தொடுவானம் 87. ஊர் செல்லும் உற்சாகம்

This entry is part 7 of 22 in the series 27 செப்டம்பர் 2015

விடுமுறை நாட்கள் ஓடி மறைந்ததே தெரியவில்லை. தரங்கம்பாடியின் பாடும் அலைகளின் கீதம் நாட்களை ரம்மியமாகியது. அண்ணியின் ருசியான சமையல் அங்கேயே இருந்துவிடலாம் போன்றிருந்தது. அன்றாடம் வகைவகையான மீன்கள்,இறால், நண்டு, ஊளான் குருவி, கோழி என்று விதவிதமாக சமைத்து தந்தார். அவை அனைத்துமே சுவையோ சுவை. அவருடைய விருந்தோம்பல் என்னை திக்குமுக்காட வைத்தது. பத்து வருடங்கள் சிங்கப்பூரில் அப்பாவிடம் தனிமையில் பட்ட பாடு, பின் சென்னையில் ஒரு வருடம் விடுதி வாழ்க்கை என்று ஒரு குடும்பத்தின் வாசம் இல்லாமலேயே பழகிப்போனவன் நான்.
வழக்கம்போல் அண்ணனும் நானும் அதிகம் பேசிக்கொள்வதில்லை. சிறு வயதில் ஒன்றாக வளராத கூச்சம். ஆனால் மனதுக்குள் இருவருக்கும் நிறைய பேசவேண்டும் என்ற ஆவல் இருந்தது. எங்களுக்கு இடையில் அண்ணிதான் பேச உதவினார். காலையில் அண்ணனும் நானும் பசியாற உட்கார்ந்திருந்தோம். அண்ணி சமையல் கூடத்திலிருந்து சுடச் சுட தோசை கொண்டுவந்து எங்களுடைய தட்டில் வைத்தார்.
நான் அவரைப் பார்த்து, ” இன்று ஊர் செல்லப் போறேன். ” என்றேன். அவர் அண்ணனைப் பார்த்தார்.
” என்? நாளை போகலாமே? ” அவர் அண்ணியிடம் கூறினார்.
” இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது..நான் இன்றே போகிறேன். ” அண்ணியிடம் கூறினேன்.
” செலவுக்கு பணம் உள்ளதா? அப்பா அனுப்பினாரா? ” அடுத்த தோசை கொண்டு வரும் அண்ணியைப் பார்த்து கேடடார்.
” உம். உள்ளது. பணம் போதும். நான் மத்தியானம் கிளம்பவா? ” அண்ணியைப் பார்த்து சொன்னன்..
” சரி. மத்தியானம் சாபாட்டுக்குப்பின் போகலாம். மாயவரம் பஸ் வரும்.” என்று அண்ணியிடம் கூறினார்.
இப்படி உரக்க பேசினாலும் முகம் பார்த்து பேசமாட்டோம். இடையில் அண்ணி நின்றுகொண்டு நாங்கள் உரையாட உதவுவார்.
கிராமத்துக்குச் சென்று தாத்தா, பாட்டி, அம்மா, தங்கைகளைக் கட்டாயம் பார்த்துச் செல்லவேண்டும். கிராமத்துப் பைங்கிளி கோகிலம்கூட வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பாள்!
ஆர்வமுடன் பிரயாணப் பையை தயார் செய்தேன். அவர்கள் இருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டனர்.கடைசியாக ஒரு முறை கடற்கரைக்குச் சென்றேன். அங்கு கோட்டைச் சுவர்மேல் ஏறி நீலவானையும் ஆர்ப்பரிக்கும் கடலையும் வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். லதா நினைவு வந்தது. அந்த ஆழ்கடலுக்கு அப்பால் அவள். அவள் நினைவு சோகத்தை உண்டுபண்ணினாலும், அந்தத் தனிமையில் இனம்புரியாத இனிமை கண்டேன். இனி கல்லூரிக்குச் சென்றுவிட்டால் அதுபோன்ற காட்சி பார்க்க முடியாது. மீண்டும் விடுமுறையில்தான் வர முடியும். கவலையில்லை. அண்ணனும் அண்ணியும் இனிமேல் இங்குதான் இருப்பார்கள். விடுமுறைகளை இந்த கடற்கரை ஊரில் இனிமையாகக் கழிக்கலாம். கோட்டைக் கொத்தளங்கள் நிறைந்த இந்த பழம்பெரும் புகழ்மிக்க ஊரில் நேரம் போனதே தெரியவில்லை. பரபரப்பு இல்லாத அமைதியான ஊர் இது. படிப்பதற்கும் எழுதுவதற்கும் அருமையான ஊர் தரங்கம்பாடி. அதிலும் ஓய்வு பெற்றவர்களுக்கு மிகவும் ஏற்ற ஊர்! பின்னாளில் இது ஒரு சுற்றுலாத் தளமாக மாறுவது உறுதி.
மதிய உணவின்போது அண்ணியின் முகத்தில் சோகம் இழையோடியது. இனி கொழுந்தனுக்கு ஓடியாடி பணிவிடை செய்ய இயலாது என்று எண்ணினாரோ தெரியவில்லை. உணவு பரிமாறும்போது அந்த உற்சாகம் இல்லை. முகம் வாடிப்போயிருந்தது. அண்ணன் முகத்தில் மாற்றம் தெரியவில்லை. அவர் ஏதும் பேசாமல் உணவு உண்டார். ” காலேஜ் போனதும் கடிதம் போடு.” என்று மட்டும் அண்ணியிடம் கூறினார்.
பிரயாணப் பையைத் தூக்கிக்கொண்டு மணல் படிந்த சாலையில் நடந்தேன்.கடல் காற்றில் வீதிகளின் மேல் அதிகமாக மணல் படிந்திருக்கும். அந்த வீதியிலிருந்து கோட்டை வாசல் வீதிக்குச் செல்லுமுன் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன்.தொலைவில் அண்ணி நின்று கொண்டிருந்தார். கடைசியாகக் கையசைத்து விடைதந்தார்.அதுபோன்ற பாசத்தை நான் அதுவரை எங்கும் கண்டதில்லை.
கோட்டை வாயிலைத் தாண்டியதும் மாயவரம் செல்லும் பிரதான வீதி வந்தடைந்தேன். அங்கு மூலைக் கடையில் அமர்ந்து காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் தொலைவில் கடலோர வீதியில் பேருந்து வருவது தெரிந்தது.
மாயவரம் செல்லும் சக்தி விலாஸ் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். கடல் காற்று பெருந்துக்குள்ளும் ஜிலுஜிலுவென்று வீசியது. ஒரு மணி நேரப் பிரயாணம். மாயவரம் பேருந்து நிலையம் வந்தடைந்தேன். அங்கு சிதம்பரம் போகும் பேருந்து நின்றது.மேலும் ஒரு மணி நேரப் பிரயாணம். பின்பு காட்டுமன்னார்கோவில் பேருந்தில் ஏறி தவர்த்தாம்பட்டில் இறங்கினேன்.
பிரயாணப் பையைத் தூக்கிக்கொண்டு மண் சாலையில் நடைபோட்டேன்.மாலையாகிவிட்டது. இராஜன் வாய்க்காலில் நீர் நிரம்பி ஓடியது. பாலத்தைக் கடந்து ஆண்டவர் கோவிலை அடைந்தேன். அங்கு கோவில் முன் இரண்டு குதிரை சிலைகள் என்னை வரவேற்பவை போன்று நின்றன. ( அந்த ஆண்டவர் கோவிலுக்கும் எங்கள் மூதாதையர்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. அது பற்றி பின்னர் விவரிப்பேன். ) கோயில் குளத்தின் அரசமரத்து இலைகள் மாலைத் தென்றலில் சலசலத்து ஓசை .எழுப்பின. அதன் கிளைகளில் தஞ்சமடைந்த பறவை இனங்கள் கிசுகிசுத்தது பெரும் இரைச்சலை உண்டுபண்ணியது.கடவுளின் படைப்புதான் எவ்வளவு மகத்துவமானது!
சாலையின் இரண்டு பக்கமும் வயல்களில் நீர் நிறைந்திருந்தது. ஒருசிலர் வயலில் ஏர் உழுதுக்கொண்டிருந்தனர். உழவர்கள் கலப்பையை தோளில் சுமந்துகொண்டு காளைகளை ஒட்டிக்கொண்டு இல்லம் திரும்பிக்கொண்டிருந்தனர். சில வயல்களின் நாற்றங்கால்களில் பச்சைப்பசேலென்று இளம் நாற்றுகள் தென்றலில் அசைந்தாடி சலசலத்தன. மனோகரமான ரம்மியமான காட்சி அது!
சிறிய சிவன் கோவில் தாண்டி, சுப்பிரமணியர் ஆலயமும் தாண்டியபின்பு, பெரிய வாய்காலின் மறுபுறத்தில் உயரமான அற்புதாதர் ஆலயத்தின் கோபுரச் சிலுவை தெரிந்தது! ஆம். எங்கள் ஊர் தெம்மூர் வந்துவிட்டேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை – 6‘ஜிமாவின் கைபேசி’ – திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *