சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.

author
12
0 minutes, 3 seconds Read
This entry is part 8 of 18 in the series 18 அக்டோபர் 2015
வெ.சுரேஷ்
 sivaji267
 “கொள்ளை அடிப்போன் வள்ளலைப் போல, 
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான். 
ஊழல் செய்பவன் யோக்கியன் போல 
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கிறான்”.
 
மேலே இருக்கும் வரிகள் 1974ல் வெளிவந்த என் மகன் படத்தில், “நீங்கள் அத்தனைப் பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என்ற பாடலில் வருவது. சிவாஜி கணேசனுக்காக கண்ணதாசன் எழுதியது. அப்போது இருவரும் காமராஜரின் பழைய காங்கிரசில் இருந்தனர். மேலே சொன்ன வரிகள் தமிழ்நாட்டில் யார் இருவரைக் குறிக்கும் என்பது அன்றைய நாளில் அனைவரும் அறிந்ததே. இந்த வரிகளையே 70களில் சிவாஜி கணேசன் மற்றும் கண்ணதாசனின் அரசியல் நிலைப்பாடு என்று சொல்லலாம். இது யார் பக்கம் நின்று யாரைச் சாடுகிறது என்பதும் வெளிப்படை. 
 
சிவாஜி கணேசனுக்கு என்று ஒரு அரசியல் நிலைப் பாடு என்றதும் பல தீவிர அரசியல் பார்வையாளர்கள் எள்ளி நகையாடக் கூடும். சென்ற வாரம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை நினைவு கூர்ந்தவர்கள் பலரும் அவரை ஒரு நடிகராக மட்டுமே பார்த்தார்கள். அவர் அரசியலில் முக்கியமான ஒரு சக்தியாக் விளங்கிய காலம் உண்டு என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் மறந்து விட்டோம். ஆட்சியைக் கைப்பற்றும் அரசியல்வாதிகளுக்கு அனுகூலமாக இருக்கும் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் அதிகாரக் கட்டிலில் அமரத் தவறியவர்களுக்கு வஞ்சகம் செய்து விடுகிறது. அப்படியே நினைவில் வைத்திருப்பவர்களும் பொதுபுத்தியில் தங்கிவிட்ட முழுமையற்ற ஒரு சில கருத்துகளையே எதிரொலிக்கின்றனர். பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் பழக்கம் மட்டுமல்ல, அவற்றைச் சேகரிக்கும் பழக்கமோ தேடிப் படிக்கும் பழக்கமோ நம்மவரிடையே இல்லை. காலவோட்டத்தின் விபத்தை அங்கங்கே எஞ்சி நிற்கும் மிச்ச சொச்சங்களையே வரலாறென்று சுமந்து செல்கிறோம். 
 
சிவாஜி கணேசன் விஷயத்தில், அவரது அரசியலைப் பேசுபவர்கள் பெரும்பாலும் அவரது அரசியல் தோல்விகளையே நினைவுகூர்கின்றனர். அவர் சார்ந்திருந்த கட்சிகளெல்லாம் தோல்வியடையும் கட்சிகள் என்றே பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. இது அப்படித்தானா, இந்தப் பொதுப்புத்தி சார்ந்த பதிவுகள் உண்மைதானா, என்பதை சற்று விரிவாகக் காணலாம்.
 
1952ல் பரசாசக்தி படம் வெளியானதிலிருந்து 1955 வரை சிவாஜி கணேசன்தான் திராவிட இயக்கத்தின் மிகப்பிரபலமான திரை முகம் என்பதே உண்மை. இதில் அவர் எம்ஜியார், கே.ஆர் ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் முதலியவர்களைவிட  முன்னணியில்  இருந்தார். 1955ல் அவர் திருப்பதி சென்று வந்தது நாத்திக இயக்கமாக அன்று இருந்த திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுவே அவர் எப்போதுமே ஒரு உறுப்பினராக இருந்திராத திமுகவுக்கும் அவருக்குமான உறவை முற்றிலும் முறித்தது. அவர் தன் தொழில் மீது வைத்திருந்த பாசமும் பலவிதமான வேடங்களைப் புனைந்து நடிக்க வேண்டும் என்று அவருள் இருந்த தணியாத கலைத் தாகமும் அவரை, கள்வனாகவும் நடிப்பேன் கடவுள் பக்தனாகவும் நடிப்பேன், என்று சொல்ல வைத்து அப்படியே பல விதங்களில் பரிமளிக்க வைத்தது. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ளே கடவுள் நம்பிக்கையும் வெளியே நாத்திக வேடமும் போட்டதில்லை அவர். இந்த நேர்மை திராவிட இயக்கத்துடன் உறவு கொண்டிருந்தவர்களில்  அவரைத் தவிர கண்ணதாசனிடம் மட்டுமே உண்டு. சில ஆண்டுகளுக்குப் பின்னர், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கடவுள் மறுப்புக் கொள்கையைக் கைவிட்டவர்களே, சிவாஜி கணேசன் தான் கடவுள் நம்பிக்கையாளனென்று வெளிப்படையாகச் சொன்னதற்காக அவரைத் தூற்றினார்கள்.
 
சிவாஜி கணேசன் விட்டுச் சென்ற இடத்தை சிக்கென்று பிடித்துக் கொண்டார் எம்ஜியார். 1957ல் வெளிவந்த  நாடோடி மன்னன் படத்தில் தொடங்கி அவரது படங்கள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பேசியது என்றாலும் கட்சியின் கொள்கைகளையும் பெருமையையும் பேசுவதோடு நில்லாமல் அதைவிட மிக நுட்பமாக அவரது நாயக பிம்பத்தை சற்றே உயர்த்தி எழுப்பும் படங்களில் நடிக்கத் துவங்கி புரட்சி நடிகரானார் எம்ஜிஆர். அவர் ஒருபோதும் கடவுள் குறித்த தமது கொள்கையை வெளிப்படையாகச் சொன்னது இல்லை. படங்களில் அவரது பாத்திரங்கள் ஆத்திகத்துக்கும் நாத்திகத்தும் இடையேதான் இருக்கும். முதல்வராக ஆன பிறகு கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தும், மூகாம்பிகை கோவிலுக்கு வாள் ஒன்றைப் பரிசாகத் தந்தும் தான் ஆத்திகர்தான் என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும்வரை அதை மறைத்து வைக்கும் “சாமர்த்தியம்” எம்ஜியாருக்கு இருந்தது. ஆனால், சிவாஜி தன் நேர்மைக்கான விலை கொடுத்தார். 
 
பின் 1961ல் காங்கிரசில் இணைந்தார் சிவாஜி கணேசன். 1962 தேர்தலில் காங்கிரசே தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்ந்தது. அவர் சேர்ந்த கட்சிகளெல்லாம் தோல்வியடைந்தன என்று சொல்பவர்கள் மறக்கும் தேர்தல் இது. இங்குதான் நாம் சிவாஜி கணேசனின் அரசியல் நிலைப்பாடு என்பதற்கான அர்த்தத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. அது மிகவும் எளிமையானது. அன்றைய இந்திய மக்களின் அரசியல் நம்பிக்கைகளுக்கு மிகவும் நெருக்கமானதும்கூட. ஒரு தலைவனை நம்பி அவன் செய்யும் செயல்களில் தன்னை இணைத்துக் கொள்வது மட்டுமே என்ற ஒரு நிலைப்பாடு அது. சிவாஜி நேருவையும், காமராஜரையும் நம்பினார். அவர்களுடன் இருந்தார். 1964ல் நேருவின் மறைவு அவரை மாற்றவில்லை. 1967ல் காமராஜரின் தோல்வியும் அவரை மாற்றவில்லை. பின் 1969ல் காங்கிரஸ் இரண்டாகப் பிளந்தபோதும் அவர் தான் நம்பிய தலைவனுடன்தான் நின்றார். இது மட்டுமல்ல. 1971ல் 67 தேர்தலைவிட மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது காமராஜரின் பழைய காங்கிரஸ். அப்போதும் தன விசுவாசத்தை மாற்றிக்கொண்டு பசையுள்ள இந்திரா காங்கிரஸ் பக்கம் அவர் சாயவில்லை. காமராஜருடனேயேதான் இருந்தார். இது போன்ற செயல்களே நகைப்புககுரியவையாகி விட்டன, அரசியலின் அரிச்சுவடி அறியாதவர் என்று அவர் வர்ணிக்கப்படக் காரணமாக இருக்கின்றன.
 
1975ல் காமராஜரின் மறைவுக்குப் பின் தமிழகத்தின் பழைய காங்கிரசுக்கு  இரண்டு தேர்வுகள் இருந்தன. அகில இந்திய அளவில் ஜனதா என்று புதிதாக பிறவி எடுத்த கட்சியோடு இணைவது, அல்லது இந்திரா காங்கிரசில் இணைவது. இதில் தமிழகத்தின் பழைய  காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலோனோர் இந்திரா காங்கிரசிலேதான் இணைந்தார்கள். அதைத்தான் சிவாஜி கணேசனும் செய்தார். உண்மையில் ஜனதாவின் அரைகுறை ஆயுள் இந்த முடிவே சரி என்று பின்னர் நிரூபித்தது.
 
இந்த இணைப்புக்குப் பின் வந்த 1977 பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் அதுவரை சந்திக்காத ஒரு காட்சியைச் சந்தித்தது. அதிமுக இ.காங்கிரஸ் கூட்டணிக்காக எம்ஜிஆரும் சிவாஜியும் ஒரே மேடையில் தோன்றியதுதான் அது. இந்தத் தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் தோற்று ஜனதாவின் ஆட்சி மலர்ந்தாலும், தமிழகத்தில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. சிவாஜி கணேசன் சார்ந்திருந்த அணி எப்போதும் தோல்விதான் அடையும் என்ற தவறான கருத்துக்கு எதிரான மற்றுமொரு ஆதாரம் இது (அந்த தேர்தலின்போது இந்தக் கூட்டணியின்  எதிரணியினர் ஒட்டிய ஒரு சுவரொட்டி இன்னமும் நினைவில் இருக்கிறது. அதில் இப்படி எழுதீயிருந்தது. படம்: பாரத சுடுகாடு, இயக்கம்: “ரத்தக் காட்டேரி”. நடிப்பு : “தொப்பித் தலையனும் தொந்தி வயிறனும்”. அன்றும் நம் அரசியல் நாகரிகம் ஒன்றும் அவ்வளவு உயரத்தில் இல்லை).
 
இந்த இடத்தில் எம்ஜியாரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்பது அவர் எந்தவிதத்தில், சிவாஜியின் நிலைப்பாடுகளுக்கு எதிராகவும் தனக்கான முக்கியத்துவத்தைத் தேடி அதனை நிறுவிக் கொள்வதிலும் வேறுபட்டு இருந்தார் என்பதை அறியும் வகையில் சுவாரசியமானது. துவக்கத்தில் எம்ஜியார் கதரணிந்த காந்தி மீது பற்று கொண்ட காங்கிரஸ்காரர். பின் கருணாநிதியுடனான நட்பே அவரை திராவிட இயக்கத்தை நோக்கிச் செலுத்தியது. ஆனாலும் சிவாஜி திராவிட இயக்கத்தின் முகமாக இருந்த காலத்தில் எம்ஜிஆருக்கு என்று ஒரு தனி இடம் உருவாகவில்லை. பின் சிவாஜி காங்கிரசுக்குப் போன பிறகே எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின், திமுகவின் முகமானார். இதிலுள்ள ஒரு சுவாரசிய முரண், முற்றிலும்  “ஆரிய” களை, (சிவந்த நிறமும் நீள முகமும் கூரான மூக்கும்) கொண்ட எம்ஜிஆர் திராவிட இயக்க முகமாகவும், “திராவிட” முக அமைப்பு கொண்ட சிவாஜி (கருப்பு /மாநிற நிறம்) அதற்கு எதிரான ஒரு அடையாளம் ஆனதும். 
 
சின்னஞ்சிறு கிராமங்களில்கூட பரவியிருந்த எம்ஜிஆர்- சிவாஜி ரசிகர் மன்றங்கள்  ஆழமான கொள்கை அறிவு இல்லாத பாமர மக்களிடையே திமுகவையும், காங்கிரசையும் அடையாளம் காணும் இடங்களாகின. இவை இரண்டும் எளிய மக்களின் மனதில் எம்ஜிஆர் கட்சி, சிவாஜி கட்சி என்ற இருமைகளாகின எனலாம். 
 
எம்ஜிஆரின் அரசியல் நிலைப்பாடு உண்மையில் அண்ணா மறையும் வரை, சிவாஜியின் நிலைப்பாட்டிலிருந்து ஒன்றும் பெரிதும் மாறுபட்டதல்ல. அவரும் ஒரு தலைவனை (அண்ணாவை) நம்பி ஏற்றுக் கொண்டார். அவர் வழியில் நடப்பதே தன் லட்சியம் என்றார். அண்ணா உயிரோடு இருக்கும் வரை எம்ஜிஆர் தனிக்கட்சி குறித்து நினைத்திருக்கவே வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த நிலை 1969ல் மாறியது. அண்ணாவின் மறைவு திமுகவில் எம்ஜிஆருக்கு ஒரு முன்னணி  இடத்தை அளித்தது. அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி தமிழக முதல்வரானதில் எம்ஜிஆரின் பங்கே முதன்மையானது. அதற்குப் பின் வந்த 1971 பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்த திமுக பெற்ற மகத்தான வெற்றிகளுக்குப் பின்னணியில் எம்ஜிஆரின் புகழுக்குக் வெகு கணிசமான பங்கு உண்டு என்பது புதிய செய்தியல்ல.
 
காங்கிரசின் இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்ட சிவாஜி கணேசன் வெகு சில படங்களைத் தவிர 60களில் அதைப் பற்றிய ஒரு பிரச்சாரத்தை தன் படங்களில் மேற்கொள்ளவில்லை. நவீனமயமாகிக்  கொண்டிருந்த சமூகத்தில், பாரம்பரியக் குடும்ப மதிப்பீடுகளின் வீழ்ச்சியையும் அதில் தனி மனிதர்களுக்கிடையேயான சிக்கல்களையுமே அவரின் படங்கள் பேசின (சற்றே உரத்தும் செயற்கையாகவும் என்று சொல்லலாம்). ஆனாலும் தேசியத் தலைவர்களின், விடுதலை போராட்ட வீரர்களின் பாத்திரங்களையும் அவர் ஏற்று நடித்தார். மாறாக, எம்ஜிஆர், தன் படங்களில் மிக எளிமையாகக் கட்டப்பட்ட நல்லவன்- கெட்டவன், ஏழை- பணக்காரன், முதலாளி- தொழிலாளி இடையேயான கருப்பு- வெள்ளை இருமைகளின் முரண்பாடுகளின் அடிப்படையில், தனி மனித சாகசம் புரியும், முற்போக்குக் கருத்துக்கள் பேசும் பாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென ஒரு பிம்பத்தை வளர்த்துக் கொண்டே வந்தார். இதில் திமுகவால் எம்ஜிஆர் வளர்ந்தாரா எம்ஜிஆரால் திமுக வளர்ந்ததா என்று பிரித்தறிவது மிகக் கடினம்.
       
ஆனால் ஒன்று நிச்சயம். சிவாஜி பற்றிய எதிர்மறை கருத்துகளைக் கட்டமைப்பதில் திமுக எனும் கட்சியின் பங்கு அதிகமாகவே இருந்தது. எம்ஜிஆரின் வள்ளல், சிகரெட், மதுப் பழக்கம் இல்லாதவர் என்ற குணநலன்களின் அடிப்படையில், இவற்றின் எதிர் பிம்பமாக சிவாஜியைப் பற்றி கருமி, மிதமிஞ்சி குடிப்பவர் என்ற கருத்து தமிழகத்தில் பரவுவதில் எம்ஜியாரின் ரசிகர்களான திமுக தொண்டர்களின் பங்கு காத்திரமானது. திமுகவின் எம்ஜிஆர் ஆதரவு, 1971ல் இந்திரா காங்கிரஸ் கூட்டணி இருக்கும்போது எம்ஜிஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகர் (பாரத்) பட்டம் பெறுவது வரை அவருக்கு உதவியது. தமிழக மக்களால் எப்போதுமே தமிழகத்தின் மிகச் சிறந்த நடிகர் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட காங்கிரஸ்காரர் சிவாஜி கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் பெற முடியாமற் போன ஒரு பட்டம் அது. 
 
1972ல் தொடங்கிய கருணாநிதி எம்ஜிஆருக்கு இடையேயான பூசல் எம்ஜிஆரை திமுகவை விட்டு வெளியேற்றியது. காமராஜர் ஆதரிப்பார் என்று எதிர்பார்த்த எம்ஜிஆர், காமராஜரின் பாராமுகத்தினைக் கண்டு, வலது கம்யுனிஸ்டு கட்சியின் எம். கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்களின் உதவியுடன் அதிமுகவைத் தொடங்கியபின் நடந்தது எல்லாம் வரலாறு. இதில் எம்ஜிஆருக்கு உதவியவை முக்கியமான இரண்டு விஷயங்கள். ஒன்று 1975ல் காமராஜரின் எதிர்பாராத மறைவு. அது தமிழக அரசியல் களத்தை முற்றிலும் கருணாநிதி- எம்ஜிஆர் ஆகியோருக்கான ஒன்றாக மாற்றியது. இரண்டு, காமராஜருக்குப் பின் காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு வலுவான தரப்பாக மாறாமல் தேய்ந்து கொண்டே வந்தது. இதற்கு இந்திராகாந்தி, மாநில காங்கிரஸ் தலைவர்களை டம்மிகளாக்கித் தன்னை மட்டுமே ஒற்றை அதிகார மையமாக்கிக் கொண்ட போக்கு முக்கியமான காரணமாகியது. 
 
அந்தக் கட்டத்தில் காங்கிரசின் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை தொண்டர்கள் ஓய்ந்துவிட்ட சமயத்தில், சிவாஜி ரசிகர் மன்றத்தினரே காங்கிரசின் களச் செயல்பாடுகளுக்கு முற்றிலும் பொறுப்பாளர்களாகியிருந்தார்கள். ஆனால் அவர்களின் ஆசைகள் நிறைவேறும் வண்ணம் சிவாஜி கணேசனுக்கு காங்கிரஸ் தலைவர் என்ற பதவி அளிக்கப்படவேயில்லை. காங்கிரஸ் இயக்கத்தில் தலைவர்கள் நியமனம் மூலமே வந்தார்கள். உட்கட்சி ஜனநாயகம் என்பது அறவே ஒழிந்தது. ஒருவேளை தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்திருந்தால் தன் பெருவாரியான ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மூலம் சிவாஜி தலைவர் ஆகியிருக்கக்கூடும். பழனியாண்டி, எம்.பி. சுப்பிரமணியம், மரகதம் சந்திரசேகர், ஆர்.வி சாமிநாதன் போன்ற மக்கள் மத்தியில் துளியும்  பிரபலம் இல்லாத தலைவர்களே தமிழக காங்கிரஸ் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். எம்ஜிஆர் மற்றும் கருனாநிதிக்கு இணையாக இந்தத் தலைவர்களால் என்ன செய்திருக்க முடியும்?
 
இவர்கள் இருவருக்கும் இணையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகியிருந்த சிவாஜி, மேற்சொன்ன இந்தத் தலைவர்களுக்குக் கீழ் பணியாற்ற வேண்டியிருந்தது. இதில் மிக முக்கிய பங்கு மூப்பனாருக்கு உண்டு. மூப்பனார் மற்றும் அவரைப் போன்ற நிலபிரபுத்துவ மனநிலை கொண்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு நடிகர் காங்கிரஸ் தலைவராவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது. சிவாஜி கணேசனுக்குத் தலைவர் பதவி அளிக்காததன் மூலம் காங்கிரஸ் மெல்ல  மெல்ல தொண்டர் பலத்தினை இழந்து செயலற்ற தலைவர்களை மட்டுமே கொண்ட கட்சி ஆகியது.
 
சிவாஜி கணேசனால் ஒரு எம்.எல்./ஏ அல்லது எம்.பியாகக்கூட ஆக முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர் நினைத்திருந்தால், 1977 மற்றும் 1980 பாராளுமன்றத் தேர்தல்களில் வெகு சுலபமாக  பாராளுமன்ற உறுப்பினராகியிருக்க முடியும். 1984ல் சட்டமன்ற உறுப்பினராகியிருக்க முடியும். அத்தகைய வலுவான சாதகமான கூட்டணிகளில் காங்கிரஸ் அந்த சமயங்களில் இருந்தது. முக்கியமாக 1984ல் முதல்முறையாக தன்  ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களுக்கு அவர் சில இடங்களைப் போராடி வாங்கினார். ஆனால் அதில் எவற்றிலும் அவர் நிற்கவில்லை. 
 
இதற்குப் பின் காங்கிரசுக்கும் சிவாஜிக்கும் இன்னுமொரு வாய்ப்பு 1987ல் எம்ஜிஆரின் மரணத்துக்குப் பின் வந்தது. 87ன் இறுதியில் எம்ஜிஆர் மறைந்தபோது அதிமுகவின் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தில் இருந்தது. ஜெயலலிதா அணி ஒரு பக்கமும் எஸ்.டி சோமசுந்தரம், ஆர்.எம். வீரப்பன் ஆகியோரின் அணி ஒரு பக்கமுமாக எம்ஜிஆரின் கண்ணெதிரேயே   பூசலிட்டு வந்தனர். அவர் மறைந்தவுடன், ஜெயலலிதாவை ஓரங்கட்டி, எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அம்மையாரை முதல்வராக்கியது ஆர்.எம்.வீ அணி. அதற்கு அப்போதைய கூட்டணி கட்சியான காங்கிரசும் ஆதரவளித்தது. ஆனால் ஜனவரி 88ல் ஜானகி அரசை அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்திக் கலைத்து துரோகமிழைத்தது காங்கிரஸ். இதில் கடுமையான கருத்து வேறுபாடு கொண்ட சிவாஜி காங்கிரசை விட்டு வெளியேறினார். தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியைத் தொடங்கினார். 1989 சட்டமன்ற தேர்தலில் இரண்டாக பிளவுபட்டிருந்த அதிமுகவின் ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து முதன்முறையாக ஒரு சட்டமன்ற இடத்துக்குப் போட்டியிட்டார். ஆனால் நான்கு முனைப் போட்டியில் திருவையாறு தொகுதியில் அவரே தோற்றுப் போனார். அவரது கட்சியும் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. அந்தக் கூட்டணி மொத்தம் 12 சதவிகித வாக்குகள் பெற்றாலும், இரண்டு இடங்களில்தான் வென்றது. 
 
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட ஜனவரி 88லிருந்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற ஜனவரி 89 வரை ராஜிவ்காந்தி 37 தடவைகள் தமிழகம் வந்து மூப்பனாருக்காக பிரச்சாரம் செய்தார். ஆயினும், மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்திய காங்கிரசும் படுதோல்வி அடைந்தது. இத்தனைக்கும் அப்போது தமிழக ஆளுநராக இருந்த P.C .அலக்சாண்டரின் ஆட்சி காங்கிரஸ்  ஆட்சியாகவே பார்க்க வைக்கப்பட்டது. ஆகவே ஒருவகையில் 89 தேர்தலை காங்கிரஸ் ஆளும் கட்சியாகவே சந்தித்தது எனலாம். அந்தத் தேர்தலின்போது காங்கிரஸ் ஒருவேளை மூப்பனாருக்கு பதிலாக சிவாஜியை முதல்வர் வேட்பாளராக  முன்னிருத்தியிருந்தால்?  வரலாற்றின் ifs and buts தருணங்களில் இதுவும் ஒன்று.
 
ஆனால் இந்தச் சம்பவங்களில் மீண்டும் சிவாஜி கணேசனின் நிலைப்பாட்டினை பார்த்தோமானால் அவரது வெகுளித்தனமான நேர்மை தெரியும். அவர் காங்கிரஸ் ஜானகிக்கு கொடுத்த வாக்குறுதியினை மாற்றுவதை எதிர்த்தார். அந்தக் காரணத்துக்காகவுமே காங்கிரசிலிருந்து வெளியேறினார். மீண்டும் ஜானகி அவர்கள் முதல்வராவதற்கே பிரச்சாரம் செய்தார். தான் முதல்வராக வேண்டும் என்று செய்யவில்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் தனிக் கட்சி ஒன்றைத் துவக்கி தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி களத்தில் இறங்குமளவுக்கு அவரது செல்வாக்கு இருந்ததா?
 
80களின் துவக்கத்திலிருந்தே சிவாஜியின் திரையுலக செல்வாக்கும் மங்கத் தொடங்கியது. புதிய வகையான படங்கள் 70களின் இறுதியிலிருந்து வரத்தொடங்கிவிட்டன. மக்களின் ரசனை மாறத் தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெற்றிப் படங்களைத் தந்தபோதும் அவரது பெரும்பாலான படங்கள் தோல்வி தழுவின. அவரது நடிப்புப் பாணியும் மிகவும் பழையதாகி விட்டிருந்தது. இந்தத் தருணத்தில் ஒரு தனிக் கட்சி தொடங்கி எம்ஜிஆரைப்போல வெற்றி காண்பது அவருக்கு சாத்தியமேயில்லாமல் இருந்தது. ஆனால் அவர் தனிக் கட்சி ஒன்றை தொடங்க அப்போதுதான் காலம் வந்தது. காங்கிரசின் உள்ளூர் நில உடைமைச் சக்திகளும், மாநிலத்தில் மக்களிடையே நல்ல அறிமுகம் பெற்ற, செல்வாக்கு பெற்ற தலைவர்களை வளர விடாத அகில இந்தியத் தலைமையும் அவருக்கு எதிராகவே இருந்தனர்.
 
1989 சட்டமன்ற தேர்தல் தோல்விகளுக்குப் பின் தன கட்சியைக் கலைத்தார் சிவாஜி. வி.பி. சிங்கின் ஜனதா தளக் கட்சிக்கு தலைவர் ஆனார் (இன்று வி.பி. சிங்கைக் கொண்டாடுபவர்களில் எத்தனை பேர் இதை அறிந்திருக்கிறார்கள்?). ஆனால், 89 நவம்பர் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதில் அந்தக் கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மீண்டும் ஒன்றிணைந்த அதிமுகவும காங்கிரசும் கூட்டணி அமைத்து 39ல் 38  இடங்களில் வென்றன. ஒரு இடத்தை மட்டும் (நாகப்பட்டினம்) சிபிஐ வென்றது.
 
அந்த தேர்தல் சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வின் மீது அறையப்பட்ட கடைசி ஆணியாக அமைந்தது. அதற்குப்பின் அவ்வப்போது சில மேடைகளில் தோன்றுவதையும் வெகு சில படங்களையும் தவிர பொது வாழ்விலிருந்தே அவர் ஒதுங்கினார் என்றுதான் சொல்லவேண்டும். சொல்லப்போனால் இதிலிருந்தே அவர் அரசியலுக்குத் தகுதியில்லாதவர் என்றும், வெற்றி ராசி இல்லாதவர் என்றும் அவர் சேருமிடமெல்லாம் தோல்விதான் என்றும் ஒரு அழிக்க முடியாத முத்திரை விழுந்தது. 
 
ஆனால் மேலே விவரிக்கப்பட்ட வரலாற்றைப் பார்ப்போமானால் 1962லிருந்து 1989 வரை 8 தேர்தல்களில் பங்கேற்ற சிவாஜி கணேசன் அவற்றில் நான்கில் வெற்றி முகாமில் இருந்தார். அது ஒன்றும் அவ்வளவு மோசமான சதவிகிதம் அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்.
 
மீண்டும் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் இருக்கும் பாடலைப் பார்ப்போம். காமராஜரின் அசல் தொண்டன் குரல் தான் அது. அதுவே சிவாஜிகனேசனின் அரசியல் நிலைப்பாடு. அந்தக் குரல் எந்தெந்தக் கட்சிகளைக் குற்றவாளிக் கூண்டில் எற்றுகிறதோ, அந்தக் கட்சிகளிரண்டுக்கும் எதிராக, அந்த இரண்டு கட்சிகள் இல்லாத ஆட்சி வேண்டும் என்றுதான் இன்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் குரல் கொடுக்கின்றன. அந்தப் பாடலாசிரியாரும் நடிகரும் யாரை ஏற்றிப் புகழ்ந்து பாடினார்களோ அந்தக் காமராஜரின் ஆட்சிக்காலமே இன்று பொற்காலமாகப் பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு தலைவர் இன்று வரமாட்டாரா என்று ஏங்குகிறது. 
 
இப்போது, மீண்டும் கேட்டுக் கொள்வோம், சிவாஜி கணேசனின் எளிய அரசியல் நிலைப்பாடுகள் ஒன்றும் அவ்வளவு மோசமானவை அல்லவோ?
Series Navigationதாயுமாகியவள்தொடுவானம் 90. அன்பு தரும் துன்பம்
author

Similar Posts

12 Comments

  1. Avatar
    sanjay says:

    தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட ஜனவரி 88லிருந்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற ஜனவரி 89 வரை ராஜிவ்காந்தி 37 தடவைகள் தமிழகம் வந்து மூப்பனாருக்காக பிரச்சாரம் செய்தார். ஆயினும், மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்திய காங்கிரசும் படுதோல்வி அடைந்தது. இத்தனைக்கும் அப்போது தமிழக ஆளுநராக இருந்த P.C .அலக்சாண்டரின் ஆட்சி காங்கிரஸ் ஆட்சியாகவே பார்க்க வைக்கப்பட்டது. ஆகவே ஒருவகையில் 89 தேர்தலை காங்கிரஸ் ஆளும் கட்சியாகவே சந்தித்தது எனலாம். அந்தத் தேர்தலின்போது காங்கிரஸ் ஒருவேளை மூப்பனாருக்கு பதிலாக சிவாஜியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தியிருந்தால்? வரலாற்றின் ifs and buts தருணங்களில் இதுவும் ஒன்று.

    This is a wrong assessment. Sivaji’s popularity as an actor was dimmed by this time. He also lost the elctions in 1989. Also, he happened to be in the winning side in some elections & it was not because of him, his party won the electiopns.

    For instance, though MGR & sivaji were in parties which were electoral allies in 1977, the alliance won primarily bcos of MGR & not sivaji.

    Sivaji never stood up for his fans when they were insulted in the congress sparty. He simply kept quiet. He should have quit politics after he lost the elections & disbanded his party.

    But he chose to become the leader of a party which no one in tamailnadu had heard of _ Janata Dal. He gave naïve interviews that he would strive & bring janata dal to power.

    Sivaji was a failure & unlucky in politics.

    1. Avatar
      Chandrasekaran veerachinnu says:

      In1962 mgr canvassed for Anna who was defeated whereas Shivaji canvassed for Kamarajar who won in the election and the party also won

  2. Avatar
    Kalathiyan says:

    SARIYANA KANIPPU. NIZA VAZVIL ,ARASIYALIL NADIKA THERIYATHAVAR. ARASIYALIL JEYIKAVEDUM ENRAL SOOTHU,VATHU,POAI,PURATTU SEYYA VENDUM.APPADI SEYTHAL THAN JEYIKKA MUDIYUM. Mr.Sivajikku athu theriyathu, nallavaraga vazanthar. athu pothum ,makkalai emartavillai, uzal seyyavillai, thevai illatha arasiyal vilavugalai erpadutha villai. Agave sivaji avargal ore vertiyalar.

  3. Avatar
    Veeyaar says:

    உண்மையான, நேர்மையான, சூதுவாதற்ற, மக்கள் தலைவரின் அரசியலைப் பற்றிய உண்மையான, நேர்மையான, சூதுவாதற்ற கருத்து.. கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் உள்ளத்தில் நிரந்தரமாக இடம் பெற்று விட்டீர்கள். தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். தாங்கள் கூறிய கருத்து அவருடைய திரைப்படங்களுக்கும் பொருந்தும். தன் தொழிலில் இறுதி வரை முழுமையாக ஈடுபட்டு தான் நடித்த அத்தனை படங்களிலும் தன்னுடைய பங்களிப்பில் நிறைவுடன் அளித்தவர். குறை ஏதும் கூற முடியாத நடிப்புக்குச் சொந்தக்காரர். அவருடைய நடிப்பில் குற்றமோ குறையோ சிறிதும் காண முடியாது. உணர்ச்சியற்ற உலகில் உணர்ச்சியற்ற நடிப்பினைப் பார்த்துப் பார்த்து, நல்ல நடிப்பினைக் கூட மிகையாகக் கூறும் பரிதாபமான சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருந்தாலும் மிச்சம் மீதி இருக்கிற மனிதாபமானமும் பாசப் பிணைப்புடன் கலந்த வாழ்வு நெறியும் நடிகர் திலகத்தின் நடிப்பும் அவர் படங்கள் தந்த பாடங்களினால் தான் என்பதே உண்மை.

  4. Avatar
    Ram says:

    hi Sanjay,

    Why are you so much again great NT? I guess you are mentally disturbed…. better consult a good physician.

    The above article is very balanced, except the author assessment is incorrect about NT’s success in 1980s. During 80s, NT has given many mega hits such vellai roja, m. mariyathai, etc. on the political front, the above article is right on.

    Ram

  5. Avatar
    paandiyan says:

    நியமன உருபினர்கல்லுக்கு வாக்குரிமை இல்லை என்ற விபரம் கூட இல்லாமல் ராஜயசபாவில் ஒட்டு போட போன கணேசனின் அரசியல் குறித்த பார்வை மிக பிரபலயம்

  6. Avatar
    SIVAJIDHASAN says:

    1980களில் நடிகர் திலகத்தின் புகழ் மங்கத் தொடங்கியது என்பதை ஒரு காலும் ஒப்புக்கொள்ள முடியாது. காரணம் 1979ல் அவருடைய திரிசூலம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து வசூல் சாதனைகள் செய்த்து. அப்போதே அவர் 50 வயதை தாண்டியிருந்தார். திரிசூலம் படம் அவருடைய 200வது படம். 1979 முதல் 1988 வரை 75 படங்களில் நடித்திருந்தார். அதாவது கவரிமான் முதல் புதியவானம் வரை. இவற்றில் கிட்டத்தட்ட 33 படங்களுக்கு மேல் வெள்ளிவிழாவையும், 100 நட்களையும் கடந்து ஒடியிருக்கிறது. உலகின் எந்த நடிகனாவது தன்னுடைய 50 வயதிலிருந்து 60 வயது வரை இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருந்தால் சொல்லுங்கள் நான் தங்களுடை கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.

  7. Avatar
    paandiyan says:

    /உலகின் எந்த நடிகனாவது தன்னுடைய 50 வயதிலிருந்து 60 வயது வரை இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருந்தால் சொல்லுங்கள் நான் தங்களுடை கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.
    //
    he he he .. Appo MGR!!!!

  8. Avatar
    sanjay says:

    Many of sivaji’s films between thirisoolam & his last movie were flops. There were many movies which were dragged for 100 days in shanthi theatre.

    Ram,

    I am not mentally disturbed. Maybe, as a sivaji fanatic, you are. That is why you are unable to accept the reality.

    Sivaji came to politics only bcos of his jealousy of MGR & not with any intention to serve the people. if that was the case, how many times has he attended the Rajya sabha sessions? How many times has he participated in the debates?

    The fact is that he went to vote without eve knowing his duties tells it all.

  9. Avatar
    சிவாஜி v s கணேசன் says:

    சிவாஜி யை போல ஒரு ஒப்பற்ற தலைவனை காண்பது அரிது

  10. Avatar
    Chandrasekaran veerachinnu says:

    In1962 mgr canvassed for Anna who was defeated whereas Shivaji canvassed for Kamarajar who won in the election and the party also won

  11. Avatar
    smitha says:

    Even if sivaji had not campaigned, Kamaraj would have won.

    Sivaji supported Janaki. She failed miserably in politics. V.P Singh came to chennai as PM & visited sivaji at his residence. He went back to delhi & soon he was unseated by Advani’s rath yatra.

    Sivaji was a great actor, no doubt, but as a politician, he was an utter failure. That was bcos he was never a whole hearted politician. His mind was in films.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *