம் 78. காதல் மயக்கம்
- மிதிலாவிலாஸ்-27
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2015 மாத இதழ்
- போராடத் தயங்குவதோ
- கேள்வி பதில்
- மறுப்பிரவேசம்
- ஐயம் தீர்த்த பெருமாள்
- துளி விஷம்
- 1993 இல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் நேர்ந்த வெடி விபத்து
- ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் “மறுபடியும் ஒரு மகாபாரதம்”- ஆங்கில பதிப்பு வெளியீடு
- பொ. செந்திலரசு காட்டும் அழகியல் பரிமாணங்கள்
- தொடு -கை
- ஹாங்காங் தமிழோசை
- சிறுகுடல் கட்டிகள்
- உல்லாசக்கப்பல் பயணம் – நூல் விமர்சனம்
- காற்றுக்கென்ன வேலி – அத்யாயம் 1 (குறுந்தொடர் )
- மத்திய கிழக்கின் நாத்திக பிரச்சாரகர்