அவன், அவள். அது…! -9

This entry is part 5 of 14 in the series 8 நவம்பர் 2015


      ஏம்மா, எங்கே போயிட்டு வர்றே…? – உள்ளெ நுழையும்போதே பத்மநாபனின் கேள்வி சுமதியை நிறுத்தியது.

என் தோழி கவிதா வீட்டுக்குப்பா…

இப்படி பதைபதைக்கிற வெய்யில்ல போய் அலைஞ்சிட்டு வர்றியே, இது தேவையா உனக்கு?

கேள்வி என்னவோ செய்தது. அப்பாவின் பேச்சில் ஆயிரம் இருக்கும்.

இல்லப்பா, ரொம்ப நாளாச்சு அவளைப் பார்த்து. ஊரிலிருந்து வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். அதான் போனேன்.

பார்த்திட்டியா?

சுமதி தயங்கினாள்.

என்னம்மா, உன் தோழியைப் பார்த்துப் பேசிட்டியான்னு கேட்டேன்…

அப்பா பதிலுக்காக நிமிர்ந்து நோக்குவது தெரிந்தது.

பார்க்க முடியலைப்பா…

ஏன்?

அவ புருஷன்கிட்டேயிருந்து தகவல் வந்ததாம். அவசரமா கிளம்பிப் போயிட்டா…

தகவலா? அப்டீன்னா? ஃபோன்ல சொன்னாரா?

அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஃபோன்லா சொன்னா என்ன, யோர் மூலமாவது சொன்னா என்ன? புறப்பட்டுப் போயிட்டா…அவ்வளவுதான்… – சொல்லி விட்டு உள்ளே நடந்தாள் சுமதி.

பரவால்லே…உன் தோழிக்காச்சும் தெரிஞ்சிருக்கே…புருஷனை மதிக்கணும்னு…

என்னப்பா சொல்றீங்க…நீங்களே இப்டி மறைபொருளாப் பேசினா எப்படி? அப்போ நான் மதிக்கலேங்கறீங்களா?

நீ சொன்னாத்தானேம்மா தெரியும்….

இப்ப நீங்க சொன்னீங்களே…அது எப்படியாம்?

ஒரு வாரமா நீ வாயையே திறக்க மாட்டேங்கிறியே, அது இப்படியெல்லாம்தானேம்மா நினைக்க வைக்குது…கம்முன்னு கிடந்தா என்னம்மா நினைக்கிறது? சண்டை போட்டுட்டு முறிச்சிட்டு வந்திட்டே…நீ ஒத்தையா வந்து நிக்கிறபோது அதை சந்தோஷமா வந்ததா எப்படி எடுத்துக்க முடியும்? பேச்சே எதுவும் இல்லையே…அப்புறம் என்ன நினைக்கிறது?

சட்டுன்னு உங்க பெண்ணைப்பத்தி தவறா நினைச்சுட்டீங்களேப்பா, தவறு அவர்கிட்டயும் இருக்கிலாம்ங்கிறதை நினைச்சுப் பார்த்தீங்களா? ஒரு பொண்ணு கணவனுக்கு எத்தனை சின்சியரா இருக்கணும்னு எல்லா ஆம்பிளைகளும் நினைக்கிறீங்களோ அதே போல் கணவனும் மனைவிக்கு சின்சியரா இருக்கணும்ப்பா…

உண்மைதாம்மா…ஒரு சந்தேகம்…சின்சியராங்கிறதை நீ எந்த அர்த்தத்துல சொல்றேன்னு நான் தெரிஞ்சிக்கலாமா? அதுக்கு நீ என்ன அளவுகோல் நிர்ணயிச்சிருக்கே, அதையும்தான் சொல்லேன்

சின்சியர்ங்கிறது ஒருத்தி ஒருவனுக்கு உண்மையா இருக்கிறதும், ஒருவன் ஒருத்திக்கு உண்மையா இருக்கிறதும்தாம்ப்பா…நான் இதுக்கு மேல இதை எத்தனை விளக்கிச் சொன்னாலும் உங்களுக்குத் தப்பாத்தாம்ப்பா படும்…

அப்படி ஒட்டுமொத்தமாச் சொல்லிட்டா எப்படி? விளக்கமாத்தான் சொல்லேன். புரிஞ்சிக்கிறேன்….

உங்க பொண்ணு செய்றது, செய்தது, எதுவும் தப்பாப் போயிடாதுப்பா…அதை மட்டும் நீங்க புரிஞ்சிக்கிட்டாப் போதும்.

அந்த நம்பிக்கையிலே திருப்திப்பட்டு, பேசாம ஒதுங்கி உட்கார்ந்துட முடியாதும்மா…எல்லாவிதமான அனுபவங்களும் உனக்கு இந்த இதுவரையிலான வாழ்க்கையிலே கிடைச்சிட்டதா நான் முடிவு செய்திட முடியாது…இந்த வாழ்க்கை அனுபவங்கிறது பெரிய கடல் மாதிரி. அதில ஒரு துளி தான் நாம அள்ளறது…இது உன்னோட வாழ்க்கைப் பிரச்னை….நீ உன் கணவனோட சேர்ந்து சந்தோஷமா குடும்பம் நடத்தணும். அதை நாங்க கண்குளிரப் பார்க்கணும். அப்பதான் நாங்க திருப்தியா நிம்மதியா இருக்க முடியும்…

இப்போ என்னப்பா ஆகிப் போச்சு…இப்படி அடிச்சுப் பதர்றீங்க…?

பின்னே? ஆகுறது ஆகட்டும்னு சிவனேன்னு இருக்க முடியுமா? பெண்ணைப் பெத்தவன் அதுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தவுடனே கடமை முடிஞ்சி போறதில்லைம்மா…குழியிலே வச்ச செடி முளை விட்டு, வேர் பிடிச்சு, இலைவிட்டு, கிளை பரப்பி எப்படி நிமிர்ந்து நிற்குதோ அது போல நீ நின்று நிலைச்சு வாழறதைப் பார்த்து உறுதிப் படுத்திக்கணும்மா நாங்க…அதுக்காகத்தான் இத்தனை கேள்வி கேட்கிறேன்…நீ ஏன் புறப்பட்டு வந்தே? அப்படியென்ன உனக்குக் கோபம்? மாப்பிள்ளை கிட்டே கோபமேயானாலும் வீட்டை விட்டு வரலாமா? அது தப்பாச்சே…அங்கேயேயிருந்து போராடுறதுதானே அழகு…இப்படிப் பலதையும் நினைச்சு, நீயா சொல்லிடுவேன்னு பார்த்தா கிணற்றுல போட்ட கல்லுப் போல கிடக்கே…உங்கிட்டேயிருந்து பதிலை வாங்க நானும் படாத பாடு படுறேன்…அசைய மாட்டேங்குறே…இந்தக் கிழவனோட மனசைப் புரிஞ்சிக்கிட்டயாம்மா நீ…புரிஞ்சிக்கிட்டயா இல்லை அலட்சியப்படுத்திறியா? நீ இன்னைக்காவது சொல்வேன்னு எதிர்பார்க்கிறேன்…

கண்கள் கலங்கின சுமதிக்கு. கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாய் இருந்தாள். பின்பு அப்பா அமர்ந்திருந்த ஈஸிசேர் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

சொல்லுடா கண்ணு…நான் உன் அப்பா கேட்கிறேன்…எங்கிட்டே சொல்லக் கூடாதா? – தலையை வருடிக் கொடுத்தார் பத்மநாபன். அந்த அரவணைப்பில் தன்னை இழந்தாள் சுமதி.

ஏண்டா? எனிப்படி? – மனசிலே உள்ளதைக் கொட்டிடு…அப்போதான் பாரம் இறங்கும். தீர்வும் கிடைக்கும். நீயே உள்ளே வச்சு அமுக்கினேன்னா அது நலக் கேடு….சரியா?…சொல்லு….

அவரோடு எனக்குக் கொஞ்சம் மனக்கசப்பாயிடுத்துப்பா….

சொல்லி முடித்ததும் பெரிதாகச் சிரித்தார் பத்மநாபன். சுமதிக்கு எரிச்சல் வந்தது.

என்னப்பா நான் சீரியசா சொல்றேன்…நீங்க சிரிக்கிறீங்க…? இதுக்கு என்ன அர்த்தம்…?

அர்த்தம் என்னம்மா….எல்லாம் அனர்த்தம்தான்…

அப்டீன்னா?

அப்டீன்னா அப்டித்தான். புருஷன் பெண்டாட்டி ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிறதை அர்த்தமில்லாம எடுத்துக்கிட்டா அதுக்குப் பேரு அனர்த்தம்தானே…?

எனக்கு உங்க கிண்டலெல்லாம் புரியல்லே…புரியறமாதிரிச் சொல்லுங்க…

பின்னே என்னம்மா? உனக்குக் கல்யாணமாகி வருஷம் மூணாச்சு…புதுசா கண்டுபிடிச்ச மாதிரி அவரோட மனக்கசப்புங்கிறே…சிரிக்காம என்ன பண்றது? கணவன் மனைவிக்குள்ள என்னம்மா மனக்கசப்பு…? ஒருத்தருக்கொருத்தர் மாறுதலாப் பேசிக்கிறது சகஜம். கருத்து மாறுபாடுங்கிறது இருக்கத்தான் செய்யும்…அதை மனக்கசப்புன்னு அர்த்தம் பண்ணிக்கிறதா? நீ சொல்றது நல்லாவா இருக்கு? யார்கிட்ட வேணாலும் சொல்லிப்பாரு, சிரிப்பாங்க…

உள்ளதைத்தாம்ப்பா சொல்றேன்…சமீப காலமா அவரோட பேச்சும், எழுத்துமட் எதுவுமே சரியில்லைப்பா…கல்யாணத்துக்கு முன்னாடி அவருடைய எழுத்தாற்றலை மதிச்சு, அவரோட படைப்புக்களைப் படிச்சிருக்கேன்…ஒருவகையிலே அதிலே ஏற்பட்ட மதிப்புதான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதும்.கடந்த கொஞ்ச நாளா எழுதறதையே கூட விட்டுட்டார் அவர். ஏன்னு கேட்டப்போ எனக்குத்தான் எல்லாமாகவே நீ இருக்கியே. வேறென்ன புதுசா இன்னும் வேணும்னு சொன்னார். அப்படியிருந்த அவரோட சிந்தனையும், எழுத்தும் சமீபகாலமா மோசமாயிடுத்துப்பா. ஒரு குறிப்பிட்ட இடைவெளில மீண்டும் எழுத ஆரம்பிச்சா, அது நல்ல வளர்ச்சியோட அடையாளமா இருக்க வேண்டாமா? எவ்வளவோ விஷயங்களை நான் அவர் கூட டிஸ்கஸ் பண்ணியிருக்கேன். கணவன் மனைவி வித்தியாசமில்லாமே எவ்வளவோ விவாதிச்சிருக்கோம்…அப்படியிருந்தவரோட சமீப கால எழுத்துக்களையெல்லாம் நீங்க படிச்சீங்கன்னா நான் சொல்றதை நம்புவீங்க…

பத்மநாபனுக்கு ஒன்றும் புரியவில்லை. எழுத்தில் வந்த சிக்கல் போலிருக்கிறது. அவர்களுக்குள்தான் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் போலும் என்று நினைக்க ஆரம்பித்தார். அவருக்குச் சலிப்பாய் இருந்தது. எதானாலும்தான் என்ன அங்கு வைத்தே சண்டையைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே? இங்கு கிளம்பி வந்து ஏன் கழுத்தறுக்க வேண்டும்? கல்யாணம் பண்ணிக் கொடுத்து, அப்பாடா என்று நிம்மதியாய் இருக்க முடிகிறதா? இதையெல்லாம் சொன்னால் யார் புரிந்து கொள்கிறார்கள் இந்தக் காலத்தில்? வயதானவர்கள் பாடு பாடுதான். ஆனாலும் அப்படியே விட்டுவிட முடியுமா? விலகல் நீண்டுவிட்டால்? பிரிவில் கொண்டு நிரந்தரமாய் நிறுத்தி விடுமே? அப்புறம் வாழாவெட்டியாய் வீட்டில் வைத்துக் கொண்டு ஊரில் தலைகாட்ட முடியுமா? என்னவெல்லாம் தொல்லை? அவருக்குத் தலை சூடாகியது. நெற்றிப் பொட்டில் வலி கிளம்பியது. கொஞ்ச நேரம் அமைதி காத்தார். அந்த நீண்ட இடைவெளி சுமதிக்கே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்தான். பிறகு ஆரம்பித்தார்.

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை – 11புறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *