ஸ்ரீராம்
செக்ஸ் எஜுகேஷன் தான் மையம். அதைச் சுற்றி வாத்தியார்கள் மாணவர்களிடம் காட்ட வேண்டிய கண்டிப்பின் அளவீடு குறித்து பேசியிருக்கிறார்கள்.
‘ஏன்டா கிஸ் பண்ணின?’ என்று கேட்கிறாள் டீச்சரான ராதிகா.
‘… உங்களையும் கிஸ் பண்ணுவேன் மிஸ்’ என்கிறான் பையன்.
ராதிகா கோபத்தில் அறைந்துவிடுகிறாள். பையன் மயங்கி சரிகிறான்.
இங்கிருந்து பதற்றம் தொற்றிக்கொள்கிறது. பையனின் மாமன் ஒரு பொதுவுடைமைவாதி. கத்தி ஆர்பாட்டம் செய்கிறான். எல்லோரையும் கேள்வி கேட்கிறான். ராதிகா தலைமை ஆசிரியரின் வற்புறுத்தலுக்கு பயந்து ஊரைவிட்டு ஓடுகிறாள். இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். இப்போது வரை, ராதிகா மேல் இருக்கும் குற்றச்சாட்டு ‘கண்டிப்புக்கு வன்முறையை கையிலெடுக்கும் டீச்சர்’ என்றுதான் இருக்கிறது.
இப்போது இதே காட்சியை கொஞ்சம் வேறு மாதிரி கற்பனை செய்து பாருங்கள்.
‘ஏன்டா கிஸ் பண்ணின?’ என்று கேட்கிறாள் டீச்சரான ராதிகா.
‘… உங்களையும் கிஸ் பண்ணுவேன் மிஸ்’ என்கிறான் பையன்.
ராதிகா சிரித்துவிட்டு, ‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாது செழியன்.. ஓகே ஸ்டூடன்ட்ஸ்.. இன்னிக்கு நாம வாய்ப்பாடு பார்க்கலாம்’ என்றுவிட்டு தொடர்ந்து பாடம் நடத்துகிறாள்.
அடுத்த நாள் ராதிகா வராந்தையில் நடந்து வருகையில், மாணவன் ராதிகாவை கட்டிப்பிடித்து இதழ்களில் முத்தமிட்டு விடுகிறான். ராதிகா பள்ளிக்கூட தலைமையிடம் முறையிடுகிறார். விசாரணையில்,
‘ஆமாம்..மிஸ் கிட்ட அவன் எங்க முன்னாடியே அப்படி தான் பேசியிருக்கான்..மிஸ் சிரிச்சாங்க.. கண்டிக்கலை.. ‘ என்று சொல்கிறார்கள் இதர மாணவர்கள்.
பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைத்ததாக டீச்சர் மேல் பழி வரும். இப்போது, டீச்சரின் பெயர் ரிப்பேராகி விடுகிறது. நடத்தையில் கேள்வி வந்துவிடுகிறது
“எப்படியோ கண்டவனோட என்னை சம்பந்தப்படுத்தி பேசி என் பேரை நாரடிச்சாச்சு.. இனிமே எவன் என்னை வந்து கல்யாணம் பண்ணிக்குவான்? அதனால, யாரோட சம்பந்தப்படுத்தி பேசினீங்களோ, அவனோடவே வாழ்ந்துக்குறேன்’ என்பது பாதிக்கப்படும் பல பெண்களின் பொதுவான டயலாக் ஆக இருக்கிறது.. இந்த சூழலுக்கு ஒரு பெண்ணை உண்மையில் விரட்டுவது யார் என்று தான் நாம் யோசிக்க வேண்டும்
1. சென்னை டீச்சர் குமுதா
2. கடையநல்லூர் சுந்தர் – கோதை
போன்றவர்களை இந்த கோணத்தில் அணுகலாமா தெரியவில்லை. கோதைக்கும், குமுதாவுக்குமே வெளிச்சம்.
நான் இங்கே சொல்ல வருவது வேறு.
இது போன்ற சூழல்களில், ஒரு பெண் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று ஒரு சமூகம் நிர்பந்திக்கிறது தான். அந்த நிர்பந்தத்திற்கு அடி பணிந்து தான் பெண்கள் இங்கே வாழ வேண்டி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு இருத்தலிய நிலைப்பாடுதான் என்றால் அது மிகையில்லை.
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் எல்லைமீறி பேசவோ, நடக்கவோ செய்கிறானென்றால், அந்த பெண், தனது ஒழுக்கத்தின் மீது கேள்வி வந்துவிடக்கூடாதெனில், இச்சமூகத்தில் அவள் தொடர்ந்து மரியாதையுடனும், மதிப்புடனும் இயங்கவேண்டுமெனில், கோபப்பட்டு கத்தி கூப்பாடு போட்டு, மேலிடம் சென்று முறையிடவேண்டும் அல்லது அறைந்துவிட வேண்டும். இல்லையெனில் சர்வ நிச்சயமாக அவளது ஒழுக்கம் கேள்விக்கு உட்படுத்தப்படும். நாளைடைவில் அதுவே அவளது வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடவும் கூடும்.
இது போன்ற சூழல்களை பெரும்பான்மையான பெண்கள் ஒரு சூழ்நிலைக்கைதி போன்ற மன நிலையிலேயே கடந்து வருகிறார்கள். அது தரும் குற்ற உணர்ச்சியே அவளது மனத்தில் ஒரு மாறாத வடுவாக எஞ்சி விடுகிறது. இதைத்தான் பெண் தனது அழகுக்கும், அவயங்களின் வனப்பிற்கும் தரும் விலையாக இச்சமூகம் கொள்ளச்சொல்கிறதா? உலகில் எந்தப்பெண்ணும் இப்படி ஒரு விலையை கேட்பதில்லையே. ஆணுடன் இணைந்து ஒரே சமூக தளத்தில் வாழவேண்டுமானால் பெண் இந்த விலையைத்தான் தர வேண்டும் என்று நிர்ணயிப்பது யார்?
பெண்ணின் அழகையும் வனப்பையும் இந்த விலைக்குத்தான் எடுத்துக்கொள்வேன் என்று ஆணுலகம் அடம்பிடிப்பது என்ன நியாயம்?
இந்த சமூக சிக்கல்களையெல்லாம் ஐந்து வயது பையன் புரிந்துகொள்வானா? அவனுக்கு சொல்லித்தரத்தான் முடியுமா?
சரி. இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம்.
1. கணவனை இழந்த கைம்பெண் அடுத்த வீட்டில் இருந்தால், அப்பெண்ணுடன் பேசுவதை தவிர்க்கச்சொல்லி ஆண்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள் நம் சமூகத்தில். இதை மீறும் ஆண்களின் பெயர்களை சர்வ நிச்சயமாக முதுகின் பின்னால் ரிப்பேராக்கிவிடுவார்கள்.
2. சற்றேரக்குறைய இதே தான், கணவனை விட்டு பிரிந்திருக்கும் பெண்களிடத்தும். இந்தச் சமூகம் இப்படித்தான் இயங்குகிறது.
இப்படி எத்தனையோ சொல்லலாம். யோசித்துப் பார்த்தால், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி ஒரே விதமான நிர்பந்தங்களைத்தான், ஒரே விதமான அணுகுமுறையைத்தான் இந்தச் சமூகம் முன்வைக்கிறது.
அர்த்தங்கள் தாம் உலகை ஆள்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த அர்த்தங்களை புறக்கணிக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ நடப்பது ஒன்றே தான். அவர்களின் ஒழுக்கம் கேள்விக்குறியாகிறது.
ஆண் எளிதாக இவ்வர்த்தங்களை தூக்கிப்போட்டுவிடுகிறான். புறந்தள்ளிவிடுகிறான். அதனால் வரும் ‘ஒழுக்கம் கேள்விக்குறியாதலை’ அவன் கடந்துபோக எத்தனித்துவிடுகிறான். அதுகுறித்து அவன் கவலை கொள்வதில்லை. நினைவில் கூட வைத்திருப்பதில்லை. கவனியுங்கள். “அதுகுறித்து அவன் கவலை கொள்வதில்லை, நினைவில் கூட வைத்திருப்பதில்லை”. அதன் கோர விளைவுகளை அவன் இயல்பாக எதிர்கொள்கிறான். ஒரு short-term memory loss ஆனவன் போல அப்படி ஒன்று நடந்த பிரஞையே இல்லாமல் கடந்து விடுகிறான். அதனாலேயே அவன் ஒரு கட்டுக்குள் அடங்காதவனாக பார்க்கப்படுகிறான். இது ஒரு முக்கியமான உளவியல். குட்ட குட்ட குனிந்தால் குட்டிக்கொண்டே இருப்பார்கள். ஆகையால் குட்டுவதை எதிர்ப்பது ஒரு வகையில் ஒரு எதிர்ப்பு சக்தி. அதை ஆண்கள் மிக இயல்பாக செய்துவிடுவார்கள். அவனுடைய ஒழுக்கம் தானே நாளடைவில் நிரூபனமாகிறது. அதை நாம் தினம் தினம் நம்மிடையே பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.
பெண்ணுக்கு அது சாத்தியப்படுவதில்லை. ஏனெனில், எப்படி நிர்வாணம் பொருட்படுத்தப்பட்டு ‘கலாச்சாரம்’ என்கிற ஒரு மிகப்பெரிய மாய தவற்றிற்கு வித்திடப்பட்டதோ, அது போல, reputation என்கிற கலாச்சார மதிப்பீடொன்றை கட்டமைத்து பெண் தன்னைத் தானே வருத்திக்கொள்கிறாள் என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது. நின்றால் குற்றம். உட்கார்ந்தால் குற்றம். நடந்தால் குற்றம்.
அடுத்தவர் வாய்க்கு பயம் கொள்ளத் துவங்கி, குட்ட குட்ட குனிந்து கொண்டே இருக்கிறாள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் இந்த இழவெடுத்த ரெபுடேஷனை பாதுகாக்க தினம் தினம் நெருப்பில் ஏன் குதிக்க வேண்டும்? ஆணைப்போல் ஒரு short-term memory loss ஆக அதை கடந்து போனால் என்ன நேர்ந்துவிடப்போகிறது? வரம்புகளுக்குள் நாம் நடந்துவிட்டால், நம்மை மீறி என்ன பெரிதாக நடந்துவிடும்?
நம் வாக்கு, நம் செயல்கள், நம் பழக்கங்களில் உண்மையும் நேர்மையும் இருந்தால், அவைகள் நமக்கொரு பேரை, தானே பெற்றுத்தரும் என்பது எனது நம்பிக்கை. அப்படி பெற்றுத்தராத பட்சத்தில், நாம் தவறான மனிதர்களுக்கு மத்தியில் நிற்கிறோம் என்று பொருள். ஜாகையை மாற்றிக்கொள்வது தவிர வேறு வழியில்லை. தவறான மனிதர்களுக்காக நம்மை மாற்றிக்கொள்வானேன்? Its not worth.
இதுதான் ஆண். இந்த புறக்கணிப்பே ஆண். இந்த கடந்து போதலே ஆண். இது ஆணுக்கு சாத்தியப்படுகையில், பெண்ணுக்கு சாத்தியப்படாதா?
ஆணோ பெண்ணோ, யாராக இருப்பினும் எதிர்பாலினத்திடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை. உயர்வு தாழ்வு என்று எதுவும் இல்லை. எல்லோரும் சமம். எல்லாமும் சமம்.
சரி, இதை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். லேசாக அறைந்ததற்கே கோமாவிற்கு போய்விடும் உடல் நிலையில் ஒரு மகன். தந்தை இல்லை. நரம்பு தேகத்தில் அவனது தாய்.
பிள்ளையை ஆரோக்கியமாக வளர்க்க போதுமான பொருளாதார சுதந்திரத்தை அடையும் முன்பே குடும்பம் , குழந்தை என்று சென்று விடும் மிகப்பெரிய பூசணிக்காயை, ஆசிரியர் – மாணவர் கண்டிப்பு, பாலியல் கல்வி போன்றவைகளின் பின்னே மறைத்திருக்கிறார்கள். கார்பொரேஷன் பள்ளிகளில் போய் பார்த்தால் இந்த வாதத்தின் நிதர்சனம் புரியலாம். பத்திரிக்கையில் படித்திருக்கலாம். “ப்ரேயரில் நின்ற மாணவர் மயங்கி விழுந்தார்” என்று. பின்னணி புரியாமல் பி.டி ஆசிரியரை காய்ச்சி எடுப்பார்கள்.
குற்றம் கடிதல், பாலியல் கல்வியின் அத்தியாவசியம் குறித்து கேள்வி எழுப்புகிறது. மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் கண்டிப்பின் எல்லை குறித்து பேசுகிறது. ஆனால், பிரச்சனையின் மையத்தை மயிலிறகு போல் மேலாக வருடிவிட்டு சென்றுவிடுகிறது. ஆழமாக அதை பேசவில்லை. ராதிகா, செழியன் என்று பாத்திரங்கள் தேர்வு சிறப்பு. இயல்பாக கதாபாத்திரத்துடன் பொருந்திப் போகிறார்கள்.
திரும்பி வந்த ஆசிரியர் பையனின் தாயின் காலில் விழுவது, மாமன் சமாதானமாகிவிடுவது எல்லாம் திரைப்படங்களில் மட்டுமே நிகழும். நிஜத்தில், இதை ஒரு சாக்காக வைத்து பள்ளியின் பெயரை கெடுப்பதாக மிரட்டி பணம் பறிப்பார்கள். பள்ளிகளும் அதற்கு தகுதியாகத்தான் நடந்திருக்கும் என்பது வேறு விஷயம்.
எப்படியாகினும், “குற்றம் கடிதல்” ஒரு நல்ல படம்.
– ஸ்ரீராம் (ramprasath.ram@gmail.com)
- டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் – நூல் விமர்சனம்.
- அணு ஆயுதக் குறைப்புக்கு முற்பட்ட அமெரிக்க விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தே
- திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
- நிர்வகிக்கப்பட்ட கர்வம்
- (20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு
- பொன்னியின் செல்வன் படக்கதை – 9
- தாயுமாகியவள்
- சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.
- தொடுவானம் 90. அன்பு தரும் துன்பம்
- நானும் என் ஈழத்து முருங்கையும்
- புலி ஆடு புல்லுக்கட்டு
- பேசாமொழி – அக்டோபர் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது..
- ஓவியம் தரித்த உயிர்
- அவன், அவள். அது…! -6
- திருமால் பெருமை
- மருத்துவக் கட்டுரை சொறி சிரங்கு ( Scabies )
- இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை நவம்பர் 7 (சனி) நவம்பர் 8 (ஞாயிறு)
- குற்றம் கடிதல் – திரைவிமர்சனம்