சூடகம் கரத்தில் ஆட ஆடிர் ஊசல்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 16 of 16 in the series 22 நவம்பர் 2015

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரியப்பனையங்கார் அருளிச் செய்த சீரங்க நாயகியார் ஊசல் எனும் நூலின் மூன்றாம் பாடல் பிராட்டியார் ஊசல் ஆடும்போது பிராட்டியாரின் திருவுருவில் அமைந்திருக்கும் அணிகலன்கள் ஆடும் அழகைச் சுட்டிக் காட்டுகிறது. ’ஆட’ ‘ஆட’ என்று ஒவ்வோர் அடியிலும் ஓசைநயத்துடன் மற்றும் சொல்லினிமையுடன் விளங்குகிறது இப்பாடல் :
”கடிமலரும் மதுகரமும் குழலில் ஆடக்
கத்தூரி யுடன்வேர்வும் முகத்தில் ஆட
நெடுவிழியும் மணித்தோடும் செவியில் ஆட
நேர்வளையும் சூடகமும் கரத்தில் ஆட
வடமணியும் கண்டிகையும் தனத்தில் ஆட
மாகலையும் மேகலையும் மருங்கில் ஆட
திடமறையும் பரிபுரமும் பதத்தில் ஆடச்
சீரங்க நாயகியார் ஆடிர் ஊசல்”

தாயார் ஊசல் ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் ஆடுவதால் அவரின் கார்குழல் ஆடுகிறது. அது ஆடுவதால் அதில் உள்ள மலரும் அம்மலரில் உள்ள வண்டுகளும் ஆடுகின்றன. நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியில் பிராட்டியின் குழலைப் பற்றிக் கூறும் போது, “உன்திரு மார்வத்து மாலைநங்கை வாசம்செய் பூங்குழலாள்” [10—10—2]; என்று அருளிச் செய்வார். மேலும் அக்குழலில் உள்ள மலர்கள் யாவும் அன்றலர்ந்தவை; எனவே அதில் உள்ள தேனை அருந்த வண்டுகள் வருகின்றன.
திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணபுரம் திவ்ய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமாளை மங்களாசாசனம் செய்ய வருகிறார். அப்போது “வண்டுகள் மொய்க்கும் படியான மலர்களைச் சூடிய கூந்தலை உடைய திருமகளின் கடைக்கண் பார்வையை அனுபவிக்கும் எம்பெருமான்” என்னும் பொருள்படி,
”வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கம் கண்டான் கண்டு கொண்டுகந்த கண்ணபுரம் நாம் தொழுமே” [8-6-1]
என்று அருளிச்செய்கிறார். அடுத்து பிராட்டியின் திருமுகத்தைப் பற்றி இப்பாடல் கூறுகிறது. அத்திருமுகத்தில் கத்தூரி மணம் வீசுகிறது. அங்கு வியர்வை அரும்பியிருக்கிறது. திருமங்கை மன்னன் ”திருவிடவெந்தை” திவ்யதேசத்தில் எழுந்தருளியுள்ள தாயாரின் திருமுகத்தைச் சொல்லும்போது “திவளும் வெண்மதி போல் திரிமுகத்து அரிவை” [2-7-1] என்று போற்றி “வெண்மையான சந்திரனைப் போன்றது என்று உவமை கூறுவார். அந்தத் திருமுகத்தில் உள்ள நீண்ட விழிகளும், செவியில் உள்ள நவரத்தின மணித்தோடும் ஆடுகின்றனவாம். பிராட்டியின் அழகான கண்களைக் காட்டுகையில், பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதியின் இறுதிப் பாடலில்,
”வானமரும் மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூமேல் திரு” என்று அருளிச் செய்வார்.

மேலும், பிராட்டியின் கண்களைத் திருமங்கை ஆழ்வார், ”ஒண்கண் மடவரல்”[5-3-5] என்றும், ”வாள்நெடுங்கண்” [8-10-1] என்றும், குறிப்பிடுவார்.
அடுத்து பிராட்டி அணிந்துள்ள நேர்வளையும் சூடகமும் ஆடுகின்றன என்கிறது பாடல். இந்த வளை என்பது கையில் மட்டுமன்று; தோளிலும் அணியக் கூடியதாக இருந்திருக்கிறது. திருப்பாவையில் “சூடகமே! தோள்வளையே!” என்று வருகிறது. திருவழுந்தூர் பெருமானை மங்களாசாசனம் செய்யும் திருமங்கை ஆழ்வார் ,
”பந்தார் மெல்விரல் நல்விளைத் தோளி
பாவை பூமகள் தன்னொடும் உடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய்” [7-7-2]
என்று அருளிச்செய்கிறார். வளைகளை அணிந்த தோள்களை உடைய திருமகள் என்று அவர் போற்றுகிறார். சூடகம் என்பது வைரம் இழைக்கப்பட்ட கையில் அணியும் அணியாகும். பிராட்டியின் திருமார்பில் அணிந்துள்ள வடம் போன்ற மணிமாலைகளும் கண்டிகை எனும் ஆரமும் ஆடுகின்றன. பிராட்டியின் திருமார்பு பெருமான் தங்கியிருக்கும் இடமாகும்.
பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதியின் மூன்றாம் பாடலில்
”மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன்” என்று அருளிச்செய்து அப்பெருமாள் தங்கியிருக்கும் இடம் தாயாரின் திருமார்பு என்று காட்டுவார்.
அடுத்து ஊசல் ஆடுகையில் சீரங்கத் தாயாரின் இடையின் ஆடையும், மேகலாபரணமும் ஆடுகின்றனவாம். திருநறையூர்த் தாயாரின் மேனியழகைப் பாடும்போது, திருமங்கை ஆழ்வார்,
”மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை” [6-9-6]
என்று அருளிச் செய்வார். அதாவது மின்னல் போன்று நுட்பமான இடையை உடையவர் என்று குறிப்பிடுவார். மேலும் திருப்பிரிதி எனும் திவ்யதேசத்தில் எழுந்தருளி உள்ள தாயாரைப் பாடும்போது,
”அரைசெய் மேகலை அலர்மகளவள்” [1-2-5] என்பார் திருமங்கை மன்னன். இவ்வாறு ”திருமுடியில் உள்ள கார்குழலில் தொடங்கி இறுதியில் பிராட்டியின் திருவடியில் அணிந்துள்ள அணிகலன்களான பரியகமும், நூபுரமும் ஆடுகின்றன ” என்று சீரங்கத்தாயார் ஊசல் ஆடும் அழகை ”சீரங்க நாயகியார் ஊசல்” எனும் நூலில் கோனேரியப்பனையங்கார் பாடியுள்ளார்.
—————————————————————————————————————————–

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2015 மாத இதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *