நிலாவண்ணன்
“இங்கயே ஒக்காருங்க தாத்தா… இன்னும் கொஞ்ச நேரத்தில கல நிகழ்ச்சி ஆரம்பிச்சுடுவாங்க… நான் போயி தம்பி தங்கச்சிய கூட்டியாந்துடறேன்..!”
பேத்தி பரிமளா உட்காரச் சொன்ன இடத்திலேயே அண்ணாமலை கிழவன் பத்திரமாக அமர்ந்து கொண்டார். சின்ன வயதில் அம்மா பக்கத்தில் உட்கார்ந்த அதே தூண் ஓரம். மேடையை நோக்கி இருக்கும். வசதியாகச் சாய்ந்து கொள்ளலாம். அந்த இடத்தை பேத்தி நேற்றே பாய் போட்டு பத்திரமாகப் பிடித்திருந்தாள். அப்படி எல்லை கட்டாதிருந்தால் இந்நேரம் யாராவது ஆக்கிரமித்திருப்பார்கள். வெள்ளைக்காரன் இப்படித்தான் ஒரு சின்ன ஆட்டுத் தோல் அளவு இடம் கேட்டு வந்தவன் நாட்டையே பிடித்துக் கொண்டானாம். அண்ணாமலை சின்ன வயதில் மங்கு துடைக்கச் செல்லும் போது இந்த மாதிரியான கதையெல்லாம் காத்தவராயன் மாமா சொல்லுவார். அவருக்கு அப்போதே இப்படிப்பட்ட உலக மகா விவகாரங்களெல்லாம் தெரிந்திருந்தது. அவர் சொல்லும் போது வாய் பிளந்து கேட்கச் சொல்லும். கருத்து வந்த பிறகுதான் தெரிந்தது அவர் அவ்வளவும் அள்ளி விட்டிருக்கிறார் என்பது.
‘ரசிகப் பெருமக்களே… நீங்கள் ஆவலோடு காத்திருக்கும் ஆடலும் பாடலும் கருத்தும் கானமும் நிறைந்த பொன்னான மாலைப் பொழுது கலை நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகும். அமைதியோடு இருந்து கண்டு கேட்டு களித்து இன்புற்று செல்லுமாறு உங்களை இருகரங்கூப்பி அன்போடும் பண்போடும் தாழ்மையோடும் பணிவோடும் கேட்டுக் கொள்ளுகிறேன்!’
இப்படி பல ‘டும்’கள் போட்டு மூன்று முறை ‘மைக்’ அலறியதைக் கணக்கில் வைத்துக் கொண்டார் அண்ணாமலை. ஒலிபெருக்கியின் அறிவிப்பு கூத்து மேடையையும் விட்டு வெளியாகியதால் அக்கம் பக்கத்து எண்ணெய்ப்பனை மரங்கள் கூடக்கேட்டுக் கேட்டுக்கொண்டிருந்தன.
@@@@@@@@@@
‘நீங்கள் என்ன சொன்னாலும் என் மனம் மட்டும் சாந்தியடையாது. காதலன் உள்ள இடம்தான் ஒரு காதலிக்குச் சொர்க்கம். நான் உங்களுடந்தான் வருவேன்.’ கொஞ்சம் இடைவெளி. அந்நேரத்தில் ஒரு சின்ன முணுமுணுப்பு.
‘அன்பே… என்னை விட்டு மட்டும் போய் விடுவேன் என்று மறந்தும் சொல்லாதீர்கள். என்ன கஸ்டம் வந்தாலும் நாம் இருவரும் இணைந்தே சமாளிக்கலாம். சாவே வந்தாலும் இருவருமே துணிந்து சாவோம்…!’இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பெரிய கிராணி துரைராசுவுக்குப் பொறுக்கவில்லை.
‘நீங்க ஒரு ஆம்பிள்ளையின்னு சொல்லிக்க எனக்கே வெக்கமாயிருக்கு… என்னை மாதிரி ஒரு பெண் பிள்ளைக்கு உள்ள துணிச்சல் கூட உங்களுக்கு இல்லாமப் போயிடுச்சி… என்ன கைவிட்டு உங்க அப்பா அம்மா பாத்த பொண்ணுக்குதான் தாலி கட்றேன்னு சொல்றீங்களே.. இது உங்களுக்கே நல்லா இருக்கா பிரபு..!’
இந்த உரையாடலுக்குப் பின் ஒரு சின்ன விசும்பல். கிராணி துரைராசுவுக்கு மேலும் ஆத்திரம். அதனோடு சேர்ந்து ஒரு நக்கலான சிரிப்பும்.
“டேய்… அண்ணாமல, நெறையிலயே நாடகம் நடத்துறீங்களோ… அதான் ‘பாசா’ மரமெல்லாம் வெட்டாமப் போட்டுக் கெடக்கு… ஒவ்வொரு வெட்டுக்கும் பாலு வேற கொறஞ்சுட்டே வருது. ஐயா மரம் வெட்றத வுட்டுட்டு நாடக வசனத்த மனப் பாடம் செய்றீங்களோ?”
மரத்துக்குப் பின்புறம் ஒளிந்து கொண்டிருந்து திடீரென வெளிப்பட்டு பெரிய கிராணியால் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட அண்ணாமலை வெல வெலத்துப் போனான். இவ்வளவு நேரம் மனசிலிருந்த நாடக வசனங்கள் எங்கோ ஓடி ரப்பர் மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டன போலிருந்தது அவனுக்கு. அவன் கையில் இருந்த வசன தாள்கள் கிராணியின் கைக்குள் வந்து சிக்கிப் பல துண்டுகளாகிக் காய்ந்த ரப்பர் இலைகளுடன் சேர்ந்து கொண்டு அவனைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்துக் கொண்டிருந்தன.
இன்னைக்கு ஒத்திகை. கால் வாசி வசனம் மட்டுமே மனனம் செய்ய முடிந்திருந்தது. வரதராசன் அண்ணன் தானே சமூகக் கதை எழுதி எல்லாருக்கும் வசனங்களையும் பிரித்து தனித்தனியாக எழுதி கொடுத்திருந்தார். ‘எங்கிட்ட வேற காப்பி இல்ல… பத்திரமா வைச்சுக்குங்க… காணடிச்சுட்டீங்கன்னா என்னால புதுசா ஒன்னு எழுதித் தர முடியாது..!’ என வற்புறுத்திச் சொல்லியிருந்ததும் காதுகளில் ஒலித்தது.
அவர் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார். முதலில் அந்த ‘ஸ்ரீபார்ட்’ முத்தையாவுக்குத்தான் கொடுக்கப் பட்டிருந்தது. அவனுடைய முகம் அவ்வளவு ஒத்துப் போகாததாலும் குரலும் கரடு முரடாக இருந்ததாலும் முதல் நாள் பவளக்கொடியில் பெண் வேஷம் ஏற்றிருந்த அண்ணாமலையையே மிகுந்த பொருத்தமானவன் என்று வரதராசன் அண்ணன் இவனையே தேர்ந்தெடுத்திருந்தார். இந்த விஷயத்தில் நாடக ஆசிரியர் ரெங்கசாமி வாத்தியாருக்குக்கூட கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டிருந்தது. இரண்டு நாளைக்கும் பெண் வேடம் கட்டினால் தன்னுடைய பவளக்கொடி புராண நாடகத்தில் சொதப்பி விடுவானோவென்று.
இன்று… துரைராசு கிராணியிடம் ராஜா குரங்கிடம் அகப்பட்ட பூமாலையாகி விட்டது சமூக நாடக வசன தாட்கள்.
2
அந்த நாடகத்திற்கு ‘கசங்கிய காகித மாலை’ என பெயர் வைத்திருந்தார் வரதராசன்.
தோட்டத் திருவிழா இன்னும் ஒரு வாரத்தில் நடை பெறப்போகிறது. முதல் தடவையாக மேடையேறப் போவதால் தலையணைக்குக் கீழே வைத்துகூட வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. அதுவும் அப்பன் குரட்டை விட்டபிறகே நாடக வசனம் ‘சிம்னி’ விளக்கு வெளிச்சத்தில் வெளியே வந்து அரை குறையாகத் தெரியும். அம்மா மட்டும், ‘அந்த ஆளுக்குத் தெறிஞ்சிடப் போவுதுடா’ என அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருப்பார்.
கிராதகன் கிராணி விட்ட அறை வேறு காதில் தோட்டத்து கோவில் மணியாக ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அந்த முரட்டு மனிதனால் கிழித்தெறியப் பட்டு பல துண்டுகளாகிக் காய்ந்த இலைகளோடும் சருகுகளோடும் கலந்து விட்டதைக் குழந்தையைப் பறிகொடுத்த தாயைப் போல் தேடிக் கண்டு பிடித்து பால் காட்டு ‘சிலுவார் சேப்பி’யில் பத்திரமாக வைத்துக் கொண்டான். அடுத்து பல அறைகளை தன் தகப்பனின் காய்ந்து முரடு கட்டிப் போயிருக்கும் கையால் வாங்கப் போவதை எண்ணிப் பார்க்கும்போது இப்போதே இரண்டு கன்னங்களும் வீங்கிப் போய் விட்டது போலிருந்தது.
தலையில் பாரம் பாறையாகச் சுமந்துவிட அண்ணாமலை மிகத் தாமதமாகவே பால் கொட்டகைக்கு வந்து சேர்ந்தான். நல்ல வேளையாக துரைராசு கிராணிக்குப் பதிலாக சின்ன கிராணி சாரங்கபாணி பால் நிறுத்துக் கொண்டிருந்தார். அவரும் அண்ணாமலையை ஒரு மாதிரியாகப் பார்த்தார். அதில், ‘ஏண்டா அந்த ஆள் கிட்ட மாட்னே’ என்பதைப் போலிருந்தது.
‘இந்த ஐயாவ பெரிய கிராணியா போட்டிருக்கலாம். தோட்டத்தில பையனுங்க சொந்தமா நாடகம் பழகி நடத்தறதுக்கு ரொம்பவும் ஒத்தாசையா இருக்காரு. துரைராசு கிராணிக்கு கம்பெனி நாடகந்தான் நடத்தனும்னு பிடிவாதம். அது பிடிக்காமதான் இன்னைக்கு வசன தாள்கள பிடுங்கி கிழிச்சு எறிஞ்சாரு..!’ இப்படி மனதில் எண்ணிக் கொண்டே பால் ஊற்றி அல்லூரில் பால் வாளியைக் கழுவி ‘ஸ்க்ரேப்’ கொண்டு கை காலிலுள்ள காய்ந்து போன ரப்பர் பால்களைத் தேய்த்துக் கழுவி வீட்டுக்கு மன உளைச்சளோடு வந்தபோது அப்பன் ஒன்றும் வாய் திறக்கவில்லை. ஆனால், மாலை 4.00 மணி கள்ளுக் கடைக்குச் சென்று தரிசனம் முடிந்து வந்த பின் வீட்டில் நிச்சயமாக கச்சேரி ஆரம்பமாகும். அப்படிப்பட்ட சம்பவங்கள் அவன் வீடு என்ன பல தோட்டத்துக் குடும்பத் தலைவர்களின் வீடுகளில் எழுதி வைக்காத சட்டமாக இருப்பதை எண்ணி அண்ணாமலைக்கு இப்போதே மனதில் பீதியைக் கிளப்பியது. அது மட்டுமா… வரதராசன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்வது… குழம்பியதில் நேற்று குட்டையில் இறைத்துப் பிடித்துக் கறி ஆக்கி இரவு குடும்பத்தோடு சாப்பிட்டு மீதியைச் சூடு காட்டி வைத்திருந்திருந்த விறால் மீன் குழம்புகூடக் கசந்தது.
3
மாலை மணி 5.00. எதிர்பார்த்துக் காத்திருந்த அண்ணாமலை வீட்டு நாடகம் அரங்கேற்றம் கண்டது.
“ஏண்டி அலமேலு, எனக்குத் தெரியாம உம்மவன் திருவிலா நாடகத்துல பொம்பல வேஷங்கட்ரானாம். இந்தக் கூத்த நம்ம பெரிய ஐயா சொல்லித்தான் நாந் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. மரத்த வெட்டி ஒலுங்கா பால் கொண்டாடான்னா மரத்துக்கு மரம் எலுதி வச்ச நாடக வசனத்த இல்ல பேசிக்கிட்டிருக்கானாம்… அதலயும் பொம்பளக் கொரல்ல வேற… நம்ம பெரிய ஐயாவே ஏதுடா பொம்பளதான் பேசுதுன்னு அசந்து போய்ட்டாராம்… நம்ம வீட்டுக்கு ஆம்பளப் புள்ளயா இருப்பான்னு நெனச்சா… இந்த பேமாணி பொம்பள ஆக்கிட் போடப் போவுதாம்… அதுவும் எனக்குத் தெரியாம…ஏங்கிட்ட கேக்காம.. அப்படின்னா இந்த வூட்ல அப்பங்கங்காரன்னு ஒருத்தன் ஏண்டி இருக்கன்..!’
சின்ன சுருதியில் ஆரம்பித்து உச்ச கட்டத்தில் தகப்பன் போட்ட கூப்பாட்டில் அந்த வீடு மட்டுமல்ல அடுத்த வீடுகளும் ‘கப்சிப்’ ஆகிப் போயின. அப்படி அவர்கள் என்ன ஏது என எட்டிப் பார்த்தால் அவர்களையும் வம்புக்கு இழுத்துச் சந்திக்குக் கொண்டு வந்து விடுவார் அந்த மனிதர். அதற்கு அஞ்சியே அண்ணாமலையின் தகப்பன் வானமே பிளந்து விட்டதைப் போல் சத்தம் போட்டாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
இப்போது…அண்ணாமலையின் தாயின் உச்சி முடி கொத்தாக அந்த ஆள் கையில் மாட்டியது. அந்த அம்மாவும் தன் பங்குக்கு, “மருவாதையா வுட்று, இல்லன்னா நடக்கறதே வேற..!” என சத்தம் போட்டார். இந்த மாதிரியான அடிதடி காண்டங்கள் அந்த வீட்டில் வாரத்தில் மூன்று நாட்களாவது நடந்துவிடும். தகப்பனுக்குப் பிள்ளைகள் யாரையாவது அடிக்க முயன்று அவர்கள் அகப்படாமல் தப்பியோடிவிட்டால் அந்த மனுஷி மாட்டிக் கொள்வார். இப்போது நேரம் பார்த்து தகப்பன் விளாசலுக்கு அஞ்சி ஓடி விட்டான் அண்ணாமலை.
நாடகத்தை மேடையேற்ற இன்னும் சில நாட்களே இருந்தன. தோட்டத்து பெரிய ஐயா, ‘இவன்கள் எப்படி நாடகம் நடத்துறான்க நானும் பாக்கறன்னு…’ மறைமுகமாகச் சபதம் போட்டிருந்தார். அது பெரிய தண்டல் பெரியப்பா மூலமாகக் கொஞ்சமாகக் கசிந்திருந்தது. அவருக்கு எப்போதும் தைப்பிங்கிலிருந்தோ புக்கித் மெர்தாஜமிலிருந்தோ நாடகக் கம்பெனி வரவேண்டும். அதுதான் ரஞ்சிப்பாக இருக்கும். ‘தோட்டத்துப் பயல்கள் அப்படி என்ன நாடகம் போட்டு நடிச்சுக் கிழிச்சுடப் போறனுங்க..’ என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதிலும் புக்கிட் மெர்தாஜம் வைத்தியநாதன், ஆறுமுகம் நாடகக் குழு என்றால் அலாதி விருப்பம். மேடைக்குக் கீழே துரை- கிராணிமார்கள் உட்காரவும் தோட்டத்துச் சனங்களை மறைக்காதிருக்கவும் பள்ளம் தோண்டப் பட்டு அங்கே சிமெண்டால் பூசி மெழுகிய ஒரு தாழ்வான மேடை இருக்கும். மேடையில் நாடகம் நடக்கும்போது துரையும் கிராணிமார்களும் ‘தண்ணி’யிலும் அன்று திருவிழாவுக்கு வெட்டப்பட்ட ஆட்டுக்கிடா தொடை இறைச்சி காரப்பிரட்டிலிலும் களித்திருப்பார்கள். போதை ஏறிவிட்டால் மேடையேறி மலாய் ‘ரோங்கின்’ ஆடும் நங்கைகளோடு உல்லாசமாகக் கூட ஆடுவார்கள்.
4
நாடக வசனங்களை இழந்து விட்ட விசனத்தோடு வசனகர்த்தா வரதராசன் முன்னாள் நின்று கொண்டிருந்தான் அண்ணாமலை. பல துண்டுக் காகிதங்களிருந்த வார்த்தைகளை அமைதியோடு கோர்த்துக் கொண்டிருந்தார் வரதராசன்.
“இதுக்குத்தாண்ணே என்னய அந்த வேஷத்துக்குப் போட்டிருந்தா இந்த மாரியெல்லாம் நடந்திருக்காதில்லே… அந்த பெரிய கிராணி ஏங்கிட்ட வாலாட்டிப் பாக்கச் சொல்லுங்க..!” கூடவேயிருந்து வீர வசனம் பேசி வத்தி வைத்துக்கொண்டிருந்தான் முத்தையா.
“கொஞ்சம் பேசாம இருடா… இவன் அப்பன்காரனுக்கு இன்னைக்கு ரெண்டு பயிண்டு கள்ளும் ஒரு போத்த சாராயமும் வாங்கி கொடுத்து சமாதானப் படுத்தி வச்சிருக்ககேன்… அந்த ஆள் எப்ப ஏறுவாரு எந்த நேரத்தில எறங்குவாருன்னு தெரியல்ல… நாடகம் முடியிற வரைக்கும் பக்கு பக்குன்னு அடிச்சுக்கிது… இன்னைக்கு தைப்பிங் கலை மகள் நாடக ஆசிரியர் ஆர்.பி.எஸ் வந்து நாம படிச்சுக் கொடுக்கிறது சரியான்னு பாக்கப் போறாரு. இந்த ஒத்திகை நல்லா நடக்கனும்னு ஆண்டவன வேண்டிக்கிறேன்… இந்த நேரத்தில என்னோட வயித்தெரிச்சல கெளப்புற…”
தோட்டத்து நாடக வசன கர்த்தா வரதராசன் போட்ட சத்தத்தில் முத்தையா அங்கிருந்து நழுவி விட அண்ணாமலை பரிதாபமாக நின்று கொண்டிருந்தான். பவளக்கொடியில் பவளக் கொடியாகவும் கசங்கிய காகித மாலையில் ரேணுகாவாகவும் நடிக்கும் தன் நடிப்பை எல்லோரும் பாராட்ட வேண்டும் என மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.
ஒத்திகை ஓரளவு சிறப்பாக முடிந்தது.
திருவிழாவிற்குச் சில நாட்களே எஞ்சியிருந்தன. மேடையில் நாடகப் பயிற்சி பரபரப்பாக நடந்து கொண்டிருந்த வேளை… முத்தையா மூச்சிறைக்க ஓடி வந்தான்.
“அண்ணே… அண்ணே வரதராசன் அண்ணே… எல்லாம் போச்சு… நம்ம நாடகம் அவ்வளவுதான்… உங்க கதயும் கந்தலாகிப் போச்சு… பேசாம தூக்கிப் போட்டுட்டு வேற வேலயப் பாருங்க..!”
இதைக் கேட்ட வரதராசன், நாடக வாத்தியார் ரெங்கசாமி மற்றும் பயிற்சிக்கு வந்திருந்த பையன்கள் ஒருகணம் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.
“ஆமாங்க… இப்பாதாங்க தெரிய வந்துச்சி… லயத்துல ஒரே சத்தமா இருக்கு… ஒருத்தருக்கு ஒருத்தர் கசமுசான்னுபேசிக்கிறாங்க..”
‘இந்தப் பய சொல்றதப் பாத்தா… பெரிய கிராணி தன்னோட வேலயை காட்டிடாரோ… அவருக்குத் தோட்டத்து பையனுங்க சொந்தமாகப் பழகி நாடகம் போடறது புடிச்சிக்கல… நாளையிலேருந்து கூத்து மேடைக்கு போவக்கூடாதுன்னு தொரய விட்டு சொல்ல வச்சிட்டாரோ…’ இப்படி அவர் தனக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கையில்,
“நம்ம கணேசன் அதாங்க உங்க கசங்கிய காகித மாலையில கதாநாயகன் வேஷம் கொடுத்திருக்கீங்களே அவரும் முனியாண்டி தண்டல் மக ராமாயியும் இன்னைக்கு காலயில ஓடிப் போயிட்டாங்களாம்… இப்பதாம் தெரிஞ்சுச்சாம்… ரெண்டு குடும்பமும் கத்திக்கிட்டுருக்காங்க… காண்டாகம்புங்க வேற பறந்துக்கிட்டுருக்கு…”
சோதனை மேல் சோதனை ஏற்பட்டிருந்தது தோட்டத்து நாடகத்துக்கு. கணேசன் அந்த தோட்டத்து வாலிபர்களிலேயே சற்று அழகானவனாகவும் கதாநாயகர்களுக்கு ஏற்ற வாகான உடலமைப்பைக் கொண்டவனாகவும் இருந்தான். வசனங்களை மனனம் செய்து கதாநாயகனுக்கு ஏற்ற முறையில் தெளிவான உச்சரிப்புடன் பேசினான். கதாநாயகியாக அச்சு அசல் பெண்ணைப் போலவே இருக்கும் அண்ணாமலையுடன் அவன் நடித்தால் மேடையே அதிரும்… பலமான கைதட்டல் கிடைக்கும்… என வரதராசன் மனத்துக்குள் கணக்குப் போட்டிருந்தார். அடுத்த ஆண்டுகூட வெளியூர் நாடகத்தை எடுக்காமல் தோட்டத்துப் பையன்களின் நாடகம் நடக்க வழி ஏற்பட்டு விடுமென வாத்தியார் ரெங்கசாமியும் வரதராசனும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
‘எல்லாம் போச்சு…எல்லாம் குட்டிச்சுவராப் போச்சு…’ வரதராசன் வாய்விட்டு அரற்றினார். கசங்கிய காகித மாலை பெயருக்கு ஏற்றபடி ஆகிவிடுமோ..? இன்னும் திருவிழாவுக்குச் சில நாட்களே உள்ள நிலையில் வரதராசன் நெற்றியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.
புருவாசிலிருந்த நாடக செட்டிங்குகளும் சீன்களும் நடிகர்களுக்கு வேண்டிய அட்டைக் கத்திகளிலிருந்து மன்னர் உடைகள் வரை வந்து சேர்ந்தன.
“அண்ணே… வரதராசன் அண்ணே!”
முன்னே செய்தியைக் கொண்டு வந்த முத்தையா நாடக ஆசிரியர் முன்னே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றான்.
வரதராசன், “ இப்ப என்னடா..?” அவர் குரல் வரண்டு போய்க் கிடந்தது.
“நம்ம அண்ணாமலைக்கு அம்மை போட்டிருக்காம். அவங்க வீட்ல மாரியம்மன் தாலாட்டு படிச்சிகிட்டுருக்காங்க..!”
தோட்டத்து நாடக ஆசிரியர் உண்மையிலேயே உடைந்து போய்விட்டார்.
@@@@@@@@@@
“கல நிகழ்ச்சி முடியப் போவுது எழுந்திரு தாத்தா…”
பேத்தி பரிமளா உலுக்கியவுடன் அரக்கப் பரக்க எழுந்து கொண்ட அண்ணாமலை, மேடையைப் பார்த்தார். அந்நேரத்தில் மேடையின் ஓர் ஓரத்தில் பாட்டுப் பெட்டி இருந்தது. அதிலிருந்து சினிமா பாடல் ஒலிக்க ஒரு பெண்..? குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். அதற்கு விசில் ஒலி அந்த மேடையைத் தூக்கிக் கொண்டிருந்தது.
அண்ணாமலை, பல ஆண்டுகளுக்கு முன்னேயே மகனுடன் நகர்ப்புறத்தை ஒட்டிய குடியிருப்பில் வாழச் சென்றுவிட்டு இன்றுதான் தோட்டத்திலேயே தங்கிவிட்ட மகள் வீட்டுக்கு திருவிழாவுக்கு வந்திருக்கிறார். நாடக மேடைக்கு வந்தும் பல ஆண்டுகளாகிவிட்டன. மேடையில் அவர் எதிர்பார்த்த எதுவுமே இல்லை. காலியாகக் கிடந்த மேடையில் ஒருவர் வந்து ‘நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் பாடல், ஆடல், நகைச்சுவை… இப்போது உங்களை நாடி வரும்… ஆவலோடு காத்திருங்கள் ரசிகப் பெருமக்களே..!’ மேடையில் முன்னுக்கு வந்து அடிக்கொருதரம் அறிவிப்புச் செய்ததோடு ‘ஜோக்’ என்று சொல்லி பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் அறுவைச் சிகிச்சையும் செய்து விட்டுச் சென்றார். அவர் ஒவ்வொரு அறிவிப்புக்கும் முன்னே வந்து முகத்தைக் காட்டியதால் இவர்தான் இந்த நாடகத்தில் முக்கிய ‘ஆக்கிட்’காரர் என அண்ணாமலை தனக்குள் தீர்மானம் போட்டுக் கொண்டு, ‘பபூன்’ எப்போது வருவார் என ஆவலோடு காத்திருக்க ‘இப்போதெல்லாம் அந்த பபூன்கள் தான் இப்படி மாறி விட்டார்களோ…’ எனவும் எண்ணத் தோன்றியது அண்ணாமலைக்கு.
பாடல்களுக்கு ஆர்மோனியம், மிருதங்கம், தபேலா, ஜால்ரா, கஞ்சிரா இந்த வகையறாக்கள் இல்லாமல் அவற்றிற்கு வேண்டிய ஒலிகளெல்லாம் ஒரு பெட்டியிலிருந்து வந்து கொண்டிருந்தது. அண்ணாமலைக்கு அது பெரிய வியப்பாக இருந்தது. ‘காலம் ரொம்பத்தான் மாறித்தான் போயிடுச்சி’ அவர் மனத்துக்குள் ஓடியது.
“ஏம்மா பரிமளா, பவளக்கொடி, அல்லி அர்ஜுனா, பாரிஜாதம், மயான காண்டம், அவளேதான் இவள், தூக்கு மேட, கசங்கிய காகித மால…இதெல்லாம் நடத்துவாங்கதான…”
இப்படி அப்பாவியாகக் கேட்ட தாத்தா அண்ணாமலை கிழவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள் பேத்தி பரிமளா.
“நீங்க சொல்றது என்னான்னே எனக்குப் புரியலே தாத்தா… இப்பல்லாம் கல நிகழ்ச்சியும் படமும்தான்… நாளைக்கி திடல்ல சந்திரமுகி படம் காட்டுவாங்க.. காலலையிலயே நல்ல எடமா பாத்துப் புடிச்சிடணும்..! கல நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருந்துச்சி இல்ல தாத்தா..!” என பேத்தி சொல்ல,
இப்போது…! அண்ணாமலை தாத்தாவுக்கு ஏதோ ஓர் அரிய பொக்கிஷம் காணாமல் போனது போலிருந்தது.
பேத்தி பரிமளாவும் மற்றைய இளசுகளும் கலை நிகழ்ச்சியைக்கண்ட பூரிப்போடு நாளைய சினிமா படத்திற்காக இன்றே மகிழ்ச்சியில் ஆழ்ந்து போயிருந்தார்கள்.
- மனோரமா ஆச்சி
- மிதிலாவிலாஸ்-17
- கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘ தொகுப்பை முன் வைத்து ……
- பொன்னியின் செல்வன் படக்கதை – 8
- தொடுவானம் 89. பெண்மை என்றும் மென்மை
- தொழிற்சங்க அவசியம் பற்றிய நாவல் “ பனியன் ” – தி.வெ.ரா
- தி மார்ஷியன் – திரைப்படம் விமர்சனம்
- அவன், அவள். அது…! -5
- மிதிலாவிலாஸ்-18
- மிதிலாவிலாஸ்-19
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2015
- கொலஸ்ட்ரால் கொழுப்புகள் பலவிதம்
- அந்தரங்கங்கள்
- உதிர்ந்த செல்வங்கள்
- குட்டிக் கவிதைகள்
- மிஷ்கினின் ‘நந்தலாலா’ ஒரு பார்வை
- அ. வெண்ணிலா கவிதைகள் ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பை முன் வைத்து….
- ஒத்தப்பனை
- தன்னிகரில்லாக் கிருமி
- நியூடிரினோ ஆராய்ச்சியில் 2015 ஆண்டு நோபெல் பரிசு பெற்ற கனடா விஞ்ஞானி ஆர்தர் மெக்டானல்டு
- வலி
- செங்கண் விழியாவோ
- மனோரமா- தமிழ் சினிமாவின் அடையாள பெண்ணிய வடிவம்