தொடுவானம் 89. பெண்மை என்றும் மென்மை

This entry is part 5 of 23 in the series 11 அக்டோபர் 2015

ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும்போதே அன்று மாலையில் தூண்டில் போடச் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.பசியாறினேன். காலையிலேயே தோசைக்கு ருசியான கோழிக்குழம்பு. உண்ட களைப்பில் நன்றாக தூக்கம் சுழற்றியது. வேப்ப மரத்து காற்றில் திண்ணையில் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டேன்.
மதிய உணவின்போதுதான் அம்மா எழுப்பினார். அவ்வளவு தூக்கம். எந்தக் கவலையும் இல்லாத நிம்மதியான தூக்கம். பிறந்த மண்ணில் படுத்தாலே தனிச் சுகம்தான்.
காலையிலிருந்து கோகிலத்தைக் காணவில்லை. ஒருவேளை வயல்வெளிக்கு வேலை செய்ய போயிருப்பாள். அவள்தான் விடியலிலேயே என்னிடம் வந்துவிட்டாளே! எதை நினைத்து அப்படி அழுதாளோ தெரியவில்லை. ஆனால் கண்களிலிருந்து பொலபொலவென்று நீர்த்துளிகள் கொட்டின. மாலையில் பார்ப்போம் என்று சமாதானம் சொல்லியுள்ளேன். அவள் என்ன சொல்வாள்? சாகப்போகிறேன் என்பாள். அது எனக்கு பழகிப்போன பல்லவிதான்.
வயல்களில் ஏர் உழும் காலத்தில் கிராமத்துப் பெண்களும் வயலுக்குச் செல்வார்கள். சிலர் கணவன்மார்களுக்கு உணவு கொண்டு செல்வார்கள். அது பெரும்பாலும் பழையது என்று கூறும் இரவுச் சோற்றை நீரில் ஊறவைத்த கஞ்சி. அதில் உள்ள நீரை நீராகாரம் என்று சொல்வார்கள். அதைக் குடித்துவிட்டு விடியல் காலையிலேயே கலப்பையை தூக்கிக்கொண்டு காளை மாடுகளையும் ஒட்டிக்கொண்டு வயலுக்குச் சென்றுவிடுவார்கள். மனைவி கஞ்சியையும், கருவாட்டையும் பொரித்துக் கொண்டு, அது இல்லையேல் வெறும் வெங்காயத்தையாவது உரித்துவைத்து பானையை இடுப்பில் அல்லது தலையில் சுமந்து செல்வார்கள்.கோகிலமும் அப்படித்தான் சென்றிருப்பாள். அங்கே வரப்பில் அப்படியே மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் கொஞ்சம் புல் அறுத்து வருவாள். விவசாயம் தொடங்கிவிட்டால் ஆடு மாடுகளை வெளியில் விட முடியாது. தோட்டத்தில்தான் கொட்டகையில் கட்டிப்போட்டு தீவணம் தரவேண்டும். மாடுகளுக்கு போர் இருக்கும். அதிலிருந்து வைக்கோல் போட்டால் போதும். ஆனால் ஆடுகள் அப்படி இல்லை. அவற்றுக்கு புல் கொண்டு வந்து போடவேண்டும். தப்பித் தவறி ஆடு அல்லது மாடு வயலில் இறங்கிவிட்டால் அதைப் பிடித்து பட்டியில் அடைத்துவிடுவார்கள். அபராதம் கட்டினால்தான் வீட்டுக்கு ஒட்டி வரலாம்.
கோகிலத்துக்கு எப்படியாவது சமாதானம் சொல்லவேண்டும்.அப்போதுதான் நிம்மதியாக கல்லூரி செல்லலாம்.இல்லையேல் அவளைப்பற்றிய நினைவு மனதை உறுத்தும். அவள் கொஞ்சமும் மாறவில்லை. அப்படியேதான் பிடிவாதம் பிடிக்கிறாள். ஏனோ அவளால் எதார்த்தமான நிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் அவளுடைய மனதில் பதிந்துவிட்டதாகச் சொல்கிறாள்.அதற்கு என்னால் என்ன செய்ய முடியும்? கிராமத்தில் இருப்பது இன்பமாக இருந்தாலும் கோகிலம் செய்வது நிம்மதியை ஒருவகையில் இழக்கச் செய்கிறது. இன்று மாலையில் அவளைச் சந்திக்க நேர்ந்தால் இந்த இக்கட்டான நிலைமையை அவளிடம் விளக்கவேண்டும். அப்படியே விளக்கினாலும் அவள் என்ன மாறவாப்போகிறாள். இந்தப் பெண் மனதில் காதல் கொழுந்துவிட்டு எரிகிறது. . நான் மனம் வைத்தால் அதைத் தணிக்க முடியும். ஆனால் அது தவறாயிற்றே! அதுவும் பரவாயில்லை என்றால் அதற்கான தைரியம் வரலையே!
மதிய உணவுக்குப்பின்பு திண்ணையில் படுத்து கொஞ்ச நேரம் உறங்கினேன். மேலைக் காற்று சிலுசிலுவென்று வீசியது. வேப்பமரத்து கிளைகள்கூட அசைந்தாடின.கிளையில் இருந்த குருவிக் கூடு கீழே விழுந்துவிடுமோ என்றுகூட பயந்தேன். அது விழவில்லை.அதனுள் இருந்த இரண்டு குஞ்சுகள் தலையை வெளியே நீட்டி என்னைப் பார்த்து கீச்சிட்டன.அது கேட்ட தாய்ப் பறவை உடன் எங்கிருந்தோ பறந்து வந்து கூட்டிற்குள் தஞ்சம் புகுந்தது. குஞ்சுகளின் சத்தமும் அதோடு அடங்கியது.
” அண்ணே…அண்ணே ..” பால்பிள்ளையின் குரல் கேட்டு விழித்தேன். உடன் குருவிக் கூட்டைப் பார்த்தேன். அது பத்திரமாக கிளையில் இருந்தது. சாதாரண குருவிகூட அதனுடைய கூட்டை எவ்வளவு பாதுகாப்பாகக் .கட்டுகிறது என்று எண்ணி வியந்தேன். தன்னுடைய அலகைப் பயன்படுத்தி புல்லையும், நாரையும் தழையையும் கொண்டுவந்து நேர்த்தியாகப் பின்னி கூட்டைக் கட்டுகிறது குருவி. இயற்கையின் அதிசயங்களை என்னென்று சொல்வது?
என்னை எழுப்பிவிட்டு அவன் தோட்டத்துக்குச் சென்று மண்புழுக்கள் சேகரித்தான். தேநீர் அருந்தியபின் இரண்டு தூண்டில்களுடன் ஆற்றங்கரைக்குச் சென்றோம்.ஊரை விட்டு சற்று தொலைவில் சென்று ஒரு மரத்தடி அருகே தூண்டில் போட்டோம்.அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லை. ஆற்று ஓரத்தில் கோரைகள் நிறைய வளர்ந்திருந்தன.அங்கு குறவைகளும் கெளுத்திகளும் சிக்கின. ஒவ்வொரு மீனாக பிடித்து கோரையில் கோத்துக்கொண்டோம். நேரத்தோடு திரும்பினால் அம்மா மீன் குழம்பு வைத்துவிடுவார். புதிதாகப் பிடித்து சமைக்கும் மீன் குழம்பு தனிச் சுவைதான்!
நான் தூண்டில் தக்கையின்மேல் கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது சுற்றுமுற்றும் பார்க்கத் தவறவில்லை. ஆம். கோகிலத்தைதான் கண்கள் தேடின. அவள் நிச்சயமாக தேடிக்கொண்டு வருவாள். அவளுடைய குணம் எனக்குத் தெரியாதா என்ன?
அவள் என்னை வெகுநேரம் காக்க வைக்கவில்லை. தொலைவில் ஊர்க் கோடியில் அந்த ஒற்றையடிப் பாதையில் வருவது தெரிந்தது. அவள் வெறுமனே வரவில்லை. இருப்பில் ஒரு கூடை வைத்திருந்தாள். கையில் நிச்சயம் அரிவாள் இருக்கும்.ஆட்டுக்கு புல் அறுக்கும் சாக்கில்தான் அவள் வெளியேறியிருப்பாள். உண்மையில் அவள் யாருக்கும் பதில் சொல்லத் தேவை இல்லைதான். கணவன் இன்னும் வயலில்தான் இருப்பான். அவன் திரும்புவதற்குள் இருட்டிவிடும்.
” அண்ணே ! அண்ணே ! அதோ கோகிலம் அண்ணே! ” பால்பிள்ளை பரபரப்பானான்.
” எங்கே? ” ஒன்றும் தெரியாததுபோல் அவனிடம் கேட்டேன்.
” தோ பாருங்க அண்ணே. இப்போதான் ஊரிலிருந்து வெளியாகுது. ” கையை அத் திசையில் .காட்டினான்.
அனைத்துமே பரந்த வயல்வெளியானதால் தூரத்தில் வருபவர்கள்கூட தெளிவாகத் தெரிவார்கள். அவளுக்கும் எங்களைத் தெரிந்திருக்கும். தேடவேண்டிய அவசியமில்லை.
அவள் நெருங்க நெருங்க பால்பிள்ளை என்னைவிட்டு விலகிச சென்றான். அவன் கெட்டிக்காரன். அண்ணனுக்கு எப்போதுமே மரியாதை அவனுக்கு.,
அவள் வேகமாக நடந்து வந்தாள். அருகில் வந்ததும் எனக்கு ஏனோ நெஞ்சு படபடத்தது.
” ஆட்டுக்கு கொஞ்சம் புல் அறுக்க வந்தேன். நிறைய மீன் கெடச்சிதா? ” என் அருகில் வந்து நின்றபடி கேட்டாள்.
” நீ என்ன காலையிலேயே வயலுக்கு போய்விட்டாயா? ”
” ஆமாம். வந்து பார்த்தேன். தூங்கிக்கிட்டு இருந்தீங்க. காலயிலே நீங்க என்ன தேடுனீங்களா? ”
” இல்லை. காணோமே என்றுதான் கேட்டேன். ”
” ஆமாம். ராத்திரி ஏன் அப்படி நடுங்கினீங்க? அவ்வளவு பயமா? யாரும் அப்போ வரமாட்டாங்க என்பது எனக்கு தெரியாதா என்ன? அதனாலதானே வந்தேன்? ” நேராக விஷயத்துக்கு வந்தாள்.
” அந்த இருட்டில் அப்படி அருகில் வந்து பேசுவது உனக்கு தப்பாகத் தெரியாமல் இருக்கலாம். அனால் எனக்கு அது தப்புதான். ” நான் விளக்கம் சொன்னேன்.
” இருட்டுல பேசுவது தப்பு. இப்போ வெளிச்சத்தில பேசுவது தப்பு இல்லயா? தப்புன்னா எல்லாமே தப்புதானே. நாம இப்படி பழகுவத ஊர் ஒலகம் ஏற்காதுதான்.அதனால விரும்புறவங்க பழகாம இருந்துவிடுவதா? நீங்க வருவீங்க வருவீங்கன்னு எத்தன நாளா காத்திருந்தேன் தெரியுமா? அதான் ஆசைய அடக்க முடியல. நீங்க நல்லா தூங்கிட்டீங்க. எனக்கு விடியவிடிய தூக்கம் இல்ல .அதனால இப்போ ஏன்னா? என் மேல கோவமா? ” கொஞ்சும் சிணுங்களில் பேசினாள். கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது. துணிச்சல்காரிதான் அவள்.
” ராத்திரி உன் கணவன் வீட்டில இல்லயா? ”
” இருந்து என்ன பண்ணனும்? நான்தான் எங்களுக்குள்ள அந்த மாதிரி இல்லன்னு சொல்லிட்டேனே? என்ன நம்பலையா நீங்க? ஆமா. யாருதான் இத நம்புவாங்க? கல்யாணத்துல இருந்து இன்னக்கி வர ஒன்னும் ஆகலனா யார்தான் நம்புவாங்க? ” அவள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லைதான். அவள் புதுப் பெண்.அவன் இளைஞன். எப்படி அவனால் இவளைத் தொடாமல் இருக்க முடிகிறது. இவளாலும் அப்படி இருக்க முடியுமா? என்னிடம் அவளுடைய ” காதலை ” வெளிப்படுத்தவே அப்படிச் சொல்கிறாளா? அவள் அதைக் கூறும் விதத்தைப் பார்க்கும்போது அதில் உண்மை உள்ளதுபோன்றுதான் தெரிந்தது.
” இப்படியே போனால் எப்படி? ” அவளைப் பார்த்து கேட்டேன்.
” என்ன எப்படி? இன்னும் எத்தன தடவ ஒங்ககிட்ட சொல்றுது? எனக்கு மனசுக்கு பிடிக்கல. மனசுக்கு புடிக்காத காரியத்த எப்படி செய்யுறது? என்னால் இப்படி இருக்க முடியும் என்பத ஒங்ககிட்ட சொல்லணும் என்பதுக்குதான் காத்திருந்தேன். இப்போ சொல்லிட்டேன். இப்போ மட்டுமா ஒவ்வொரு மொறையும் நீங்க இங்க வரும்போது சொல்லிட்டேன்.நீங்கதான் என்ன இன்னும் நம்பல. அதனாலதான் நான் சீக்கிரமா செத்துட போறேன். .அப்பதான் நீங்க நம்புவீங்க. ”
” நீ செத்துப்போன பிறகு நான் நம்பினால் என்ன ,நம்பாவிட்டால் என்ன? நீ திரும்ப உயிரோடு வரப்போவதில்லையே? நீ சாவதால் உனக்கு என்ன லாபம் ? ” தக்கையை மீன் வேகமாக உள்ளே இழுத்துச் சென்றது. உடன் தூண்டிலை இழுத்து அடித்தேன். பெரிய குறவை ஒன்று வரப்பில் விழுந்து துடித்தது.
” அந்த மீன் போலதான் என் மனசும் துடிக்குது.நீங்க வந்தாலும் துடிக்குது. நீங்க போயிட்டாலும் துடிக்குது இந்த பாழும் மனம். ஒங்களுக்கு வேணுமானால் மனசு கல்லாக இருக்கலாம்.. ஆனால் இது பெண் மனம். இது பற்றி ஒங்களுக்கு தெரியாது. ” இது கேட்டு நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். சிங்கப்பூரில் லதா! சென்னையில் வெரோனிக்கா! எனக்கா பெண் மனம் தெரியாது?
இதில் என்ன ஆச்சரியமென்றால் எல்லா பெண்களுக்கும் அந்த பெண் மனம் என்பது மென்மையானதாகத்தான் உள்ளது. அதனால்தான் பெண்ணை மலருக்கு ஒப்பிடுகின்றனரோ?
” கோகிலம். இங்கே பார். நீ இளம் வயதுடையவள். ”
” உங்களுக்கு மட்டும் என்ன வயசாகிவிட்டதா? ” சோகத்திலும் அவளுக்கு கிண்டல்தான்.
” இடையில் பேசாமல் கேள். கோகிலம். உன் பெயரைப்போலவே உன் முகமும் அழகுதான். உன் உடலும் இளமைதான். நீ வாழவேண்டியவள்.இந்த இளம் வயதில் நீ என்னைப் பார்க்கும்போதெல்லாம் சாகப்போவதாகக் கூறுவது எனக்குப் பிடிக்கவில்லை.எனக்கு சாவு என்பதே பிடிக்காது. நான் மருத்துவம் படிப்பவன். மனிதர் உயிரைக் காப்பாற்றவே மருத்துவம் படிக்கிறேன். நான் உன்னை சாக விட மாட்டேன். ”
“: அப்போ என்ன வாழவையுங்கள். நீங்க மனசு வச்சா முடியும். ”
” நீ மனமாகாதவளாக இருந்திருந்தால் அது முடியும். ஆனால் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்போது நீ அடுத்தவன். மனைவி. நீ அவனுக்கு சொந்தமாகிவிட்டாய். நீ விரும்பாத நிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டாய் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். மணமேடையில் என்னைப் பார்த்து மனதைப் பரிகொடுத்துவிட்டாய் என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். இது ஒரு வினோதமான காதல் என்பதையும் நானறிவேன். காதல் எந்த வகையான சூழலிலும் உருவாகலாம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். அதனால்தான் உன்மேல் தவறு உள்ளது என்றும் கூறமாட்டேன். இந்த நிலையில் உன் நிலை இக்கட்டானதுதான் என்பதையும் நானறிவேன். ” மனம் திறந்து அவளிடம் கூறினேன்.
” நீங்க உயிர காக்கும் மருத்துவர். சாகப்போகும் என் உயிரையும் உங்களால காப்பாத்த முடியும்… நீங்க மட்டும் மனசு வச்சா..”
” உன்னைக் காக்கணும் என்ற மனசு உள்ளதால்தான் நான் உன்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.”
” நீங்க பெசுவதாலதான் நானும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கேன். இல்லாவிட்டா எப்போதோ செத்திருப்பேன்! ”
” சரி உன் விருப்பபடி நான் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் போதுமா? ”
” இப்படி பேசிக்கொண்டிருந்தால் மட்டும் ஆசை தீருமா? ”
” வேறு என்ன வேண்டும் உனக்கு? ”
” அதயும் ஒங்ககிட்ட சொன்னாதான் புரியுமா? சரி. இன்னிக்கி ராத்திரி சொல்றேன். ”
அவள் அப்படி கூறிவிட்டு கொஞ்ச தூரம் சென்று வரப்பில் அமர்ந்து புல் அறுக்கத் தொடங்கினாள்.
தக்கை மீண்டும் நீருக்குள் நுழைந்தது.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை – 8தொழிற்சங்க அவசியம் பற்றிய நாவல் “ பனியன் ” – தி.வெ.ரா
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *