தொடுவானம் 85. புதிய பூம்புகார்

This entry is part 17 of 24 in the series 13 செப்டம்பர் 2015

85. புதிய பூம்புகார்

தரங்கம்பாடியில் இருந்த நாட்கள் இனிமையானவை. சரித்திரப் புகழ்மிக்க பண்டைய தமிழகத்தின் துறைமுகப் பட்டினங்களைப் பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது இன்பமானது. நாம் என்னதான் சரித்திரத்தை நூல்களில் படித்திருந்தாலும்,அந்த இடங்களை நேரில் சென்று பார்க்கும்போது நம்மையும் அறியாமல் ஒருவித எழுச்சி மனதில் தோன்றுவது இயல்பு.
poom1 நான் பூம்புகார் கடற்கரையில் நின்றபோது என் கண்முன்னே சங்க காலத்தில் அங்கு இருந்த காவிரிப்பூம்பட்டினம் என் கண் முன்னே தோன்றியது. அது கடலுக்குள் மூழ்கி அழிந்து போயிருந்தாலும், இளங்கோ அடிகளின் கைவண்ணத்தில் உருவான சிலப்பதிகார காவியத்தின் மூலமாக அது இன்னும் அழியா ஓவியமாகத்தான் வாழ்ந்து வருகிறது. அன்று அவ்வளவு சீரும் சிறப்புமாகத் திகழ்ந்த பூம்புகார் கடற்கரை இன்று வெறிச்சோடிக் கிடப்பது வேதனையானதுதான்.
நான் சோழநாட்டில் நாட்டில் பிறந்தவன் என்பதால் ஏனோ என்னையுமறியாமல் பூம்புகார் மீது தனி ஆர்வம் கொண்டேன். அத்துடன் சிலப்பதிகாரமும் எனக்கு பிடித்திருந்தது. கலைஞரின் ” சிலப்பதிகார நாடக நூல் ” என்னைக் கவர்ந்தது. அவர் எழுதி உருவாக்கி இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி நடித்த ” பூம்புகார் ” திரைப்படமும் என்னை ஈர்த்தது..இதனால் பூம்புகார் என்னுடைய மனதில் நீங்காத இடம் பெற்றிருந்தது.
இந்த தொடுவானம் தொடரில் நான் பூம்புகார் சென்றது 1965 ஆம் வருடமாகும். அப்போது நான் முதல் ஆண்டு மருத்துவ மாணவன். அன்று பார்த்தபோது அங்கு பூம்புகார் கலைக்கூடம் எழுப்பப்படவில்லை. அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லை. அதன்பின்பு 1968 ஆம் ஆண்டில் தி.மு. க. ஆட்சி அமைத்ததும், அந்த கலைக்கூடம் அழுகுபட எழுப்பப்பட்டது. அதன் மூலம் பூம்புகாரின் வரலாற்றுச் சிறப்பு தமிழ் மக்களின் பார்வைக்குச் சென்று அது ஒரு சுற்றுலாத் தளமாகவும் மாறியது. மேல் நாட்டு சுற்றுப்பிரயாணிகள்கூட இப்போதெல்லாம் மகாபலிபுரம் செல்வதுபோன்று பூம்புகாருக்கும் செல்ல விரும்புகின்றனர்.
( இந்தத் தொடரில் நான் 1965 ல் கண்ட பூம்புகார் பற்றி எழுதிவிட்டு சென்ற வாரம் மீண்டும் அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியதால் அங்கு சென்று மனம் வெதும்பிய நிலையால் இன்றைய பூம்புகார் பற்றி தொடர்ந்து கூற ஆசைப்படுகிறேன். தமிழ் ஆர்வலர்கள் இதை நிச்சயம் படிக்கவேண்டும் என்பது என்னுடைய பேரவா!
தி. மு. க. ஆட்சிக்கு முன் இருந்தவர்கள் இந்த பூம்புகார் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபின்பு வள்ளுவரையும் இளங்கோவையும் சிறப்பு செய்தார்கள்.வள்ளுவர் கோட்டம் அமைத்ததுபோல் பூம்புகாருக்கும் புதுப் பொலிவு தரலாயினர். இதில் கலைஞரின் பங்கு அளப்பறியது. அவர் எழுதிய சிலப்பதிகார நாடக நூல் குறித்து அறிஞர் அண்ணா கலைஞரின் குறளோவிய நூலுக்கு 1968 ஆம் வருடம் எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
” என் தம்பி கருணாநிதியின் தமிழ் ஆளுந்திறன், பாத்திரங்களைப் படைக்கும் உயர்தனி ஆற்றல் ஊரும் உலகமும் அறிந்தது; அறிந்து மகிழ்ந்தது; மகிழ்ந்து பாராட்டியது! அவரது எழுத்தோவியத்தில் போற்றத்தகும் முறையில் நற்பணியைச் செய்தவர்.
சிலப்பதிகாரத்தில் தனது வாதங்களை முன்வைத்தாள் கண்ணகி! அவளது எழுச்சிமிகு பேச்சையும் எச்சரிக்கையையும் என் தம்பி எடுத்துரைக்கும்போது மயிர் கூச்செறிகிறது.
கண்ணகியின் ஆத்திரத்தை உணர்ச்சி உருவோடு அமைப்பது ஒரு எழுத்தாளனுக்கு எளிதான காரியமல்ல; ஆனால் கருணாநிதி யாரையும் விஞ்சுகின்ற அளவில் வெற்றி கொண்டுள்ளார். தான் ஒரு ஒப்புவமையற்ற நடையழகு காட்டும் எழுத்தாளர் என்பதால்!
நூல் முழுவதும் கருணாநிதி, ஒரு காவியப் படைப்பிற்குத் தேவையான செழுஞ்சொல்லோட்டத்தை சீரிய அழகு அமைப்பை உருவாக்கித் தருகிறார். ”

இவற்றையெல்லாம் தெரிந்தபின்பு கலைஞர் எழுப்பியுள்ள பூம்புகார் கலைக்கூடத்தைக் காண ஆவல் கொண்டு 1998 அங்கு சென்றேன். அப்போது தி.மு.க. ஆட்சி. கலைக்கூடம் மிகவும் தத்ரூபமாக வியக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. சிலப்பதிகார காவியத்தின் பகுதிகள் சிற்ப வடிவங்களில் மகாபலிபுரத்து சிற்பக் கல்லூரியின் சிற்ப வல்லுனர்களால் கவர்ச்சியான வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. காணும் இடமெல்லாம் அலங்கார வாயில்களும், மணிமண்டபங்களும், சிற்பங்களும்,கண்ணகி கோட்டம் போன்ற சிறப்பு அமைப்புகளும் காண முடிந்தது. ஏறக்குறைய சங்க காலத்து பூம்புகார் துறைமுகப் பட்டினத்தையே நம்முடைய கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார் நம் கலைஞர் மு. கருணாநிதி. இதை தமிழக மக்கள் அப்போது கண்டு களித்தனர். நம்முடைய பழம் பெருமைகளை அதுவரை உணராதவர்கள் கண்டு வியந்தனர். சிலப்பதிகாரம் கதை தெரியாதவர்களும் கண்டு தெரிந்துகொண்டனர். ஒரு சிலருக்கு இவையெல்லாம் தேவைதானா என்று தோன்றியிருக்கக்கூடும். அது அவர்களின் சொந்த கருத்தாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை பாமார மக்கள் சரித்திரம் படிக்கவோ அல்லது நம் முன்னோர்களின் சிறப்பான வாழ்க்கை முறையைப் பற்றியோ, அவர்கள் படைத்த இலக்கியங்கள் குறித்தோ தெரிந்துகொள்ளும் வாய்ப்பில்லை. அவர்களுக்கெல்லாம் இதுபோன்ற நினைவுச் சின்னங்களை எழுப்புவதில் தவறு .ஏதுமில்லை.
நாம் பார்த்திராத கடவுள்களுக்கு வானுயர்ந்த கோபுரங்கள் கட்டி மகிழ்கிறோம். தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரத்து சிவன் கோவில் இரண்டும் சோழ மன்னர்களான இராஜஇராஜ சோழனையும், இராஜேந்திர சோழனையும் நமக்கு இன்னும் நினைவூட்டியவண்ணம் அழியாக் கலைக்கூடங்களாகத் திகழ்கின்றன. அதுபோன்று நம் தமிழக மண்ணில் வாழ்ந்து மறைத்த மக்கள்., கலை, கலாசாரம், இலக்கியம், பட்டினங்கள் பற்றி நாம் இவ்வாறு நினைவுச் சின்னங்கள் எழுப்பி சிறப்பு செய்வதில் தவறு ஏதுமில்லை. உண்மையான தமிழ்ப் பற்றாளர்களுக்கே இத்தகைய எண்ணமும் ஆக்கமும் உருவாகும். அவர்களுக்கு தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை 4அன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

7 Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    சிறுவயதில், ஒவ்வோராண்டும் சித்திரை முழுநிலவு நாளன்று குடும்பத்தோடு பூம்புகார் சென்று, கலைக்கூடம், கடற்கரை, நிலவு தோன்றுதல், சித்திரை முழுநிலவு நாள் கொண்டாட்டத்தை ஒட்டிய கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் எல்லாம் கண்டுகளித்த நினைவுகள் பெருமூச்சைத்தான் எழுப்புகின்றன. வீட்டிலிருந்து அரைமணி தூரத்திலிருக்கும் புகார் கடற்கரையை ஊருக்கு வரும் ஒவ்வொரு முறையும் வருத்தத்தோடு தவறவிடுகிறேன்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு. பொன். முத்துக்குமார் அவைகளே. இன்றைய பூம்புகார் பற்றிய தங்களுடைய ஆதங்கத்தை என்னால் உணரமுடிகிறது. அதுபற்றி அடுத்தவாரம் தொடுவானத்தில் வெளிவரும். கட்டாயம் படித்துப் பாருங்கள்.நன்றி……டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன்

    எழுபதுகளில் பூம்புகார் சென்றிருக்கிறேன். வாஸ்தவத்தில் பழந்தமிழ்ப் பண்பாட்டின் கண்ணாடி போன்ற சிலப்பதிகாரக் காட்சிகளை அங்குள்ள கட்டிடங்கள் ப்ரதிபலிக்கின்றன என்றால் மிகையாகாது.

    தமிழகத்தில் தமிழர்களை ஆட்சிக்கே வரவிடாது தொடர்ந்து தமிழகத்தை ஆண்டு தமிழகத்தை நாசம் செய்த சக்திகளாகவே த்ராவிட இயக்கத்தினரை நான் அவதானிக்கிறேன்.

    கலப்பில்லாத தூய தமிழை தமிழகத்தில் தழைய விட்டவர்கள் என்றால் …………. எனக்கு மிகக் கடுமையான மாற்றுக்கருத்துக்கள் இருந்த போதிலும்……….. என்னுடைய மொழிநடை கலப்பு மொழிநடையாக இருந்த போதிலும் கூட…………… எனக்கு எந்தக்கலப்புமில்லாத தூய தமிழின் மீது அக்கறையும் உள்ளபடிக்கும்………..இதற்கான ச்ரேயசை வடுகர் ஆதிக்கமிகுந்த த்ராவிட இயக்கங்களுக்குத் தருவதில் தயக்கமில்லை.

    யோசித்துப் பார்க்கையில் பூம்புகார் கலைக்கூடங்களை அமைத்தமை மற்றும் வள்ளுவர் கோட்டம் அமைத்தமை ………….. இந்த இரண்டு நற்பணிகளுக்குமான ச்ரேயஸ் கூட த்ராவிட இயக்கங்களுக்கு உரித்தானது. இரண்டும் தமிழகத்துக்கு மிகவும் தேவையான கலைப்பொக்கிஷங்கள்.

    \\ நாம் பார்த்திராத கடவுள்களுக்கு வானுயர்ந்த கோபுரங்கள் கட்டி மகிழ்கிறோம். \\

    இது தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தக்ஷிண பாரதத்தின் மேன்மையை பறைசாற்றும் செயல்பாடு.

    உத்தரபாரதத்தில் ராஜாக்கள், சுல்தான்கள், நவாபுகள், ஜமீன்தார்கள் இவர்களுடைய அரண்மனைகளை கோட்டை கொத்தளங்களை வாய்பிளக்க பார்க்க முடியும். இங்குள்ள கோவில்கள் மொகலாயர்களால் த்வம்சம் செய்யப்பட்டு பலவிடங்களில் சிதைக்கப்பட்ட கோவில்களின் மீதிலேயே மாற்று மதத்தினரின் வழிபாட்டிடங்கள் உள்ள கோரத்தை இன்றளவும் பார்க்கலாம்.

    தமிழகத்தில் ஆட்சி செய்த அரசர்கள் தங்களுடைய அரண்மனைகளையோ சிலைகளையோ பெருமிதத்துடன் நிர்மாணிக்காது கோடானு கோடி மக்கள் வழிபடும் இறைவனது ஆலயத்தையே மிகப் பெரிதாகவும் பொலிவு மிகவும் கட்டி மகிழ்ந்தனர் என்று தெரிகிறது. தமிழகத்தின் சிற்பக்கலை நுட்பங்களை பறைசாற்றும் காலத்தை விஞ்சும் கலாசார அடையாளங்கள் நமது கோவில்கள்.

    இதற்கு மாற்றானது உத்தரபாரதத்து மக்களது செயல்பாடு. கோவில்கள் தொடர்ந்து மொகலாய அரசுகளால் த்வம்சம் செய்யப்பட்டதால் ஒருக்கால் அவர்கள் கோவில்களை குறைவாக நிர்மாணம் செய்துள்ளார்களோ…………… அல்லது நிர்மாணம் செய்த கோவில்கள் த்வம்சம் செய்யப்பட்டுள்ளனவோ……… என்று தோன்றுகிறது.

  4. Avatar
    BS says:

    //தமிழகத்தில் தமிழர்களை ஆட்சிக்கே வரவிடாது தொடர்ந்து தமிழகத்தை ஆண்டு தமிழகத்தை நாசம் செய்த சக்திகளாகவே த்ராவிட இயக்கத்தினரை நான் அவதானிக்கிறேன்.
    கலப்பில்லாத தூய தமிழை தமிழகத்தில் தழைய விட்டவர்கள் என்றால் …………. எனக்கு மிகக் கடுமையான மாற்றுக்கருத்துக்கள் இருந்த போதிலும்……….//

    நீங்கள் எப்படியும் அவதானித்துப்போங்கள்; உங்கள் கடுமையான மாற்றுக்கருத்துக்கள் மக்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்கு கருநாநிதி உருவாக்கிய // பூம்புகார், வள்ளுவர் // பற்றிய எண்ணச் சூழலை மருத்துவர் காட்டுகிறார். அது பாராட்டப்படவேண்டியது. கருநாநிதிக்கு முன் எவரும் செய்ய நினைக்கவேயில்லையென்றும் குறிப்பிடுகிறார்.

    தூய தமிழ் என்ற எதுவும் இல்லை. ஒன்று, தமிழ். மற்றொன்று,கலப்படத் தமிழ். என இருவகைகள மட்டுமே.

    தூய தமிழ் என்ற சொல்லாடலே குறும்புத்தனமானது. அப்படிச்சொல்லி தாம் எழுதும் கலப்படத்தமிழும் சரியே என்ற முயற்சித் திணிப்பே.

    மருத்துவர் என்ற சொல்லிருக்க வைத்யர் என்ற சொல்லேன்? வைத்யர் என்றால் தமிழ் மொழிப்பழக்கத்தின்படி, நாட்டு வைத்தியரே. மருத்துவர் என்றால் இருவகையினரையும் குறிக்கும்; கண்டிப்பாக, ஆங்கில மருத்துவரைக் குறிக்கும்.மருத்துவர் ஜாண்சன் ஓர் எம்.பி.பி.எஸ். அவருக்குக் கொடுக்க வேண்டிய கிரடிட்டைக் கொடுத்தே ஆக வேண்டும். அதாவது மருத்துவர் ஜாண்சன். சிரி வைத்யர் என்றெல்லாம் சொல்வது தவறு. கலப்பட மொழிமட்டுமில்லாது, தவறான மொழிவழக்கையும் உருவாக்குகிறீர்கள்.

    டாக்டர் திரு ஜாண்சன் என்று சொல்வார்களா? வெறும் டாகடர் ஜாண்சன் என்று மட்டுமே சொல்வார்கள்.

  5. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    தமிழ் மொழிப்பழக்கத்தின் படி, மருத்துவர் என்பது சாதி போன்று ஒரு பிரிவினரை குறிக்கும் சொல்லும்கூட.

    முன்னொரு காலத்தில் சிகை திருத்துவோர் தம்மை மருத்துவர் என்று குறிப்பிட்டுக்கொள்வதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சான்றாக, எங்கள் ஊரின் அருகாமையில் இருந்த ஒரு சிகை திருத்தும் அன்பர் எலும்பு சிகிச்சை செய்வதில் வல்லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பதின்ம வயதில் ஏற்பட்ட எனது கால் முறிவுக்கு அவரிடம் சிகிச்சை செய்ய சென்ற அனுபவமும், அவரது பாரம்பரிய ஞானத்தைக்கண்டு வியந்ததும், எங்களது அவசர புத்தியால் அந்த சிகிச்சையை முழுமை செய்துகொள்ள இயலாத அபத்தமும் நிகழ்ந்தது.

    எனவே வைத்யர் என்ற சொல்லும் பொருத்தமானதே. (இச்சொல்லின் வேரைத்தேடியெல்லாம் நான் அலையவில்லை, பொருத்தப்பாட்டை மட்டும் பார்க்கிறேன்) வைத்யம் செய்பவர் வைத்யர். அது எந்த வைத்யமாக இருப்பினும். அதை நாட்டு / நகர் என்று பிரித்து வைத்துக்கொண்டது நமது குறுகிய பார்வை.

  6. Avatar
    BS says:

    க்ரெக்ட். தமிழ்நாட்டில் முடிதிருத்தும் கடைக்குச் சென்றால், அங்கு முடிதிருத்தும் கூலி விவரங்களை அச்சடித்துத் தொங்க விட்டிருப்பார்கள். அவ்விவரங்களை ஒவ்வொரு கடைக்கும் விநியோகம் செய்திருப்பது மருத்துவர் சங்கம் என்ற அமைப்பு. மருத்துவர்கள் என்றால் நாவிதர்கள்.

    முன்னொரு காலத்தில் அன்று. தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது. முன்னொரு காலத்துச்சொல்லின் மீட்பாக இருக்கலாம். இச்சங்கம் ஆண்டுதோறும் தியாகி விசுவநாத தாஸ் என்பவருக்கு விழா எடுக்கும். மதுரையில் பார்க்கலாம். இவர் இஜ்ஜாதியைச்சேர்ந்த விடுதலைப்போராட்ட வீரர். பந்தல்களில் மருத்துவர் சங்கம் என்றே பானர் போட்டிருப்பார்கள். போன வருடம் கள்ளழகர் திருவிழா நாட்களில் இவர்கள் அமைத்திருந்த தண்ணீர்ப்பந்தலில் பெயர்: தியாகி விசுவநாத தாஸ் தண்ணீர்ப்பந்தல். பக்கத்துப்பந்தல், அம்மா பந்தல்.

    குறுகிய பார்வை, நெடிய பார்வை என்றெல்லாம் கிடையா. மக்கள் எப்படி எடுத்துப்புழங்குகிறார்களோ, அப்படித்தான் நான் பிறரை விளிப்பதும் அமைய வேண்டும். இல்லாவிட்டால் நாம் அவர்களை அவமதிப்பதாக நினைக்கக்கூடும்.

    மருத்துவர் என்பது நாவிதர்களுக்கு இன்று அவர்களே வைத்துக்கொண்டாலும், அது நோய்க்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவருக்கே பரவலாக மக்களால் பயன்படுத்தப்படும் சொல்.. எவருமே ஓர் எம் பி பி எஸ் டாக்டரை மருத்துவர் என்னும்போது, அவரை நாவிதரா என்று குழப்பமடையா மாட்டார்கள். கற்பனைக்குதிரையைக் கட்டி வையுங்கள். தாறுமாறாகக் குதிக்கப்போகிறது :-)

    வைத்யர் என்று எம் பி பி எஸ டாக்டரை அழைப்பது சரியோ, தவறோ, பழக்கமில்லை. “பட்டிக்காட்டான் போல எனவே வைத்யர் என்று எம் பி பி எஸ் டாக்டரைச் சொல்கிறான்” என்று நினைப்பதைத் தடுக்க முடியாது.

    டாக்டர் ஜாண்சன் – மிகச்சரியான விளி. டாக்டர் என்ற சொல், தமிழ்நாட்டில் மட்டுமன்று. இந்தியா முழுவதும் ஒவ்வொரு இந்தியனும் ஏற்ற ஆங்கிலச்சொல்.

    மருத்துவர் என்ற சொல் தெரிந்தும் வைத்யர் என்பது ஒரு perversion of mind.

  7. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    குறுகிய பார்வை நெடிய பார்வை கிடையா என்றால் “perversion of mind”-ம் கிடையா என்பதுதான் நிதர்சனம். வைத்யர் என்ற சொல் உங்களை உறுத்துகிறது என்றால் அச்சொல்லை பிரயோகிப்பது perversion of mind என்று சொல்வதுதான் perversion of mind.

    மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்து வார்த்தைப்பிரயோகத்தை அமைத்துக்கொண்டிருந்தால் விடிஞ்சிடும். தமக்கு உவப்பாக உள்ளதா, பொருத்தப்பாடுள்ளதா .. இவ்வளவே விஷயம்.

    இரண்டு சொற்களும் குறிப்பது ஒன்றே எனும்போது ஒரு சொற்பிரயோகம் மட்டும் perversion of mind என்பதை என்னென்று சொல்ல ?

    பி.கு : என்னிடம் குதிரை கழுதையெல்லாம் இல்லை. எனவே அது குதிக்கிறதா கடிக்கிறதா என்றெல்லாம் கவலைப்பட எனக்கு அவசியமில்லை. என்பதால் நீங்களும் அதுகுறித்து அக்கறை கொள்ளவேண்டியதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *