திருமால் பெருமை

This entry is part 15 of 18 in the series 18 அக்டோபர் 2015

 

 

திருமாலின் பெருமையை யாராலும் அளவிட்டுக் கூற இயலாது. அந்தப் பெருமை இப்படித்தான் என்று அறுதியிட்டும் சொல்ல முடியாது. மேலும் அவருக்கு உவமை கூற உலகில் எதுவுமே இல்லை. அதனால் நம்மாழ்வார் அவரை “உயர்வற உயர்நலம் உடையவன்” என்று அருளிச்செய்கிறார். அதாவது அவருடைய உயர்வின் முன்னால் மற்ற உயர்வுகள் எல்லாம் அற்றுப்போகும் அளவுக்கு அளவிட முடியாத பெருமை கொண்டவர் அவர். உவமையே காட்ட இயலாப் பெருமை கொண்டவர் அவர்.

இந்த உலகின் உள்ள எல்லா ஆத்மாக்களையும் உய்விக்க அவர் ஐந்து நிலைகளில் இருந்து அருள் செய்கிறார். முதலாவது ’பரம்’. அதாவது பரத்துவம் என்பார்கள். ஸ்ரீ வைகுந்தத்தில் நித்ய சூரிகளும் முக்தர்களும் நாச்சிமார்களும் சூழ வீற்றிருந்து உலகிற்கு அருள் பாலிக்கும் திருக்கோலம் இதுவாகும். இரண்டாவது வ்யூகம். அனந்தாழ்வானான ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட திருக்கோலத்தில் சயனித்திருக்கும் திருக்கோலம் இது. மூன்றாவதை விபவம் என்பார்கள். அதாவது இவ்வுலகில் எம்பெருமான் அவதரித்த அவதாரங்களை இது குறிக்கும். அடுத்து அர்ச்சை. ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த திவ்யதேசங்களிலும், மற்ற அபிமான ஸ்தலங்களிலும் திருக்கோயில்களிலும் எம்பெருமான் பக்தர்களுக்குக் காட்சிதந்து அருளும் விதத்தைக்குறிப்பது இதுவாகும். அடுத்து அந்தர்யாமித்வம். இவ்வுலகின் உள்ள ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் இருந்துகொண்டு அருள் பாலிப்பதைக் காட்டும் இது. இப்படியாக ஐந்து நிலைகளிலிருந்து கொண்டு பரமாத் மாக்களின் துயர்களைத் தவிர்க்கும் பெருமை கொண்டவர் திருமால். அதனால்தான் எம்பெருமானின் திருவடிகளின் பெருமையை நம்மாழ்வார் ‘துயரறு சுடரடி’ என்பார்.

எம்பெருமானின் அளவிட முடியாத பெருமைகளில் ஒன்று அவர் துயிலில் ஆழ்ந்திருக்கும்பொழுதும் பரமபக்தர்களையும் மற்றும் எல்லா ஜீவராசிகளையும் காத்து வருவதுதான். அவருக்குப் பெருமையே அவரின் துயில்கூட உவமை சொல்ல இயலா அளவிற்கு இருப்பதுதான். பெருமாளின் துயிலை அரிதுயில் என்பார்கள். அதாவது இது யாராலும் துயில முடியாத நித்திரையாகும். அரிதானது; நமக்கெல்லாம் உறங்கும்போது எல்லா அவயங்களும் ஓய்வெடுக்கும். ஆனால் உலகையே காக்க வேண்டியவரான ஜகத்ரக்ஷகனான அவர் மனம் எப்பொழுதும் உலகம் யாவையும் அதிலுள்ள ஆத்மாக்களையும் காக்கவேண்டியதையே எண்ணிக்கொண்டிருக்கும். எனவேதான் அதனை அரிதுயில் என்பார். மேலும் அரி என்றால் அது திருமாலைக் குறிக்கும் எனவே அரியின் துயில் அரிதுயிலாகும்.

இதனை அறிதுயில் என்றும் கூறலாம். எல்லாவற்றையும் அறிந்தவரன்றோ எம்பெருமான். துயிலும்போதும் அனைத்து ஆத்மாக்களையும் அவற்றின் சுபாவத்தையும் அவற்றுக்கு அருள் செய்ய வேண்டிய காலத்தையும் அறிந்து வைத்திருப்பவாயிற்றே? அதனால் அவரின் துயிலை அறிதுயில் என்றும் கொள்ளலாம்.

இவ்வுலகில் தர்மத்தை நிலைநாட்டவும் பாவங்களைப் போக்கவும் தம் பரமபக்தர்கள் மட்டுமன்றி தம்மை நம்பிக்கொண்டிருக்கும் ஆத்மாக்களை உஜ்ஜீவனம் செய்யவும் திருமால் அவ்வப்போது பல அவதாரங்கள் எடுத்த பெருமை கொண்டவர். தம் பக்தர்களின் குறைகளைத் தாமே சென்று தீர்க்க வேண்டும் என்று அருள் செய்த அவதாரங்கள் அவை. அவற்றில் குறிப்பாக பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்பார்கள்.

பிரம்ம தேவன் வேதங்களை அடிப்படையாக வைத்தே தம் படைக்கும் தொழிலைச் செய்து வருகிறார். அப்பொழுது சோமுகாசூரன் என்பவன் வந்து வேதங்களைத் திருடிக்கொண்டு போய் கடலினுள்ளே ஒளித்து வைத்தான். பிரமன் படைக்கும் தொழிலே நின்றுபோக பிரம்மா திருமாலிடம் முறையிட, உலகைக் காக்க வேண்டிய பெருமாள் ஒரு பெரிய மீனாக அவதாரம் எடுத்தார். அம்மச்ச உருவில் கடலினுள் மூழ்கிப்போய் அந்த அசுரனைக் கொண்று வேதங்களை மீட்டு வந்தார். மீண்டும் படைக்கும் தொழில் நடைபெற்றது. இப்படி உலகைக்காக்கும் பெருமை கொண்டவர் திருமால் ஆவார். பிரளய காலத்தில் ஹயக்ரீவன் என்பான் இதேபோல வேதங்களைத் திருடிக் கொண்டுபோய் கடலினிள்ளே ஒளித்து வைக்க திருமால் மச்சாவதாரம் எடுத்து போய் மீட்டு வந்தார் என்றும் சொல்வார்கள்.

துர்வாசர் சாபம் மூலம் இந்திரன் தன் அனைத்து ஐஸ்வர்யங்களையும் இழந்தான். அவற்றை மீண்டும் பெற திருப்பாற்கடலைக் கடைய வேண்டி இருந்தது. அதன் படி மந்திரமலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போழுது மலையின் பாரம் தாங்காமல் அது கடலினுள் அழுந்த ஆரம்பித்தது. உடனே தேவர்கள் பெருமாளை வேண்ட அவரும் கூர்மாவதராம் எடுத்து ஓர் ஆமையாகி அம்மந்திர மலையைத் தாங்கினார். இப்படி தேவர்களுக்காக ஆமை உருவில் வந்த பெருமை கொண்டவர் திருமால் ஆவார். இதுவே கூர்மாவதாரம் ஆகும்

பூலோகத்தையே ஹிரண்யாக்ஷன் எனும் அரக்கன் ஒருவன் கடலுக்கடியில் மூழ்கடித்து மறைத்து வைத்து விட்டான். பிரம்மாவும் தேவர்களும் திருமாலை வேண்ட அவருடனே பன்றியெனும் வராஹத்தின் உருவில் வந்தார். கீழ்நோக்கித் தோண்டிக் கொண்டே போய் மண்ணுலகின் அடியில் மறைந்திருந்த அந்த அசுரனை வதம் செய்து பூவுலகைத் தம் கோரைப் பற்களுக்கிடையில் தூக்கிக் கொணர்ந்தார். மிகவும் மேன்மையான திருமால் பூவுலகைக் காக்கும் பொருட்டு மானமிலாப் பன்றியாய் கூட வந்தாரென்றல் அவர் பெருமையை என்னென்பது?

தன் சகோதரனான் ஹிரண்யாக்ஷனைக் கொன்றதால் இரணியகசிபு திருமால் மேல் தீராப் பகை கொண்டு அவரை வெறுத்தான். அத்துடன் தனக்கு மனிதராலோ, அல்லது விலங்காலோ மரணம் நேரக் கூடாது என்றும் பகலிலோ அல்லது இரவிலோ, மாளிகையின் உள்ளேயோ அல்லது வெளியிலோ, மரணம் நேரக் கூடாது என்றும் எந்த ஆயுதத்தாலும், மண்ணிலோ அல்லது விண்ணிலோ மரணம் நேரக் கூடாது என்றும் வரங்கள் பெற்று பல பாகவதர்களுக்கும் பல துன்பங்கள் செய்து அதர்மத்தை வளர்த்து வந்தான். அவனை அழித்து அறத்தை நிலைநாட்ட எண்ணம் கொண்ட பெருமாள் அவனின் வரங்களெல்லாம் பயனற்றுப் போகும்படி அவதாரம் எடுத்து அவனை வதம் செய்தது பெரும் பெருமையாகும். ஆமாம்; அவன் கேட்டபடிக்கே மனிதராகவும் இல்லாமல் விலங்காகவும் இல்லாமல் தலை சிம்மமாகவும் உடல் மனிதராகவும் காலையும் இல்லாமல் மாலையும் இல்லாமல் அந்திப் பொழுதான சாயங்காலத்தில், வீட்டிற்கு உள்ளேயும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் வாசற்படியில் அத்துடன் எந்த ஆயுதமும் இல்லாமல் தம் நகங்களாலும் மண்ணிலும் அல்லாமல் விண்ணிலும் அல்லாமல் தம் மடியிலேயே வைத்து அவனை வதம் செய்தார்.

திருமாலின் பெருமை கூறும் ஐந்தாவது அவதாரம் வாமன அவதாரமாகும். பிரகலாதனின் பேரனான மகாபலி என்பவன் எண்ணற்ற யாகங்கள் செய்து அசுர குரு சுக்ராச்சாரியார் வழிகாட்ட பல ஆயுதங்களும் வலிமையும் பெற்றான். இந்திரனை இந்திர லோகத்தை விட்டே விரட்டினான். இந்திரப் பதவி நிலை பெற அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கினான். செருக்கு அவனுக்கு அதிகமாயிற்று. தேவர்களும் இந்திரனும் திருமாலை வேண்ட அவர் சிறிய வாமனனாகப் பிறந்து மகாபலியின் யாகசாலை சென்று மூன்றடி மண் கேட்டார். அவனும் தருவதாக வாக்களிக்க திருமால் தம் விஸ்வரூபம் எடுத்து, ஓரடியால் மண்ணுலகையும், இரண்டாவது அடியால் விண்ணுலகையும் அளந்தார். பின் மகாபலியிடம் “மூன்றாம் அடி எங்கு வைப்பது?” என்று அவர் கேட்க அவன் தன் செருக்கழிந்து தன் தலையைக் காட்டினான். திருமால் அவன் தலை மீது காலை வைத்து அப்படியே அவனைப் பாதாள லோகத்துக்கு அழுத்தி அங்கேயே ஆட்சி செய்து வரும்படி அருளினார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் எந்த ஒரு வதமும் இல்லாத அவதாரம் வாமன அவதாரமாகும்.

ஏனென்றால் தமது பரமபக்தனான பிரகாதலனுக்கு ”உன் பரம்பரையில் வரும் எல்லார்க்கும் நான் அருள் புரிவேன்” என்ற் எம்பெருமான் வரம் அளித்திருந்தார். அதனால் பிரகாலதனின் பேரனான மகாபலியை வதம் செய்யவில்லை. அதுவிமில்லாமல் பாதாள லோகம் செல்லும் முன்னர் மகாபலி தான் ஆண்டுக்கொருமுறை திருவோண நன்னாளில் இப்பூவுலகிற்கு வந்து என் மக்களைக் காண வேண்டும் என்று வரம் கேட்டான். அவ்வாறே திருமால் அருளிச் செய்தார். அந்நாள்தான் இப்போது ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் “நீ பாதாள லோகத்தை ஆட்சி செய்து வருவாய். அடுத்த மன்வந்த்ரத்தில் உனக்கு இந்திரப்பதவி கிடைக்கும் என்றும் திருமால் மகாபலியிடம் திருவாய் மலர்ந்தருளினார். தன் செருக்கழிந்து திருமாலின் திருவடியைத் தன் தலையின் மேல் ஏற்று பக்தனான மகபலியின் குற்றங்களை மன்னித்து அவனுக்கு இந்திரப்பதவியும் தந்ததே மகாவிஷ்ணுவின் மாபெரும் பெருமையாகும்.

திருமாலின் ஆறாவது அவதாரமாகப் பரசுராம அவதாரம் கூறப்படுகிறது. ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாதேவி அம்மைக்கும் மகனாகப் பிறந்தவர்தான் பரசுராமர். இவர் தம் தந்தையினைக்கொன்ற கார்த்தவீரியார்ச்சுனனை வதம் செய்ததோடு இருப்பத்தொரு தலைமுறைக்கு க்ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்து நிறைவேற்றி வந்தார். ஒருமுறை உன் தாய் தலையைக் கொய்து வா என்று தந்தை கூற அதன்படியே செய்தார் பரசுராமர். ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று காட்ட தன் தாயின் தலையையே வெட்டிவிட்டு வந்தார் அவர். பிறகு ”தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை” என்பதைக் காட்ட பரசுராமர் மாண்ட என் தாயை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று தம் தந்தையிடமே கேட்டு தன் தாயைப் பெற்றார். இந்த அவதாரம் ஒரு மகனின் கடமையைப் பற்றிப் பேசும் அவதாரமாகும்.

இராமவதாரத்தின் பெருமையை எல்லாருமே அறிவார்கள். ஒரு மனிதன் உலகில் தன் கடமைகளை உறவினரிடத்தில் நண்பரிடத்தில் எவ்வாறு செய்யவேண்டும் என்பதைக் காட்ட வந்த அவதாரம் அது. பிதுர்வாக்ய பரிபாலனம் என்றால் என்ன என்பதைச் சொல்லும் அவதாரம் அது. நாளை உனக்கு முடி சூட்டு விழா என்றலும் மகிழாமல், இல்லை காட்டுக்கு ஏகு என்று சொன்னாலும் வருந்தாமல் அன்றலர்ந்த செந்தாமரைபோல் முகம் ஒரே நிலையில் இருந்த அவதாரம் அது. ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என்ற வழி வாழ்ந்து காட்டிய அவதாரம் காட்டிய அவதாரம் அதுவாகும். வேடனை, வானரத்தை, அரக்க குலத்தவனை என்று எல்லாரையும் பேதமின்றி சகோதரனாக ஏற்ற அவதாரம் அது. திருமால் தம் மேன்மைகளை எல்லாம் ஒளித்துக் கொண்டு தனி மனிதனாக அவதரித்து வாழ்ந்து காட்டியதே அவரின் பெருமையைக் காட்டுகிறது.

திருமாலின் எட்டாவது அவதாரம் பலராம அவதாரமாகும். இராமாவதாரத்தில் தனக்குத் தம்பியாகப் பிறந்துப் பணிவிடை செய்ததற்குப் பிரதிபலனாக கிருஷ்ணாவதாரத்தில் பெருமாளின் அம்சமான ஆதிசேஷனைத் தமக்கு அண்ணனாக அவதரிக்கச் செய்தார். வெண்மை நிறத்தில் தோன்றிய அவதாரம் இது.

ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணாவதாரத்தைப் பூர்ணாவதாரம் என்பர். காரணம் இதில் பிள்ளை விளையாட்டுகள் அதிகம். தவிர தோன்றியது முதல் மறைவது வரைகாட்டிய அவதாரம் இது. பாகவதர்களைக் காக்கவும், துஷ்டர்களைத் தண்டிக்கவும். தர்மத்தை ரக்ஷிக்கவும் தோன்றிய அவதாரம் இதுவாகும். மேலும் பல இடங்களில் தான் திருமாலே என்று காட்டிய அவதாரம் இது. ஆயினும் தன் மேன்மையை மறைத்துக் கொண்டு தம் பக்தர்களுக்காக தூது நடந்துசென்றதும், தேரோட்டியதும் திருமாலின் பெருமையைக்குறிக்கும்.

திருமாலின் பத்தாவது மற்றும் இறுதியான அவதாரம் கல்கி அவதாரமாகும். கல்கி என்பதற்கு காலம் அல்லது முடிவிலி ஆகும். இது இன்னும் தோன்றாத அவதாரமாகும். உலகில் எப்பொழுது அதர்மமும், தீய சக்திகளும் அதிகமாகி கடுந்தீமகள் விளைவிக்கின்றனவோ அப்பொழுது கல்கியாகத் திருமால் அவதரிப்பார்.

இவ்வாறு பல அவதாரங்கள் எடுத்து இம்மண்னுலகின் மக்களுக்கு நல்வழி காட்டியும் மக்கள் திருமாலின் உபதேசங்களைக் கடைபிடிக்கவில்லை. எனவே மக்களோடு மக்களாகப் பிறந்து அவர்களுடன் வாழ்ந்து வழிகாட்டி உபதேசம் செய்ய வேண்டும் என திருமால் நினைத்தார். எனவேதான் ஆழ்வார்களைத் தோற்றுவித்தார். அந்த ஆழ்வார்கள் திருமாலைப் போற்றிப் பாடினர். எம்பெருமான் குடிகொண்ட திருக்கோயில்களுக்கெல்லாம் சென்று அத்திருக்கோயில்களில் எழுந்தருளி உள்ள பெருமாள்கள மங்களாசாசனம் செய்து பாடினர். பல்லாண்டும் திருப்பள்ளியெழுச்சியும் பாடினர். பெண்பாலாக மாறி பரகால நாயகியாக நம்மாழ்வாரும் பராங்குச நாயகியாக திருமங்கையாழ்வாரும் திருமாலை அடைய பிரேம பாவத்தில் போற்றினர். அந்தாதி, தூது போன்ற சிற்றிலக்கியங்களை எல்லாம் தொட்டுப்பாடினர். திருமாலின் பெருமையே பக்தர்களுக்கு நல்வாழ்வு அளிக்க தன் உடைமைகளையே ஆழ்வாராக அவதரிக்கச் செய்ததுதான். எப்படியும் தன் பாகவதர்களைக் கரையேற்ற வேண்டும் என்ற தன் எண்ணம் ஈடேற முனைவதுதான் அவரின் பெருமையாகும்.

அதன்படி பெரிய திருவடியான கருடாழ்வாரின் அம்சமாக பெரியாழ்வார் அவதரித்தார். அவ்வாறே திருமாலின் திருமார்பில் இருக்கும் கௌஸ்துபமணியின் அம்சமாக குலசேகராழ்வாரும், திருமாலின் திருக்கரத்தில் குடியிருக்கும் திரு ஆழயின் அம்சமாக திருமழிசை ஆழ்வாரும் அவதரித்தனர். நாந்தம் என்னும் திருமாலின் வாளின் அம்சமாக பேயாழ்வாரும், கௌமோதகி எனும் கதாயுதத் தின் அம்சமாக பூதத்தாழ்வாரும், பாஞ்சசன்யம் எனும் திருச்சங்கின் அம்சமாக பொய்கையாழ்வாரும், திருமாலின் வனமாலையின் அம்சமாகத் தொண்டரடிப் பொடியாழ்வாரும், திருமாலின் சார்ங்கம் எனும் வில்லின் அம்சமாக திருமங்கையாழ்வாரும், திருமார்பில் இருக்கும் திருமறுவின் அம்சமாக திருப்பாணாழ்வாரும் அவதரித்தனர். சேனை முதலியாரின் அம்சமாக நம்மாழ்வார் தோன்றினார்.

எல்லாவற்றையும் துறந்து பெருமாளின் திருவடிகளே சரண் என்று அடைந்தால் அவர் நம்மைக் காப்பாற்றும் பெருமை கொண்டவர். தன் மனைவியான சீதாபிராட்டியையே கவர்ந்த இராவணனுக்கு மன்னிப்பளித்து இன்றுபோய் நாளை வா என்று அருளிய வள்ளல்லவா அவர். மேலும் தெரியாமல் நாம் செய்யும் அபராத்தையும் மன்னித்து குற்றத்தையையும் குணமாக ஏற்கும் பெருமை கொண்டவர் அவர்.

இரு எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். யாரோ வயதான ஒருவர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலைக்கு வேங்கடவனைத் தரிசிக்க வந்திருந்தார். அவர் புஷ்கரணியில் நீராடினார். பின் குளக்கரையில் நின்றுகொண்டு, “கோஹிந்தா, கோஹிந்தா எக்குறையும் இல்லாமல் என்னையும் என்குடும்பத்தையும் காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார். இதை ஒரு ஸ்ரீவைஷ்ணவர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் சொன்னவரின் அருகில் சென்று, “ஸ்வாமி, இப்படி உச்சரிக்கக்கூடாது. இது தவறு. கோவிந்தா கோவிந்தா என்று கும்பிட வேண்டும்” என்றார்.

அதைக் கேட்ட அந்தக் கிராமத்தார் தன் வழக்கப்படியே மீண்டும், ”கோஹிந்தா! கோஹிந்தா! ஆண்டுதோறும் இப்படியே உன்னைக்கும்பிட்டு வருகிறேன். பதினாறு ஆண்டுகளாய் நல்ல நிலையில் வைத்திருக்கிறாய். இப்படியே வைத்திருப்பாய் கோஹிந்தா! கோஹிந்தா!” என்று வேண்டினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த ஸ்ரீவைஷ்ணவர் ”நான்தான் தவறாய் நினைத்துவிட்டேன். இவர் எப்படிக் கூறினாலும் அவர் மன சுத்தத்தை எண்ணி பெருமாள் அவருக்கு அருள் செய்து வருகிறாரென்றால் அவர் பெருமையை என்னென்று சொல்வது” என்று வியந்தார்.

திருமாலை “பத்மநாபோ அமரப்பிரபு” என்று உச்சரித்து சேவிக்கும் வழக்கமுண்டு. ஒரு பாகவதருக்கு அது பத்மநாபோ மரப்பிரபு என்று உச்சரிக்க வந்துவிட்டது. அவர் மரம் என்று புரிந்து கொண்டதால் தினம் தோறும் பத்மநாபோ மரப்பிரபு என்று கூறிக்கொண்டே திருமாலை எண்ணி தன் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு மரத்தைச் சுற்ற ஆரம்பித்தார். அதைப்பார்த்த ஒரு ஸ்ரீவைஷ்ணவ அறிஞர் அவரிடம் சென்றார். ”ஸ்வாமி இப்படிக் கூறக் கூடாது. இது தவறு. அச்சொற்றொடர் மரத்தைக் குறிக்கவில்லை. எம்பெருமான் தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவர். எனவே அவரைப் ”பத்மநாபோ அமரப் பிரபு” என்று குறித்துள்ளார்கள்” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.

அன்று இரவு அந்த ஸ்ரீவைஷ்ணவரின் கனவில் திருமால் வந்தார். மரத்தைச் சுற்றினாலும் தம் திருநாமத்தைத் தவறாக உச்சரித்தாலும் அதில் பொருள் உண்டு என்று காட்டியது திருமாலின் பெருமைகளில் ஒன்றாகும். கனவில் வந்த திருமால் அந்த ஸ்ரீவைஷ்ணவ அறிஞரிடம், ”ஏன் என்னை மரம் என்று கூறக் கூடாதா? நான் மரங்களில் இல்லையா? பராசர மகரிஷி விஷ்ணு புராணத்தில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமில்லையா? நான் எங்கும் ஒளியாய் இருப்பதைக் காட்ட “ஜோதி விஷ்ணு” என்றார். அடுத்து நான் உலகம் முழுதும் நிரம்பியிருப்பதைக் காட்ட ‘ புவனானி விஷ்ணு’ என்றார். அதுபோல நான் எல்லா மரங்களிலும் உள்ளதைக் காட்டத்தான் அவை உள்ள வனத்தைக் குறிக்க ’வனானி விஷ்ணு’ என்றார். எனவே அந்த பாகவதர் சொன்னதில் தவறேதும் இல்லை” என்று திருவாய் மலர்ந்தருளினார். இப்படி தன் அன்பர்கள் தவறாகச் செய்தாலும் அதைப் பொருத்துக் கொள்வதோடு அதற்கும் ஒரு வழி காட்டுவது திருமாலின் பெருமையாகும்.

திருமாலின் பெருமையே அவரின் கல்யாண குணங்களில்தான் அடங்கியுள்ளது என்று கூறுவார்கள். அவற்றில் ‘ஸௌசீல்யம்’ என்பது மிக விசேஷமானது ஆகும். அதாவது எல்லா வித்திலும் ஏற்றமுடையவர்கள் தம் உயர்த்தியைப் பாராமல், சர்வ வித்த்திலும் தாழ்ந்தவர்களுடன், அவர்களின் தாழ்த்தியைப் பாராமல் அவர்களுடன் வேறுபாடின்றிக் கலந்து நிற்றலே ஸைசீல்யமாகும். மேலும் இந்த குணத்திலே பகவானே மிகவும் பற்று உடையவன்.

அதனால்தான் கீதையில் அர்ச்சுனனிடம் கூறுகிறான். “தேவர்களாகவோ, மனிதர்களாகவோ, தாவரங்களாகவோ, இருப்பவர்களின் ஜாதியினாலோ, வடிவினாலோ, அறிவினாலோ, ஆற்றலினாலோ, உயர்ந்தவர்களாயினும், தாழ்ந்தவர்களாயினும், எல்லாரும் எனக்கு சமமே. இதனால் அனைவரும் என்னைப் பற்றலாம். தாழ்ந்த குலம் என்றோ, அழகற்றவன் என்றோ, குணமற்றவன் என்றோ, அறிவற்றவன் என்றோ எனக்கு யாரிடத்திலும் வெறுப்பு என்பதே கிடையாது. குல்கம், குணம், அழகு, அறிவு இவற்றில் ஏதேனும் ஒன்றினால் உயர்ந்தவன் என்று யாரிடமும் எனக்கு விருப்பு இல்லை. தாங்க முடியாத நிலையை அடைந்து எப்பொழுதும் அன்புடன் யார் என்னைப் பூஜிக்கின்றார்களோ அவர்கள் யாராயினும் தன்னைப் போன்றவர்களிடம் இருப்பதுபோல் என்னிடம் சகஜமாய் இருக்கின்றார்கள். நானோ அவர்களிடம் உயர்ந்தவர்களிடம் இருப்பது போலவே அடக்க ஒடுக்கமாகவே இருக்கிறேன்.

இக்கூற்று திருமாலின் எளிமையைத் தெளிவாகக் காட்டுகிறது. எனவே யாரும் மிக எளிதாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து எம்பெருமானை அடைவதே அவரின் பெருமையாகும். “என்னைத் தூய்மையான மனத்துடன் எண்ணி ஒரு திருத்துழாயையோ அல்லது ஒரு சிறு மலரையோ கொண்டு பூஜித்தாலும் போதும் நான் அவர்களுக்கு அருள் பாலிப்பேன்” என்று திருமாலே பூமிப்பிராட்டியிடம் கூறியிருக்கிறார்.

இப்படித் திருமாலின் பெருமகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அதை அளப்பது என்பது நம் சிற்றறிவிற்கு அப்பாற்பட்டதாகும்.

=========================================================================================================================================================================

Series Navigationஅவன், அவள். அது…! -6மருத்துவக் கட்டுரை சொறி சிரங்கு ( Scabies )
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *