கரடி

கரடி
This entry is part 3 of 24 in the series 1 நவம்பர் 2015

karadi

0

Bears have been used as performing pets due to their tameable nature.

கொஞ்சம் கரடிக்கு முஸ்தீபு

0

தண்டலம் வழியாக நரசிங்கபுரம் போகும் வழியில், இடது பக்கம் திரும்பினால், ஒரு பழங்கால சிவன் கோயில் இருக்கிறது. சிவன் தன் பக்தனுக்காக ரதம் ஓட்டியதாகவும், அது ஒரு கட்டத்தில் மண்ணில் புதைந்தபோது, சிவனே இறங்கி அதன் சக்கரத்தைத் தூக்கி நிறுத்த முயற்சித்தாகவும், அப்போது கடையாணி சிவன் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் ஐதீகம். உள்ளிருக்கும் சிவலிங்கத்தில் அந்த காயத்தின் வடு இன்னமும் தெரிகிறது.

இந்தக் கதையில் சிவன் இல்லை. ஆனால் சிவபூஜையில் புகுந்த கரடி இருக்கிறது.

திரும்பி வரும் வழியில் நான் கண்ட காட்சிதான் கதையாகி இருக்கிறது. கதையில் வரும் கரடி நிஜம். கரடிக்காரன் நிஜம். அவன் உருவ வர்ணனை எல்லாம் நிஜம். அவனது நிலையை ஒரு கதையாக யோசித்தபோது, பல வண்ணங்களை அது தானாக பூசிக் கொண்டது.

அந்த வகையில் இது ஒரு வண்ணக் கரடி!

0

குஞ்சரமணி நெற்றி நிறைய திருநீறு அப்பிக்கொண்டு சிவப்பழமாக்க் காட்சியளித்தான். அருகில் அவன் மனைவி லீலாவதி, எண்ணை தடவிய விரல்களால் ஒரு பெரிய பலாப்பழத்தை உரித்துக் கொண்டிருந்தாள்.

குஞ்சு பாலக்காட்டைச் சேர்ந்தவன். ஒரு தலைமுறைக்கு முன்பே அவனது குடும்பம் தமிழ்நாட்டிற்கு பெயர்ந்தாயிற்று. ஆனாலும் இன்னமும் ‘ கேட்டியோ’ மட்டும் அவனது வாயில் மாட்டிக் கொண்டு விடமாட்டேன் என்கிறது.

“ லீலை! கத்தி வேண்டா.. கேட்டியோ? சொளையெல்லாம் கட் ஆயிரும்.. என்ன?” என்றான் குஞ்சு!

லீலாவதியும் கேரளம் தான்! ஒத்தப்பாலம். இருவருமாக சேர்ந்து செய்த சாதனைகள் இரண்டு. ஒன்று ஏழாம் பிராயத்தில் அவள் தொடைகளை பதம் பார்த்துக் கொண்டிருக்கும் மணிகண்டன். இன்னொன்று நான்கு வயதில் மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கும் பிரேமிக்குட்டி!

குஞ்சுவுக்கு வங்கியில் வேலை. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அவனுக்கு தன் சொந்த ஊருக்கு செல்ல காசு கொடுக்கும் வங்கி. ஆனால் அவன் பாலக்காட்டுக்கு போனதே இல்லை. கல்யாணமான புதிதில் ஒத்தப்பாலம் போயிருக்கிறான். நான்கு நாட்கள் இருந்ததில் அவனுக்கு மண்டை காய்ந்து போயிற்று!

லீலையின் அச்சன் சிவதாச சேட்டன் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீர்ர். காலையில் ஐந்து மணிக்கே எழுந்து, கட்டைக் குரலில் தன் பார்யாவை விளிப்பார். சுத்துப்பட்டு வீடுகள் அலறும். சென்னைக் காபிக்கு அடிமையாகிவிட்ட குஞ்சுவுக்கு கட்டன் சாய் என்று கருப்பாய் ஒரு திரவத்தை கையில் திணித்து, தன்னோடு வாக்கிங் கூட்டிப் போய் விடுவார் தாஸ் சேட்டன். வாக்கிங் அரை மைல் கூட இராது. இரண்டு தப்படிக்கு ஒரு முறை, இவரைப் போலவே தூக்கம் வராத சேட்டைகள் வழி மறித்து “; எந்தா வர்த்தமானம்?” என்று பிறாண்டும். வர்த்தகம் வணிகம் எல்லாம் பேசியாகும்போது குஞ்சுவுக்கு மானம் காயும்!

அப்படியே ஒரு ரவுண்டு எல்லைக் கணபதி கோயிலுக்கு போய் விட்டு, வாசலில் இருந்தே ஒரு “எண்டே குருவாயிரப்பா” சொல்லிவிட்டு திரும்புவார் சேட்டன்.

சென்னை காபிக்கு ஒரு தலைமுறையாக அடிமையாகிவிட்ட குஞ்சின் கையில் ஒரு லொட்டா கருப்பாக ஒரு திரவம் திணிக்கப்படும். “ கட்டங்சாய் கேட்டோ! வளர சுகமாயிட்டுண்டு” என்பார் மா மன்னார்! கஷாயத்தை போல அதை உள்ளே தள்ளுவான் குஞ்சு. உடனே பின்கட்டில் கதவில்லாத கக்கூசில் ‘ஜலபாதி’ பெரிய கிணற்றில் குளியல். ஈரிழைத் துண்டில் ஏகமாய் நடுங்கிக் கொண்டு வரும் குஞ்சுவை, பூசை அறையில் நிறுத்தி மலையாள சுலோகங்கள் சொல்ல ஆரம்பித்து விடுவார் சேட்டன். குளிரில் உடம்பைக் குறுக்கிக் கொண்டிருக்கும் குஞ்சுவின் பக்தியைக் கண்டு நெக்குறுவாள் லீலை!

இதெல்லாம் ஒரு எட்டு மணி வரையிலும் தான். குளித்து, நெற்றி நிறைய சந்தனம் பூசிக் கொண்டு, ஜீன்ஸ் பேன்ட், நேர்க் கோடு போட்ட பனியன் சகிதம் கிளம்பி விடுவார் தாஸ் செட்டன். ஏதோ ஒரு தென்னை மரத்தடியில், இவரைப் போலவே நான்கைந்து சேட்டைகள் காத்திருக்கும். “ எந்தா விசேஷம்” என்று உப்பு பெறாத விசயங்களைப் பற்றி பேசுவார்கள்.

காலை சிற்றுண்டி அமர்க்களப்படும். விதவிதமான பதார்த்தங்களால் அல்ல. அவை பற்றிய விவரிப்பால். ஒன்று புட்டு, கடலைக்கறி. இல்லை என்றால் ஆப்பம், தேங்காய் பால். “ எண்டே அம்மே “ என்று ஆரம்பித்து திரேதா யுகத்து கதைகளை எல்லாம் சொல்லுவார் சேட்டன். குஞ்சுவின் மனது இட்லி வடைக்கு ஏங்கும்.

சாயரட்சையில் சேட்டன் மிலிட்டரி சரக்கை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார். “ குஞ்சு கழிக்கண்டா.. கெம்பனி கொடுக்கணும்.., கேட்டோ “ என்று வற்புறுத்தி அவனையும் உட்கார வைத்து விடுவார் தாஸேட்டன். வெறும் நேந்திரம் சிப்ஸை நொறுக்கிக் கொண்டு அவன் உட்கார்ந்திருப்பான். “குஞ்சு மெட்ராஸ் இல்லே! அப்ப ஞான் பஜ்ஜி வாங்கிட்டு வரான்” என்று ஒரு பொட்டலத்தில் எண்ணை வடியும் பஜ்ஜிகளை கொண்டு வந்து முன்னால் வைப்பார். குஞ்சுவும் ஆசையுடன் ஒன்றை எடுத்துக் கடிப்பான். காரம் துளிக்கூட இல்லாமல் தித்தித்து வழியும். “ பழம் பொறி.. நேந்திரம் பழ பஜ்ஜி..வல்லிய இஷ்டம் எனிக்கு “ என்று ஒரு முழு பஜ்ஜியை உள்ளே தள்ளுவார். சுண்டு விரலை உயர்த்திபடி குஞ்சு கொல்லைக்கு ஓடி பழம்பொறியை காறி உமிழ்வான்.

நான்கு நாட்களில் ஒத்தப்பாலமும் கேரளமும் அலுத்து விட்டது குஞ்சுவுக்கு. அதனால் பாலக்காடு போய் அப்படியே அடுத்த ரயிலில் கோவைக்கோ, மதுரைக்கோ திரும்பி விடுவான். நிற்கும் கொஞ்ச நேரத்தில் ரயில்வே ஸ்டேசன்களில் “ பழம்பொறி’ விற்று வெறுப்பேற்றுவார்கள் சேட்டன்கள். எல்லோரும் தாஸேட்டன் சாயலில் இருப்பது கண்டு அவன் மிரண்டு போவான்.

வங்கிக்கு எழுதி, தன் பூர்வீக தேசத்தை கோவை என்று மாற்றிக் கொண்டபிறகு தான் அவனுக்கு பழம்பொறி கிலி அகன்றது.

குஞ்சுவும் லீலையும் காரில் பழனிக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். குஞ்சு வசதியானவன். வங்கி உத்யோகத்தில் இருபது சொச்ச வருடங்களைக் கழித்திருந்தான். காலங்கடந்த திருமணம். லீலைக்கு சுவாதி நட்சத்திரம். 27 வயதில் தான் அவளுக்கு குஞ்சு வாய்த்தான். பாலக்காட்டுக்கார்ர்களுக்கு இஷ்ட தெய்வம் பழனி முருகன் என்பது ஊர் அறிந்த உண்மை. அது எப்படி அப்படி ஆயிற்று என்பது எந்த நாட்டானுக்கும் தெரியவில்லை.

கார் ஓட்டி கொஞ்சம் இளவயதுக்காரன். இடது, வலது என்று முந்தைய வாகனங்களை முந்தியதில், மணி உற்சாகத்தில் எகிறி குதித்து, லீலையின் தொடைகளைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் அதைச் சகித்தவளாய் “ பார்த்து போய்க்கோ” என்று நொடிக்கொரு தரம் சொல்லிக் கொண்டிருந்தாள். பழனி மலையின் திருப்பத்தில் பிரேமிக்குட்டி ஆவேசத்துடன் கத்தினாள்.

“ டாடி அங்கே பாருங்கோ.. கரண்டி!”

குஞ்சு பக்கவாட்டு சாளரத்தில், பாத்திரக் கடையைத் தேடினான். அவன் கண்களில் எதுவும் படவில்லை. குஞ்சு அதிகம் பேசாதவன். முதலிரவில் தன் காலில் விழுந்த லீலையை, பக்கவாட்டில் தலையைச் சாய்த்து, எழுந்திருக்கும்படி சைகை காட்டியவன் அவன். பாவம்! குனிந்த லீலைக்கு அவன் சைகை தெரியாததால், பாதி இரவு பாம்பு டான்ஸ் போஸில் இருந்து, அப்படியே தூங்கிப் போனாள். அதற்கடுத்த இரவுகளில் அவள் காலில் விழாததால், அவர்கள் தாம்பத்தியம், பேர் சொல்லும்படி பிள்ளைகளோடு பெருகிற்று!

“ கறுப்பா.. அங்கே பெருசா.. கரண்டி”

அவள் கைகாட்டிய திசையில் பார்த்த அவனுக்கு, நின்ற கோலத்தில் ஒரு பிரம்மாண்ட மிருகம் தென்பட்டது. கரடி! அதன் கழுத்தில் ஒரு பெல்ட்டைக் கட்டிவிட்டு, அதன் அளவில் பாதி இருந்த ஒருவன் நின்றிருந்தான். கரடியைச் சுற்றி பெரும் சிறுவர் கூட்டம். கரடி யாசகம் கேட்டுக் கொண்டிருந்தது.

காரோட்டியின் தோளில் தட்டி, சைகையால் ‘ நிறுத்து’ என்றான் குஞ்சு. கதவைத் திறந்து கொண்டு இறங்கி நின்றான். பிரேமிக்குட்டி அச்சத்துடன் இறங்கி அவன் கால்களுக்குப் பின்னால் நின்று கொண்டு கரடியை எட்டிப் பார்த்தாள். கார் நின்றவுடன் கரடிக்காரன் பெரிய தொகை கிடைக்குமென்று, காரை நோக்கி வர ஆரம்பித்தான். கரடி வருவதற்கு முன்னால் அதன் வாசம் அவர்களின் மூக்கைத் துளைத்தது. மணிகண்டன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஒரு வீரனைப் போல் நின்றது, லீலைக்கு சிரிப்பை வரவழைத்தது.

“ தொடண்டா.. கேட்டோ” என்று குழந்தைகளை அதட்டினாள் லீலை. சமகாலத்தாய் அவள். எதைத் தொட்டாலும் இன்ஃபெக்‌ஷன். எல்லா சஞ்சிகைகளும் தொலைக்காட்சி மருத்துவர்களும் மொழிந்த்தை அவள் சிரமேற்கொண்டு கடைபிடிப்பவள்.

குஞ்சரமணி கரடியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதுமே சிங்கமும், அதற்கடுத்து குதிரையும் தான் பிடிக்கும். அதில் இருக்கும் கம்பீரம் வேறெதிலும் இல்லை என்று அவன் நம்பினான். இதென்ன? அழுக்காக, ரோமத்துடன்.. சே!

“ டாடி! அங்கே பார்! கரண்டிக்கு ரத்தம் வருது!”

குஞ்சு கைகாட்டிய இடத்தில் பார்த்தான். ஆமாம். கழுத்தில் லேசாக ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தோல் பெல்ட்டை இறுக்கிக் கட்டியதில் தோல் வழண்டு ரணமாகி இருந்தது. சுற்றி கூட்டம் கூடிவிட்டது.

“ டேய்! இதை எந்த சர்க்கஸ்லேர்ந்து திருடிட்டு வந்தே? உன் வருமானத்துக்காக அதை டார்ச்சர் பண்றியா? மிருகவதை தடுப்பு சட்டம் தெரியுமா? திரிஷா கிட்டே சொன்னா பிடிச்சு உள்ளே போட்டுருவாங்க!” எல்லாவற்றிலும் சினிமா நுழைந்து விட்டது!

ஆளாளுக்குக் கத்திக் கொண்டிருந்தார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கரடிக்காரன் கையேந்திக் கொண்டிருந்தான்.

“ கரடி மயிர் வேணுமா சார். பத்து ரூபா தான் சார். கொளந்தைங்களுக்கு தோஷம் படாது சார். வாங்கிக்குங்க”

அப்போதுதான் குஞ்சு கவனித்தான். பத்து ரூபாய் காசுக்காக கொத்து கொத்தாக கரடியில் உடலில் ரோமங்கள் பிடுங்கப்பட்டிருந்தன. அங்கேயும் ரணமாகி காய்ந்திருந்தது. பார்க்க சகிக்காமல் வண்டியை எடுக்க சைகை காட்டிவிட்டு, உள்ளே சென்று அமர்ந்தான் குஞ்சு. குழந்தைகள் கரடியை விட மனமில்லாமல் ஏறின.

0

கோயில் பிரகாரத்தில் இருக்கும் போதெல்லாம், குஞ்சுவுக்கு கரடி நினைப்பாகவே இருந்தது. நாசித்துவாரத்தில் ஒரு இரும்பு வளையத்தை மாட்டி வைத்திருந்தான் கரடிக்காரன். கரடியின் தலையை திருப்ப அவன் அதைப் பற்றி இழுத்தது, இப்போது நினைவுக்கு வந்தது!

முருகனை தரிசிக்க ஏகத்துக்கு கூட்டம்! ஒரு வழியாக சந்நிதானத்திற்கு போய் மூலவரைப் பார்த்த போது, குஞ்சுவுக்கு முருகன் தெரியவில்லை. அங்கே கோவணாண்டியாக கரடி நின்றிருந்தது. அருகில் கரடிக்காரன் முருகனது வேலோடு நின்றிருந்தான். கண்களை கசக்கி விட்டு பார்த்த போது, முருகன் தெரிந்தான். அர்ச்சகர் வேலைக் கையில் எடுத்து துடைத்துக் கொண்டிருந்தார்.

முருகனை தரிசித்து விட்டு, அங்கே கொடுக்கப்பட்ட பொங்கல் பிரசாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கரடி ஒன்று கை நீட்டியது. அதிர்ச்சியில் பாதி பொங்கலை அப்படியே அதன் கையில் போட்டு விட்டு கைகளை உதறிக் கொண்டான் குஞ்சு. நிமிர்ந்து பார்த்தபோது தூரத்தில் கருப்பு போர்வை போர்த்திய தாடிப் பிச்சைக்காரன் ஒருவன் போய்க் கொண்டிருந்தான்.

கீழிறங்கி திரும்பும் வழியில், கரடியைப் பார்த்த இடத்தில் ஏகத்துக்குக் கூட்டம். கரடி ஒரு மரத்தில் கட்டப் பட்டிருந்தது. அதன் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான் கரடிக்காரன். நோஞ்சானாய் ஒரு போலீஸ்காரன் காவலுக்கு நின்றிருந்தான். அவன் அடிக்கடி கலவரத்துடன் கரடியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ வண்டியை நிறுத்து.. ஏதோ பிரஷ்ணம்.. என்ன ஏதுன்னு கேப்போம்” என்றாள் லீலை.

‘ இப்போ இது தேவையா ?’ என்பது போல் குஞ்சு அவளைப் பார்த்தான். அந்த பார்வையை சம்மதமாக எடுத்துக் கொண்டு லீலை காரை விட்டு இறங்கினாள்.

“ ப்ளூ கிராஸ் வேன் வருதாம். கரடியை அவங்க கொண்டுட்டு போய், குணப்படுத்தி, ஜூவுக்கு அனுப்பிடுவாங்க”

“ இவனை என்ன பண்ணுவாங்க?”

“ இவனை என்ன பண்றது? அரெஸ்ட் பண்ணி ஜெயில்லே போட்டாலும், ரெண்டு மாசம் கழிச்சு வெளியே வந்து, வேற ஏதாவது மிருகத்தை பிடிச்சு வச்சு பிச்சை எடுப்பான். இதை மாதிரி ஆளுங்களை எச்சரிக்கை பண்ணி அனுப்பிடுவாரு ஜட்ஜ்!”

நோஞ்சான் போலீஸ்காரர் தனக்கு தெரிந்த தகவலை சொன்னார்!

தலையில் நீல நிற சுழல் விளக்குடன் ஒரு மாருதி வேன் வந்து நின்றது. வெள்ளை உடை சேவகர்களும் ஒரு டாக்டரும் இறங்கினர்.

மயக்க ஊசி துப்பாக்கியால் சுட்டு, கரடியை நினைவிழக்கச் செய்து, அதன் புண்களுக்கு மருந்து போட்டு, நான்கைந்து பேர் கைத்தாங்கலாக தூக்கி, வேனின் பின்புறம் கரடியை படுக்க வைத்தார்கள். கரடி, பெரிய கரடி. அதனால் மாருதி வேன் போதவில்லை.

காலை மடக்கிப் பிடித்துக் கொண்டான் ஒருவன். வேன் கிளம்பிப் போயிற்று. கரடிக்காரன் தலையைக் குனிந்து கொண்டு அழுது கொண்டிருந்தான்.

“ ஓடுறா! இனிமே இந்தப் பக்கம் உன்னைப் பாத்தேன்.. முட்டி பேத்துடுவேன் “ என்று மிரட்டி விட்டு, நோஞ்சான் போலீஸ் திரும்பி பார்க்காமல் போனது.

0

வீடு திரும்பி வெகுநேரம் வரையிலும் குஞ்சுவுக்கு கரடியைப் பற்றிய எண்ணம் போகவேயில்லை. கரடியும் கரடிக்காரனும் சேர்ந்து அவனை அலைக்கழித்தார்கள். கரடிக்காரன் அழுதது இன்னமும் ஒரு மாறாத பிம்பமாக அவன் மனதில் ரீவைண்ட் ஆகிக் கொண்டிருந்தது. கரடி அழவேயில்லை. ஒரு வேளை அது மயக்கத்தில் இல்லாமல் இருந்தால்? சுய நினைவுடன் இருந்தால்? கரடிக்காரனைப் பிரிந்த சோகத்தில் அதுவும் அழுதிருக்கும்! கரடிகள் நாய்களைப் போலத்தான். தன் எசமானன் மேல் அதீத பாசமும் அன்பும் கொண்டவை. தினமும் தனக்கு உணவு கொடுத்து, உறைவிடம் கொடுத்து பராமரிக்கும் அவனை அது நிச்சயம் நேசித்திருக்கும்.

நினைவு திரும்பிய கரடி என்ன நினைக்கும்? அது கரடிக்காரனைத் தேடுமா? கரடியில்லாத கரடிக்காரன் என்ன பண்ணுவான்? அவன் ஏன் அழுதான்? அவன் இன்னமும் அழுது கொண்டிருப்பானா? ஏன் அழுவான்? கரடி மேல் உள்ள பாசத்தினாலா? இல்லை வருமானம் போய் விட்டதே! இனி பிழைப்புக்கு என்ன செய்வேன் என்கிற சுய பரிதாபத்தாலா? அவனுக்கு குடும்பம் உண்டா? பிள்ளை குட்டிகள் உண்டா? அவை கரடியை பிரிந்த சோகத்தில் அழுமா? சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்குமா? வருமானமில்லாத கரடிக்காரனை விட்டு அவன் மனைவி போய் விடுவாளா?ட்5

கண்களை மூடினால் கரடி.. சங்கிலி பிணைத்த கரடி.. கழுத்துப்பட்டை தரித்த கரடி.. உடலெங்கும் புண்ணான கரடி.. தத்தித் தத்தி கைகளை நீட்டியபடி வந்து பிச்சை கேட்கும் பிம்பக் கரடி.. சட்டென்று காட்சி மாறியது. கரடி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தது. கரடிக்காரன் கழுத்தில் பெல்ட் மாட்டியிருந்தது. வறுமை எனும் பெல்ட்!

குஞ்சு அவனை அறியாமல் கரடியைப் போல உறுமிக் கொண்டிருந்தான். திடீரென்று கழுத்தில் ஏதோ இருகுவது போல உணர்ந்தான். மெல்ல தடவிப் பார்த்த போது அவன் கழுத்தை சுற்றி பெல்ட் இருந்தது. சட்டென்று கண்களைத் திறந்தான் குஞ்சு.

பிரேமிக்குட்டி அவனுடைய பெல்ட்டால், அவன் கழுத்தை சுற்றி இழுத்துக் கொண்டிருந்தாள்.

“ அம்மே! ப்ளூ கிராஸுக்கு போன் போடு.. கரண்டிக்கு ரத்தம் வருது “

0

Series Navigationஇந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்ஆல்பர்ட் என்னும் ஆசான்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *