திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் காதலன் – காதலிக்கிடையே குழந்தை உருவாகிவிடுகிற சமயம் காதலன் வேலை தேட வெளி நாட்டுக்கு சென்றுவிடுகிறான். காதலனின் பொறுப்பற்ற தன்மையில் ஏற்கனவே வெறுப்புற்று விடுகிற ஜாக்குலின், குழந்தை பெற்றபின் அதை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுகிறார். குழந்தை பிற்பாடு இறந்துவிடுகிறது. தொடர்ந்து காதலர்கள் பிரிய நேரிட, ஜாக்குலின் வேறு ஒருவருடன் மணமாகி செட்டில் ஆகிவிடுகையில், இறந்த குழந்தை பேயாகி வருவதுடன் அது என்ன கேட்கிறது என்பது தான் கதை.
உண்மையை சொல்லப்போனால், இப்படியெல்லாம் நிஜத்தில் நடப்பதில்லை. திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளும் காதலர்கள், பெரும்பாலும் ஜாக்கிரதையாகவே இருக்கிறார்கள். விரல் நுனியில் வந்துவிட்ட தகவல்கள், எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ, இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் நன்றாகவே பயன்படுகிறது.
இந்த பின்னணியில் இந்தப் படத்தை 100% கற்பனை கதை என்று சொல்லலாம். ஏனெனில், பேய் பிசாசு என்பதுவும் நிரூபிக்கப்படவில்லை.
வெளிப்படையாக நடப்பதில்லை என்றாலும் பையனும் பெண்ணும் அவரவர் வீட்டுக்குள் இருந்தபடி, லிவிங் டுகெதராக(!?) இருப்பது இப்போதெல்லாம் நிறைய நடக்கிறது தான்.
எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் திருமணத்தில் நுழையும் பெண்களுக்கு திருமண வாழ்க்கை பெருத்த ஏமாற்றத்தை தருகையில், இது போன்ற திருமணத்துக்கு முன்னான உறவுகள் தரும் நினைவுகளே அவர்களை அந்த ஏமாற்றத்தை கடந்து போகும் தைரியத்தை தருகிறது என்று சொல்லலாம். ஆனால், இந்த வாதம், திருமண பந்தத்தில் ஒரு பெண்ணின் நியாயமான எதிர்பார்ப்புகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும்.
சில கேள்விகள்.
1. திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்து வெற்றிகரமாக பிள்ளை வரை போகாமல் , சேர்ந்து வாழ முடிந்த ஆண்கள், திருமணத்துக்கு பிறகு மனைவி என்கிற பெண்ணை ஏன் இம்ப்ரஸ் செய்ய முடிவதில்லை, ஏன் பெண்ணாக நடத்த முடிவதில்லை?
2. திருமண வாழ்வில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்புகளை 100% பரிபூரணமாக திருப்தி செய்யும் ஆண்களை கணவனாக பெற்ற பெண்களில் பலர், திருமணத்துக்கு முன்னான இவ்வகையான முறையற்ற உறவுகள் தரும் அனுபவங்களால், ஒரு குற்ற உணர்வுடனேதான் மணவாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். இந்த அனுபவங்களால், அவர்களின் மனதுக்கு நிறைவான கணவன் அமைந்தும், அவர்களால் அந்த மண வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் இந்த குற்ற உணர்வு தடுத்தபடியே தான் இருக்கிறது. இது தேவையா?
3. திருமணம் என்று வருகையில் கணவன் நன்றாக படித்தவனாக, லட்ச ரூபாய் சம்பாதிப்பவனாக , அமேரிக்க மாப்பிள்ளையாக பார்க்கும் பெண்கள், மணமாகி வந்ததும் கேட்கும் முதல் கேள்வி, ‘இது காறும் சம்பாதித்த பணம் எப்படி சேமிக்கப்பட்டிருக்கிறது?’ என்பதுதான். ஆனால், மேற்சொன்ன, திருமணத்துக்கு முன்னான உறவுகளில், அப்போதைக்கு தனது சம்பாத்தியத்தில் பாதியையோ, முழுமையையோ சேர்ந்து வாழும் காதலனுக்காக செலவு செய்துவிடும் இந்த பெண்கள், கல்யாணம் ஆனதும் கணவனிடம் ‘இது காறும் சம்பாதித்த பணம் எப்படி சேமிக்கப்பட்டிருக்கிறது?’ என்று கேட்பது நியாயமாகப் படவில்லை.
4. திருமணத்துக்கு முன்னான இது போன்ற உறவுகளால், கருத்தடை மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதால் கர்ப்பப்பை பாதிக்கப்படுகிறது என்பது மருத்துவ உண்மை. கர்ப்பப்பை பாதிக்கப்படும் பெண்கள் பலருக்கு, திருமணத்துக்கு பிறகு கணவனுடனான உறவில் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் வருகிறது. இந்த பின்னணியில், திருமணம் என்கிற வாழ் நாள் பொறுப்பை தட்டிக்கழிக்கும் தற்காலிக பொறுப்பற்ற ஆண்களுடனான உறவுகளுக்காய் உடலை கெடுத்துக்கொண்டுவிட்டு, திருமணம் என்கிற வாழ் நாள் பொறுப்பை ஏற்கும் கணவர்களின் காசில் மருத்துவமனைகளில் குழந்தைபேற்றிற்காய் காத்திருப்பது என்ன நியாயம்?
திரைப்படத்தில் இந்த கேள்விகளை யாரும் எழுப்பவில்லை.
நவீனத்துவ உலகிற்கான படம் என்று சொல்ல வருகிறார்களோ என்னமோ? நவீனத்துவத்திற்கும், சமூக கடமை மற்றும் பொறுப்பை தட்டிக்கழிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
“திருமணம் செய்துகொள்வதாகத்தான் இருந்தார்கள். இடையில் இப்படி ஆகிவிட்டது” என்கிற சால்ஜாப்பை வெகுகாலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால் காதல் செய்வீர், பீட்ஸா என்று ஒரு பெரிய லிஸ்டே போடலாம்.
துணைக்கென காத்திருப்பது ஒரு சுகம்.
ஆனால், காத்திருப்பதும், நவீனத்துவ வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதும், அவரவர் விருப்பம் தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
என் வரையில் துணைக்கென காத்திருப்பதில் நிறைய புத்திசாலித்தனங்களும், செளகர்யங்களும், அர்த்தங்களும், ஒரு முறைப்படுதலும் இருக்கிறது என்று தான் சொல்வேன். அது பிற்போக்குத்தனமாக தெரியலாம். அந்த புத்திசாலித்தனங்களுக்காகவும், செளகர்யங்களுக்காகவும், அர்த்தங்களுக்காகவும், ஒரு முறைப்படுதலுக்காகவும் காத்திருப்பது என் அளவில் ஒரு சரியான வழியாகவே தெரிகிறது.
– இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)
- அவுரங்கசீப் சாலை பெயரை அப்துல் கலாம் சாலை என்று மாற்றும் செய்தி கேட்டதும் நான் ஏன் ஆனந்தக் கூத்தாடினேன் ?
- மருத்துவக் கட்டுரை – பக்கவாதம்
- தொடுவானம் 93. விடுதி விழா.
- பொன்னியின் செல்வன் படக்கதை – 11
- அவன், அவள். அது…! -9
- புறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை
- இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர அமைப்புத் திறனும்
- செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903)
- கொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்
- தேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்
- புத்தன் பற்றிய கவிதை
- நித்ய சைதன்யா – கவிதைகள்
- ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015
- உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்