நவ ரத்தினங்கள் போல் ஒன்பது கட்டுரைகளைக் கொண்ட செறிவான நூல் டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் என்ற நூல்.
பயணமும் இலக்கியமும் ஒன்றோடு ஒன்று பிணைந்த ஒன்று…பயணமே அனுபவமாய் கலைச் சித்திரமாய் இதயத்தில் ஆழமாய் பதிந்து ரத்த நாளங்களில் பிரவாகமெடுத்து அழகான இலக்கியமாய் படைக்கப் படுகிறது.. எழுத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட ‘யாத்ரி’ நாகார்ஜூன் எனப்படும் எழுத்துலகப் போராளியின் இலக்கியப் படைப்புக்கள் பற்றிய கட்டுரை நாகார்ஜூன் என்ற ஆளுமையைப் பற்றி முழுமையான நேர்த்தியான சித்திரமாய் இருக்கிறது…அந்தக் கட்டுரைக்குள் நாகார்ஜூன் உயிரோடு நம்முடன் யாத்திரை செய்கிறார். பாலசுப்ரமணியம் அவர்கள் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கும் மூன்று கவிதைகளுமே யாத்ரீ நாகார்ஜூனனை முழுமையாய் நம்மிடம் வெளிப்படுத்துகின்றன…
காளிதாசன் பற்றிய கவிதையில் மகாகவி காளிதாசரிடம், நாகார்ஜூனா கேட்கிறார்.
அன்று தசரதன் தந்தை அஜன்
மனைவி இந்துமதியை இழந்த போது
காளிதாசரே!
அழுதது நீரா
அல்லது அஜனா…
இதிகாசப் பாத்திரங்களின் ஆளுமை பற்றிய விரிவான ஒரு பார்வை மிக நுணுக்கமாக சொல்லப் படுகிறது நாகார்ஜூனாவின் கவிதையில். இந்தக் கட்டுரையில் நாகார்ஜூனாவின் பயணத்தோடான இலக்கியப் பயணத்தின் மூலமாக மலயாளத்தின் முக்கிய எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீரையும் நினைவுப் படுத்துகிறார்.
இந்தக் கட்டுரையில் யாத்ரியின் பண்பாட்டு பிடிப்பையும், பரந்த கலை அறிவியல் சார்ந்த ஆழ்ந்த ஞானத்தையும், மண்ணையும் மக்களையும் நேசிக்கிற அவரது கலாபூர்வமான மனதையும், அழகாக வெளிப் படுத்தி இருக்கிறார் பால சுப்ரமணியம்.
கலை பண்பாட்டுக் கூறுகளில் வலுவான பாரம்பரிய மிக்க இந்தியாவில் கலை பண்பாடுகள் குறித்த புரிதலின்றி இனவழி மொழிகளை பிரித்த கால்டுவெல்லின் கருத்தினை பாலசுப்ரமணியம் அவர்கள் உரிய உதாரணங்களோடு சுட்டிக் காட்டுகிறார். கடந்த 150 ஆண்டுகளில் கால்டுவெல்லின் கூற்றை எந்த வரலாற்றறிஞரும் ஆழமாய் ஆய்ந்து நோக்கவில்லை என்கிறார். இந்தியையும் தமிழையும் வேறுபடுத்திக் காட்டும் கால்டுவெல் குறிப்பிடுகிற பதின்மூன்று திராவிட சிறப்பியல்புகளில் பத்தில் தமிழ் மொழியானது இந்தி மொழி அமைப்போடு ஒத்துப் போவதை உரிய உதாரணங்களோடு 1968ல் சுட்டிக் காட்டியுள்ளார் இந்தி தமிழறிஞர் பண்டித காசிராம் சர்மா. ஆரிய மொழி எனப்படுகிற இந்தி திராவிட மொழி எனப் படுகிற தமிழ் மொழிக் கூறுகளோடு எப்படி ஒத்துப் போகிறதென அழகாக இந்நூலில் உரிய உதாரணங்களோடு மேற்கோளிட்டு குறிப்பிடுகிறார் பாலசுபரமணியம்.
திராவிடக் கூறுகள் குறித்து கால்டுவெல்லின் ஆய்வும் கணிப்பும் சரியானதென்றும் ஆனால் திராவிடக் கூறுகளென்று கால்டுவெல் குறிப்பிடுபவற்றை பிராகிருதக் கூறுகளாகவே சொல்வதே மிகச் சரியானதாக அறுதியிட்டுக் கூறுகிறார் பாலசுபரமணியம். காரணம் கால்டுவெல் கூறுகிற விதிகளெல்லாம் ஆரிய திராவிட பேதமின்றி இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்துபவையானதால் அவற்றை பிராகிருத இயல்புகளாகவே கருத வேண்டும் என்கிறார்.
இந்தியிலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து இந்தியிலும் மொழிபெயர்ப்பில் மிகத் தேர்ந்த எழுத்தாளர் என்ற அளவிலும் மொழிப் பிடிப்பு, மொழி ஆய்வுத் திறன் ஆகியவற்றின் செறிவு ஆகியவை பால சுப்ரமணியத்தின் இந்தக் கட்டுரையில் வெளிப்படுகிறது. காசிராம் சர்மா என்கிற சிறந்த சமஸ்கிருத அறிஞர் கருத்தின் படி ஆதி மொழியானது பிராகிருதமே..அதிலிருந்து தான் சமஸ்கிருதமும், அதிலிருந்துதான் பிற இந்திய மொழிகளும் தோன்றின என்பதாகும். அக்கருத்தையே திறம்பட வலியுறுத்துகிறார் பால சுப்ரமணியம்.
கால்டுவெல் தனது ஆய்வின் மூலம் வடக்கையும் தெற்கையும் பிரிப்பதில் வெற்றி அடைந்தார்.ஆனால் இயற்கையில் இயல்பாக வந்த மக்களின் மொழியே பிராகிருதம்..பிராகிருதத்திலிருந்து பல பிராகிருதங்கள் தோன்றின. அழகிய வடிவில் வடிவமைக்கப் பட்டது சமஸ்கிருதம்.. பிராகிருதத்திலிருந்து இந்திய மொழிகள் அனைத்தும் தோன்றின என்கிறார் பால சுப்ரமணியம்.
இன்னும் வைதீக சமஸ்கிருதம், ஹிப்ரு, கிரேக்கம், இலத்தீன், அராபியம் போன்ற பண்டைய மொழிகளுக்கும் மூத்த மொழி என்ற பெருமை தமிழுக்கு மட்டுமே உண்டு என்கிறார். அதற்கு உலகத்திலுள்ள பண்டைய நகரங்களின் குடியிருப்பு, வணிகம், மொழி, சமூக வாழ்க்கை போன்ற பல்வேறு சான்றுகளை மேற்கோளிட்டு காட்டுகிறார். ரிக் வேதத்திலுள்ள தமிழ் சொற்களையும் குறிப்பிட்டு சொல்கிறார். எந்த மொழியின் தாக்கமுமின்றி தனித்தியங்கும் தன் வலிமை கொண்டது தமிழென்று கூறுகிறார். தனித் தமிழ் சொற்களே வட இந்திய மொழிகளில் விரவிக் கிடப்பதை அழகாக குறிப்பிடுகிறார் இந்தக் கட்டுரையில்.
இமயம் முதல் குமரி வரை உள்ள இந்திய மக்களின் சமூக வாழ்க்கையிலுள்ள பிராகிருதக் கூறுகளை நன்கு ஆய்ந்து இன்னும் தொகுத்தால் இந்திய மொழிகளின் மூலமானது பிராகிருதம் என்பது புலப்படும். அதனால் மொழிப்பூசல்கள் மறையும்.. மொழிவழி இந்தியா ஒன்றாகுமென்பது நூலாசிரியரின் உறுதியான நம்பிக்கை.
இலக்கிய இஸங்கள் கட்டுரையில் உலக இலக்கிய யுகங்களை பல்வேறு பரிமாணங்களில் காண்கிறோம். உலகில் முந்தி நிற்கும் இலக்கியங்களாக தமிழின் சங்க இலக்கியங்கள் தோன்றியும் வரலாற்றில் சரியாக பதிவு செய்யப் படாமையால் கி.மு. 800 ல் ஹோமர் இயற்றிய இலியாதையே ஆதி காவியமாய் போற்றப் படலாயிற்று என்பது கட்டுரை தரும் செய்தி.
மைதிலி மொழியின் அருட் கொடையாக அலங்கரிக்கும் வித்யாபதி நீண்ட ஆயுளுடன் இரு வம்சங்களைச் சேர்ந்த ஒன்பது அரசர்களின் அரசவைக் கவிஞராக வரலாறு படைத்தவர். மொழியால் மிதிலையை அலங்கரித்தவர் வித்யாபதி. அவர் மக்களின் மொழியில் மானுடத்தை அலங்கரித்தவர் என்பதை இக்கட்டுரையின் மூலமாக அறிய இயல்கிறது.
உலகம் முழுவதும் பரவி இருக்கும் நம் தமிழ் கலாச்சார கூறுகள் நம் தொன்மைக்கு சான்றாக இருப்பவை. சீதாபிராட்டியுடன் அனுமன் பேசிய மொழி என்ற தலைப்பிலான கட்டுரையில் தமிழின் தொன்மை இன்னும் விரிவாக சான்றுகளுடன் விளக்கப் படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் காணப்படும் தமிழ்க் கூறுகளை ஆராயும் போது, வால்மீகி தமிழ்ச் சங்கப் புலவர்களுள் ஒருவராக இருந்திருப்பார் என்று தமிழ்ப் பேரறிஞர் மு.இராகவையங்கார் ஊகிப்பதாக இந்தக் கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். வால்மீகியின் தமிழக மக்களோடான தொடர்பு குறித்து நிறைந்த அகச்சான்றுகளும் இந்தக் கட்டுரையில் கூறப் பட்டுள்ளன. இன்னும் கட்டுரையின் மொத்தக் கருத்தாக அனுமன் சீதா பிராட்டியிடம் பேசிய மொழி தமிழ் மொழியே என அறுதியிட்டு உரிய உதாரணங்களுடன் கூறுகிறார் பால சுப்ரமணியம்.
ஆங்கிலம் பிரெஞ்சு மொழியோடு போராடி பிழைத்த கதைதான் இங்கிலாந்தில் தாய் மொழிக்கான போராட்டமென்ற கட்டுரை. தேவை நிமித்தமாக பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்ட தன்மையே ஆங்கிலத்தை உலக மொழியாக்கியது என்கிறார் ஆசிரியர். நம் குழந்தைகளுக்கு நம் தாய்மொழியில் கற்க நாமே தடையாக இருக்கிறோம் என்கிறார் ஆசிரியர். ஆங்கிலம் பயிலும் நாம் தாய் மொழிப் பற்றினையும் அவர்களிடமிருந்து ஏன் நாம் கற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார் .
மைதிலி மொழியும் இலக்கியமும் என்ற கட்டுரையில் மைதிலி மொழியின் இதிகாசத்தை ஒட்டிய பாரம்பரியமும், சக மொழிகளோடு போராடி தன்னை நிலை நிறுத்திய தன்மையும் விளக்கப் படுகிறது. இந்திய இலக்கியப் பாரம்பரியத்திற்கு மைதிலி மொழியின் பங்கும் குறிப்பிடத் தக்கதென்பது இக்கட்டுரை மூலமாக தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இருபத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே கௌடில்யரின் அரசு நிர்வாகமும் நிதி நிர்வாகமும் எவ்வளவு சிறப்பாக இருந்த தென்பதை வரி விதிப்பும் அர்த்த சாஸ்திரமும் என்ற கட்டுரையில் காணலாம்.. இன்னும் சாணக்கியர் தமிழர் என்ற செய்திக்கான சான்றுகளும் கூடவே உண்டு.
கதை எழுத எழுத த்தான் கதை எழுத வருமென்ற தம்பி சீனிவாசனின் வாசகத்தோடுதான் பாலசுப்ரமணியத்தின் மொழியாக்கம் என்னும் பறவை கட்டுரை முடிகிறது…. மொழியாக்கம் என்ற உயிர்க் காற்றானது உலகத்தின் மூச்சாக எவ்வாறு மனித சமூகத்திடையே ஊடுருவிச் செல்கிறது என்பதை இந்த கட்டுரையில் வளமாக சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். மண்வாசத்துடனான நாட்டுப் புற இலக்கியத்தை மொழியாக்கம் செய்வதென்பது மிகவும் சவாலுக்குரிய பணியாகும்… அதிலும் பணீஸ்வர் நாத்தின் கதையை தமிழிலும், கிராவின் கதையினை இந்தியிலும் மொழி பெயர்த்த பெருமைக்குரிய ஒரே எழுத்தாளர் மொழி பெயர்ப்பாளர் பால சுப்ரமணியம் அவர்கள்தான் இருக்க முடியும்.. இரண்டுமே சவால்கள் நிறைந்தது.. இந்தி வாசகர்களையும் தமிழ் வாசகர்களையும் உணர்வுகளால் ஒருமைப் படுத்தும் திறனே அவரது சிறந்த மொழி பெயர்ப்பு திறனுக்கான சான்றாகும்..மூல எழுத்தை விட மொழி பெயர்ப்பு என்பது எவ்வளவு கடினமானதென்பது இந்தக் கட்டுரையை படிப்பதன் மூலம் புரிந்து கொள்ள இயலும். அதற்கு ஒரு மிகப் பெரிய உதாரணம் தோப்பில் முகமது மீரானின் இஸ்லாமிய வழக்கு சொற்களுடனான படைப்பு. அதை தமிழ் வாசகன் புரிந்து கொள்வதற்கே உன்னிப்பான வாசிப்பனுபவம் வேண்டும்.. அதை இந்தியில் வெற்றிகரமாக மொழி பெயர்ப்பதென்பது எத்தகைய சவாலுக்குரியது.
பால சுப்ரமணியம் அவர்களின் விரல்களில் மொழியானது உணர்வுகளாக உயிரோட்டத்துடன் துள்ளி குதிக்கிறது… அதுவே அவரது மொழி பெயர்ப்புகளின் மூலத் தன்மையையும் முந்தி நிற்கிற கூறுகளாக சொல்லலாம். அதே நேரத்தில் அவைகள் உண்மையில் மூல ஆசிரியரின் ஆன்ம உணர்வின் அசல் சித்திரங்களாகவே இன்னொரு மொழியிலும் பரிணமித்து நிற்கின்றன.
இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் என்ற இந்நூலின் விலை – 65 ரூபாய்
நூல் கிடைக்குமிடம் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
- டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் – நூல் விமர்சனம்.
- அணு ஆயுதக் குறைப்புக்கு முற்பட்ட அமெரிக்க விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தே
- திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
- நிர்வகிக்கப்பட்ட கர்வம்
- (20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு
- பொன்னியின் செல்வன் படக்கதை – 9
- தாயுமாகியவள்
- சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.
- தொடுவானம் 90. அன்பு தரும் துன்பம்
- நானும் என் ஈழத்து முருங்கையும்
- புலி ஆடு புல்லுக்கட்டு
- பேசாமொழி – அக்டோபர் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது..
- ஓவியம் தரித்த உயிர்
- அவன், அவள். அது…! -6
- திருமால் பெருமை
- மருத்துவக் கட்டுரை சொறி சிரங்கு ( Scabies )
- இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை நவம்பர் 7 (சனி) நவம்பர் 8 (ஞாயிறு)
- குற்றம் கடிதல் – திரைவிமர்சனம்