தொடுவானம் 88. வீரநாராயண ஏரி

This entry is part 20 of 23 in the series 4 அக்டோபர் 2015
Veeranam3

அற்புதநாதர் ஆலயத்தைப் பார்த்ததும் எனக்குப்  புத்துயிர் பிறந்தது. அது கிராமத்தின் சிற்றாலயமாக இருந்தாலும் அங்கே  பல அற்புதங்கள் நடந்துள்ளது எனக்கு ஞாபகம் வருவதுண்டு.

அம்மாவுக்கு நல்ல பாம்பு கடித்து விஷம் ஏறி நினைவிழந்தபோது சிறுவனான அண்ணன் அங்கு மெழுவர்த்திகளுடன் ஓடி ஜெபம் செய்தபோது ஊரே வியக்கும்வண்ணம் அற்புதமாக உயிர் பிழைத்துள்ளார்! ?

இஸ்ரவேல் உபதேசியார் ஜெபம் செய்து எண்ணெய் தருவார். அதைப் பயன்படுத்திய பல நோயாளிகள் குணமாகி, அந்த செய்தி சுற்று வட்டார கிராமங்களுக்குப் பரவியபின்பு கூட்டம் கூட்டமாக அங்கு வந்து ” ஜெப எண்ணெய் ” வாங்கிச் சென்றுள்ளனர்.
( இன்றுகூட அதுபோல் வேளாங்கண்ணி மாதா கோவிலில் ” புனித எண்ணெய் ” விற்கப்படுகிறது.) இவையெல்லாம் மருத்துவ ஞானத்துக்கு அப்பாற்பட்டவை. இதையே நாம் விசுவாசம் என்கிறோம்.

அப்போதெல்லாம்  ஊரில் மின்சார வசதி கிடையாது. குடிநீர் வசதியும் இல்லை.  குளிப்பதும் குடிப்பதும் ஆற்று நீரில்தான். இத்தகைய அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் கிராம வாழ்க்கை இன்பமாகவே இயற்கையுடன் இயைந்து வாழ்வது போன்றிருந்தது.

தாத்தாவுக்கு அதிக வயதாகி விட்டது. திண்ணையில்தான் கயிறு கட்டிலில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் பாட்டி தரையில் பாயில் அமர்ந்திருந்தார். பாட்டியை நாங்கள் ” சோத்தம்மா ” என்று அழைப்போம். காரணம் எப்போதும் உணவை அவர்தான் பரிமாறுவது வழக்கம். அம்மாவுக்கு சமைக்கும் பொறுப்புதான்.உணவு உண்ணும்போது அனைவரும் தரையில் பாயில் வரிசையாக அமர்வோம். அப்போது சோத்தம்மா உணவு பரிமாறுவார். அனால் இப்போது அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு அம்மா பரிமாறும் நிலை வந்துவிட்டது.

என்னைப் பார்த்து  இருவரும் மகிழ்ந்தனர். இருவருக்கும் பார்வை மங்கிய நிலைதான். ஆனாலும் மூக்குக் கண்ணாடி அணிந்ததில்லை. அறுவைச் சிகிச்சையும் செய்துகொண்டதில்லை. கணகளில் புரை வந்ததில்லை. தாத்தாவுக்கு வயது தொண்ணூற்று ஐந்து இருக்கும். இன்னும் திடகாத்திரமாகத்தான் உள்ளார்.
அம்மாவைப் பற்றிச்  சொல்லத் தேவையில்லை.மகன் மருத்துவம் பயில்வது அவருக்குப்  பூரிப்பு! தங்கைகள இருவரும் ஓடி வந்து என் கரத்தைப் பற்றிக்கொண்டனர். அந்த குடும்ப பாசத்தை என்னென்று கூறுவது?

லேசாக இருட்டிவிட்டது. எங்கிருந்தோ பால்பிள்ளை வந்துவிட்டான்.

” அண்ணே வந்துட்டீங்களா? ” என்று அன்பைக் காட்டினான்.

” ஆமாம். இப்போதான் வந்தேன். தரங்கம்பாடியில் அண்ணன் வீட்டில் இருந்தேன். ஆற்றுக்கு குளிக்க போகலாமா? ” அவனிடம் கேட்டேன். மூன்று கிலோமீட்டர் நடந்து வந்தது வியர்த்துவிட்டது. குளிர்ந்த ஆற்று நீரில் மூழ்கி எழுந்தால் அசதி தீரும். நன்றாக தூக்கமும் வரும்.

          இருவரும் துண்டை தோளில் போட்டுக்கொண்டு ஆற்றை நோக்கி நடையிட்டோம்.
          ” நம்ப கோகிலம் தொல்லை தாங்கமுடியலே அண்ணே…….. ” பேசி முடிக்காமல் இழுத்தான்.
          ” என்ன ஆச்சு பால்பிள்ளை? ” என்ன ஆகியிருக்கும் என்று தெரிந்தும் அவனிடம் கேட்டேன்.
          ” என்னைப் பார்க்கும் நேரமெல்லாம் நீங்கள் எப்போ வருவீங்கேன்னு கேக்கும். “
          ” நீ ஏன்னா சொல்வ? “
          ” லீவு உட்டாதானே அண்ணன் வரும் என்று சமாளித்துவிடுவேன்.”
          ” அதற்கு அது என்ன சொல்லும்? ” அவனுடைய வாயைக் கிளறுவேன்.
          ” நாளை எண்ணிக்கொண்டிருக்கேன். வாரம் மாசமாகி மாசம் வருசமாயிடும்போல உன் அண்ணன் வந்து சேர என்னு சொல்லும் அண்ணே.”
          அந்த அப்பாவிப் பெண் மீது எனக்கு பரிதாபம் உண்டானது.  பயமும்தான். இது எங்கே விபரீதத்தில் முடியுமோவென்று.  இதை இங்கு தங்கும் ஒரு வாரத்தில் எப்படியாவது சமாளித்துவிடுவது என்ற முடிவுடன் ஆற்றில் இறங்கினேன்.
          வீடு திரும்பியபோது கோகிலத்தின் சிரிப்பொலி என்னை வரவேற்றது. அது சமையல் அறையிலிருந்து ஒலித்தது. அம்மாவுக்கு சமையலில் உதவிக்கொண்டிருந்தாள். நான் வந்துள்ளது தெரிந்துவிட்டது. ஒருவேளை அம்மாவே அவளை உதவிக்கு அழைத்திருக்கலாம். பால்பிள்ளை லாவகமாக நழுவிவிட்டான்.
          உணவு உண்ண நடு அறையில் அமர்ந்தேன். அவள்தான் ஓடியாடி உணவைப் பரிமாறினாள். என்னைக் கண்டதில் அவளுக்கு மகிழ்ச்சி. விழிகளில் பூரிப்பு.
          ” நல்ல இருக்கியா நீ ? ” அவளைப் பார்த்து கேட்டேன்.
          ” ஏதோ இருக்கேன். ” விரக்தியுடன் பதில் சொன்னாள். மீண்டும் சமையல் அறைக்குள் புகுந்துகொண்டாள். தாத்தா பாட்டி தங்கைகளுக்கும் அவளே உணவு பரிமாறினாள் .எப்படியோ அவளும் எங்களில் ஒருத்தியாகிவிட்டாள். இது சூழ்நிலையா அல்லது சோதனையா?
          உணவு உண்டபின் வாசலில் கை கழுவ செம்பில் நீர் கொண்டுவந்தாள். கை கழுவி துண்டால் கையையும் வாயையும் துடைத்துக்கொள்ளும்வரை அருகிலேயே நின்றாள். இப்படி பணிவிடை செய்வதில்தான் அவளுக்கு எத்தனை மகிழ்ச்சி!
          பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுக்கு இவ்வாறு சிறு சிறு சேவைகள் செய்வதில் இன்பம் கொள்கின்றனர். தங்களுடைய அன்பை இத்தகைய சேவைகள்  மூலம் வெளிப்படுத்திவிடுகின்றனர்.
         பாய், தலையணை , போர்வையையும் கொண்டுவந்து திண்ணையில் படுக்க தயார் செய்தாள். வீடு சென்றவள் கொஞ்ச நேரத்தில் திரும்பிவிட்டாள். அறைக்குள் நுழைந்தவள் அம்மாவுடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தாள். இரவை இங்குதான் கழிப்பாள் போன்றிருந்தது.
        பிரயாணக் களைப்பும், குளிர்ந்த நீராடலும் சுவையான உணவும் சேர்ந்ததால் தூக்கம் .சொக்கியது. பாயில் படுத்ததுதான் தெரியும்.நன்றாகத் தூங்கிவிட்டேன். விடியற்காலையில் இருட்டு இன்னும் அகலாத நேரத்தில் யாரோ என்னைச் சீண்டுவது தெரிந்தது. கண்விழித்துப்  பார்த்தேன். அவள்! தலைமாட்டில் அமர்ந்திருந்தாள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை!
         ” வேண்டாம். எனக்கு பயமாக உள்ளது. போய்விடு. ” என்றேன்.
          ” போகத்தான் போறேன்.அதைச் சொல்லத்தான் வந்தேன்.” என்றாள் காதருகில் குனிந்து.
         அப்போது என் கன்னத்தில் சூடாக நீர் சொட்டு சொட்டாக விழுந்து சிதறியது…………………
          காலையிலேயே பால்பிள்ளை வழக்கம்போல் வந்து எழுப்பினான். இருவரும் காலைக்கடன் முடித்து குளித்துவிட்டு வர ஆற்றங்கரைக்குச் சென்றோம். அது நேற்று இரவு நாங்கள் குளித்த மதகு அல்ல. வயல்வெளியில் இருந்தது. வரப்புகளின் மீது நடந்து சென்றோம்.சில இடங்களில் ஈரமான களிமண் வரப்புகள் வழுக்கின. வயலில் விழுந்துவிடாமல் இருக்க பால்பிள்ளை கையைப் பற்றிச்  சென்றேன்.. வயல்களில் நீர் நிறைந்திருந்தது. ஏர் உழும் காலம். வீராணம் எரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டிருந்தது. எங்கள் பகுதியின் நன்செய் நிலங்கள் வீராணம் ஏரி பாய்ச்சலில் விளைபவை.
          வீராணம் ஏரி எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருந்தது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது   இதற்கு வீரநாராயண  ஏரி என்றும் பெயர். இது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பதினாறு கிலோமீட்டர் நீளமான இந்த ஏரி பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சியின்போது உருவாக்கப்பட்டது. இதை அமைத்தவர் ராஜாதித்ய சோழன் என்னும் சோழ மன்னர். இதற்கு அவருடைய தந்தையான பராந்தக 1 சோழரின் சிறப்புப் பெயரைச் சூட்டினார். இதில் கொள்ளிடம் நதியிலிருந்து நீர் வந்து பாய்கிறது.
          கல்கியின் புகழ்பெற்ற  ” பொன்னியின் செல்வன் ” நாவலை இந்த வீரநாராயண ஏரியிலிருந்துதான் தொடங்குகிறார். அதில் இந்த ஏரியின் அமைப்பையும் அழகையும் அவர் அருமையாக,  அவருக்கேயுரிய பாணியில் வர்ணித்துள்ளார். அதன்மூலம் இந்த ஏரிக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். நானும்கூட இந்த ஏரிப் பகுதியில்தான் பிறந்து வளர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொண்டுள்ளேன்.
          பொன்னியின் செல்வனில் கல்கி இதை இப்படி வர்ணித்துள்ளார்..
          ” தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில்,தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காத தூரத்தில், அலைகடல் போன்ற ஓர் எரி விரிந்து பரந்து கிடக்கிறது.அதற்கு ‘ வீர நாராயண எரி ‘ என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும், கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில்   அதன்பெயர் ‘ வீராணத்து ஏரி ‘ என்ற பெயரால் வழங்கி வருகிறது.
          புது வெள்ளம் வந்த பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும்.ஆடி ஆவணி மாதங்களில் வீர நாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்து பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது.நம்மடைய மூதாதையர்கள்  தங்களைடைய நலனுக்கும் தங்கள்  காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள் ?  தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும்  செயல்களை நிறைவேற்றிவிட்டுப் போனார்கள் அல்லவா?….
          ஆகா! இது எவ்வளவு பிரமாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த எரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப்
Series Navigationஅமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015அவன், அவள். அது…! -4
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *