அவன் அவள் அது – 11

This entry is part 10 of 16 in the series 22 நவம்பர் 2015

 

      இந்த அளவுக்கு உன் சித்தப்பனை மதிச்சு நடந்த விஷயம் முழுவதையும் நீ எங்கிட்டே சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம்…

நிதானமாகச் சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தார் சேதுராமன்.

தலை குனிந்தவாறே நின்றிருந்தான் கண்ணன்.

நேற்று நீ ஆபீஸ் போயிருந்தப்போ உனக்குத் தெரியாமே பத்திரிகைகளிலே வந்த உன்னுடைய கதைகளையெல்லாம் எடுத்துப் படிச்சேன். நீ தப்பா நினைக்க மாட்டேன்னு நினைக்கிறேன். இந்தத் துறையிலே முன்னேறணும்ங்கிற வெறி உன்னை கொஞ்சம் ஆபாசமா எழுதத் தூண்டியிருக்கு. இதை நீ ஒத்துப்பேன்னு நினைக்கிறேன். பத்திரிகைக்காரங்களோட தேவையோ அல்லது படிக்கிறவங்களோட ரசனையோ எனக்குத் தெரியாது. காலத்துக்கு ஏற்றமாதிரி அதை நாடி பிடிச்சுப் பார்த்து உன்னை நிலை நிறுத்திக்கணும்ங்கிற வேகத்துல நீ இந்த மாதிரி எழுத்தைக் கையாண்டிருக்கேங்கிறது மட்டும் புரியுது. மூணு வருஷத்துக்கு முந்தி, அதாவது உனக்குக் கல்யாணம் ஆன புதுசிலேயும் அதற்கு முன்னாலேயும் உன் எழுத்து இப்படியில்லை. ரொம்பத் தரமா இருந்திருக்கு. ஆனா அத்தி பூத்தாற்போலத்தான் பிரசுரமாயிருக்கு. அந்த உன் எழுத்தைப் படிச்சிட்டு இப்போ நீ எழுதறதைப் பார்த்தவுடனேதான் சுமதியாலே தாங்க முடியலைன்னு நான் நினைக்கிறேன். ஏன்னு சொன்னா உன் மேல அவ ரொம்ப மதிப்பு வச்சிருந்திருக்கா. உன்னைக் கணவனா அடைய சம்மதிச்சதுக்கே உன்னுடைய நல்ல சிந்தனைகளும் அதனுடைய வெளிப்பாடும்தான் காரணமா இருந்திருக்கணும். அதனாலதான் தன் கணவன்கிட்டேயிருந்து இம்மாதிரியான மலினமான எழுத்துக்கள் வர்றதை அவளாலே பொறுத்துக்க முடியலை. தொடர்ந்து நீ எழுதறதையே விட்டிருந்தாக்கூட அவ பாதிக்கப் பட்டிருக்கமாட்டா. கவலைப் பட்டிருக்கமாட்டா. ஏன்னா குடும்ப வாழ்க்கைங்கிறது ஒரு டர்னிங் பாயின்ட். அதை செம்மையா நடத்திப் போனாலே போதும் எந்தவொரு பெண்ணும் ஒரு ஆண்கிட்டே சரண்டர் ஆயிடுவா. ஆனா சீக்கிரம் பணக்காரன் ஆகணுங்கிற வெறியிலே எப்படியொருத்தன் லாட்டரிச்சீட்டை, இப்போ அது இல்லாட்டாலும்கூட இருந்த காலங்களிலே பலரும் அதுவே கதின்னு கிடந்தாங்களே அதுபோல, சூதாட்டங்களை நம்பிக்கிடக்கிறானோ அது போல, எழுத்துத் துறையிலே புகழின் உச்சியை அடையணுங்கிறதுக்கு நீ தேர்ந்தெடுத்த பாதை சரியில்லை. நீ தொடுத்த அந்தப் பாதை குறுக்கு வழியா தெரிஞ்சிருக்கு அவளுக்கு. அதை அவளால சகிக்க முடியலை. ஜீரணிக்க முடியலை. ஆகையினாலதான் தன்னுடைய தற்காலிகப் பிரிவானது தன் கணவரை மாற்றுதா பார்ப்போம்ங்கிற இந்த முடிவை சுமதி எடுத்திருக்கா. இதுதான் காரணம்னு நான் நினைக்கிறேன். என் அறிவுக்கெட்டியவரை இது சரியான கணிப்பாத் தெரியுது. நீ கவலைப்படாதே இதை சுமுகமா தீர்த்து வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு…. – சொல்லி முடித்தார் சேதுராமன்.

பதில் எதுவும் பேசாமல் கண்களில் நீர் மல்க நின்றிருந்தான் கண்ணன்.

Series Navigationதொடுவானம் 95. இதமான பொழுது“வானுயர்ந்து எழுந்துள்ள கட்டிடங்களின் அத்திவாரக்கற்கள் வெளியுலகிற்கு தெரிவதில்லை. “
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    எழுத்தாளர்களின் குடும்ப வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகள் எழுவது இயல்பே. கற்பனையில் எழுதினாலும் சில வேளைகளில் அது சொந்த அனுபவமா என்ற கேள்வி எழவே செய்யும். இது பெண் எழுத்தாளர்களுக்கு இன்னும் அவலத்தை உண்டுபண்ணும். இதனால் அவர்கள் மனதில் தோன்றியதை எழுத தயங்குவர். எங்கே அது அவருடைய அனுபவமா என்ற கேள்வியும் எழும்.
    எழுத்தாளர்களுக்கு இன்னொரு பிரச்னையும் உள்ளது. பல எழுத்தாளர்களின் தொடர்பு கிட்டும்போது அதில் பெண் எழுத்தாளர்களும் இருக்கலாம். அவர்களுடன் பேசிப் பழகுவது கூட சந்தேகத்தை உண்டுபண்ணலாம். மேலும் வாசகர்களின் தொடர்பும் உள்ளது. அதிலும் பெண்கள் இருக்கலாம். அவர்கள் மீதும் சந்தேகம் கொள்ளலாம்.
    இந்த கதையில் சுமதி கண்ணனின் எழுத்து மீது கோபம் கொள்கிறாள். அவன் ஆபாசமாக எழுதுகிறானோ இல்லையோ அவனுடைய எண்ணம் அவ்வாறு இருப்பதாக அவள் எண்ணி அவனை வெறுக்கிறாள்.
    அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அவன் எழுத்தை அதற்கேற்ப அவனால் மாற்றிக்கொள்ள முடியுமா? அல்லது எழுதுவதையே விட்டுவிட முடியுமா?
    இப்படியொரு அருமையான கருப்பொருளை உஷாதீபன் இந்தக் கதையில் கையாண்டுவரும் விதம் அருமையும் இயல்பாகவும் உள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் அவனுடைய எழுத்தின் மீது காதல் கொண்டு மனைவி ஆகிவிட்ட சுமதி அதே எழுத்து காரணமாக அவனையே இழக்கத் துணிவது.
    இந்த சிக்கலை எவ்வாறு கதாசிரியர் அவிழ்ப்பார் என்பது சுவையானதாக இருக்கும் என்று நாம் நம்பலாம்…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      ushadeepan says:

      அடுத்த வாரத்தோடு முடியும் சார்…அப்போது நீங்கள் எதிர்பாராத சற்று ம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு முடிவைக் காண்பீர்கள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *