மருத்துவக் கட்டுரை- மார்பக தசைநார்க் கட்டி ( பைப்ரோஅடினோமா ) ( Fibroadenoma )

This entry is part 11 of 15 in the series 29 நவம்பர் 2015
 Fibroadenoma1(1)Fibroadenoma3

                                                                                          

பெண்களுக்கு மார்பில் கட்டி உண்டானால் அது புற்று நோயாக இருக்குமோ என்ற பயம் வருவது இயல்பானது. அது நல்லதுதான். மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நம் பெண்களிடையே வளர்ந்துள்ளது நல்ல அறிகுறிதான். ஆனால் எல்லா மார்பகக் கட்டிகளும் புற்று நோயாக இருக்காது. புற்று நோய் இல்லாத சாதாரணக் கட்டிகளும் மார்பகத்தில் தோன்றலாம். அவற்றில் ஒன்றுதான் பைப்ரோஅடினோமா என்னும் தசைநார்க் கட்டி. மார்பில் தோன்றியுள்ள கட்டி எந்த வகையானது என்பதைத்  துவக்கத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதே விவேகமானது.
பெண்களின் மார்பகம் பால் சுரக்கும் சுரப்பிகள் ( glands ), பாலை முலைக் காம்புக்கு கொண்டு செல்லும்  குழாய்கள், ( ducts ), நார்ச் சதைகள் ( fibrous tissue , கொழுப்பு ( fat ) ஆகியவற்றால் உருவானது. இவை ஒன்று சேர்ந்து ஒரு குலை (போன்று ( lobule ) காணப்படும். சில வேளைகளில் இந்த குலையைச் சுற்றி சுரப்பியும் குழாயும் வளர்ந்து ஒரு கட்டியாக மாறும். இது சாதனான கட்டிதான். இது புற்று நோயாக மாறாது. இது பெரும்பாலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாக உண்டாகிறது. இந்த கட்டி ரப்பர் போன்ற தன்மையுடையது. இது தோலுக்கு அடியில் எளிதாக நகரக்கூடியது. இதனால் வலி ஏற்படாது. பெரும்பாலும் ஒரு கட்டிதான் தோன்றும். ஆனால் ஒன்றுக்கு மேலான கட்டிகளும் உண்டாகலாம். பெண்கள் வயதுக்கு வந்தபின்பும், இளம் பெண்களுக்கும் இது தோன்றலாம். அதுபோன்று கர்ப்பகாலத்திலும், பாலூட்டும் காலத்திலும் இந்த கட்டி பெரிதாகி பின் தானாக குறையலாம். உருண்டையான இக் கட்டி 1முதல் 3 சென்ட்மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கும். மார்பைத் தடவினால் ஒரு கோலிக் குண்டு உள்ளே உள்ளதுபோன்று உணரலாம்.

                                                                                                                                                           அறிகுறிகள்
          * மார்பில் உருண்டையான கட்டி
          *  சற்று கடினம் அல்லது ரப்பர் போன்ற அழுத்தம் கொண்டது.
          * இலகுவாக நகரக்கூடியது
          * வலி இல்லாதது.
                                                                                                                                                    பரிசோதனைகள்
           * மேமோகிராம் – இதில் எக்ஸ்ரே கதிர்களின் மூலமாக மார்பின் பகுதிகள் படம் பிடிக்கப்படும். கட்டி உள்ளது வட்ட வடிவில் தெரியும்.
          * அல்ட்ராசவுண்டு பரிசோதனை – இதில் கட்டி கடினமானதா அல்லது நீர் நிறைந்ததா என்பதைக் காணலாம். 30 வயதுக்குக் குறைவான பெண்களிடம் இந்த பரிசோதனை .செய்து பார்க்கலாம்.
          * ஊசி குத்தி பரிசோதனை – இதில் கட்டிக்குள் மெல்லிய ஊசி குத்தி அதிலிருந்து நீர் அல்லது திசு  பரிசோதனைக்கு எடுக்கப்படும். நீர் இருந்தால் அது நீர் கட்டி என்று நிர்ணயம் செய்யலாம்
                                                                                                                                                  சிகிச்சை முறைகள்   .
          பரிசோதனைகளின்மூலம் மார்புக் கட்டி பைப்ரோஅடினோமா என்பது நிச்சயமானால் அறுவைச் சிகிச்சைத் தேவையில்லை. ஆனால் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
          அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தால்  மருத்துவர் அந்த கட்டி முழுவதையும் சுற்றியுள்ள ஆரோக்கிய பகுதியில் கொஞ்சமும் வெட்டி அப்புறப்படுத்தி அதை பரிசோதனைக்கு அனுப்புவார்.
          சிலருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கிரையோஅப்ளேஷன் என்ற முறையில், வாயு செலுத்தி அந்த கட்டியை உறையவைக்கும் சிகிச்சையும் சில பெரிய மருத்துவமனைகளில் உள்ளது.
          அறுவைச் சிகிச்சைக்குப்பின் ஒருசிலருக்கு மீண்டும் இதுபோன்ற கட்டி தோன்றும் வாய்ப்பு உள்ளது. அதையும் இதே முறையில்தான் சரி செய்ய வேண்டும்.
          இந்த மார்புக் கட்டி புற்று நோய் இல்லை என்பதால் இது பற்றி அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. எதற்கும் மார்பில் இதுபோன்ற கட்டிகள் தோன்றினால் அதை அலட்சியம் செய்யாமல் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது நல்லது.
          ( முடிந்தது )
Series Navigationவன்னி நாவல் பற்றிய என்பார்வைநாளைய பங்களா தேஷ் யாருக்கானது?
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *