தினம் என் பயணங்கள் – 47 யுக்தி

This entry is part 12 of 23 in the series 20 டிசம்பர் 2015

தினம் என் பயணங்கள் – 47
யுக்தி

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

இந்த யுக்தி எனக்கு புதியதாகத் தெரிந்தது. அவன் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். மாநிறம். முகத்தில் அம்மைத் தழும்புகள், அவனை விகாரமாய் காண்பிப்பதற்கு பதிலாக வித்தியாசப்படுத்தியிருந்தது.

அடர் கத்தரிபூ நிறத்தில், கருநிற பட்டைக் கோடுகள் தரித்த சட்டை அணிந்திருந்தான்.

“மேடம் கார்ட் வந்திருக்காம், என் ஃபிரண்ட் சொன்னான்” என்றான்.

“எங்க அப்ளே பண்ணீங்க ?”

“ஆன்லைன்ல”

“ஆன்லைன்ல பண்ணதெல்லாம் இங்க வராது, 25 ரூபாய் பணம் கட்டி, தொலைஞ்சுப் போச்சுன்னோ, இல்ல நஞ்சு போச்சுன்னோ கொடுக்கற வங்களுக்கத்தான் கார்ட் இங்க இருக்கும்” என்றேன்.

“இல்ல என் ஃபிரண்ட் சொன்னான் மேடம், கார்டு வந்திருக்குன்னு; நேம் தமிழமுது”

அவன் அவ்வளவு தீர்க்கமாய்ச் சொன்னதினால் “சரி பாருங்க” என்று கார்டை அவனிடம் கொடுத்தேன்.

‘கிருஷ்ணகுமார், தமிழமுது,’ என்ற பெயருடைய இரண்டு கார்டுகளை எடுத்து என்னிடம் நீட்டினான்.

அக்கண்கள் என் மீது ஏளனப் பார்வை வீசியது. அது ஒருவித ஒவ்வாமை உணர்வை என்னுள் தோற்றுவிக்க சங்கடமடைந்தேன்.

“பைசல் வர்றதில்லையா ?” என வினா எழுப்பினான்.

அத்தொனியில் ஒரு அதிகாரம் வீரிட, “இல்லை” என்றேன் அமர்த்தலான மனதோடு.

இரண்டு கார்டுகளையும் கையில் வாங்கினேன்.

கிருஷ்ணகுமார் ஸாருடையது. தமிழமுது அவருடைய மனைவி.

“இது கிருஷ்ணகுமார் ஸாரோடதுங்க, நீங்க உங்களோடதுன்னு சொல்றீங்க” என்றேன் விழியில் வினா தொக்க.

இல்லைங்க நான் ஆன்லைன்ல பண்ணினேன்.

ஆன்லைன்ல பண்ணதுக்கெல்லாம் இங்க கார்டு வராதுங்க, நீங்க போய் அவர அனுப்புங்க, இல்லேன்னா போன் பண்ணுங்க அவர் சொல்லட்டும் பிறகு கொடுக்கறேன் என்றேன்.

எங்க அக்காதான் மேடம் அது என்று முனகிய படியே அலைபேசியைக் தொடுத்தான்.

மாமா ஆன்லைன்ல கரெக்ஷன் போட்டோமில்ல அது கார்ட் வந்திருக்கு மேடம் தரமாட்டேங்குறாங்க என்றான்.

மறுமுனை என்ன கூறியதோ? தெரியவில்லை. என் உள் எங்கோ ஒளிந்திருந்த கோபம் பீறிடப் போகிறேன் என்று எச்சரிக்கை விடுத்தது.

போனை என்னிடம் நீட்டினான்.

ஸார் நீங்க அப்ளே பண்ணியிருந்ததுக்குத்தான் கார்ட் வந்திருக்கு, நீங்க வர்றீங்களா இல்ல அவர்ட்ட கொடுக்கட்டுமா?

அவர் என் மனைவியின் தம்பிதான் மேடம் அவர் கிட்ட கொடுத்துருங்க, என்னை அடையாளம் தெரியுதுங்களா ? என்றது மறுமுனை.

தெரியுங்க ஸார்! தெரியாம போகுங்களா, எனது லேப் அசிஸ்டெண்ட் எக்சாம்க்கு அப்ளே பண்ண வரும்போது உதவிப் பண்ணீங்களே என்றேன்.

ஒரு இணக்கமான சிரிப்பு ஒலி மறுமுனையில்.

கார்டை அவனிடம் கொடுத்தேன். இந்த கார்ட் நீங்க இணையத்துல விண்ணப்பித்ததுக்கானது இல்லைங்க, ஸார், இங்க கொடுத்த மனுவிற்கானது என்றேன்.

தேங்க்ஸ் என்ற அவன் தொனியில் அந்த எகத்தாளம் காணாமல் போய் இருந்ததாய் எனக்குத் தோன்றியது.

பைசல் இன்னைக்கு வரலியா என்று அவன் வினவலில், நான் பைசலுக்கு அறிமுகமானவன் இந்த கார்டை நீங்கள் தர வேண்டும் என்ற பூடகமொழி ஒளிந்திருந்ததை என்னால் சீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

இந்த யுக்தி புதியதாகத்தான் இருந்தது எனக்கு.

+++++++++++++++++

மேகக் கொடையா ?

மேகக் கொடை யினை
வார்த்து விட்டோம்
ஆழிக்கு !
துளி நீர் நா தேடும்
நாள் வரும்
என்ன செய்வோம் ?
கோமகள் ஆழி யெனப்
பொழிந்திடுமோ ?
அம்மழையும் அந்நாளில்
மானுடமே பதரெனப்
பொய்த்திடுமோ
தன்னிலையில் ?

++++++++++++

[தொடரும்]

Series Navigationதிரையுலகக் கலைஞர்களுக்கு . . .கனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *