தொடுவானம் 84. பூம்புகார்

This entry is part 14 of 27 in the series 6 செப்டம்பர் 2015

டாக்டர் ஜி. ஜான்சன்

84. பூம்புகார்

drgjohnson தரங்கம்பாடி, நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி போன்ற பண்டைய துறைமுகப் பட்டினங்கள் பற்றி நம்முடைய சங்க இலக்கியங்களில் அல்லது அதற்குப் பின் எழுதப்பட்ட இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழர் வரலாற்றில் பெருமை சேர்க்கும் அளவுக்கு ஒரு சிறப்பான துறைமுகம் பண்டைய காலங்களில் செயல் பட்டுள்ளது எனில் அது பூம்புகார் துறைமுகம்.
Poompuhar3 பூம்புகார் தமிழர் பெருமை கூறும் ஒரு கற்பனைக் கதை இல்லை. அதன் சிறப்பு அக்காலத்திலேயே பதியப்பெற்றுள்ளது. அது பற்றி இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் அழகுபட விவரித்துள்ளார். பட்டினப்பாலையில் கரிகால்சோழனின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பை விரிவாக வர்ணித்துள்ளார் உருதிரங்கண்ணனார்.அதுபோன்று மற்ற துறைமுகங்கள் சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்படவில்லை. அதனால் பூம்புகார் தமிழரின் வரலாற்றுடன் தொடர்புடையது. அது சங்க காலத் தமிழரின் பெருமை கூறும் துறைமுகப் பட்டினமாகும்.
சோழ மன்னர்களின் பெருமைக்குரிய பழம்பெரும் ஊர்களில் ஒன்றுதான் புகார் என்னும் பூம்புகார். இது காவிரிப் பூம்பட்டினம் என்றும் பெயர்பெற்றுள்ளது. சிலப்பதிகாரம் ” புகார்க் காண்டம் ” என்னும் பகுதியுடன்தான் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பூம்புகாரில் பட்டினப் பாக்கம், மருவூர்ப்பாக்கம் ஆகிய இரண்டு பகுதிகள் பற்றிய வர்ணனைகள் உள்ளன.அவற்றில் பட்டினப்பாக்கம் பற்றிய வர்ணனை அழகானது. அது வருமாறு;
” கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும்
பீடிகைத் தெருவும்; பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோர் இருக்கையும்
வீழ்குடி, உழவரொடு, விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கனிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு
அணிவளை பொழுநர் அகன் பெரு வீத்தியும் ,
சூதர் மாகதர் வேதாளி கரோடு
நாழிகைக் கணக்கர் நலம் பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடற் கூத்தியர்

பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்
பயில் தொழில் குயிலுவர் பன் முறைக் கருவியர்
நாகை வேழம்பரோடு வகைதெரி இருக்கையும்
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுக்கண் மறவர்.

இருந்து புறம் கற்றிய பெரும் பாய் இருக்கையும்
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல் சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும். ”
இந்த சங்கத் தமிழில் சில சொற்கள் புரிகின்றன.பல சொற்கள் புரியவில்லை.இதைப் புரிந்துகொள்ள தெளிவுரைகள் பல உள்ளன. அவற்றில் நான் இங்கே ஞா. மாணிக்கவாசகன் எழுதியுள்ள தெவுரையைத் தர விரும்புகிறேன். அது வருமாறு :
” அகன்ற அரச வீதியும், கொடிகள் பறக்கின்ற தேர் ஓடும் வீதியும், பொருள்கள் விற்கும் கடைத்தெருவும், பெருந்தன வணிகர் வாழும் மாடங்கள் உள்ள வீடுகள் நிறைந்த தெருவும், அந்தணர் வாழும் இடங்களும், எல்லாரும் விரும்பிப் போற்றுகின்ற உயர் குடியினரான; உழவர் பெருமக்கள் வாழ்கின்ற குடி இருப்பும்; உயிர் காக்கும் உயர்ந்த கொள்கை உடையவர்களான மருத்துவரும், காலம் கணித்து நிமித்திகம் கூறும் சோதிடரும், இன்னும் இது போலப் பலதொழில் புரிவோர் வாழுகின்ற பல்வேறான இடங்களும், முத்துக் கோப்பவரும், உயர்ந்த கொள்கையோடு அணியப்படும், சங்கு அறுத்து அழகிய வளையல்கள் செய்பவரும்; வாழ்கின்ற நீண்டு அகன்ற பெரிய வீதியும், அரசன் முன் நின்று பாடுவோர், இருந்து புகழுவோர், பாடிப் பாரிசில் பெரும் பாணர், இவர்களுடன், நன்மங்கலம் பாடுபவரும், கோலத்தாலும் கூத்தாலும் அழகுடன் தோன்றும், சாந்திக் கூத்தரும், விலைமாதரும், நடனமாதர்களும், பரிசம் ஏற்பவரும், ஏவல் பணி செய்பவரும், இசைக்கருவிகள் பல வாசிப்பவர்களும், படை முகத்தும் விழாக்காலத்தும் வாசிக்கப்பெறும் பலவகையான வாத்தியங்கள் இசைப்பவர்களும், சிரிப்பூட்டும் கூத்தர்களுடன் இன்னும் வெவ்வேறான தொழில் செய்வோர் வாழும் இடங்களும், தாவும் குதிரைப்படைவீரரும், யானைப் பாகர்களும் , பெருந்தேர் ஓட்டுபவர்களும், வேல்தாக்க வந்தாலும், விழித்திமைக்காத தறுகண் ஆண்மை உடைய படை வீரரும், இருந்து வாழும், அரண்மனைக் கோட்டையைச் சுற்றி அமைந்த பெரிய குடி இருப்புகளும்; பெரும்புகழும், மிகு சிறப்பும் பொருந்திய, சான்றோர்களாகிய பெரியோர்கள் நிறைந்து வாழும்; பெருமை மிக உடைய( து ) பட்டினப்பாக்க( மு )ம். ”
ஒரு நகரின் சிறப்பு பற்றி கூற இதைவிட வேறு என்ன வர்ணனைகள் வேண்டும்? எவ்வளவு அழகாக அனைத்துச் சிறப்புகளையும் ஒருங்கே பதிவு செய்துள்ளார் இளங்கோ அடிகள்! இதில் கற்பனையோ மிகுதலோ இருக்கும் வாய்ப்பில்லை. இதைப் படித்துணரும்போது எத்தனைச் சிறப்புடன் சங்க காலத் தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
பூம்புகார் தரங்கம்பாடியின் அருகிலேயே இருந்ததால் அங்கு செல்ல முடிவு செய்தேன்.காலையிலேயே புறப்பட்டு மாயவரம் சென்றேன். அங்கிருந்து பூம்புகார் பேருந்தில் ஏறினேன்.அது பூம்புகார் ஊருக்குள் சென்று நின்றது.
அங்கிருந்து நடக்கும் தூரத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆலயம் இருந்தது. அங்கு சென்று போதகரைப் பார்த்து என்னுடைய ஆவலைத் தெரிவித்தேன். அவர் என்னை பூம்புகார் கடற்கரைக்குக் கூட்டிச்சென்றார்.
poompuhar2 வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த கடற்கரையில் நின்றவாறு ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தேன். உயர எழும் அலைகள் அந்தப் பகுதி ஆழமானதுதான் என்பதைக் கூறியது. அந்த ஆழத்தின் அடியில் பூம்புகாரின் சிறப்புகள் புதைந்துள்ளன என்பது வருத்தத்தையே தந்தது. அன்று பூம்புகாரிலும் அதற்கு முன்னும் தோன்றிய தமிழரின் நாகரிகம் அழியாமல் தொடர்ந்திருந்தால் இன்று தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தேன். அப்போதே அங்கே யவனர்கள் என்னும் கிரேக்கர்களும் ரோமர்களும் அந்த கடற்கரையில் வணிகமும் சேவையும் செய்துள்ளனர் என்பது வியக்கத்தக்கது.
கடலில் மூழ்கியுள்ள பண்டைய தமிழகத் துறைமுகப் பட்டினத்தைப் பற்றி இந்திய அரசு அகழ்வாராய்ச்சிகள் நடத்தியுள்ளபோதும், அதை மேலும் தொடர்ந்து நிறைவான ஆவணங்கள் தந்தால் நல்லது. இதில் தமிழக அரசும் அதிகமாக ஆர்வம் காட்டுதல் வேண்டும். காரணம் நம்முடைய வரலாற்றின் ஒரு பகுதி கடலுக்குள் மறைந்துள்ளது.
திராவிடர்களின் நாகரிகம் மொஹென்ஜோடாரோவிலும், ஹாரப்பாவிலும் தோன்றியவை என்பதை அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் மேல்நாட்டவர் கூறினாலும் அதிலும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் தமிழரின் நாகரிகத்தின் ஒரு பகுதி பூம்புகார் கடலுக்கடியில் உள்ளது என்பதை யாராலும் சந்தேகிக்க வாய்ப்பில்லை!
நம்முடைய நாகரிகத்தின் ஒரு பகுதியான சங்க காலத்தின் பெருமை கூறும் பூம்புகார் கடற்கரைக்கு வந்த மன திருப்தியுடன் தரங்கம்பாடி திரும்பினேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? எத்தனை விரைவில் நேரும் ?ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

6 Comments

 1. Avatar
  ஷாலி says:

  சங்க இலக்கியங்கள் புகார், பூம்புகார், பட்டினம்,காவிரிப்பூம்பட்டினம் எனப் பல பெயர்களில் சுட்டும் இத்துறைமுக நகரம் காவிரி ஆறு வங்கக் கடலில் புகுகின்ற இடத்தில் அமைந்ததால் இப்பெயர்களைப் பெற்றது எனலாம். இலக்கியங்கள் சுட்டுவதுபோல சங்ககாலத்தில் தமிழகம் வந்து சென்ற மேலை நாட்டுக் கடல் பயணிகளும் இந்நகர் குறித்த சிறப்புகளைப் பதிவு செய்யத் தவறவில்லை. இப்பட்டினத்தைப் பெரிப்ளூசு ‘கமரா’ எனவும், தாலமி “கபேரிஸ் எம்போரியான்” (Kaberis Emporion) எனவும் குறிப்பிடுகின்றனர். மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்தின் பிற பெயர்களாகக் குறிப்பனவற்றில் ‘காகந்தி’ என்பதும் ஒன்றாகும்.

  கி.பி. 5ஆம் நூற்றாண்டில் புத்ததத்தர் இங்கிருந்த புத்தவிகாரையில் தங்கியிருந்து பிராகிருத மொழியில் அபிதம்மவதாரம் என்னும் இலக்கியத்தை இயற்றியதாகக் கருதப்படுகிறது. இதில் இவ்வூர் ‘கவேரபட்டினம்’ எனக் குறிப்பிடப்படுவதோடு இதன் எழில்மிகு தோற்றம், அமைப்பு, அங்கு வாழ்ந்த உயர்குடி மக்கள் மற்றும் அரிய வைரக்கற்கள் முதல்கொண்டு விற்கப்பட்ட பெரிய கடைத்தெருக்கள் வரை பேசுவதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர் (K.V.Raman, Excavation at Poompuhar, II Interantional Tamil Conference, 1968). கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப் பாடல்களில் இப்பகுதி குறிப்பிடப்படுகிற
  து. இடைக்காலச் சோழர்களின் காலத்திலும் காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரே நிலைத்திருந்ததை அக்காலக் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம்.

  http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/kavirippum_pattinam.htm

 2. Avatar
  ஷாலி says:

  // கடலில் மூழ்கியுள்ள பண்டைய தமிழகத் துறைமுகப் பட்டினத்தைப் பற்றி இந்திய அரசு அகழ்வாராய்ச்சிகள் நடத்தியுள்ளபோதும், அதை மேலும் தொடர்ந்து நிறைவான ஆவணங்கள் தந்தால் நல்லது. இதில் தமிழக அரசும் அதிகமாக ஆர்வம் காட்டுதல் வேண்டும். காரணம் நம்முடைய வரலாற்றின் ஒரு பகுதி கடலுக்குள் மறைந்துள்ளது..//

  1991, 1993 ஆகிய ஆண்டுகளில் கோவாவில் உள்ள தேசியக் கடலியல் கழகம் பூம்புகார்க் கடற்கரை அருகே கடலில் அகழாய்வை மேற்கொண்டு இறுதியில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. “இலாட வடிவில் (U) உள்ள கட்டிட அமைப்பு பூம்புகார்க் கடற்கரையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் 23 மீட்டர் ஆழத்திலும் காணப்பட்டது. இந்த அமைப்பின் மொத்த நீளம் 85 மீட்டர்; இரண்டு சுவர்களுக்கு இடையே 13 மீட்டர் இடைவெளி, சுவர்களின் அதிக அளவு உயரம் 2 மீட்டர்; மேற்குச் சுவரைவிடக் கிழக்குச் சுவர் உயரம் அதிகம்; சுவரில் கடற்பாசிகள், செடிகள் படர்ந்திருந்ததாலும் சில இடங்களில் கட்டுமான வேலைகளும் காணப்பட்டன” என்பது அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.

  அதன்பின் 2001 ஆண்டு கிரகாம் ஆன்காக் என்கிற இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர் இங்கிலாந்து 4ஆவது தொலைக்காட்சி, அமெரிக்கத் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிதி உதவியுடனும், கோவாவில் உள்ள தேசியக் கடலியல் கழகத்தின் உதவியுடனும் பூம்புகார்க் கடல்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த இலாட வடிவில் (U) உள்ள கட்டிட அமைப்பு படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது 100 அடிகள் ஆழத்தில் மேலும் 20 பெரிய கட்டுமான அமைப்புகளைக் கண்டதாக கிரகாம் ஆன்காக் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாய்வு பற்றிய நூலின் 14ஆவது இயல் பூம்புகார் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வை விவரிக்கிறது. 11000 ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதை அவ்வாய்வறிக்கையில் கிரகாம் ஆன்காக் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

  இங்கிலாந்து டர்காம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் ஆராய்ச்சியாளர் கிளீண் மில்னே அவர்கள், கிரகாம் ஆன்காக் அவர்களின் கருத்து சரியானது தான் என்கிறார். ஆனால் கோவா-தேசியக் கடலியல் கழகத்தின் ஆய்வாளர் முனைவர் ஏ. எசு. கவுர் அவர்கள், “இலாட வடிவில் (U) உள்ள அமைப்பைக் கட்டுவதற்கு மாபெரும் தொழில்நுட்பம் தேவை… 11500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த பண்பாடுகளின் திறமைக்கு அப்பாற்பட்டது அது” எனக் கூறியுள்ளார். கிளீண் மில்னே, கிரகாம் ஆன்காக் அகியோர்களின் கருத்துப் படி பூம்புகார் நகர நாகரிகம் மெசபடோமியாவில் இருந்த சுமேரிய நாகரிகத்திற்கும் முற்பட்டது. பூம்புகார் நகர நாகரிகம் குறித்த இத்தரவுகள், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தெரிவித்துள்ள தரவுகளாகும் (அவரது நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 22-24.)

 3. Avatar
  Mahakavi says:

  காவிரி+புகும்+பட்டினம் = காவிரி பூம்பட்டினம். காவிரி கடலில் கலக்கும் இடம். புகார் = பகைவர்கள் புக முடியாத நகரம். பூம் என்ற ஆடை மொழி பூஞ்சோலையைக் குறிப்பிடுகிறது.
  Regarding the antiquity of PuhAr being thousands of years, it cannot be discounted without solid evidence. Technology is not the sole invention of modern age. Certain engineering concepts may have been used in practice long ago but may have been lost in the interim period only to be reinvented in recent times. Indian government is spending a fortune on investigating the underwater city of DwAraka in Gujerat. PuhAr is no less famous. Unless one undertakes a mammoth effort with enough money to spare for the work we cannot discount the antiquity of PuhAr. Somebody must present this to the United Nations (UNESCO in particular) to sponsor this project.

 4. Avatar
  Dr.G.Johnson says:

  Dear Mr.Mahakavi. Greetings. Thank you for the interesting information on the name POOMPUHAAR. It is fitting and something new for many of us. I appreciate your concern for a proper investigation on the submerged city of POOMPUHAAR. I also fully support your view that this subject should be voiced in United Nationsand in particular UNESCO. Let us hope for the best that the Indian Government will do something in the near future. Until then we should give wide publicity at State and National level. Thank You. With Regards….Dr.G.Johnson.

 5. Avatar
  BS says:

  //அன்று பூம்புகாரிலும் அதற்கு முன்னும் தோன்றிய தமிழரின் நாகரிகம் அழியாமல் தொடர்ந்திருந்தால் இன்று தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தேன். //

  கற்பனை தேவையேயில்லை. இளங்கோ காட்டும் விதவிதமான

  //பலதொழில் புரிவோர் வாழுகின்ற பல்வேறான இடங்களும், முத்துக் கோப்பவரும், உயர்ந்த கொள்கையோடு அணியப்படும், சங்கு அறுத்து அழகிய வளையல்கள் செய்பவரும்; வாழ்கின்ற நீண்டு அகன்ற பெரிய வீதியும், அரசன் முன் நின்று பாடுவோர், இருந்து புகழுவோர், பாடிப் பாரிசில் பெரும் பாணர், இவர்களுடன், நன்மங்கலம் பாடுபவரும், கோலத்தாலும் கூத்தாலும் அழகுடன் தோன்றும், சாந்திக் கூத்தரும், விலைமாதரும், நடனமாதர்களும், பரிசம் ஏற்பவரும், ஏவல் பணி செய்பவரும், இசைக்கருவிகள் பல வாசிப்பவர்களும், //

  … have migrated to Chennai. When the cine field industry came up, the migration from your district was continuous. ஏனென்றால், இசைக்கலைஞரும், பாடிப்பிழைப்போரும், பாணர்களும், விலைமாதரும், நடன மாதரும் எல்லாரும் அங்கே போய்விட்டார். தமிழக முதல்வராகவும் சினிமாக்கலைஞராக இருந்தவரே கள்ள ட்ரெயினேறி அங்கே போய் பூம்புகார் என்ற திரைப்படத்தை எழுதி மனதை தேற்றிக்கொண்டவர்தானே?

  //உயிர் காக்கும் உயர்ந்த கொள்கை உடையவர்களான மருத்துவரும்// migrated to Malaysia.

  History is always in flux. People moving out, thereby making their original habitats deserted villages – are quite common. Today Europe is facing that calamity.

  நான் 2014 தை மாசம் அந்த பக்கம் போனேன். அங்குள்ள கிராமங்கள் எல்லாம் நான் சொன்ன deserted villages மாதிரிததான் எனக்குத் தோன்றின.

  மதுரை மட்டும் மாறவில்லை. கோயிலைச்சுற்றிய வீதிகள் மதுரைக்காஞ்சியில் விவிரிக்கப்பட்டதைப்போன்றே ஆரவாரத்துடன் இருக்கின்றன.

  நல்ல அத்தியாயம் இது. சிறப்பாக இளங்கோவை நினைவு கூறியிருக்கிறீர்கள்.

 6. Avatar
  Dr.G.Johnson says:

  நண்பர் சகலகலாவல்ல ஷாலி அவர்களே, நான் தொடுவானத்தில் பூம்புகார் கடற்கரைக்கு 50 வருடங்களுக்கு முன் சென்று வந்ததை நினைவு படுத்திதான் எழுதினேன்.அத்துடன் எனக்குத் தெரிந்திருந்த சில சிறப்புகளையும் சேர்த்து என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன். அதற்கு பின்னூட்டம் எழுதியுள்ள தாங்கள் அதை விரிவு படுத்தி பல்வேறு அகழாய்வு முடிவுகளையும் குறிப்பிட்டதோடு பூம்புகாரின் நாகரீகம் மெசப்பொட் டேமியா சுமேரியர்களின் நாகரீகத்துக்கும் முற்பட்டது என்று சிறப்பு செய்துள்ளதற்கு நன்றி. இந்த உண்மைகளை நாம் தெரிந்துகொண்டதோடு விட்டுவிடுவது முறையல்ல. இவற்றை உலகின் பார்வைக்குக் கொண்டுசென்று இவற்றுக்கு வலு சேர்க்கவேண்டுமெனில் அகழாய்வுகள் தொடவேண்டும். ஆதாரப்பூர்வமான முறையில் தமிழரின் நாகரீகத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தவேண்டும். இதற்கு யுனெஸ்கோ நிறுவனம்தான் சரியானது என்று நண்பர் மகாகவி கூட இங்கு பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்தவர்கள் கூறினால் நல்லது. தொடுவானதுடன் தொடர்ந்து வாருங்கள்…….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *