தொடுவானம் 82. வேளாங்கண்ணி மாதா தேவாலயம்

This entry is part 23 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

டாக்டர் ஜி. ஜான்சன்

தமிழ் நாட்டு வரலாற்றில் சரித்திரப் புகழ்மிக்க தரங்கம்பாடியில் நான் தங்கியிருந்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதன் வரலாற்றை ஓரளவு தெரிந்து கொண்டேன்.
தரங்கம்பாடியை டேனிஷ் நாட்டவர் ஆண்டபோது காரைக்காலை பிரான்ஸ் நாட்டவரும் நாகப்பட்டினத்தை போர்த்துகீசியரும் ஆண்டுவந்துள்ளனர். அப்போது ஆங்கிலேயர்கள் சென்னையில்தான் இருந்துள்ளனர்.இவ்வாறு தமிழ் நாட்டின் கடற்கரையை மேல் நாட்டவர் வாணிபம் செய்ய வந்து கூறுபோட்டிருந்தனர்!
இதே கடற்கரையில்தான் தமிழரின் பெருமை கூறும் பூம்புகாரும் இருந்ததுள்ளது. அப்போது ரோமாபுரிவரை சோழர்கள் சென்றுவந்துள்ளனர். ரோமர்களும் கிரேக்கர்களும் இங்கு வந்து வாணிபம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது! பூம்புகார் துறைமுகப்பட்டினத்தின் சிறப்புகள் சிலப்பதிகாரத்தில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. அந்த துறைமுகம் இன்று கடலுக்குள் அடியில் உள்ளது. இன்று அங்கு பழைய மீனவக் கிராமம்தான் உள்ளது.
v2
நான் இங்கெல்லாம் சென்று பார்க்க ஆவல் கொண்டேன். அண்ணனும் அண்ணியும் பள்ளி சென்றுவிடுவதால் நான் தனியாகத்தான் வீட்டில் இருக்கவேண்டும். அந்த நேரத்தில் இங்கெல்லாம் சென்று வரலாம். நாகப்பட்டினம் செல்ல அடிக்கடி பேருந்து வசதி இருந்தது.அங்கு போகும் வழியில்தான் காரைக்காலும் நாகூரும் இருந்தன. அங்கிருத்து வேளாங்கண்ணிக்கும் எளிதில் செல்லலாம். பூம்புகார் செல்ல சீர்காழி செல்லும் பேருந்து ஏறலாம்.
தரங்கம்பாடியில் காலையிலேயே மீன், இறால்,நண்டு ஆகியவற்றை தெருவிலேயே கூவி விற்பார்கள். அவை அப்போதுதான் கரையில் வந்து இறங்கியவை. சிலர் உள்ளான் என்ற குருவியையும் விற்பார்கள. அண்ணி தவறாமல் தினமும் இவற்றை வாங்கி சமைப்பார்கள். எங்களுக்கு வீட்டுக்கே அவற்றைக் கொண்டுவந்துவிடுவார்கள். விலை மிகவும் குறைவாக இருக்கும். மூன்று வேளையும் அண்ணியின் சுவையான சமையலில் நான் திக்குமுக்காடினேன்!
ஒரு நாள் மதிய உணவுக்குப்பின்பு நாகப்பட்டினம் பேருந்தில் ஏறினேன். அது கடற்கரைச் சாலை. வீதியின் இடது பக்கம் கடல் தெரியும். வலது பக்கம் வயல்களும் கிராமங்களும் தெரியும்.
பொறையார் தாண்டிய கொஞ்ச நேரத்தில் உப்பனார் என்ற ஆற்றுப் பாலத்தைக் கடந்து, பாண்டிச்சேரி மாநிலம் வந்துவிட்டது. காரைக்கால் பாண்டிச்சேரியில்தான் உள்ளது. அங்கு ஒரு சுங்கச் சாவடி உள்ளது. போகும்போது அங்கு பேருந்து நிற்கவில்லை. அதைத் தாண்டியதும் வீதி ஓரத்திலேயே பெரிய மதுக்கடை தெரிந்தது. பாண்டிச்சேரியில் மதுவிலக்கு கிடையாது. அப்போதே அங்கு ஆட்கள் காணப்பட்டனர். தமிழ் நாட்டிலிருந்து எல்லையைக் கடந்ததும் முதல் வேலையாக மதுக்கடையில் நுழைந்துவிடுகின்றனர். அந்த வீதியில் சில கார்கள் நின்றன. சற்று தொலைவில் ஒரு கள்ளுக்கடையும் தெரிந்தது. அங்கும் சிலர் கள் குடிப்பது தெரிந்தது. சுமார் அரை மணி நேரத்தில் காரைக்கால் வந்துவிட்டது. தமிழ் நாட்டில் அப்போது மது விலக்கு அமுலில் இருந்தது.
காரைக்கால் அமைப்பில் மாறுபட்டிருந்தது.வீதிகள் நேர்த்தியாக நேர் நேராக அமைந்திருந்தன. அதிக குப்பை கூளங்கள் இல்லாமல் சற்று சுத்தமாகவே இருந்தது. இரு மருங்கிலும் கல் வீடுகளும் கடைகளும் அழகாக ஒரே மாதிரி அமைந்திருந்தன. சிதம்பரம் போன்று ஒழுங்கின்றி இல்லை. இந்த டவுனை பிரஞ்சுக்கார்கள் திட்டமிட்டு அமைத்துள்ளது தெரிந்தது. காரைக்காலில் பேருந்து நிலையத்திலேயே மதுக்கடைகளும் ” பார் ” களும் உள்ளன. வீதிகளிலும் அப்படித்தான் மதுக்கடைகளுக்குப் பஞ்சமில்லை. தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்ததுமே மதுக்கடைகள்தான் வித்தியாசமாகத் தெரிகின்றன. மற்ற கடைத்தெருவுகள் ஒரே மாதிரிதான் இருந்தன.
v3 அங்கிருந்து கால் மணி நேரத்தில் நாகூர் வந்துவிட்டது. மீண்டும் தமிழ் நாடு. பேருந்து நிற்கும் இடது புறத்தில் நாகூர் தர்க்கா உயர்ந்து காணப்பட்டது. அந்த தர்க்கா பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். இன்னொரு நாள் வந்து அதை நன்றாகப் பார்க்க முடிவு செய்துகொண்டேன். அங்கு கூட்டம் அதிகமிருந்தது.
அரை மணி நேரத்தில் நாகப்பட்டினம் வந்துவிட்டேன். மீண்டும் கடல் தெரிந்தது. துறைமுகத்தில் நிறைய படகுகள் நின்றன. தொலைவில் பெரிய கப்பல்கள் நின்றன. குறிப்பிடும்படியாக வேறு ஒன்றும் இல்லை. வேளாங்கண்ணிக்கு பேருந்து நின்றது. அதில் நான் ஏறிக்கொண்டேன்.
வேளாங்கண்ணி என்பதின் பொருள் வெள்ளை ஆறு. காவிரியின் ஒரு கிளை நதியின் பெயர் வெள்ளையாறு.அது கடலில் கலக்கும் இடத்தில் உள்ள இந்த கடற்கரை ஊருக்கு வேளாங்கண்ணி என்ற பெயர் வந்துள்ளது. பழங்காலத்தில் இங்கும் ஒரு துறைமுகம் இருந்துள்ளது. அப்போது கிரேக்கத்திலிருந்தும் ரோமாபுரியிலிருந்தும் கப்பல்கள் வந்துள்ளன. அங்கிருந்து வாணிபம் செய்ய அவர்கள் பாய்மரக் கப்பல்களில் பிரயாணம் செய்துள்ளனர். நம்முடைய சோழர்களும் பாண்டியர்களும் அவர்கள் நாடுகளுக்குச் சென்று வந்திருப்பார்கள். பின்பு நாகப்பட்டினம் துறைமுகம் பிரசித்திப்பெற்றதால் தரங்கம்பாடி போல் வேளாங்கண்ணியும் அதன் வர்த்தகச் சிறப்பை இழந்தது. ஆனால் இழந்த இடத்தை வேளாங்கண்ணி மாதா கோவில் பிடித்துக்கொண்டு இன்று உலகளாவிய நிலையில் பிரசித்திப் பெற்றுத் திகழ்கின்றது என்றால் அது மிகையன்று!
இப்போது இந்தியாவின் எல்லா மாநிலங்களிருந்தும், உலகின் பல நாடுகளிருந்தும் வேளாங்கண்ணிக்கு யாத்திரை வருகிறார்கள். கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மட்டுமல்ல வேற்று மதத்தினரும் இங்கு வந்து ஆரோக்கிய மாதாவிடம் வேண்டிச் செல்கின்றனர். அதுபோன்றுதான் நானும். நான் சீர்திருத்தச் சபையைச் சேர்ந்தவன். மாதாவை இயேசுவின் தாயார் என்பதை ஏற்றுக்கொள்பவன். அனால் மாதாவை கடவுளாக வழிபடாதவன். இருப்பினும் நான் இந்தப் புனிதமான கோவிலைப் பார்க்கவேண்டும் என்று ஆர்வமுடன் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறேன்.
நான் இங்கு வருவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு ஆரோக்கிய மாதா கோவில் என்றும் பெயர் உள்ளது. பலவிதமான நோய்கள் உள்ளவர்வர்கள் இங்கு வந்து மாதாவிடம் வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சுகம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை பரவியுள்ளது. அவ்வாறு சுகம் பெற்றவர்கள் அதற்கு நேர்த்திக்கடனாக திரும்ப வந்து காணிக்கைகள் செலுத்துகின்றனர். அவற்றையெல்லாம் இங்கே பத்திரப்படுத்தி பலரும் காணும் வகையில் சாட்சி கூறும் காட்சிப் பொருளாக வைத்திருக்கும் காட்சியகம் உள்ளதாம். அதையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்கு. மருத்துவம் பயிலும் மாணவன் நான். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத பல நோய்களை இங்கே வேளாங்கண்ணி மாதா குணப்படுத்துவது மகா பெரிய ஆச்சரியம்தான்! அதை நேரில் கண்டறிய இந்தப் பயணம் நல்ல வாய்ப்பாகும். இதுபோன்று அனைத்து மதங்களிலும் அற்புதங்கள் நடைபெறுவது உள்ளதுதான். அது எப்படி நிகழ்கிறது என்பதை யாராலும் கூற இயலாது! அதுதான் விசுவாசம் என்று நான் நினைக்கிறேன்.
அற்புதங்களால் உருவானதுதான் இந்த வேளாங்கண்ணி மாதாகோவில். இது 16 ஆம் நூற்றாண்டில் உருவான தேவாலயம். இதன் பின்னணியில் மூன்று விதமான அற்புதங்கள் கூறப்படுகின்றன. உறங்கிக்கொண்டிருந்த ஓர் இடைப்பையனுக்கு குழந்தை இயேசுவுடன் மேரி மாதா காட்சி தந்தது, மோர் விற்கும் முடவனிடம் தோன்றி அவனைக் குணப்படுத்தியது, பெரும் புயலில் மூழ்கிய போர்த்துகீசிய மாலுமிகளைக் காப்பாற்றியது என்று மூன்று விதமான அற்புதங்கள் இங்கு நிகழ்ந்துள்ளதாக நம்புகின்றனர்.
பேருந்து வேளாங்கண்ணியை நெருங்கியதும் வீதிகளில் மாதாவின் படங்களும் வரவேற்பு வளைவுகளும் வழிநெடுக அலங்கரித்தன. தொலைவில் வானுயர்ந்த நிலையில் வெள்ளை நிறத்தில் உயர்ந்த கோபுரங்களுடன் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் காட்சி தந்தது.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationயார் பொறுப்பாளி? யாரது நாய்?புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *