நிலாவண்ணன்
அந்த வலி நிரம்பிய செய்தியைக் கேட்டவுடன் செண்பகம் ஒரு நிமிடம் தடுமாறிப் போனாள்.
அந்தத் தடுமாற்றம் மருத்துவர் கூறிய செய்தியிலிருந்தும் அவர் காட்டிய அறிக்கையிலிருந்தும் ஏற்பட்டிருந்தது.
“டாக்டர் உங்களுடைய அறிக்கை மிகச் சரியானதுதானா… ஒரு தாய் என்னும் முறையில் என்னால நம்பவே முடியலையே… இது ஏன் பொய்த்துப் போகக் கூடாது…?”
செண்பகம் அந்தக் கை தேர்ந்த மருத்துவரைப் பார்த்துத் தன் மன ஆதங்கத்தை வெளியிட்டாள்.
அவளைக் கூர்ந்து நோக்கிய டாக்டர், “இல்லம்மா, உங்க மகளோட ரிபோர்ட்ல எந்தத் தவறோ குழப்பமோ கிடையாது. உங்க மகளுக்கு போலியோ நோய்தான் கண்டிருக்கு. இது ஒரு குணப்படுத்த முடியுன்ற வியாதின்னு சொன்னாலும் உங்க மகளுக்கு பாதிச்சிருக்கிறது முடக்குவாத போலியோ. உயிருக்கு ஆபத்து இல்லைன்னாலும் கால்களிலோ கைகளிலோ பாதிப்பு ஏற்படுத்தி அந்தப் பகுதிய முடங்கச் செய்துடும். அப்படித்தான் உங்க மகளோட வலது கால் வலுவிழந்து சூம்பிப் போயிடுச்சி. உங்களுக்காகவும் உங்க குழந்தைக்காகவும் நான் அனுதாபப் படுவதைத் தவிர நான் வேற ஒன்றும் செய்ய முடியாது.
“நீங்கள் அப்படியெல்லாம் சொல்லாதீங்க… எல்லா வியாதிக்கும் மருந்தும் தீர்வும் இருக்கும்போது என் மகளுக்கு அப்படி ஏதாவது ஒன்று மருத்துவ உலகத்தில் இல்லையா..? எது எப்படி முடியாத ஒன்றாக இருக்க முடியும்…!”
பாசமுள்ள அந்தத் தாயின் பரிவு மிக்க வினாவுக்கு விடை சொன்னால் அது அவளுக்கு நிவாரணமாக இருக்க முடியாது என்ற நிலையில், “என்மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால்… தாராளமாக வேறு எந்த மருத்துவரையும் பார்க்கலாம்… நான் அதற்கு எந்த ஆட்சேபணையோ வருத்தமோ கொள்ள மாட்டேன்..!”
அந்தக் கைதேர்ந்த மருத்துவர் இறுதியாகவும் உறுதியாகவும் கூறிவிட்டார். அதன் பின்பு அந்தத் தாய் போலியோவால் பாதிக்கப்பட்ட தன் மகள் எல்லாக் குழந்தைகளையும் போல் தத்தி நடக்க ஓடி விளையாட பல மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கினாள். சொல்லி வைத்தாற்போல் பதில் ஒன்றாகவே இருந்தது.
ஒரு கட்டத்தில் அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும்போல் ஆகிவிட்டது. இருந்தாலும்… இந்த மருத்துவ உலகத்திற்குச் சவால் விடவேண்டும் எனும் வெறி அவள் மனத்தில் ஆழமாகப் படிந்தது. மருத்துவர்கள் சொன்னது வேத வாக்கா என்ன..? எதற்கும் ஒரு தீர்வு இருக்கத்தானே செய்கிறது… உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கின்றனவே… சித்தர்களும் ஞானிகளும் செய்யாத அதிசயங்களா… அவளுக்குத் தெரியும் அவள் ஒரு சித்தரோ ஞானியோ இல்லையென்பது… ஆயினும் அவள் மனத்தில் தன் மகளை நடக்கச் செய்ய இயலும் என்பதில் ஒரு நம்பிக்கையை ஆழ் மனத்தில் விதைத்துத் துளிர்க்கச்செய்து கொண்டாள். இருப்பினும், தன் மகளின் சூம்பிப்போன வலது காலைக் காணும்போது அவளது உள்ளமும் வாடிப் போகும். மனத்தில் ஒரு வெறுமை அவளிடம் அனுமதி கேட்காமலேயே ஆட்சி செய்யும்.
‘செண்பா, நமக்குப் பிறக்கப் போவது பொம்பளப் புள்ளதாங்கிறது உறுதியாயிடிச்சி… ஆம்பளப் புள்ளங்களுக்கு சமமா வளத்துக் காண்பிக்கணும் தெரியுமா…’ என்னோட சின்ன வயசில பந்தயங்கள்ல ஓடி ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். என்னோட அப்பாவோ அம்மாவோ விளையாட்டுத் துறைக்கு ஆதரவா இல்லாம எந்த நேரமும் படி படின்னு வெரட்டிக்கிட்டே இருப்பாங்க… நம்ம புள்ள போட்டி விளையாட்ல வெற்றிய குவிக்கணும்… நம்ம இனத்துப் புள்ளங்க இப்ப எதுக்குமே உதவாதவங்கண்னு எனக்கு முன்னாலயே பலர் பேசிக்கிறாங்க… எவ்வளவு மன வருத்தமா இருக்கு. ஒரு நேரத்தில இந்த நாட்டுக் கொடிய நம்ம புள்ளங்க உயரமா பறக்க விட்டாங்களே… அதயெல்லாம் எவ்வளவு சீக்கிரமா மறந்துட்டாங்க பாத்தியா…’
ஒரு நேரத்தில் அவள் கணவன் ஆதங்கப்பட்டதை இப்போது நினைத்துக் கொண்டாள். கண்களில் நீர் கசிந்தது. மனம் அதிர்ந்தது. அப்படிப்பட்டவரா இப்படிச் செய்து விட்டார்..?
கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பி நோக்கினாள். மனக் கீறல்கள். அதில் ஏற்பட்ட ஆறாத ரணங்கள்.
இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பூசிக்கப்பட்ட மருத்துவர்கள் மகளைக் கைவிட்ட பின்பு செண்பகத்திற்கு உலகமே இருண்டது போலாகிவிட்டது. ஒரு கால் பலமற்றுப்போய் நொண்டி-நொண்டி நடக்கப் போகும் தன் மகளின் நிலையை மனக் கண் முன் கொண்டு வந்தாள். அவள் தன் மகளுக்காகக் கண்ணீர் விட்டுக் கசிந்தாள்.
அதேநேரத்தில், அவள் கணவனின் எடுத்தெறிந்த நோக்கும், மகள் மலரைக் கண்டு வெறுப்பை உமிழ்வதும் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன் மகள் போட்டி விளையாட்டு மைதானத்தில் வெற்றிகளைக் குவிக்க வேண்டுமென்று கற்பனை செய்தவரா… இப்படி…!
இந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை இந்த நோய்தான் எனக்கு வேண்டுமென்று யாசகம் கேட்டா வாங்கி வந்தது?
2
ஒரு வயதில் தத்தித் தத்தித் தளர்நடை போட வேண்டிய குழந்தை எழுந்து நிற்கவே முடியாமலிருப்பதைக் கண்டு அவள் தாயுள்ளம் கசிந்தது.
அதன்பின்பு… இரண்டாவது வயதில் நிற்க முயன்ற போது ஒரு கால் வலுவிழந்து கிடப்பதால் அடுத்த அடியில் விழுந்து புரண்டது. அந்த நேரத்தில் செண்பகத்தின் தாய் மனமும் சேர்ந்து அழுதது.
‘இப்பதான் இப்படின்னா இது பெரிசானா நமக்கு என்ன என்ன கஸ்டமெல்லாம் கொடுக்கப் போவுதோ..? இத நெனச்சா இப்பவே எனக்கு…!’ வார்த்தைகளை முடிக்காத அவள் கணவன் அந்தக் குழந்தையை வெறுப்புடன் பார்த்தான்.
‘இத எங்கயாவது ஊனமுற்றோர் பள்ளியில சேர்த்துடலாம்… நமக்கு இனிமேல் பொறக்குற பிள்ளங்கள நல்லபடியா வளர்க்கலாம்… அவங்கள..!’ அவன் பேசி முடிக்கு முன்பே செண்பகம் வீசிய நெருப்புப் பார்வையை நேர் கொள்ள முடியாமல் நிறுத்திக் கொண்டான்.
அங்கங்களில் குறை இருந்தாலும் அவயவங்களே இல்லாமல் பழுது பட்டிருந்தாலும் அவள் நான் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை. அவளை நான் எங்கேயும் கொண்டு விடமாட்டேன். அவள் வைர மரமாக நின்றாள்.
அதுமுதல் அவளுக்கு மனத்திலே ஒரு வைராக்கியம் முளை விட்டு வேர் படர ஆரம்பித்தது. அவளது அந்த வைராக்கியத்திற்கு இணையத்தில் காணப்பட்ட ஒரு செய்தியும் வலுவூட்டுவதாக அமைந்திருந்தது. போலியோவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் திடல்தடப் போட்டியில் உலக சாதனையே படைத்தாள் என்பதுதான் அது.
மலரின் கால்களைத் திடப்படுத்த யார் யாரிடம் சென்று மருத்துவமும் ஆலோசனையும் கேட்க முடியுமோ அவ்வளவையும் கேட்டுத் திரட்டினாள். அதன் பின் ஒவ்வொரு நாளும் அவளது சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டது. சில நாட்களில் மலர் தாங்க முடியாத வேதனையை அனுபவிப்பாள். அந்தச் சமயங்களிலே செண்பகத்தாலும் தாங்க முடியாதுதான். இருந்தாலும் முன் வைத்த கால்களுக்கு அவளால் விலங்கு போட முடியாமல் அவளது உறுதி முன்னோக்கி இழுத்துச் சென்றது.
அந்த நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது..!
இப்போது… அந்தக் குழந்தையின் ஊனக்கால் ஓரளவு திடம் பெற்று நடப்பதற்கும் திராணி பெற்றிருந்தது. குழந்தைக்கு நடை பழக்கிக் கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்த கணவன் மதிய தேநீரை எதிர் பார்த்துக் காத்திருந்தான்.
‘செண்பா சூடா ஒரு கப் தேத்தண்ணி போட்டுக் கொண்டாயேன்..!’ என அவன் கேட்க, செண்பகத்திற்கு அப்போதிருந்த மன நிலையில், ‘நாந்தான் நம்ம மகள நடக்க வைக்க எப்படியெல்லாம் பாடுபட்டுக் கொண்டிருக்கேன்… ஏன் நீங்க தேத் தண்ணி கலக்கிக் குடிக்க முடியாதா…?’ என மிகச் சாதாரணமாகவே கேட்டு வைத்தாள்.
அந்தக் கேள்வியானது அவனது தன்மானத்தையும் ஆண்மையையும் தூண்டி எழுப்புதாக அமைந்து விட்டது. அது மட்டுமல்ல, மலருக்காக அவள் முழு நேரத்தையும் அர்ப்பணித்து தன்னைப் புறக்கணிப்பதாக அவனுள் சின்னதாக ஒரு கருமை படர்ந்து நாளடைவில் பொறாமையாகவும் மாறி விட்டது. அது இருவர்க்கிடையே விரிசலையும் உண்டாக்கியது. அந்த இடைவெளியானது அவர்களது படுக்கையறை வரையிலும் சென்று முகாமிட்டது. அவன் அவளுக்காகக் காத்திருக்கும்போது செண்பகம் மகளின் கால்களுக்கு தைலம் பூசி சுடு நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருப்பாள். குழந்தையின் கால்கள் திடம் பெற்றுக் கொண்டிருக்கும்போது அர்களது இல்லற வாழ்க்கை கருத்து வேறுபாட்டால் வலுவிழந்து கொண்டு வந்தது.
‘செண்பா, நடக்க முடியாத ஒன்ன விடாப்பிடியா பிடிச்சு தொங்கி உன்னோட நேரத்தையும் காலத்தையும் நம்ம குடும்ப வாழ்க்கையையும் வீணடிச்சிக்கிட்டிருக்கே… மலர் இப்படித்தான் இருக்கணும்னு விதிக்கப்பட்ட ஒன்னாயிடுச்சி… டாக்டர்ங்களே மலரால நடக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க… நீ என்னவோ மருத்துவச்சியா மாறி ஊனப்பட்டு சூம்பிக் கிடக்குற காலுக்கு ராவு பகலா மருந்து போடுறியே… அதனால நடக்க முடியும்னு கனவுகாண்றியா..?’
ஒருநாள் அவள் கணவன் வெறுப்பின் உச்சத்தில் நின்று வார்த்தைகளை நெருப்புத் துண்டங்களாக்கிக் கொட்டினான் அவள் முன்.
தன் கணவன் இப்படிப் பேசுவான் என்பதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் கருத்து வேறாக இருந்தது. ஊனப்பட்டவர்களுக்கும் வாழ்க்கை உண்டு என அவள் நம்பினாள். ஊனப்பட்டவர்கள் கவனிக்கப்படாததனால்தான் அவர்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தன் மகளும் அப்படி ஆக வேண்டுமா என அவள் தனக்குள் கேட்டுக் கொண்டதானது கணவனுடன் முறன்பட்டு பிணக்கை ஏற்படுத்தியது.
இறுதியில் கருத்து வேறுபாடு முற்றி அவள் கணவன் அவளையும் ஊனப்பட்ட குழந்தையையும் கைவிட்டு விவாகரத்து பெற்று ஒதுங்கிக் கொண்டான்.
அதன்பின்… அவள் ஊனப் பட்ட பெண் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படிக் கரை காண்பது என திக்கு முக்காடிப் போனாள். வாழ்க்கையில் ஏற்பட்ட கடமைகளையும் சவால்களையும் எப்படி எதிர்கொள்வது..? திணறினாள். புயலில் சிக்கிக் கரையை அடயமுடியாத கப்பலாகச் சோர்ந்து விட்டது அவளது மனம்.
மலரை பள்ளியில் சேர்க்கும் பருவம் வந்ததும் அவளுக்கு அங்கே ஒரு சோதனை விழித்துக் காத்திருந்தது. மலரின் கால் ஊனப்பட்டிருந்ததே தவிர மன வளர்ச்சியில் அவள் மற்ற குழந்தைகளுக்கு ஈடாகவாகவோ அதற்கும் மேலாகவோ இருந்தாள்.
இருந்தாலும், சிலநேரங்களில் மாணவர்களின் ஏளனத்தால் மனம் ரணப்பட்டு வரும் மகளுக்குத் தந்நம்பிக்கை தரும் தாயாகவும் செயல் பட வேண்டியிருந்தது. அதன்பின், வந்த காலங்கள் அவளுக்கு வேதனைகளையும் சோதனைகளையும் மேலும் மேலும் சுமந்து கொண்டு வந்தன ஈரமில்லாத அனல் காற்றாக.
கால மாற்றத்தில் மலரின் கால்கள் ஒரளவு திடமும் உறுதியும் பெற்று கொண்டு வந்தன. அதற்குப் பத்து மாதம் சுமந்து பெற்றவள் அனுதினமும் உழைத்தாள். மகள் துவண்டு போய் வலியில் துடித்தபோது தாயும் பெற்ற மகளுடன் சேர்ந்து கலங்கினாள். இருந்தாலும், ஊனப்பட்டவர்களையும் ஜெயிக்க வைக்க முடியும் என்னும் வெறி ஒவ்வொரு நாளும் அவள் முன்னே அவள் இதயத்திற்குத் தெம்பை அளித்துக் கை பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தது.
அப்படிப்பட்ட ஒரு நாளில்…!
அந்த வட்டாரத்தில் போட்டிப் பந்தயங்களில் குறிப்பாக ஓட்டப் பந்தயங்களில் மாணவர்களுக்கு நுணுக்கமாகப் பயிற்சியளித்து அவர்களை வெற்றி பெறச் செய்வதில் வல்லுனர் என அறியப் பட்ட ஒரு பயிற்சியாளரிடம் மலரை அழைத்துச் சென்றாள்.
‘நீ என்னம்மா… நான் என்ன கால் கை முடமானங்களுக்கா பயிற்சி கொடுக்கிறேன்..? கால் கை நல்லா உள்ள பிள்ளைங்களே என்னோட பயிற்சியை தாங்கம ஓடிப் போயிடுறாங்க… விலுக்கு விலுக்குன நடக்குற புள்ளய வெவஸ்தயில்லாம ஏங்கிட்ட கூட்டியாறீங்க…!’
இப்படி அந்தப் பயிற்சியாளர் அவளை அவமானப் படுத்தி அனுப்பினார். இதே சோதனைதான் மலருக்குப் பள்ளியிலும் ஏற்பட்டது. மற்ற மாணவர்களுடன் அவளால் போட்டியிட முடியாது எனும் மனப்பான்மை அவளுடைய வகுப்பாசிரியரிடம் உருவாகியிருந்தது.
இதை முறியடித்துக் காட்டவேண்டுமெனும் மன உறுதியை மலரின் ஆழ் மனத்திலே ஒவ்வொரு நாளும் செண்பகம் உருவாக்க வேண்டியிருந்தது. அதில், அவள் ஓரளவு வெற்றியும் கண்டாள்.
இதற்கிடையே, அவள் முன்னாள் கணவன் இன்னொரு திருமணம் செய்து கொண்டான். அவள் இவர்களுக்குக் கொடுத்து வந்த உதவித் தொகையை சொல்லாமல் கொள்ளாமல் நிறுத்திக் கொண்டான். செண்பகம் தடுமாறிப் போனாள். தொழிற்சாலை வேலைக்குப் போகவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டாள். இருந்தாலும் இந்தத் துன்பங்கள் அவளை அசைத்துப் பார்ப்பதாக இல்லை.
அப்போது மலர் படித்துக் கொண்டிருந்த பள்ளியின் வருடாந்திரப் போட்டி விளையாட்டு துவங்கியது. அதன் பின்பு மாவட்ட போட்டிகளும் மாநிலப் போட்டிகளும் நடை பெற்ற பின்பு தேசிய நிலை போட்டி நடை பெறும்.
இந்தப் போட்டிப் பந்தயங்களில் தன் மகள் கட்டாயம் கலந்து கொண்டு ஓட வெண்டுமென்று திடமாக நம்பினாள்.
மலரின் கால்கள் தாயின் மனத்திட்பத்துக்கு ஏற்ப மாற்றம் கண்டிருந்தது. ‘பிசியோதெரபி’ யை ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் ஒதுக்கிச் செய்து ஓட்டப் பயிற்சி அளித்ததின் பயனாக அவளால் நேராக நடக்கவும் மற்றவர் போல் வேகமாக ஓடவும் முடிந்தது.
தாயின் வைராக்கியமும் மகளின் திடமனமும் இன்று மலரை பள்ளி ஓட்டப் போட்டிக்குத் தயார்ப்படுத்தியிருந்தது. இருந்தாலும் அவளுடைய பள்ளி ஆசிரியர்கள் அவள் மேல் முழுமையான நம்பிக்கை கொள்ளவில்லை. அதற்காக அவர்களிடம் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஓரளவு வெற்றியும் பெற்றாள்.
இறுதியாக… பல கோரிக்கைகளுக்குப் பின் அவள் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டாள். பள்ளி நிலையில் ஓடி வெற்றி பெற்றால் மாநிலத்துக்குத் தேர்வு செய்யப்படுவாள். அதன் பின் ஒருநாள் தேசிய நிலைக்கும் செல்லலாம்.
அன்று..!
போட்டிப் பந்தயத் திடலில் 100 மீட்டர் ஒட்டப் போட்டியின் தொடக்க துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது. போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் வில்லிலிருந்து விடுபட்ட அம்பாகப் பாய்ந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக மலரும் ஓடினாள்.
‘அதோ ஓடுதே அந்த புள்ளய ரொம்பவும் பாரட்டணும்பா… அதுக்கு சின்ன புள்ளயில போலியோவுல பாதிச்ச காலாம்… இன்னக்கு மத்தவங்களோட சரி சமமா ஒடுது பாத்தியா..!’
போட்டியைக் காண வந்த பெறோர்களில் ஒருவர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர்கள் பேசிக் கொண்டது செண்பகத்தின் காதுகளிலும் விழுந்தது.
————————————————-
- அவன், அவள். அது…! -8
- இந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்
- கரடி
- ஆல்பர்ட் என்னும் ஆசான்
- ஆயிரங்கால மண்டபம்
- பொன்னியின் செல்வன் படக்கதை – 10
- திரும்பிப்பார்க்கின்றேன் புனைகதைகளில் பேச்சுவழக்கினை ஆய்வுசெய்த திறனாய்வாளர் வன்னியகுலம்
- செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை
- நெத்தியடிக் கவிதைகள்
- தொடுவானம் – 92. பெண் தேடும் படலம்
- இளைஞர்களுக்கு இதோ என் பதில்
- கவிதைகள் – நித்ய சைதன்யா
- எல்லையைத் தொட்டபின்பும் ஓடு!
- சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.
- நித்ய சைதன்யா – கவிதைகள்
- எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர்
- பூச்சிகள்
- மகன்வினையா? அதன்வினையா?
- கல்லடி
- ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”
- வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்
- வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை
- அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்தை கதிரியக்கக் கழிவின்றி நிதிச் சிக்கனத்தில் இயக்கலாம்.