உடலின் எடையைத் தாங்கி நடக்க உட்கார படுக்க உதவுவது நம்முடைய இடுப்பு. இது ஐந்து முதுகுத் தண்டு எலும்புகளால் அமைந்தது. இதை 1,2,3,4,5, இடுப்புத் தண்டு எலும்புகள் ( Lumbar Vertebra ) என்று அழைப்பதுண்டு. இவற்றின் நடுவில் வட்டமான தட்டையான இரப்பர் போன்ற தன்மைகொண்ட வடங்கள் ( intervertebral Disk )உள்ளன. இவை அதிர்ச்சியை உள்வாங்கும் பணியைச் செய்கின்றன. அதாவது ” ஷாக் அப்சார்பர் ” ( Shock Absorber ) போன்றவை. இந்த முதுகுத் தண்டு எலும்புகளை தசை நார்களும், தசைநாண்களும் ( Tendon ) தசைகளும் இறுக பற்றியுள்ளன.முதுகுத் தண்டில் மொத்தம் 32 ஜோடி நரம்பு வேர்கள் உள்ளன. இவை உடல் அசைவைக் கட்டுப்படுத்துவதுடன், உடலின் சமிக்ஜைகளை மூளைக்கும் கொண்டு செல்கின்றன.
இடுப்பு வலியை உண்டுபண்ணக்கூடிய காரணிகள்
இடுப்பு வலி உண்டாவதற்கு பரவலான காரணம் முதுகுத் தண்டு மூட்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசி காலபோக்கில் தேய்ந்துபோவதால் உண்டாகும் பின் விளைவுதான் எனலாம். வயது அதிகமாகும்போது இவ்வாறு தேய்வது இயல்பே. இதை ஸ்பான்டைலோசிஸ் ( Spondylosis ) என்கிறோம். இதில் மூட்டு எலும்பு, நடு வடத் தண்டு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது. ,ஆகவே இது முற்றிலும் மூட்டின் தொடர் செயல்பாடு காரணமாக எழுவது. அவற்றில் சில உதாரணங்கள் வருமாறு:
* Sprains and Strains – மூட்டில் சுளுக்கு அல்லது உளைச்சல் – இவைதான் பெரும்பாலான இடுப்பு வலிக்கு காரணமாக உள்ளன. சுளுக்கு என்பது தசை நார்கள் ( Ligaments ) அதிகமாக விரிவடைவது அல்லது தசை நார்கள் கிழிந்துபோவதால் உண்டாவது. உளைச்சல் என்பது தசைகள் அல்லது தசைநாண் ( tendon ) கிழிந்துபோவது.. இவை இரண்டுமே இடுப்பை வளைப்பது, பாரமான பொருளை தவறாக தூக்குவது, அல்லது அளவுக்கு அதிகமான பாரத்தை தூக்க முயல்வது போன்றவற்றால் உண்டாகிறது.
* Intervertebral Disc Degeneration – மூட்டு வட்டத் தட்டை தேய்ந்துபோவது – இதுவே வயதானவர்களுக்கு அதிகமாக உண்டாவது. இந்த தட்டை இரப்பர் போன்ற தன்மையை இழந்துபோவதால் குனியும்போதும், நிமிரும்போதும் வலி உண்டாகும். வயதாகும்போது இது இயற்கையாகவே இவ்வாறு தேய்ந்துபோகும்.
* Herniated or Ruptured disc – வெளியேறிய அல்லது உடைந்துபோன தண்டு வடம். இதனால் கடும் வலி உண்டாகும்.
* Radiculopathy – முதுகுத் தண்டு நரம்பு வேர்களில் அழுத்தம் காரணமாக உண்டாகும் வலி இது. வலியுடன் மதமதப்பும் கூசும் உணர்ச்சியும் அந்த நரம்பு செல்லும் பாதையிலும் சுற்றிலும் உண்டாகும்
* Sciatica – சையேட்டிக் நரம்பு என்பது இடுப்பிலிருந்து பிட்டம் வழியாக காலின் பின்புறம் செல்லும் பெரிய நரம்பு. இது அழுத்தமுற்றால் சுரீரென்ற கடும் வலி அது செல்லும் பாதையில் உண்டாகும். காலில் கடும் குடைச்சல் உண்டாகி நடப்பதில் சிரமம் உண்டாகும். இந்த நரம்பு மூட்டு எலும்புக்கும் அதன் தண்டு வட்டத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்டால் வலியுடன் மதமதப்பும் கால் பலவீனமும் உண்டாகும்.
* Spondylolisthesis – இடுப்பு எலும்பு நழுவுதல் – இதில் முதுகு எலும்பில் ஒன்று நழுவி அதன் வழியாக் வெளியேறும் நரம்பை அழுத்துவதால் வலி உண்டாகும்.
* Traumatic Injury – விபத்துகளால் உண்டாகும் வலி – இது. வழுக்கி விழுவது, விளையாட்டுகளில் விழுவது, சாலை விபத்து போன்றவற்றில் தசை நார்களும், தசையும் அடிபட்டு கிழியலாம். அதனால் உண்டாகும் வலி இது.
* Spinal stenosis – முதுகுத் தண்டு எலும்புகளுக்குள் உண்டாகும் சுருக்கம் காரணமாக நரம்புகள் அழுத்தமுற்று வலியை உண்டுபண்ணும்.
* Skeletal Iregularites – எலும்புகளில் குறைபாடு – இதனால் முதுகுத் தண்டு வளைந்து அதனால் நரம்புகள் அழுத்தமுற்று வலி ஏற்படலாம்.
இடுப்பு வலியை உண்டுபண்ணும் இதர காரனங்கள்
* மூட்டு அழற்சி நோய்கள் – எலும்பு மூட்டு அழற்சி ( Osteoarthritis ), ரூமேட்டாய்ட் மூட்டு அழற்சி ( Rheumatoid Arthritis ) போன்ற நோய் வகைகள்.
* எலும்பு நலிவு நோய் – Osteoporosis – இது குறிப்பாக பெண்கள் மெனோபாஸ் எய்தியதும் அவர்களின் எலும்புகள் கால்சியம் இழப்பால் வலுவிழந்துபோகும். அதனால் வலி உண்டாகும்.
* புற கருப்பை திசுக்கள்- Endometriosis – இதில் கருப்பை திசுக்கள் அதன் வெளியே வேறு இடத்தில் இருக்கும்.இது உண்டானாலும் இடுப்பு வலி உண்டாகும்.
* வயது – 30 வயதில் முதன்முதலாக இடுப்பு வலி உண்டாகி வயது உயரும்போது அடிக்கடி வலி உண்டாகலாம்.
* கர்ப்பம்- கரு வளரும் காலத்தில் இடுப்பு வலி உண்டாவது இயல்பானது.
* உடல் பருமன் – அதிகமான உடல் பருமனால்கூட இடுப்பு வலி உண்டாகலாம்.
* வேலை – பாரம் தூக்கி வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி உண்டாகும்.
* பள்ளி செல்லும் பிள்ளைகள் கனமான புத்தகப் பையைச் சுமந்து சென்றால் இடுப்பு வலி உண்டாகும். இதனால் பள்ளி செல்லும் பிள்ளைகள் தங்களுடைய உடல் எடையில் 15 முதல் 20 சதவிகித எடை கொண்ட புத்தகப் பையைச் சுமந்து செல்லலாம் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.
பரிசோதனைகள்
மருத்துவர் நோயாளியிடம் வலி பற்றிய கேள்விகள் கேட்டு பரிசோதனை செய்தாலே ஓரளவு காரணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். இருப்பினும் சில பரிசோதனைகளும் செய்துகொள்வது நல்லது. அவை வருமாறு:
* எக்ஸ்ரே – ( X – Ray ) இதில் எலும்புகளின் அமைப்பு , அவற்றில் உண்டான மாற்றங்கள் , எலும்பு முறிவு அல்லது நழுவல், இடுப்புத் தண்டு எலும்புகளுக்கு உள்ள இடைவெளி போன்றவை தெரியும். தசை நார், தசைகள் தெரியாது.
* சி. டி. ஸ்கேன் ( C T Scan ) – இதில் முதுகுத் தண்டு வடம் நழுவியது, முதுகுத் தண்டு எலும்பு குறுகுதல், முதுகு எலும்பு அருகில் கட்டிகள் போன்றவற்றைக் காணலாம்.
* மைலோகிராம் – ( Myelogram ) இதில் முதுகுத் தண்டில் சாயம் ஏற்றப்பட்டு படம் பிடிக்கப்படும். அதன் மூலம் தண்டு வடம் நழுவி நரம்புகளில் அழுத்தம் உள்ளதை காணலாம்.
* எம்.ஆர்.ஐ, ( M R I ) – இதில் காந்த சக்தி பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் எலும்பு, தசை நார், தசை, இரத்தக் குழாய் போன்ற அனைத்தும் பார்த்து நோய் உள்ள பகுதியைக் காணலாம்.
* அல்ட்ராசவுண்ட் ( Ultrasound ) – இதன் மூலமும் எலும்புகளைச் சுற்றியுள்ள தசை னார்கள், தசைகள், இரத்தக் குழாய்கள், நரம்புகள் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளைப் பார்க்கலாம்.
* எலும்பு ஸ்கேன் ( Bone Scan ) – இதன் மூலம் எலும்புகளில் அழற்சி, வீக்கம், தேய்வு, முறிவு, நழுவுதல், கட்டி போன்ற மாற்றங்களைக் கண்டறியலாம்.
* இரத்தப் பரிசோதனைகள் – இடுப்பு எலும்பில் உண்டான நோய்க்கான காரணத்தைக் கண்டறிய இரத்தப் பரிசோதனைகள் ஓரளவுக்கு உதவும்.
சிகிச்சை முறைகள்
வலி குறுகிய காலம் உடையதா அல்லது நீண்ட காலம் கொண்டதா என்பதைப் பொறுத்துள்ளது சிகிச்சை முறையும். . பரிசோதனைகள் நரம்பு பாதிப்பு அல்லது இடுப்பு தண்டு மூட்டில் பாதிப்பு என்பது நிச்சயமானால் அறுவை சிகிச்சை தேவைபப்டலாம். இல்லையேல் வலி குறைக்கும் மாத்திரைகளாலும், பயிற்சி சிகிச்சையாலும் ( Physiotherapy ) குணமடையலாம். அறுவை சிகிச்சைக்குப் பின்பு நல்ல பலன் கிட்டும் என்றால்தான் அது மேற்கொள்ளப்படும். சில நிவாரண முறைகள் வருமாறு:
* சூடு அல்லது குளிர்ந்த ஒத்தடம் – இது ஓரளவுதான் வலியைக் குறைக்கும். தசை நார்களின் இறுக்கத்தைக் குறைப்பதின் மூலமாக வலியைக் குறைக்க உதவும்.
* ஓய்வு – நீண்ட ஓய்வு படுக்கையில் தேவையில்லை.அதற்கு மாறாக அன்றாட அலுவல்களை விரைவில் செய்ய முயலவேண்டும். தசைகளுக்கு வேண்டிய பயிற்சியைத் தரவேண்டும்.
* பயிற்சி சிகிச்சை ( Physiotherapy ) – மூட்டு, தசைகளுக்கு தேவையான பயிற்சிகள் தருவதன் மூலம் வலியைக் குறைப்பதோடு விரைவில் நன்றாக நடந்து செல்லவும் உதவும். இதில் சிலருக்கு இழுக்கை ( Traction ) செய்து எலும்புகள் நேராக்கப்படும்.
* மருந்துகள்- பலதரப்பட்ட வலி நிவாரணி மருந்துகள் உள்ளன. சிலவற்றை நேரடியாகக்கூட பார்மசிகளில் வாங்கலாம்.இந்த மருந்துகள் இரைப்பையில் புண் உண்டாக்கலாம். ஆதலால் மருத்துவரின் ஆலோசனையுடன் இவற்றை உட்கொள்வதே நல்லது. வலி நிவாரணிகள் வருமாறு:
* ஆஸ்பிரின் , கோடீன் போன்ற வகையான மாத்திரைகள்.
* NSAID என்ற வகையான மாத்திரைகள். இதில் புரூபன், ஆர்க்கோக்சியா வால்ட்டரன் போன்ற மாத்திரைகள் அடங்கும்.
* ஊசிகள். – சிலருக்கு இடுப்பில் வலிக்கும் இடத்தில ஸ்டீராய்ட் ஊசி போட்டு தற்காலிகமாக வலியைக் குறைக்கலாம்.
* அறுவைச் சிகிச்சை – இடுப்பு தண்டு எலும்பில் அல்லது நரம்பில் அல்லது தசையில் எத்தகையான பிரச்னை என்பதை பரிசோதனைகளின் மூலம் தெரிந்தபின்பு,அதை சரிப்படுத்த முடியும் என்றால் அறுவை சிகிச்சை மேற்கோள்ளப்படும். அதன் பிறகும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப நாட்கள் ஆகும். அறுவைச் சிகிச்சையிலும் சில பின்விளைவுகளும் உள்ளன. ஆகவே உண்மையில் வேறு வழியின்றி தேவைபட்டால்தான் அதைச் செய்துகொள்ளவேண்டும். அறுவைச் சிகிச்சைகள் பவிதமானவை உள்ளன.அவற்றில் யாருக்கு எது தேவையானது என்பதை எலும்பு சிகிச்சை நிபுணர்தான் முடிவு செய்வார்.
உங்களுக்கு கனமான வேலை செய்தால் வலிப்பதால் இடுப்பில் முதுகுத் தண்டில் தேய்வு உண்டாகியிருக்கலாம். அல்லது நடு வட்டத் தட்டை விலகியும் இருக்கலாம். நீங்கள் எலும்பு சிகிச்சை நிபுணரைப் பார்த்து பரிசோதனைகள் செய்து சிகிச்சைப் பெறுவதே நல்லது.
( )முடிந்தது )
- யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு
- இடுப்பு வலி
- மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி
- தொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்
- செவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்
- துளிதுளியாய்… (ஹைக்கூ கவிதைகள்)
- என் இடம்
- துன்பம் நேர்கையில்..!
- அழைப்பு
- பாதிக்கிணறு
- திருக்குறளில் இல்லறம்
- எனது ஜோசியர் அனுபவங்கள் – 1
- சென்னை, கடலூர் குடும்பங்களை தத்தெடுக்கும் செயல்திட்டம்..
- இருட்டில் எழுதிய கவிதை