பூனைகள்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 22 in the series 27 செப்டம்பர் 2015

ஜெ.குமார்

பசிக்குப் புசிப்பதற்காக
எலி தேடியலைந்த பூனையொன்று
வழி தவறிக் காடடைந்தது .

வேட்டையின் எச்சத்தில்
புலி வைத்த மிச்சத்தை
உண்டு களித்த அப்பூனை
புலிகளும் தன்னினமே எனக்கூறிப்
புளகாங்கிதம் அடைந்தது .

பெருத்த சப்தத்துடன் ஒலித்த
பூனையின் ஏப்பத்தைப்
புலியின் உறுமலெனவேக் கொண்டு
கும்பிடத் தொடங்கின குள்ள நரிகள்.

நடை உடை தோற்றம் ஒன்றெனினும்
மொழியில் பேதம் கண்ட
நக்கீர நரிகளுக்குக்
காதில் அழகழகாய்ப் பூச்சுற்றி
அப்பிராணியாக்கியது அப்பூனை.

பூப்பறித்து செவி சூட்டுவதே
பூனையின் வேலையாகிப் போனதால்
காட்டின் சோலைகள் பாலைக்கு மாறின.

புகாரின் அடிப்படையில்
விசாரணை மேற்கொண்டது
காட்டின் நாட்டாமை சிங்கம்.

ஒவ்வொன்றின் தலையிலும்
மூளையை எடுத்துவிட்டு
மண்டையோட்டில் மண்ணைக் கொட்டி
செடி நட்டால்
விதவிதமாகப் பூப்பூக்கும் என
வகை வகையாக
வாய் கிழியப் பேசியது அப்பூனை.

பூனையின் மொழிப் புலமையில்
சொக்கிப் போன நாட்டாமை
“உச் ” கொட்டியவாறே உறங்கச் சென்றது .

நினைவில் காடுள்ள மிருகமெனினும்
பசித்தலின்றி புசிக்காது
புலிகள்.

கிடைத்ததையெல்லாம் தின்று
செரிக்காமல் போனதால்
காய்ந்த புல்லை தின்று கக்கி வைத்தது பூனை.

ஏதேதோ காரணம் சொல்லியும்
ஏற்க மறுத்து
காடு கடத்தி நாட்டிற்குச் செல்ல
உத்தரவிட்டது
உறக்கம் கலைந்த நாட்டாமை.

நாட்டிற்குச் சென்றும்
எதையும் கிழிக்கவியலாது எனினும்
புலிகளாகவே தம்மை
பாவித்துக் கொள்கின்றன
பூனைகள்.

(ஜெ.கே.)

Series Navigationவளவ. துரையனின் வலையில் மீன்கள்—ஒரு பார்வைமுற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    Aravindhan says:

    நல்ல கவிதை.. பல பூனைகள் இப்படி சுற்றித் திரிகின்றன…சகல இடங்களிலும் – பத்மநாபபுரம் அரவிந்தன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *